தணிவில் களிப்பினால் தாழ்வார்க்கு சேய்த்தன்றே மூத்தாள் தொலையாத போகம் - நீதிநெறி விளக்கம் 36

நேரிசை வெண்பா
(’ளை’ ‘லை’ இடையின எதுகை)

பணியப் படுவார் புறங்கடைய ராகத்
தணிவில் களிப்பினால் தாழ்வார்க்(கு) – அணிய(து)
இளையாள் முயக்கெனினுஞ் சேய்த்தன்றே மூத்தாள்
தொலையாத* போகங் கொளல். 36

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

தம்மால் வணங்கி எதிர்கொள்ளத்தக்க பெரியார் தம்முடைய தலைவாயிற் படியில் வந்து நின்றனராக,

அடங்குதலில்லாத செல்வக் களிப்பினால் அவரை எதிர்கொள்ளக் கூசுவார்க்கு,

திருமகளின் சேர்க்கை அப்போது அவர்க்கு நெருக்கமாய் இருக்கின்றதானாலும்,

மூதேவியின் ஒழியாத சேர்க்கையை மேற்கொள்ளுதல் அவர்களுக்குத் தொலைவில் இல்லை.

விளக்கம்:

ஆகவே, பெரியாரை மதியாமல் செல்வக் களிப்பினாற் செருக்குவாரிடம் உள்ள திருமகள் நீங்கியொழிய மூதேவி விரைவிலே வந்துசேருவாள் என்க.

அவர்கட்கு அச்செல்வம் அழிந்துபோம் என்பது கருத்து;

அணியது சேய்த்து என்பவற்றைக் கால அளவுக்குக் கொள்க.

கருத்து:

செல்வத்தை விடப் பெரியாரையே பெருஞ்செல்வமாகப் பேண வேண்டும்.

`*தொலையாத என்னும் இச்சொல் ஓர் ஏட்டுப்படியிற் கண்டது. +"புணர்முலைப் போகம்" என்பதும் பாடம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Oct-21, 8:23 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே