உவகை

உவகை
பாவலர் கருமலைத்தமிழாழன்

ஆசைகளால் நெஞ்சத்தை ஆள விட்டால்
அவலந்தான் பெருகியிங்கே அமைதி போகும்
காசைமட்டும் கணக்கினிலே வரவு வைத்தால்
கடுகடுப்பே முகமாகி நட்பு போகும்
ஓசையுடன் இழிசொற்கள் நாவில் வந்தால்
ஓடிவந்து சினமமர்ந்தே இனிமை போகும்
மாசுடைய பிழைசெயல்கள் செய்து வந்தால்
மற்றவர்கள் மதிக்கின்ற மதிப்போ போகும் !

புறங்கூறும் தீப்பழக்கம் நம்மைச் சாய்க்கும்
பொறாமையெனும் தீயெண்ணம் நம்மை வீழ்த்தும்
அறங்களினைப் புறந்தள்ளின் அழிவைச் சேர்க்கும்
அன்புதனைக் கைவிட்டால் பகைமை கூட்டும்
உறவுகளின் துணையிழந்தால் வலிமை குன்றும்
உழைப்பதற்கு மறுப்புரைத்தால் உயர்வோ தாழும்
உரமான முயற்சியின்றேல் வெற்றி போகும்
உதவாத கனவுகளால் வாழ்வே போகும் !

குலையாத நெஞ்சமுடன் தூய்மை யான
குறிக்கோளில் வினைகளினை ஆற்றி வந்தால்
மலையான தடைகளெல்லாம் தூள்தூ ளாகி
மடைதிறந்த வெள்ளம்போல் மகிழ்ச்சி பாயும்
அலைபாயும் நெஞ்சத்தை அடக்கி வைத்தே
ஆக்கத்தைத் தரும்வழியில் நடந்து வந்தால்
நிலையாக பெயர்நிற்கும் ! இருளோ மாயும்
நீள்கதிரைப் போல்வாழ்வில் உவகை ஓங்கும் !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (11-Oct-21, 1:18 pm)
Tanglish : uvagai
பார்வை : 158

மேலே