சூப்பர் மார்க்கெட,

ராஜூ என்ற அந்த 25 வயது இளைஞன் சூப்பர் மார்க்கெட்டுலே வீட்டு சாமான்களை வாங்க வந்திருந்தான். அவன் கையிலே ஒரு காகித த்துண்டு இருந்தது. அதைப் பார்த்து அவன் துவரம்பருப்பு வாங்கவேண்டும் என்று தீர்மானித்து அதை அங்கு தேடலானான். . அவனால் அதைக் கண்டு பிடிக்க முடியவில்லை. உண்மை என்னவென்றால் அவனுக்குத் துவரம் பருப்பு எப்படி இருக்கும் என்று தெரியாது.
அங்கிருந்த கடைப் பெண்ணிடம் விசாரித்தான். அவளும் கொஞ்ச நேரம் தேடிவிட்ட
‘துவரம் பருப்பா கேட்டீர்கள்? எதுக்கு?’ என்று கேட்டாள்.
கடுப்பான அவன் எல்லாம் சமையலுக்குத்தான். வேறே எதுக்குக் கேப்பாங்க. பல்லாங்குழி விளையாடறதுக்கா கேப்பாங்க ? என்று கோபமாக பதில் அளித்தான். பல்லாங்குழி என்றால் அவளுக்குப் புரியவில்லை. அது துவரம் பருப்பு தேவையில்லாத ஒரு பலகாரம் என்று நினைத்தாள். ஆனால் அதில் விளையாட என்ன இருக்கு என்று அவளுக்குப்புரியவில்லை.
பிறகு அங்கு வந்த இன்னொரு கடைப் பெண்ணைப் பார்த்து அவள்
“மல்லிகா துவரம் பருப்பு எங்கே இருக்கு?” என்று கேட்டாள்?
மல்லிகாவோ
“நீ நிற்கிற இடத்துலேயே கீழ்த்தட்டிலே பார். அங்கேதான் இருக்கு. அது கூடவா தெரியலை” என்று அவளை ராக் பண்ணினாள்.
அந்தப்பெண் அப்போதுதான் வேலைக்கு சேர்ந்திருப்பாள் போல இருக்கிறது. எனவே மல்லிகா அவளுக்கு சீனியர் போலும். பெயரில் கா இருந்தாலும் அவள் சீனியர் என்பதால் பழமாகவே இருந்தாள்
இந்த மாதிரி கடைகளிலும. கூட சீனியர், ஜூனியர் என்ற பேதம் இருப்பதைப் பார்த்து ஆச்சரியமடைந்தான்.
“அதுதான் துவரம் பருப்பா, அதை நான் பாசிப் பருப்புன்னு நெனச்சிட்டேன்”. என்றாள். அவள் பாசிப்பருப்பு கொடுத்திருந்தாலும் அதுதான் துவரம்பருப்பு என்று ராஜூ வாங்கிக் கொண்டு போயிருப்பான்.. ஏனென்றால் இந்தப்பருப்பு வகைகள், தானியங்கள் இவற்றைப்பற்றி எல்லாம் தெரியாமலே வளர்ந்தவன் அவன். நான் பெட் கட்டறேன். அவன் மட்டுமல்ல. இந்தக்காலத்துலே பல பையன்களுக்கும், பெண்களுக்கும் எந்தப் பருப்பையும் பாத்து கண்டு பிடிக்கத் தெரியாது. (என்னையும் சேர்த்துத்தான் சொல்றேன்).சிலருக்கு கடுகு எது, மிளகு எது, சீரகம் எதுன்னு கூட சொல்லத்தெரியாது. ஆனா பெரிய ஓட்டல்களிலே புகுந்து நம்ம வாய்க்குள்ளேயே நுழையாத பேருள்ள ஆலு சாட், கடாய் பன்னீர், சோளே பதூரா, ஸ்பினாச் ரைஸ், சுகினி கேஸரோல்,ப்ளாக்பீன் பரிடோஸ், சிட்புட்லே, பிட்சா, பாஸ்தா, ஸ்ஃபகெடி, நூடில்ஸ், கோபி மஞ்சூரியன். தாய் சோஃபு சடாய்,ஃபலாஃபல், டம்ப்ளிங் போன்ற நார்த்இண்டியன்,மெக்சிகன், இத்தாலியன், சைனீஸ், தாய், மெடிடரேனியன் பண்டங்களை எல்லாம் நம்ம இட்லி வடை மாதிரி சாதாரணமா சொல்லி அது என்னன்னே தெரியாம அதையும் அந்த 3 இல்லே 4 ஸ்டார் ஓட்டல் அரை இருட்டிலே லபக் லபக்னு சாப்பிட் டுட்டு, 125 ரூபாயிலே முடியற சமாசாரக்களுக்கு 700 ரூபா கொடுத்ததை பெருமையா பேசுவாங்க. அதனாலே இந்த காய்கறி, மளிகை சாமான்கள் வாங்கற விஷயத்துலே நம்ம ராஜூ வெறும் நோவிஸ்தான்.

ராஜூவின் தகப்பனார் ஒரு நல்ல உத்தியோகத்தில் இருந்தார். ஒரு நாள் திடீரென்று எதிர்பாராது வந்த ஹார்ட் அட்டாக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர் போய்விட்டார். அந்த துக்கம்தாளாது ராஜூவின் அம்மாவும், நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகி ஆறு மாசத்துக்கு முன்னே இறந்துட்டாங்க.அதுவரையிலும் அவங்களே கிச்சன் சமாசாரம் வாங்கறதுலே இருந்து எல்லாத்தையும் பாத்துப்பாங்க. அவங்க போன அப்புறம் ஒரு சமையல்கார அம்மா சமையல் செஞ்சிக்கிட்டு இருந்தாங்க. அவங்க சமையலுக்கு என்ன வேணும்னு எழுதிக்கொடுப்பாங்க. அதை ராஜூசூப்பர்மார்க்கெட்டுக்குப்போய் வாங்கி வர வழக்கம்.. இந்த மாதிரி வேலை எல்லாம் ராஜூவின் தலையிலேதான் விழும். அது வரையில் அவனுக்கு வேண்டிய டூத்பேஸ்ட், ஷேவிங்கிரீம், டூத் பிரஷ் இந்த மாதிரியான சமாசாரங்களை வாங்கத்தான் கடை கண்ணிகளுக்குப் போவேனே ஒழிய, இந்த சமையல் சாமான்களை வாங்கறதுக்கு ஒரு தடவை கூட போனது கிடையாது. அதனாலே அவனுக்கு சுத்தமா எந்த பருப்பு எப்படி இருக்கும், எந்த மிளகாய் வாங்கணும், இட்டிலி அரிசிக்கும், பச்சரிசிக்கும் என்ன வித்தியாசம் இதெல்லாம் தெரியாது.
அவன் வாங்கிச்சென்றபின் சமையல்கார அம்மாள்
“ஐய்யய்ய, இதைச்சொல்லல்லியே நான், நீ வேறே பருப்பை வாங்கிட்டு வந்துட்டியே” என்பார். சூப்பர்மார்க்கெட்டுலே இருக்கிற ஒரு சில பெண்களுக்கு எது என்னனு தெரியாமலே எதையாவது இவனைப் போல இளிச்சவாயன் தலையிலே கட்டிடுவாங்க போல இருக்கு..

ஒரு வழியா துவரம்பருப்பு வாங்கிட்டு அடுத்த ஐடத்தைத் தேட ஆரம்பிச்சான். ராஜூ. அதுவரையில் அங்கே ஒரு அம்மா அவனைக் கவனிச்சிக்கிட்டே இருந்தாங்க. . இப்ப ராஜூ தனக்கு வேண்டியதைத்தேட ஆரம்பிச்சவுடனே அந்த அம்மா அவன் பக்கத்துலே வந்து “என்ன தேடறே?” என்று கேட்டாங்க. அவங்களுக்குக்கிட்டத்தட்ட ராஜூவின் அம்மா வயது இருக்கும். அசப்புலே அவனுக்கு அவர் அவனுடைய அம்மா மாதிரியே இருந்தாங்க. அதனாலே அவனுக்கு அவங்க மேலே ஒரு மரியாதை வந்தது. இவனுக்கு இந்த தமிழ்சினிமாவைப்போலவே அம்மா செண்டிமென்ட் நிறைய உண்டு . அந்த நிமிடமே அவன் பார்த்த எல்லா சினிமாக்களிலேயும் வந்த அம்மா பாட்டுக்கள் அவன் காதில் ரீங்காரம் இட்டன.
அவன் தன்னிடம் இருந்த காகித லிஸ்டைக்காட்டி இதுலே இருக்கிறதெல்லாம் வாங்கணும் என்றான்.
“என்கூட வா . நானே உனக்கு வேண்டியதை எல்லாம் எடுத்துத்தரேன்” என்றார் அந்தப் பெண்மணி “உங்களுக்கு எதுக்கு சிரமம்?” என்றான் ராஜூ.”
“ இதுலே என்ன சிரமம் இருக்கு?. நீ என்பையன்மாதிரி” என்று சொல்லி கண்ணீர் விட ஆரம்பித்தார் அந்தப்பெண்மணி.
“ஏம்மா, அழறீங்க?” என்றான் ராஜூ.
“ஒன்றுமில்லை. உன்னைப் பாக்கும்போது என் மகனைப் பார்ப்பது போல் இருக்கு” என்றார்.
“உங்கள் மகன் இப்போ எங்கே இருக்கிறார் ?” என்று அவன் கேட்டதற்கு அந்த அம்மா பொல பொல வென்று கண்ணீர் வடித்து

“அதை ஏன் கேட்கிறாய். ரெண்டு வருஷத்துக்கு முன்னாலே ஒரு ஆக்ஸிடெண்டுலே அவன் ஆ” என்றார் பெருகும் கண்ணீரை அடக்க முடியாமல்.
“இப்படித்தான் ஒருநாள் அவன் ஃப்ரண்டைப்பார்க்கப் புறப்பட்டான்.“எங்கேடா போறே”ன்னு நான் கேட்டேன்.
“வெளியே கிளம்பும்போது எங்கே போறேனு கேக்கக்கூடாதுன்னு நீதானே அம்மா சொல்லுவே. இப்ப என்னை அப்படிக்கேக்கறியே” என்றான்.
நீ எங்கே போறேன்னு சொல்லிட்டுப் புறப்படறதா இருந்தா நான் ஏண்டா அந்த மாதிரி கேக்கப்போறேன்” னேன்.
அவன் புறப்பட்டான். “அம்மா நான் என் .ஃப்ரெண்ட் நாராயணனைப் பாக்கப்போறேன்”னு சொல்லிட்டு புறப்பட்டுட்டான்.
“போயிட்டு வரேன்னு சொல்லுடா” ன்னு நான் அவன்கிட்டே சொல்றதுக்குள்ளே அவன் ஸ்கூடர்லே பறந்து போயிட்டான்
“என்ன பாழாய்ப்போன அவசரம். கொஞ்சம் மெதுவாகப் போய் தொலைக்கக்கூடாதா?” என்று என் மனசுக்குள்ளே நெனச்சிக்கிட்டேன்.
கொஞ்ச நேரத்துலே அவன்மீது ஒரு பஸ்மோதி அவன் போயிட்டான்னு என்னோட பக்கத்து வீட்டுக்கார்ர் வந்து சொன்னபோது, என்தலையிலே இடி விழுந்த மாதிரி இருந்தது.
நான்தான் அவனை புறப்படும்போதே எங்கே போறேனு என்று கேட்டுத் தொலச்சேன். அவனாவது போயிட்டு வரேன்னு சொல்லிப் புறப்பட்டிருக்கக் கூடாதா. அவன் நாக்குலே யமன்தான் புகுந்து இருக்கணும் இல்லேன்னா எப்பவும் நான் போயிட்டு வரேன்னு சொல்றவன், போறேன்னு சொல்லியிருப்பானா?
அவன் உடம்பை போலீஸ் கிட்டே இருந்து வாங்கறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிட்டுது. பக்கத்து வூட்டுக்காரரும் , எங்க மத்த சொந்தக் காரங்களும்தான் ஹெல்ப் பண்ணினாங்க அந்த நேரத்துலே. அதை என்னாலே இந்த ஆயுசு உள்ளவரை மறக்கவே முடியாது. அந்த துக்கம் இன்னும் ஆறல்லே. அவன்தான் கடைக்குப்போய் எனக்கு வேண்டிய சாமான் எல்லாம் வாங்கி வருவான். அவன் போனப்புறம் நானே அந்த வேலையை எல்லாம் செய்ய வேண்டியதாப்போச்சு. அதான் இங்கே உன்னைப்பாத்த போது எனக்கு அவன் ஞாபகம் வந்தது. என்னாலே என் துக்கத்தை அடக்க முடியல்லே. உன்னோட பேசாம இருக்கவும் முடியல்லே” என்று தன் மகன் இறந்ததை கண்களில் நீர் பெருகச்சொல்ல ஏற்கனவே இளைய மனசுள்ள ராஜூக்கு கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது. அந்த அம்மாமீது அளவு கடந்த அனுதாபம. ஏற்பட்டது. ராஜூவுக்கு அந்த நேரத்தில் தான் இழந்த தன்அம்மாவைப் பார்ப்பது போலவே இருந்தது. எனவே அவனுக்கு அந்த அம்மாவின் மீது பன்மடங்கு பரிதாபம் தோன்றியது இயற்கைதானே. அவனும் அவனோட அம்மா இறந்ததைப்பற்றியும் எப்படி இறந்தார் என்பதைப்பற்றியும் விவரமாக விளக்கினான் அவர்களிடம்.
“ உனக்கு ஆட்சேபணை இல்லைன்னா நீ என்னை அம்மா என்றே கூப்பிடலாம்” என்றார். “எனக்கு இப்படி ஒரு அம்மா கிடைத்ததை எண்ணி மகிழ்ந்து
“அப்படிக்கூப்பிட நான் அதிருஷ்டம் செய்திருக்க வேண்டும்” என்றான் ராஜூ
அதற்குப்பிறகு ராஜூவை அங்கு ஒவ்வொரு பகுதியாக அழைத்துச்சென்று அவனுக்கு வேண்டியதை எல்லாம் எடுத்துக்கொடுத்தார் இந்த அம்மா.
ராஜூ அவருக்குப்பின்னால் அம்மா, அம்மா என்றழைத்தபடி சென்றான். இதை அங்குள்ள அனைவரும் கவனித்தனர். ஆனால் அவர்கள் அதை ஒரு பெரிய விஷயமாக கருதவில்லை. அங்கு எத்தனையோ அம்மாவும் பிள்ளைகளும் வந்து வாங்கும் இடம் ஆச்சே. அதனால் இதை யாரும் ஒரு அதிசயமாகக் கருதவில்லை.
“அம்மா, உங்களுக்கு வேண்டியதை எல்லாம் நீங்க வாங்கிட்டீங்களா?” என்று ராஜூ கேட்டான் .
“அதோ அந்த ட்ராலியில் கொஞ்சம் சாமான்களை எடுத்து வைத்திருக்கிறேன். மிச்சத்தை இனிமேல்தான் எடுக்கணும்” என்றார்.
“நான் எடுத்து முடிக்கிற வரையில் நீ காத்திருப்பாயா? உன்னை விட்டுப்பிரிய எனக்கு மனம் வரவில்லை” என்றார். அவனிடம். அம்மாகூட இந்த அளவு பிரியம் காட்டியதில்லை. என்று அவன் நெகிழ்ந்து போனான் . “சரி நான் காத்திருக்கேன் அம்மா” என்றான். பிறகு அவருக்கு எட்டாத உயரத்தில் இருந்த பொருட்களை அவருக்கு எடுத்துக் கொடுத்தான். அவரும் நிறைய பொருட்களை அள்ளி டிராலியில் போட்டுக்கொண்டார். அவர் வாங்கின அவ்வளவும் காஸ்ட்லியான ஐடம்கள் அரை மணி நேரத்தில் அவருடைய ஷாப்பிங்கும் ஓவர். அவர் பின்னாலேயே ராஜூ “அம்மா அம்மா” என்று குரல் கொடுத்தபடி சென்றான்.
பிறகு அவன, அம்மாவைப்பார்த்து
“நீங்கள் களைத்துப் போயிருப்பீர்கள். வாங்க . இங்கே இருக்கும் கான்டினில் காபி சாப்பிடலாம்” . என்றான். பிறகு அவருடன் போய்காபி குடித்தான்..

சரி . இனி பணம் கட்டும் கௌண்டருப்போகவேண்டியதுதான் என்றார் அந்த அம்மா
“ அம்மா நீங்க முதல்லே அங்கே போய் நில்லுங்க. நான் பின்னாலே நிக்கறேன்” என்று அங்கிருந்த க்யூவில் அவர்முதலில் நிற்க ராஜூஅவருக்கு ஒரு மூன்று நாலு பேர் பின்னால் நின்றான். அதற்குள் இன்னொரு வயதான அம்மா ,
“தம்பி நீ தப்பா நெனச்சிக்கல்லேன்னா நான் உனக்கு முன்னாலே நிக்கட்டுமா? ஏன்னா
என்னாலே ரொம்ப நேரம் நிக்கமுடியாது”. என்றார். ராஜூதான் மிகவும் இரக்க குணம் உள்ளவன் ஆச்சே. ஆதலால் அவன்” சரி. என் முன்னால் நில்லுங்க” என்றான,. பிறகு அம்மாவைக்கூப்பிட்டு
“நான்தான் அவரை உங்கள் பின்னால் நிக்கச்சொன்னேன்”. என்றான் . கௌண்டரில் இருந்தவர் இதை எல்லாம் கவனித்தபடி தன் வேலையை செய்து கொண்டு இருந்தார். அம்மா கௌண்டரில் இருந்தவரிடம் ராஜூவைக் காண்பித்து என்னவோ சொல்ல, கௌண்டர்ஆசாமியும் அதனாலென்ன, ஓகே என்றார். கடைக்காரரும், அந்த அம்மாவுக்கு டிராலியிலுள்ள பொருட்களை எடுத்து ஒரு பெரிய பையில் போட்டுக்கொடுத்தார். அம்மாவோ ராஜூவைப் பார்த்து
“நான்வெளியில் நிற்கிறேன். நீ உன் வேலையை முடிச்சிட்டு வந்து என்னைப்பாரு” என்றுகூற “சரி அம்மா” என்றான் ராஜூ. . சற்று நேரத்தில் ராஜூவின் டர்ன் வந்தது. எல்லா சாமான்களுக்கும் பில் போட்டு அதோடு இன்னொரு பில்லையும் சேர்த்துக் கொடுத்து மொத்தம் ரூபாய் 6356ம் ஐம்பது பைசாவும் என்று சொன்னார்.
ராஜூ அதிர்ந்து போனான் . நான் வாங்கினது இந்த ஜடங்கள் மட்டும்தான் என்று” தன் ஐடங்களைக் காண்பித்து
“இந்த பில்லில் போட்டிருக்கிறதே 468/- ரூபாய் என்று அந்தத்தொகையைத்தான் நான் கட்டுவேன். அந்த பில் கொஞ்சம் முன்னே போனாங்களே அந்த அம்மா பில், அதை ஏன் என்கிட்டே கொடுக்கிறீங்க?” என்று கேட்டான்..
“என்ன சார் அனியாயமாய் இருக்கு. உங்க அம்மா வாங்கின சாமான்களுக்கு பிள்ளையாகிய நீங்கள் பே பண்ணுவீர்கள் என்று அந்த அம்மாதானே சொன்னாங்க . இப்ப நீங்களானா அவங்களுக்கும், உங்களுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி இப்படிச் சொல்றீங்களே” என்றார்

“இல்லை இல்லை. அவர் என் அம்மாவே இல்லை. அவர் யாருன்னே தெரியாது

நீங்க அவரை அம்மான்னு கூப்பிட்டதை நான் பார்த்தேன். நான் மாத்திரமல்ல எங்கள் கடை சிப்பந்திகள் பலரும் பாத்தாங்க
ஒரு மரியாதைக்காக அவரை அப்படிக்கூப்பிட்டேன்’ என்றான். ராஜூ.
அதற்குள் கடை சிப்பந்திகள் பலரும் “இல்லே சார் இவர் பொய்சொல்கிறர். ஆரம்பத்துலே இருந்து இவர் அவரை அம்மா என்று அழைத்ததும் இல்லாமல் அவருக்கு இங்குள்ள கடை கான்டீனில் காபி வாங்கிக்கொடுத்து ‘காபி குடிங்க அம்மா’ என்று வற்புறுத்தினார். அவரோடே வந்து கடைசி வரையில் இருந்து அவரை அம்மா, அம்மா என்று தான் அழைத்தார். இப்ப அவர் அம்மா இல்லைன்னா எப்படி? இப்படி அம்மாவும்பிள்ளையுமா தனித்தனியே சாமான்கள் வாங்கி எங்களை ஏமாத்த வேஷம் போடறீங்களா?” என்றனர்.
“சரி நான் அந்த அம்மா வெளியிலே காத்திருப்பதாகச்சொன்னார். போய் அவரையே இங்கு அழைத்து வருகிறேன் என்றான் ராஜூ. மார்க்கெட் ஓணர் அவன் கூடவே ஒரு ஆளை அனுப்பி “இவர் ஓடாம பாத்துக்க அப்பா” என்றார்.
“என்ன கொடுமையடா இது?” என்று எண்ணியபடி வெளியே வந்து ராஜூ அந்த அம்மாவை நாலாபக்கமும் தேடினான். யாரையைம் காணோம . “அம்மா அம்மா” என்று குரல் கொடுத்தான். அம்மாவை எந்தத்திக்கிலும் காணோம்.
இந்தக்குரல் இறந்து போன அவனின் ஒரிஜினல் அம்மாவுக்குக்கேட்டு இருக்க வேண்டும். அப்போது அவன் நண்பன் நாராயணன் எதேச்சையாக அங்கு வந்து
“என்னப்பா, உன் அம்மா செத்த துக்கத்திலிருந்து நீ இன்னும் மீளலையா?” என்று கேட்க, அவன் நடந்ததை எல்லாம் விவரமாகச்சொல்லி அவனிடம் சொல்லி
“என்னிடம் இப்போது அவ்வளவு பணமில்லை. உன்னிடம் இருந்தால் கொடு. பிறகு நான் திருப்பித் தந்து விடுகிறேன்” என்று கூறி அவனையும் உள்ளே அழைத்துச்சென்று ஓணரிடம் நடந்ததைக்கூறி எப்படி அந்த அம்மா அவனை ஏமாற்றினார், அந்த அம்மா ஒரிஜினல் அம்மா இல்லை என்று விளக்கினான்..
அவரும் வருத்தத்துடன் “சார், நீங்கள் ஏமாந்தது உங்கள் தவறு. அதற்காக நாங்கள் ஏமாறத்தயாரா யில்லை”. என்று கூறி முழுப்பணத்தையும் வாங்கிக்கொண்டு “இனிமேலாவது ஏமாறாமல் இருங்க சார்” என்று ஒருஃப்ரீ அட்வைஸ் கொடுத்து ( ஃ்ப்ரீ அட்வைசா? இந்த அட்வைசின் மதிப்பு ரூபாய் 6356/-ஆச்சே) அவனை அனுப்பினார். ஏமாந்தது பற்றிக்கூட அவனுக்கு வருத்தமில்லை. அம்மா என்று சொல்லி ஒரு அம்மா அவனை சும்மா சில நிமிடங்களில் ஏமாற்றியதை தான் அவனால் ஜீரணிக்க முடியவில்லை.
மறுநாள் காலையில் என் கண்களில் பட்ட செய்தி
ஒரு நகைக்கடையில் ஒரு நடுத்தர வயதுள்ள ஒரு பெண் அங்கு நகை வாங்க வந்த. பெண்ணிடம் நயிச்சயமாகப்பேசி அவளிடம் தான் தன் மகளை ஒரு விபத்தில் மகளை இழந்தது போலவும் இந்தப்பெண் அப்படியே இறந்த தன் பெண் போலவே இருந்ததாகவும் அவளைத்தன்மகளாகப்பாவித்து அவளிடம் தன்னை அம்மாவாக நினைக்க வேண்டும் என்று கூறி அப்பெண்ணை நம்ப வைத்து அவர் வாங்கின நகைக் கான பில்லை தன்மகள் கட்டுவாள் என்று சொல்லி ஏமாற்றியதாகவும் இப்படி சிலர் அம்மா சென்டிமென்டைப் பயன் படுத்தி மக்களை ஏமாற்றுவதாகவும் செய்தியைப் படித்தவுடன் ராஜூ “தான் மாத்திரம் ஏமாறவில்லை, வேறு சிலரும், தன்னை மாதிரியே ஏமாந்து இருக்கிறார்கள்” என்ற அல்ப சந்தோஷ நிம்மதியில் முதல் நாள் இழந்த தூக்கத்தை ஈடு செய்தான்.

,

எழுதியவர் : ரா. குருசுவாமி (30-Oct-21, 6:05 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 151

மேலே