கெடும்பொழுதில் கண்டனவுங் காணாக் கெடும் – நான்மணிக்கடிகை 41

இன்னிசை வெண்பா

பிறக்குங்கால் பேரெனவும் பேரா - இறக்குங்கால்
நில்லெனவும் நில்லா உயிரெனைத்தும் - நல்லாள்
உடம்படின் தானே பெருகுங் - கெடும்பொழுதில்
கண்டனவுங் காணாக் கெடும் 41

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

உயிரெல்லாம் பிறக்கும்போது உடலை விட்டு நீங்கென்றாலும் நீங்கா;

அவை இறக்கும்போது இவ்வுடலிலேயே நில்லென்றாலும் நில்லா;

திருமகள் உடன்படின் செல்வம் தானே பெருகும்;

அவள் நீங்கிப் போங்காலத்தில் முன்பு காணப்பட்ட பொருள்கள் கூட காணப்படாதனவாய் அழிந்துபோம்.

கருத்து:

உயிர்கள் பிறக்கும்போது நீங்கென நீங்கா;
இறக்கும்போது நில்லென நில்லா;
திருமகள் கூடினாற் செல்வமும் கூடும்;
அவள் நீங்கினால் அச் செல்வமும் நீங்கும்.

விளக்கவுரை:

‘கண்எனவு' மென்றதும் அது; என்னை? மேன்மேற் பெருகுதல் கெடுதலேயன்றி முன்னாற் பெருகிக் கண்டனவுங் கெடுமென்றலின்.

‘எனைத்து' மென்பது முழுமையுமென்னும் பொருளுணர்த்திற்று. உடம்படின் - உடம்பட்டுச் சேரின். எனை - எத்தனை என்பதன் மரூஉ.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Nov-21, 7:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

மேலே