பஜ்ஜி மகாத்மியம்

பஜ்ஜி மகாத்மியம்!!
நான் மாலை ஏதாவது ஹோட்டலுக்குப்போனால் முதலில் பஜ்ஐஜியைத்தான் கேட்பேன். லைட் ஸ்நாக்குகளில் முதல் இடம் பஜ்ஜிக்குத்தான்.
பஜ்ஜி சாப்பிட ஹோட்டலுக்குப்போவது வேஸ்ட். அதற்காகவே கையேந்தி பவன்கள் மைலாப்பூரிலும் வேறு இடங்களிலும் உள்ளன.

பொன்னம்பல வாத்தியார் தெருவில் ஒரு ஜன்னல் பஜ்ஜிக் கடை ரொம்ப ஃபேமஸ். நான் கபாலீசுவரர் கோவிலுக்குப்போகும்போதெல்லாம் அந்த பஜ்ஜிக்கடைக்குப் போகாமல் இருந்ததில்லை. அதேபோல் அந்த பஜ்ஜிக்கடைசாக்கில் கோவிலைக்குப் போவதுமுண்டு. ( இப்போது அந்தக்கடை அங்கு இருக்கிறதா, தெரியவில்லை)

பக்கத்து கட்டிங்கில் ஒரு மாமி கடை திண்ணைக்கடையாக இருந்தது. அதில் பஜ்ஜி , போண்டோ போன்ற சமாசாரங்களும் கிடைக்கும். அந்தக்கடை என் போன றவர்களின் உபயத்தால் இன்று பல்கிப் பெருகி ஓரளவு உள்ளே போய் உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்குப் பெருத்து விட்டது.

இங்கெல்லாம் நான் முதலில் சாப்பிட்ட போது ஒரு பஜ்ஜி ஒரு ரூபாய்தான். ஆனால் இன்ஃப்ளேஷன் ஏற ஏற, பஜ்ஜி சற்று சிறுத்து விலை ஒரு பஜ்ஜி 5 ரூபாய் வரையில் பெருத்துவிட்டது.

பிறகு மைலாப்பூரிலிருந்து திருவான்மியூர் நான் சென்ற பிறகு அங்குள்ள கையேந்தி பவன்கள் எனக்கு திருப்தியாக இல்லாததால் ரெகுலர் ஹோட்டலுக்கு செல்ல வேண்டியதாகிவிட்டது.

ஆனால் யாரிட்ட சாபமோ நான்ஹோட்டலுக்குப்போன பெரும்பாலான நாட்களில் நான் பஜ்ஜி கேட்டபோதெல்லாம் பஜ்ஜி நஹீம் என்ற பதில் தான் வரும். பிறகு தான் தெரிந்தது பஜ்ஜி, போண்டா வகையறாக்கள் ஐந்து அல்லது ஐந்தரை மணிக்குள் காலி ஆகிவிடும் என்று. பத்தாண்டுகளுக்கு முன்பு சில ஹோட்டல்களில் 3 பஜ்ஜி 55 ரூபாய் என்பதைப்பார்த்து கணக்குப்போட்டதில் இந்த 55 ரூபாய்க்கு வீட்டில் பஜ்ஜி செய்வதாக இருந்தால் ஒரு குடும்பமே ஆளுக்கு ஆறு பஜ்ஜி சாப்பிடலாம் என்று தெரிந்தது. இது பஜ்ஜிநாமிக்ஸ்.

மாலை நாலு மணி வாக்கில் ஏதேனும் ஓர் ஓட்டலில் காபி குடிக்கப் போனால், ( நான்காபி சாப்பிடுவதில்லை, அதென்ன காபி சாப்பிடுவது- காபி குடிக்கிறது என்று ஏன் பலரும் சொல்வதில்லை-சரி இதைப்பற்றி காபி குடிக்காதவனுக்கு என்ன கவலை என்று கேட்கிறீர்களா? சாமி கும்பிடாதவன் கோவிலில் யார் பூஜை பண்ணவேண்டும் என்று தன் மூக்கை நீட்டுவதில்லையா?) அதைப்போலத்தான் இதுவும்

முதலில் கேட்பது, ‘சூடா பஜ்ஜி இருக்கா?’ – இருந்து விட்டால் ஜென்ம சாபல்யம் அடைந்தாற்போல ஒரு திருப்தி!
மாலை டிபன்களில், தோசை, இட்டிலி போன்ற ஹெவிகளுக்கும், மிக்சர், பக்கோடா போன்ற லைட்களுக்கும் இடைப்பட்ட பஜ்ஜி போண்டாவுக்கே என் பொன்னான ஓட்டு!

அதுவும் பெயரிலேயே மரியாதையுள்ள ‘பஜ்’ஜி’க்கு, என்றும் என் நாக்கு அடிமையோ, அடிமை.
அந்தக் காலப் பெண் பார்க்கும் படலத்தில், சொஜ்ஜிக்கும், பஜ்ஜிக்கும் முக்கியப் பங்கு உண்டு. (சொஜ்ஜி-பஜ்ஜி காலாகாலத்துக்கும் நல்ல சுவையான ஜோடி!என்ன ஒரு ரைம்). இதோடு நல்ல கும்பகோணம் டிகிரி காபியும் ( இது வெறும் பேசிலர்ஸ் டிகிரின்னு அதை மட்டம் தட்ட வேண்டாம். அது காபிகளிலே அந்தக் காலத்து Ph.D ஆக்கும்)
சேர்ந்து கொண்டால் கேட்கவே வேண்டாம் – கண்ணை மூடிக் கொண்டு பெண்ணுக்கு ’ஓகே’ தான் – ஆனால், பின்னாளில் அதே வீட்டில் தயாராகி வரும் பஜ்ஜி-காபியின் தரத்துக்குக் கம்பெனி உத்திரவாதம் அல்ல! பஜ்ஜி கவனத்தில் தலையாட்டிவிட்டு, பின்னர் வாழ்நாள் முழுவதும் ஆடிய தலையுடனேயே இருப்பது பஜ்ஜியின் நீண்ட கால வெற்றி ரகசியம்!

மாலை மூணு மணியளவில் கடலை மாவு கரைபடும்போதே களைகட்டி விடும் கிச்சன் – உருளை, வாழை, கத்தரி, வெங்காயம், செள செள எனப்படும் பெங். கத்தரிக்காய், எல்லாம் சில்லு சில்லாய் வெட்டப்பட்டு (வெங்காயம் ரிங்கு ரிங்காய் பிரியாமல், தின் ஸ்லைசுகளாய் சீவுவது ஒரு தனீக் கலை – பஜ்ஜிக் கலை), பஜ்ஜி மாவில் முக்கி எடுக்கப் பட்டு, பதமாய்க் கொதிக்கும் புது எண்ணையில் (முதல் நாள் சுட்ட எண்ணை உதவாது – சில கடைகளில் பஜ்ஜி வாய்க்கு வந்தவுடன் காட்டிக் கொடுத்துவிடும்!), மெதுவாய் விடப்படும் - சிறு குமிழிகளுடன் பொறிந்து, பொன்னிறம் ஆனவுடன் சட்டுவத்தில் ( அதாங்க, ஓட்டைகள் நிறைந்த கரண்டி) எடுத்து பாத்திரத்தில் போட்டு விட்டால் – பஜ்ஜி ரெடி! குடமிளகாய்பஜ்ஜி போடுவது என்பது ஒரு தனி ஸ்பெஷாலிட்டி.

கொஞ்சம் கரகரப்பாகவும், அதிகம் உப்பாமலும், உள்ளிருக்கும் காயின் வடிவத்தில் சூடாக வந்து விழும் பஜ்ஜியே, உன்னை ஆராதிக்கிறேன்! அப்படியே சூடாகக் கடித்துவிட, முழுங்கவும் முடியாமல், துப்பவும் மனமில்லாமல் வாய் வழியே புஸ் புஸ் என்று அனல் காற்று வெளியே விட, தின்னும் பஜ்ஜி ஜோர்! பஜ்ஜியைப் பிய்த்து, காயையும், பஜ்ஜி உறையையும் தனித் தனியே ஊதி ஊதித் தின்பவர்கள் பஜ்ஜியால் சபிக்கப் பட்டவர்கள்!

காரம் கம்மியாக, திப்பி திப்பியாக தேங்காய்ச் சட்னியும், கொஞ்சூண்டு வெங்காய சாம்பாரும் கூட இருந்தால் கோடி சுகம். சாஸோ, கெச்சப்போ ஆபத்துக்குப் பாவமில்லேன்னாலும், இரண்டாம் பட்சம்தான்! என்னைப் பொறுத்த வரையில் பஜ்ஜிக்கு பக்க வாத்தியம் தேவை இல்லை. தனி பஜ்ஜியே சுகம், சுகம். பஜ்ஜியை விரும்பாத பேர்களுண்டோ என்று பாடத் தோன்றுகிறது
டாக்டர்களின் முதல் நண்பன் இந்த பஜ்ஜிகள்தான். பஜ்ஜிக்காக உயிர் வாழ்பவர்கள், டாக்டர்களுக்கு உயிர் கொடுப்பவர்கள்.

ரெடிமேட் பஜ்ஜி மிக்ஸ் கிடைக்கிறது – கொஞ்சம் இட்லி/தோசை மாவைச் சேர்த்துக் கொண்டால் பஜ்ஜி கரகரப்பாக இருக்கும் - ஓரிரண்டு மினி தடிமனில் ஸ்லிம்மா சீவின காய்கள், நல்ல பஜ்ஜிக்கு நளபாகத் தரம் தரக்கூடியவை! – ரொம்ப நேரம் எண்ணையில் விடக் கூடாது; ஆரஞ்சுக்கும், சிவப்புக்கும் நடுவான கலர் உசிதம் – அதிகம் சூளையில் சுட்ட கருஞ்செங்கல் நிறம் காசிக்குப் போகாமலேயே பஜ்ஜியை ஒதுக்கி வைத்துவிடும்! மேற்படி ’டிப்ஸ்’ அகில உலக ’பஜ்ஜி ரிசர்ச் கமிட்டி’ யினால் பொது மக்கள் நலம் கருதி பரிந்துரைக்கப் படுகின்றன!

‘மானசரோவரி’ல் கிராமத்து சாலையோர டீக்கடையில் பஜ்ஜி பொறித்துப் போடுவதை சுவையாக எழுதியிருப்பார் அசோகமித்திரன்! வாழைக்காயை நீளவாட்டில் சீவிப் போடும் பஜ்ஜி – சின்ன நியூஸ் பேப்பர் தாளில் வைத்துக் கொடுப்பார்கள் – அதில் அழுத்தி எண்ணையை உறிஞ்சிய பிறகு கொஞ்சம் உலர்ந்த பஜ்ஜி – டீயுடன் அதற்கு மக்களிடையே கிராக்கி அதிகம்!
ஒரு சிலர் பஜ்ஜியைப் பேப்பரில்போட்டு ஒரு அழுத்து அழுத்தி அதன் எண்ணைப்பசையைப் பிழிந்து எடுத்து சாப்பிடுவார்கள். இது பஜ்ஜியை கொலை செய்து சாப்பிடுவதற்கு சமம். இந்த பஜ்ஜி ஹத்தி பாவம் எனக்கு வேண்டாம்.

கேரளாவின் நேந்திரம் பழ பஜ்ஜி – ‘பழம்புழுங்கி' ('பழம்பொறி' ?) – ஓர் அசட்டுத் தித்திப்புடன் ரொம்பவும் பிரபலம். ஒன்று தின்றாலே, ஒரு நாள் முழுக்க பசிக்காது!.

காரம் கம்மியான ஸ்பெசல் மிளகாய் பஜ்ஜி – கடற்கரையில் மிகவும் பிரசித்தம். எக்ஸிபிஷனிலும் இதற்கு அசாத்திய மவுசு.
’ஸ்டார்டர்’ வகையில் தட்டு நிறைய வெங்காயம், கொத்தமல்லியெல்லாம் தூவிக் கொடுக்கப் படுகின்ற “கோபி 65” பஜ்ஜியின் இக்காலப் பரிணாம வளர்ச்சி! பிரட் பஜ்ஜி கூட .

‘தூள்பஜ்ஜி’ என்ற சொல்வழக்கு காரைக்குடி பக்கங்களில் உண்டு – பஜ்ஜிக்கும், பக்கோடாவுக்கும் இடைப்பட்ட ஒரு வஸ்து – பொட்டலமாகக் கட்டி விற்பார்கள் – செட்டிநாட்டு சுவையுடன்!
குடை மிளகாய் பஜ்ஜியை முதன் முறையாக பெங்களூரில் சாப்பிட்டேன். இன்னும் கர்நாடகா பார்டர் தாண்டி அது தமிழ் நாட்டுக்குள் நுழைய யோசித்துக்கொண்டு இருக்கிறது என்று நினைக்கிறேன்.
எண்பதுகளில் பாண்டிபசார் சாந்தா பவனில் அறுபது பைசாவுக்கு ஒரு ப்ளேட் ஆனியன் பஜ்ஜியும் (மூன்று), நாற்பது பைசாவுக்கு ஒரு ஸ்ட்ராங் காபியும் குடித்த நினைவு – இன்று ஒரு ரூபாய்க்கு சின்ன வெங்காயம் ஒன்று கிடைக்குமா என்பதே சந்தேகம்!
இன்று ‘நொந்து நூடுல்ஸ்’ ஆவதின் அன்றையப் பிரயோகம் ‘பஜ்ஜியாய்ட்டேம்பா!’!
வாழ்க ப.நே.ம.க.!!
(பஜ்ஜி நேசிக்கும் மனிதக் கட்சி!).
நான் பநேமகவின் தீவிர ஆதரவாளன். ஒருகாலத்தில் இந்தக்கட்சியை கடுமையாக எதிர்த்தவன். அதை எதிர்த்து தகாத வார்த்தைகளை உதிர்த்தவன். என் இருபதாவது வயதில் ஒரு மாலை மயக்கத்தில் ஒரு தட்டு பஜ்ஜியையும் விழுங்கியவன். அதற்குப்பிறகு இரண்டு நாட்கள் என்ன ஆயின, எப்படிப் போயின என்பது என் வாழ்நாள் சரித்திரத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்ட பகுதிகள். அன்றிலிருந்து 50 வயது வரை பஜ்ஜிக்கு கருப்புக்கொடி காட்டியவன். அதற்குப்பிறகு என் நாக்கும் மூக்கும் என்னுடைய சபதத்துக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டன.

பிறகு வேறு வழியின்றி பநேமகவின் தீவிர மெம்பராகி பஜ்ஜியின் தாசானுதாசன் ஆனேன்.
இந்த பஜ்ஜிக்கு ஒரே ஜன்ம விரோதி பாழய்ப் போன நம் வயறுதான். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமே விஷமாகும்போது அது மட்டும் பஜ்ஜிக்குப் பொருந்தாதா என்ன?

எழுதியவர் : ரா. குருசுவாமி ( ராகு) (12-Dec-21, 7:30 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 55

சிறந்த நகைச்சுவைகள்

மேலே