களிப்பெல்லாம் பழியும் இழிவும் படர்ந்தே வருமால் அழிவே அவர்வாழ்வு - இருப்பு, தருமதீபிகை 913

நேரிசை வெண்பா

உண்டு களிப்பார்; உறுதி நலமொன்றும்
கண்டு களியார்; களிப்பெல்லாம் - மண்டும்
பழியும் இழிவும் படர்ந்தே வருமால்
அழிவே அவர்வாழ்வு அவம். 913

- இருப்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

வயிறார உண்டு களிக்கிறார், துயர் தீர உயர்நிலை யாதும் ஓர்ந்து காணாமல் பழியும் இழிவும் சேர்ந்து கண்டு பாழே அழிகின்றார், பழுதான இவர் வாழ்வு முழுதும் பரிதாபமாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

அறிவு நலங்கள் அமைந்திருந்தும் பெரிய உறுதி நிலைகளைக் கருதியுணராமல் மனிதர் மருளராயிழிந்து காலத்தை வீணே கழித்து ஒழிகின்றார். வாழ்வு நல்ல பண்பாடுகளோடு கலந்த அளவுதான் சிறந்த இன்பம் உடையதாய் உயர்ந்த மேன்மைகளை அடைந்து வருகிறது. நெறியோடு புனிதமாய் வாழுகின்ற மனிதன் இவ்வுலகிலேயே இனிய பல நன்மைகளை அடைகிறான்; மேலான ஒரு தேவனாய் அவன் மதிக்கப் படுகிறான்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். 50 இல்வாழ்க்கை

ஒரு மனிதன் இவ்வுலகில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை வள்ளுவர் இவ்வாறு விளக்கியிருக்கிறார். விளக்கம் விநயம் மிகவுடையது. மனிதனைத் தெய்வம் ஆக்கும் மந்திரம் இங்கே சிந்தனைக்கு வந்துள்ளது. ’வாழ்வாங்கு வாழுக’ என துணுக்கமாகவும் சுருக்கமாகவும் குறித்திருக்கிறார். இந்த வாழ்க்கைச் சூத்திரத்திற்கு உரிய விரிவான பொருள்களை ஒவ்வொரு மனிதனும் கூர்ந்து ஓர்ந்து கொள்ள நேர்ந்து நிற்கின்றான்.

தன்னுடைய வாழ்க்கை கண்ணியமான புண்ணிய நீர்மை தோய்ந்து வர எவன் ஆற்றி வருகிறானோ அவன் விண்ணவனாய் விளங்கி வருகிறான். தான் செய்யும் கருமங்களுள் தருமங்கள் தழுவிவரின் அந்த மனிதனைத் தெய்வமாக்கும் மருமங்கள் அங்கே மருவியுள்ளன. செயல் புனிதமாக மனிதன் உயர்கிறான்.

வையத்துள் வாழ்பவர் மனிதர்.
வானத்துள் வாழ்பவர் தேவர்.

உலகில் வாழும் மனிதன் நல்ல சிந்தனையாளனாய் அறிவும் அன்பும் பெருகி அறநீர்மைகள் மருவி நெறிமுறையே ஒழுகி வரின் இகமும் பரமும் அவனை உயர்வாய் மதித்து உவந்து கொண்டாடும்; மறுமையில் தேவனாய் அவன் மகிமை மிகப் பெறுவான். இந்த அரிய பேற்றை இழந்து கழிவது அவலப் பிறப்பாய் இழிந்து ஒழியும். தன் பிறப்பை இழிவாக்கின் அழிதுயரேயாம்.

கண்டபடி களித்துத் திரிவது மிருகங்களின் இயல்பாம்; அறிவுடைய மனிதர் அவ்வாறு எவ்வகையிலும் திரியலாகாது.

உயிர் உயர்ந்து தெய்வீக நிலையடையும் தலைமையை உறுதி நலம் என்றது. அமைந்த ஆயுள் அளவே உடம்புள் உயிர் இருக்க முடியும்; அதற்குள் உண்மையான உறுதிநலனைத் .தேடிக் கொள்ள வேண்டும்; தேடாதொழியின் அவ்வாழ்வு கேடான பாழாயிழிந்து படுதுயரங்களையே நெடிது விளைத்து வரும்.

பொறிகளில் வெறிகொண்டபோது மனிதன் நெறிகேடன் ஆகி, அவன் வாழ்வில் பாவங்கள் விளைகின்றன. ஒரு தீயவனால் உலகில் பல தீமைகள் உளவாகின்றன.

உள்ளம் கெட்டபொழுது அந்த மனிதன் எல்லாரையும் கெடுக்க நேர்கிறான். தீய தூர்த்தர்களால் எவ்வளவோ பெண்கள் தீயராய் இழிந்துள்ளனர். காமப் பித்தர்கள் இல்லையானால் எத்தனையோ உத்தமிகளை இந்நாடு உரிமையாய்ப் பெற்றுப் பெருமை அடைந்திருக்கும் .பொல்லாத பொறி வெறியரால் நல்லார்கள் அரியராயிருப்பது நாட்டின் கேட்டைக் காட்டி நிற்கிறது.

பெண்களுக்கு நல்லார் என்று ஒரு பெயர் அமைந்துள்ளது. அவரது நன்மையும் தன்மையும் மென்மையும் மனித வாழ்க்கையை மேன்மைப்படுத்தி யாண்டும் இனிமை தோய்ந்து வருகின்றன.

நேரிசை வெண்பா

நல்லார்கள் எல்லாரும் நல்லவரே தன்மையால்
வல்லாரால் கேடு படாராயின் – நல்லறி(வு)
ஆண்மக்கள் பற்பலர்க்கே உண்டாகும் பெண்டீரும்
மாண்பு கெடுக்கா விடின். - ஔவையார்

வன்மையான தன்மையுடைய ஆடவர்கள் வலிந்து கேடு செய்யாதிருந்தால் நல்லார் என்னும் பெயரைத் தமக்கு இயல்பாகவுடைய பெண்கள் எல்லாரும் எவ்வழியும் நல்லவராகவே இருப்பர் என ஒளவையார் இவ்வாறு அதிவிநயமாய்க் குறித்திருக்கிறார். குறிப்பு கூர்ந்து நோக்கி ஓர்ந்து உணர வுரியது.

நல்லார் எனமகளிர் நானிலத்தில் நின்றாரேல்
பொல்லார் எவர்காண் புகல். - அரும்பொருளமுதம்

நல்லாரைக் கெடுப்பவர் எல்லாரும் பொல்லாதவரே ஆகின்றார், ஆகவே மனித சமுதாயத்தை மாசுபடுத்தும் நீசராய் அவர் நாசம் உறுகின்றார். ஆண்மகனுக்கு ஒழுக்கமும் பெண்மகளுக்குக் கற்பும் அற்புத மகிமைகளைப் பொற்புடன் அருளுகின்றன.

So dear to heaven is saintly chastity,
That when a soul is found sincerely so,
A thousand liveried angels lackey her. - Comus

புனிதமான கற்பு பரமபதத்துக்கு மிகவும் பிரியமாகிறது; ஒரு உயிரை உண்மையாய் அவ்வாறு காணும்பொழுது ஆயிரக் கணக்கான தேவதைகள் அவளுக்குப் பணிவாய் ஏவல் செய்கின்றன என்று கோமஸ் என்னும் ஆங்கிலக் கவிஞர் இவ்வாறு பாடியிருக்கிறார். இத்தகைய கற்புடையவர் இருந்தால் அந்த நாடு எத்தகைய மேன்மையுடையதாம் என்பதை உய்த்துணர்ந்து கொள்ளலாம். ஆடவரும் இவ்வண்ணம் கற்பு அமைந்திருந்தால் அதிசய மகிமைகளை எளிதே அடையலாம்.

கலி நிலைத்துறை
(மா விளம் விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

அரிய பேறுகள் அனைத்தையும் எளிதினில் அடைந்து
பெரிய மேன்மைகள் பெறஒரு வழியுள(து) அதுதான்
உரிய தன்மனை அன்றிமற்(று) உள்ளவர் எல்லாம்
பிரியம் மேவிய தாய்தங்கை என்றுபே ணுதலே. - வீரபாண்டியம்

இதனை உரிமையோடு கருதி ஓர்ந்து உறுதியாய் ஒழுகுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Oct-21, 4:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே