எஞ்ஞான்றும் இரப்பவர்க்குச் செல்சார் ஒன்றீவார் – நான்மணிக்கடிகை 38
இன்னிசை வெண்பா
கரப்பவர்க்குச் செல்சார் கவிழ்தலெஞ் ஞான்றும்
இரப்பவர்க்குச் 1செல்சாரொன் றீவார் - பரப்பமைந்த
தானைக்குச் செல்சார் தறுகண்மை ஊனுண்டல்
செய்யாமை 2செல்சா ருயிர்க்கு. 38
- நான்மணிக்கடிகை
பொருளுரை:
ஏதும் இல்லையென்று ஒளிப்பவர்களுக்கு அவர் மேற்கொள்ளுஞ் சார்பு இரந்து வருவாரைக் கண்டவிடத்து முகங்கவிழ்ந்து நிற்றலாம்;
எக்காலத்திலும் இல்லையென்று இரக்கின்றவர்களுக்கு செல்லுதற்குரிய பற்றுக்கோடு தாம் வேண்டுவதொன்றை ஈத்துவக்குஞ் செல்வராவர்,
போரிற் சுறுசுறுப்புடைய சேனைகளுக்கு பற்றுக்கோடு வீரமாம்;
ஒருவனது உயிர்க்கு செல்லுதற்குரிய பற்றுக்கோடு பிறவுயிர்களின் ஊனுண்ணலைச் செய்யாதிருத்தலாம்.
கருத்து:
இல்லையென்று பொருள்களை ஒளிப்பவர்கள் இரப்பாரைக் கண்டக்கால் முகங்கவிழ்தலே அவர்
செயலாயிருக்கின்றது;
இரப்பவர்கட்கு ஈகையறமுடைய செல்வரே பற்றுக்கோடாவர்;
பரபரப்புள்ள சேனைகட்கு வீரமே ஒரு பற்றுக்கோடு;
ஊனுணவு கொள்ளாமல் அருளொழுக்கத் தோடிருத்தலே உயிர்கட்கு ஒரு பற்றுக்கோடான நிலையாம்.
விளக்கவுரை:
சார் - ‘சார்பு' என்பது பொருள்; அஃதாவது சார்ந்து நிற்றற்குரிய நிலை, அல்லது பற்றுக்கோடு.
‘செல்' என்பதைக் கருத்து நோக்கிப் பொருளுரைத்துக் கொள்க.
கரப்பவர் செல்லுதலாவது மேற்கொள்ளுதல்; இரப்பவர் செல்லல் - அடுத்தல்;
தானைக்குச் செல்லல் - இடந்தரல்;
உயிர்க்குச் செல்லலென்பதும் மேற்கோடலாம்.
தறுகண்மை - இரங்காமைக்கு ஏதுவான மறம்.
(பாடம்) 1. செல்சார் வொன்றீவோர், 2. செல்சார் வுயிர்க்கு.