உள்ளநாள் நல்லறம் செய்க என்னும் சொல் – அறநெறிச்சாரம் 35

இடையின எதுகை ள், ல் அமைந்த நேரிசை வெண்பா

உள்ளநாள் நல்லறஞ் செய்கென்னும் சாற்றன்றோ
இல்லைநாட் போயேன் றிடங்கடிந்து - தொல்லை
இடைக்கடையும் ஆற்றார் இரந்தார்க்கு நின்றார்
கடைத்தலைவைத்(து) ஈயும் பலி. 35

– அறநெறிச்சாரம்

பொருளுரை:

முன்னாளில் தாம் செல்வமுடையராய் இருந்த பொழுது அறம் சிறிதும் செய்யாமல், பின் பொருளில்லாது வறுமையுற்ற பொழுது தாம் இருக்குமிடம் விட்டுப் பெயர்ந்து ஆங்காங்குப் போய் ஏற்றுத் திரிந்து பிறர்பால் இரந்தார்க்கு,

இரக்கப்படுவார் தம் தலைவாயிலில் வைத்து வழங்கும் பிச்சையானது தாம் செல்வம் பெறும் காலத்தில் நன்மை தரும் அறத்தை செய்க என்று அவர்க்குச் சொல்லும் சொல்லாகும் அல்லவா?

கருத்து:

தாம் செல்வம் பெற்ற காலத்தில் பிறர்க்கு நன்மை தரும் அறத்தை செய்ய வேண்டும் எனப்படுகிறது.

குறிப்பு: சாற்று - சொல், செய்க + என்னும் = செய்கென்னும்:

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Nov-21, 7:57 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே