ஆய்ந்தறிய நின்றே அறியுந் தொறுமருகி ஓய்ந்து வருமால் உணர்வு - பிறப்பு, தருமதீபிகை 903

நேரிசை வெண்பா

தனுகரண போகங்கள் தாமே விரிந்து
மனுகரண மாக மருவி - அனுமிதியால்
ஆய்ந்தறிய நின்றே அறியுந் தொறுமருகி
ஓய்ந்து வருமால் உணர்வு. 903

- பிறப்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உயிர்களுககு உரிமையாகத் தேகங்கள், பொறிகள், போகங்கள் எங்கும் நன்கு பொருந்தியிருக்கின்றன; காரிய காரணங்களோடு கலந்து வந்துள்ள அவை கூரிய அறிவாலும் உணர்ந்து கொள்ள முடியாதபடி மீறி விரிந்து ஓங்கி நிற்கின்றன என்கிறார் கவிராஜ பண்டிதர்.

தனு - உடல். தனது என்று மனிதன் உரிமையோடு இனிது பேணி வருவது தனு என வந்தது. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் இந்த நான்கும் அந்தக் கரணங்கள்; அகத்தே உள்ளமையால் இப்பெயரமைந்தது. கண், காது, மூக்கு, வாய் முதலியன புறத்தே பொறிகளாய்ப் பொருந்தி நிற்கின்றன.

இந்தக் கருவி கரணங்களைக் கொண்டு கரும போகங்களை உயிர்கள் அனுபவித்து வருகின்றன. தேகங்களைக் கொடுத்து மோகங்களை மடுத்துப் போகங்களை யூட்டிச் சோகங்களை நீட்டி இடையிடையே விவேகங்களைக் காட்டி விதி வழியே ஒருவன் ஆட்டி வருவது அதிசய விளையாடல்களாய் விரிந்து வருகிறது.

தாம் செய்த வினைகளின் இத அகிதங்களுக்குத் தக்கபடி சுக துக்கங்களை மாந்தர் மாந்தி வருகின்றனர். உரிய கரும பலன்கள் அரிய மருமங்களாய் மருவி எவ்வழியும் செவ்வையாய் இயங்கி உயிர்களை முயங்கி உரிமைகளை வழங்கி முடிகின்றன.

அனுமானப் பிரமாணத்தை அனுமிதி என்றது. அஃதாவது கண்டதைக் கொண்டு காணாததை யூகித்து உணர்ந்து கொள்வது. மாறுபாடான காட்சிகளைக் காண நேர்ந்த போது பகுத்தறிவுடைய மனிதன் பரிந்து சிந்திக்கின்றான். காரணங்களைக் கருதி யுணர்கிறான். பூரணமான உண்மைகளைத் தெளிந்து கொள்கிறான்.

செல்வம், கல்வி, அழகு முதலிய விழுமிய நலங்களை மேவிச் சிலர் மேன்மையாய் விளங்குகின்றார்; வறுமை, மடமை, அவலம் முதலிய சிறுமைகளை மருவிப் பலர் தாழ்மையாய் வாழ்கின்றார். குருடு, செவிடு, ஊமை, முடம் முதலிய ஊனங்களை அடைந்து சிலர் ஈனமாயுழலுகின்றார். இவற்றுக்கெல்லாம் மூல காரணங்கள் பழ வினைகளே என்று ஓர்ந்து கொள்ளுகிறோம். வினை விளைவுகளை உயிரினங்கள் யாண்டும் நுகர நேர்கின்றன.

குற்றவாளிகளைச் சிறைகளில் அடைத்து அரசன் தண்டித்து ஆற்றுகின்றான்; அது போல் தீவினையாளர்களைப் பிறவிச் சிறைகளில் தள்ளித் துறைகள் தோறும் தோய்ந்து வருத்தி இறைவன் முறையே குறைகளைத் தீர்த்து அருளுகின்றான்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

ஆணையால் அவனி மன்னன் அருமறை முறைசெய் யாரை
ஆணையின் தண்டஞ் செய்தும் அருஞ்சிறை யிட்டும் வைப்பன்;
ஆணையின் வழிசெல் வோருக்(கு) அரும்பதி செல்வம் நல்கி
ஆணையும் வைப்பன்; எங்கும் ஆணையே ஆணை யேகாண். 31

அரசனும் செய்வ(து) ஈசன் அருள்வழி அரும்பா வங்கள்
தரையுளோர் செய்யின் தீய தண்டலின் வைத்துத் தண்டத்(து)
உரைசெய்து தீர்ப்பன்; பின்பு சொல்வழி நடப்பர் தூயோர்
நிரயமும் சேரார்; அந்த நிரயமுன் நீர்மை ஈதாம். 32

அருளினால் உரைத்த நூலின் வழிவரா(து) அதன்மஞ் செய்யின்
இருளுலாம் நிரயத் துன்பத்(து) இட்டிரும் பாவந் தீர்ப்பன்;
பொருளுலாஞ் சுவர்க்கம் ஆதி போகத்தாற் புணியம் தீர்ப்பன்;
மருளுலா மலங்கள் தீர்க்கும் மருந்திவை வயித்ய நாதன். 33

மருத்துவன் உரைத்த நூலின் வழிவரிற் பிணிகள் வாரா;
வருத்திடும் பிணிகள் தப்பின் தப்பிய வழியுஞ் செய்யத்
திருத்தினன் மருந்து செய்யா(து) உறும்பிணி சென்றுந் தீர்ப்பன்;
உரைத்தநூற் சிவனும் இன்னே உறுங்கன்மம் ஊட்டித் தீர்ப்பன். 34
.
மண்ணுளே சிலவி யாதி மருத்துவன் அருத்தி யோடும்
திண்ணமாய் அறுத்துக் கீறித் தீர்த்திடும்; சிலநோய் எல்லாம்
கண்ணிய கட்டி பாலும் கலந்துடன் கொடுத்துத் தீர்ப்பன்;
அண்ணலும் இன்பத் துன்பம் அருத்தியே வினைய றுப்பன்! 35

- பிரமாணவியல், இரண்டாஞ் சூத்திரம், சிவஞான சித்தியார்

இன்ப துன்பங்களை ஊட்டி வினைகளை நீக்கி உயிர்களை இறைவன் உயர் கதியில் உய்க்கும் நிலைகளை இது காட்டியுள்ளது. உருவக வுரைகளையும் பொருள் வகைகளையும் கருதி நோக்கி உறுதி நலங்களை ஓர்ந்துணர்ந்து கொள்ள வேண்டும்.

சீவர்கள் தேகங்கள் எடுப்பதும், போகங்களை நுகர்வதும், சோகங்களில் உழல்வதும், உண்மையான உய்தி நிலையை உணராமல் மோகங்களில் வீழ்ந்து ஏகமாய்க் களிப்பதும் மாயக்கூத்துகளாய் மருவி மாயாத பிறவித் துயர்களை விளக்கி நிற்கின்றன.

அமைதியான தூய சிந்தனையோடு நேயமாய் ஆய்ந்து தெளியின் ஆன்ம உய்தி மேன்மையாய் வெளியாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Oct-21, 3:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

சிறந்த கட்டுரைகள்

மேலே