நோயின்றி வாழ்வோம்

நோயின்றி வாழ்வோம்
பாவலர் கருமலைத்தமிழாழன்

காலையிலும் மாலையிலும் கைகள் வீசிக்
கால்நீட்டி நடக்கின்ற நடைப யிற்சி
சோலையுள்ள பக்கமாக தினமும் செய்து
சுத்தமான காற்றிழுத்து மூக்கில் விட்டுக்
காலையிளம் கதிரொளிதான் விழியுள் வீழக்
கண்சுழற்றும் பயிற்சியொடு உடற்ப யிற்சி
மேலையுடல் வியர்வைவர நாளும் செய்தால்
மேனியெல்லாம் மெலிந்திருக்கம் நோய்க ளின்றி !

தண்ணீரில் தலைமுழுகத் தினம்கு ளித்துத்
தக்கபடி சுற்றுபுறம் தூய்மை காத்துத்
தண்ணீரைத் சுடவைத்துக் குடிக்க வேண்டும்
தம்வயிறு பசித்தப்பின் உண்ண வேண்டும்
மண்விளையும் பசும்காய்கள் கீரை யோடு
மறக்காமல் பழங்களையும் சேர்த்துக் கொண்டால்
புண்எரிச்சல் மலச்சிக்கல் ஏது மின்றிப்
புளியேப்பம் வாராமல் உடலும் மின்னும் !

மதிமயக்கி உடல்கெடுக்கும் மதுவை விட்டு
மரணத்தை அழைக்கின்ற புகையை விட்டு
விதியென்று அமராமல் சுறுசு றுப்பாய்
வினைகளாற்றிச் சோம்பலின்றி நெஞ்சிற் குள்ளே
சதிசெய்யும் எண்ணமின்றிக் கோப மின்றிச்
சத்தமாக வாய்விட்டுச் சிரித்தே அன்பைப்
பதியம்போல் அனைவரிடம் விதைத்து வைத்தால்
பலகாலம் நோயின்றி வாழ்வோம் நன்றாய் !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (11-Oct-21, 1:16 pm)
பார்வை : 176

மேலே