இளைஞனே எழுந்து வா

இளைஞனே எழுந்து வா
பாவலர் கருமலைத்தமிழாழன்

புதியஓட்டம் குருதியிலே புகுத்திச் செல்வோம்
புதுமைகளைக் கண்டளிக்க விரைந்து செல்வோம்
விதியென்றே அமர்ந்திருந்தால் வந்தி டாது
வினைகளாற்ற வாய்ப்புகளோ அழைத்தி டாது !
குதித்துவரும் அருவிதடை தகர்த்துக் கொண்டு
குன்றின்கீழ் ஆறாகப் பாய்தல் போல
பதித்திடுவோம் புதியபாதை வெற்றி தன்னை
பறித்திடுவோம் இளைஞனேநீ எழுந்து வாவா !

மூடத்தைப் பழமையினை மூலை வைப்போம்
முன்னேறப் பகுத்தறிவில் காலை வைத்தே
வேடத்தைக் கலைத்திடுவோம் சாதி என்னும்
வேண்டாத சட்டையினைக் கழற்றி வைப்போம் !
மாடத்தில் ஏற்றிவைக்கும் விளக்கைப் போல
மனத்தினிலே பொதுமையெண்ணம் ஏற்றி வைத்து
நாடதனில் இருப்பதினைப் பிரித்த ளித்து
நல்வாழ்வை அளிப்பதற்கே எழுந்து வாவா !

நேர்நின்று கயமைகளைத் தட்டிக் கேட்டு
நேர்மையினை நீதியினைக் கட்டிக் காத்தே
ஊர்காப்போர் ஊழல்கள் புரியும் போதோ
உதைத்தவரை விரட்டுதற்கு முன்னே நிற்போம் !
நீர்நிலையை வயல்வெளியைக் காற்றைக் காட்டை
நீலவானைத் தூய்மையாகப் பாது காத்து
வேர்போன்ற மனிதத்தை நெஞ்சில் வைத்து
வேற்றுமைகள் தகர்த்திடுவோம் இளைஞா வாவா !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (11-Oct-21, 1:09 pm)
பார்வை : 139

மேலே