நலங்கனிந்த பண்புடையாரன்றே சலியாத கற்ப தரு - நீதிநெறி விளக்கம் 37

நேரிசை வெண்பா

கண்ணோக்(கு) அரும்பா நகைமுகமே நாண்மலரா
இன்மொழியின் வாய்மையே தீங்காயா - வண்மை
பலமா நலங்கனிந்த பண்புடையா ரன்றே
சலியாத கற்ப தரு. 37

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

அருள் பொங்கும் கண்ணின் பார்வையை மொட்டாகவும், மகிழ்ச்சியால் மலர்ந்த முகமே புதுப்பூவாகவும், மெய்ம்மையான இன்சொல்லே தித்திப்பான காயாகவும், ஈகையே பழமாகவும் கொண்டுள்ள நன்மைகள் மிகுந்த பெருந்தன்மையுடைய செல்வர்களல்லரோ சலித்தலில்லாது ஈயும் கற்பக மரமாவர்.

விளக்கம்:

கண்ணோக்கு: அருட்பார்வைக்கே சிறப்பாக வழங்குதலை `என்மேல் கண்ணோக்கம் வை' என்பதிற் காண்க.

நாள்மலர் - அன்று மலர்ந்த புதுப்பூ, இன்மொழியின் வாய்மையே என்பதை மற்றவற்றோடும் ஒத்துநிற்றற் பொருட்டு முன் பின்னாக மாறுக, இங்கு வாய்மை யென்றது 'உள்ளும் புறமும் ஒத்து நிற்றலை.

வண்மை என்பதை `சொல்லின் முடிவின் அப்பொருண் முடித்தல்' என்னும் உத்தி பற்றி ஈற்றில் நிறுத்தினார்.

இச்செய்யுளின் முதன்மையான கருத்து அதுவாதலின், கண்ணோக்கு நகைமுகம் இன்மொழி எனவரும் ஏனைய மூன்றும் இவ்வண்மையைச் சிறப்பிக்க வந்தனவென்று கொள்க.

இங்ஙனம் கருத்திலிருத்திச் செய்யுளியற்று முறையை மாணிக்கவாசகப் பெருமானார் இயற்றிய திருச்சிற்றம்பலக் கோவையாரின் முதற் பாட்டினும் அதற்குப் பேராசிரியர் கூறும் உரையிலுங் கண்டுகொள்க.

கருத்து:

விரும்பிப் பார்த்தல், முகமலர்ச்சி முதலிய குணங்களையுடைய செல்வர் கற்பக மரம் போலப் பயன்படுவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Oct-21, 8:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

மேலே