நெடுங்கடை நின்றுழல்வ தெல்லாம் முன்னை வினையாய் விடும் – நாலடியார் 107

நேரிசை வெண்பா

இடும்பைகூர் நெஞ்சத்தார் எல்லாருங் காண
நெடுங்கடை நின்றுழல்வ தெல்லாம் - அடம்பப்பூ
அன்னங் கிழிக்கும் அலைகடல் தண்சேர்ப்ப!
முன்னை வினையாய் விடும் 107

- பழவினை, நாலடியார்

பொருளுரை:

அடம்பங்கொடியின் மலரை அன்னப் பறவைகள் கோதுகின்ற அலைமோதுங் கடலின் குளிர்ந்த துறைவனே! மக்களிற் சிலர், துன்பம் மிக்க உள்ளத்தவராய் எல்லாருங் காணும்படி பெரிய வீடுகளின் நெடிய தலைவாயிலில் நின்று பிச்சையேற்று உழல்வதெல்லாம் ஆராய்ந்து பார்க்குங்கால் பழவினைப் பயனாய் முடிந்து நிற்கும்.

கருத்து:

நல்வினையுடையோர் இரந்து உழலார்.

விளக்கம்:

ஏளனமும் இரக்கமுந் தோன்ற ‘எல்லாருங் காண' எனவும், உழல்வாரது ஏழைமை நன்கு வெளிப்பட ‘நெடுங்கடை' எனவுங் கூறப்பட்டன.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Oct-21, 7:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

மேலே