திருவுந் திணைவகையான் நில்லா – நான்மணிக்கடிகை 40

இன்னிசை வெண்பா

திருவுந் திணைவகையான் நில்லாப் - பெருவலிக்
கூற்றமுங் கூறுவ செய்துண்ணா(து) - ஆற்ற
மறைக்க மறையாதாங் காமம் - முறையும்
இறைவகையான் நின்று விடும் 40

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

செல்வமும் குடிப்பிறப்பு வகையால் பொருந்தி நில்லாவாம்;

மிக்க வலிமையுடைய நமனும் தன்னாலுண்ணப்படுகின்றவன் சொல்வனவற்றை செய்து உண்ணான்;

மிகவும் மறைவாக்க காமவியல்பு மறையாது;

ஆட்சி முறைமையும் அரசனது போக்குக் கேற்றபடி அமைந்துவிடும்.

கருத்து:

குடிவகைக்கு ஏற்பச் செல்வம் நில்லா; கூற்றுவன் தன்னால் உண்ணப்படுகின்றவன் சொல்வனவற்றைக் கேளான்; மறைத்தாலும் காமம் மறையாது; அரசனது போக்குக்கேற்றபடி ஆட்சிமுறை அமைந்துவிடும்.

விளக்கவுரை:

திணை - குடி; குடியின் உயர்வு தாழ்வுக் கேற்பச் செல்வமும் மிகுந்துங் குறைந்தும் நில்லா வென்றற்குத் ‘திணைவகையாந் நில்லா' வெனப்பட்டது.

செல்வம், செல்வாக்கு, செல்வநுகர்ச்சி யெனத் திரு பலவாகலின் நில்லாவெனப் பன்மையிற் கூறினார்.

எவர் வலிமையுங் கூற்றுவன் முன் செல்லாமையின், அவனுக்குப் பெருவலிமை யுரைக்கப்பட்டது.

‘கூறுவ' வென்றது, துன்பஞ் செய்யாது கொடுபோ;

செல்வம், கூற்றம், காமம், அரசு என்பன தத்தம் இயற்கைப்படியே நடைபெறுமென்பது கருத்து.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Nov-21, 6:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே