உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்தடினும் கைப்பறா பேய்ச்சுரையின் காய் - நாலடியார் 116

நேரிசை வெண்பா

இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினும் என்றும்
அடங்காதார் என்றும் அடங்கார்; - தடங்கண்ணாய்
உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்தடினும்
கைப்பறா பேய்ச்சுரையின் காய் 116

- மெய்ம்மை, நாலடியார்

பொருளுரை:

விரிவுமிக மெய்யுணர்வு நூல்களை என்றுங் கற்பினும் இயல்பாக அமைந்தொழுகாதவர் என்றும் அமைந்தொழுகார்; அகன்ற கண்களையுடைய மாதே! உப்பொடு நெய் பால் தயிர் பெருங்காயம் இட்டுச் சமைத்தாலும் பேய்ச்சுரையின் காய்கள் தம் கசப்பியல்பு நீங்கா

கருத்து:

இயற்கைத் தன்மை எதனாலும் நீங்காது.

விளக்கம்:

ஞானம்: ஆகுபெயர். என்றுங் கற்பினுமெனக் கொண்டு வாழ்நாள் முழுமையும் கற்றாலும் என்று உரைத்துக்கொள்க.

கண்ணாள் என்பது விளித்தலிற் கண்ணாய் என நின்றது.1

பொதுவாம் முதன்மை நோக்கி உப்பு ஒடுக்கொடுத்துப் பிரிக்கப்பட்டது.

நெய் பால் தயிர் என்பவற்றுள் எதனை இட்டு அடினும் என்பது கருத்து.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Nov-21, 8:49 pm)
பார்வை : 192

சிறந்த கட்டுரைகள்

மேலே