சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர் - நீதி வெண்பா 35
நேரிசை வெண்பா
சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர் ஆன்றமைந்த
முற்றுணர்வோர் ஒன்றும் மொழியாரே - வெற்றிபெறும்
வெண்கலத்தின் ஓசை மிகுமே விரிபசும்பொன்
ஒண்கலத்தில் உண்டோ ஒலி. 35
- நீதி வெண்பா
மூடன் ஒன்றுமில்லாததை யெல்லாம் ஆகா ஓகோ என்று பேசிக் கொண்டு அலட்டித் திரிவான். 'நிறை குடம் தளும்பாது' என்பர். முற்றும் கற்றுணர்ந்தவன் இருக்குமிடம் தெரியாமல் அமைதியாக அனைத்தையும் கவனித்துக் கொண்டிருப்பான்.
மேலோர் அமைதி காப்பர், அற்பர்கள் எதைவேண்டுமானாலும் கூசாமல் பேசுவர்.
இது எதைப் போல என்றால், வெண்கலத்தைத் தட்டினால் கணீரென்று ஓசை எழுப்பும், விலை உயர்ந்த தங்கத்தைத் தட்டினால் அப்படிப்பட்ட ஓசை எழுமா, எழாது அல்லவா?
அதனால்தான் சிவபெருமான் திருஞானசம்பந்த மூர்த்திக்குக் கொடுத்த பொற்தாளத்துக்கு ஓசையைத் தனியாக வழங்கி அருள் புரிந்தாராம். ஓசை ஒலியெலாம் ஆனவன் அல்லவா அந்த சிவபெருமான்.