எறும்பிங் கொருகோடி யுய்யுமால் ஆருங் கிளையோ டயின்று - நீதிநெறி விளக்கம் 38

நேரிசை வெண்பா

வாங்குங் கவளத் தொருசிறிது வாய்தப்பின்
தூங்குங் களிறோ துயருறா – ஆங்கதுகொண்(டு)
ஊரும் எறும்பிங் கொருகோடி யுய்யுமால்
ஆருங் கிளையோ டயின்று. 38

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

தான் எடுத்து உட்கொள்ளும் ஒருவாய் உணவினின்று ஒரு சிறிது உணவு வாய் தவறிக் கீழே விழுந்தால், அதனால் அசையா நிற்கும் யானைகளோ வருத்தமடையாது;

தவறிய அவ்வுணவைக் கொண்டு இவ்வுலகில் ஊருகின்ற எறும்புகள் ஒரு கோடி தங்கள் நிறைந்த சுற்றத்தோடு உண்டு பிழைக்கும்.

விளக்கம்:

கிளை - கிளைத்தல்: கவளம் - ஒருவாய் உணவு. வாங்கும் கவளம் என்றது, பாகன் கொடுக்க யானை வாங்கி உண்ணும் ஒரு வாயுணவு எனலுமாம்.

கருத்து:

பெருஞ்செல்வமுடையவர் அதனில் ஒரு சிறு பகுதியைத் தானமாக வழங்குவராயின் அதனால் எத்தனையோ உயிர்கள் பிழைக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Nov-21, 8:43 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 61

சிறந்த கட்டுரைகள்

மேலே