துளங்கினுந் தன்குடிமை குன்றாத் தகைமை – திரிகடுகம் 41

இன்னிசை வெண்பா

அலந்தார்க்கொன் றீந்த புகழும் துளங்கினுந்
தன்குடிமை குன்றாத் தகைமையும் - அன்போடி
நாள்நாளு நட்டார்ப் பெருக்கலும் இம்மூன்றுங்
கேள்வியு ளெல்லாந் தலை 41

- திரிகடுகம்

பொருளுரை:

வறுமையால் துன்பப்பட்டு வந்தவர்கட்கு அவர் விரும்பும் ஒரு பொருளை ஈந்ததனாலாகிய இசையும்,

வறுமை முதலியவற்றால் தளர்ந்த காலத்தும் தன் குடிப்பிறப்புக்குத் தகுந்த ஒழுக்கம் குறையாத இயல்பும்;

அன்பு மிகுந்து நாடோறும் நட்புச்செய்தவரை பெருகச் செய்தலும்

ஆகிய இம்மூன்றும் கேட்கப்படும் அறங்கள் பலவற்றிலும் முதன்மையானவையாகும்.

கருத்துரை:

வறுமையால் வருந்துவோர்க்கு ஈதலும், வறுமையுற்ற விடத்தும் தன் குடிப்பிறப்புக்குத் தாழ்வனவற்றைச் செய்யாமையும். நட்புச்செய்தவரை மேன்மேலும் பெருக்குவதும் சிறந்த அறம்.

ஈந்த புகழ் - ஈந்ததனாலாய புகழ்:

இன்னாத்தகைமை - இன்னாமைக்கு ஏதுவாகிய தகைமை: கேள்வி - கேட்டலா லுண்டாகிய அறிவு:

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Nov-21, 5:15 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே