இரண்டு கண் குருடனுக்கு ஒற்றை கண்ணன் பரவாயில்லை சாமி
என்னுடைய நண்பர் சில வருடங்களுக்கு முன்பு அவரது செல் போனை கோட்டை விட்ட கதையை இங்கு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் நிச்சயமாக என் நண்பர் செல் போனை கோட்டை விட்டதால் எனக்கு மகிழ்ச்சி இல்லை.
ஒரு நாள் மாலை என் நண்பர் அலுவலகம் முடிந்து அரசு பேருந்து ஒன்றில் அவரது அடுத்த பேருந்து ஏறும் இடத்தை அடைந்தார். பேருந்திலிருந்து இறங்கி செல்லுகையில் ஒரு போன் கால் வந்ததால் போனை காதுக்கருகே வைத்துக்கொண்டு பேசிக்கொண்டே நடந்தார். அப்போது அந்த சாலையி கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அப்போது, திடீரென்று மின்னல் வேகத்தில் அவரது செல் போனை எவரோ அவர் கையிலிருந்து தட்டி சென்றார்கள். கொஞ்சமும் இதை எதிர்பார்க்காத என் நண்பர் திரும்பி பார்க்கையில் ஒரு ஆள் வேகமாக எதிர் திசையில் ஓடுவதை கண்டு " திருடன் திருடன் என் செல் போன் திருடிக்கொண்டு ஓடுகிறான், அதோ அதோ" என்று சத்தம் போட, ஒரு சிலர் ஓடும் அந்த ஆளை வழி மறித்து நிறுத்தினார்கள். அவன் அவர்களை பார்த்து " நான் அதோ அங்கே சென்று கொண்டிருக்கிற அந்த 2A பேருந்தை பிடிக்க ஓடுகிறேன். எதற்கு என்னை வழி மரிக்கிறீர்கள்" என்று சத்தமிட்ட போது அவனை வழி மரித்தவர்கள் ஒதுங்கிக்கொண்டனர். இதற்கிடையில் அருகிலேயே டிராபிக் கண்ட்ரோல் செய்துகொண்டிருந்த ஒரு டிராபிக் கான்ஸ்டபிளிடம் என் நண்பர் விரைந்து சென்று " சார் என்னுடைய செல் போனை எவனோ கையிலிருந்து பறித்து கொண்டு ஓடிவிட்டான். கொஞ்சம் உதவி செய்யுங்கள்" என்று கேட்டபோது அந்த டிராபிக் கான்ஸ்டபிள் " அதற்கு நான் என்ன செய்ய முடியும்" என்று சொல்லிவிட்டு அவர் வேலையை தொடர்ந்தாராம். என் நண்பர் என்னிடம் இதை சொல்லி " இந்த மாதிரி நேரத்தில் உதவவில்லை என்றால் எதற்கு இந்த டிராபிக் கான்ஸ்டபிள்கள் எல்லாம்" என்று குறை பட்டுக்கொண்டார். நான் கேட்டேன் " அந்த செல்போன் வாங்கி எவ்வளவு நாள் ஆகிறது? நண்பர் சொன்னார் " நான்கு வருடம் ஆகிவிட்டது" நான் கேட்டேன் " இப்போது என்ன விலை போகும்?' அவர் சொன்னார் " ஒரு 500 ரூபாய்" . இதை சொல்லி விட்டு " செல் போன் திருடன் கூடவே அதனுடைய சார்ஜ்ரையும் உருவிக்கொண்டு சென்று விட்டான்." நான் கேட்டேன் " சார்ஜ்ர் விலை என்ன?" நண்பர் சொன்னார் " பத்து ரூபாய்". நான் நினைத்து கொண்டேன் " 510 ரூபாய் பறிபோனதற்கு இப்படி ஒப்பாரி வைக்கிறார் " என்று. " பரவாயில்லை போகட்டும்.இன்னொரு நல்ல செல் போன் வாங்கி கொள்ளுங்கள்" என்று சொன்னேன். அவர் " வேறு என்ன செய்வது. பேஸ் மாடல் வாங்கின கூட 1500 ரூபாய் செலவு செய்ய வேண்டும். இது போதாது என்று என் மாமனார் என்னை அன்று மாலை என்னுடன் போனில் பேசுகையில் இடையில் நான் உரையாடலை துண்டித்து விட்டேன் என்று இப்போதும் கோபம் கொள்கிறார். எத்தனை தடவை சொல்வது அந்த மனுஷனுக்கு அவர் அன்று மாலை என்னுடன் போனில் பேசும்போது தான் என் போன் சுடப்பட்டுவிட்ட்டது என்று " என்று புலம்பினார்.
நான் கூறினேன் " அட அதையெல்லாம் விடுங்க நண்பரே, உங்கள் மனைவி உங்களை ஒன்றும் சொல்லவில்லை என்றால் பின் யார் என்ன சொன்னால் என்ன" அவர் உடனே சொன்னார் " அப்பிடி இருந்தால் பரவாயில்லையே . என் மனைவி " அந்த போன் என் அம்மா எனக்கு மிகவும் ஆசையுடன் வாங்கி தந்த பரிசு. அதன் விலை ரூபாய் ஆயிரம் ஆனாலும் அதன் அன்பு ஒரு லட்சத்திற்கு மேலாக இருக்கும், அதெல்லாம் இப்போது உங்களால் பறிபோகிவிட்டதே" என்று இன்று காலை கூட என்னிடம் சொல்லி மாய்ந்து போகிறாள். என்ன செய்ய?"
நான் கேட்டேன் " அப்புறம் என்ன,நல்ல செல் போன் ஒன்று வாங்கிக்கொண்டீர்கள் தானே?". அவர் முகம் மாறிப்போய்விட்டது. " என் மகனிடம் இருந்த பழைய போன் ஒன்று சரியாக வேலை செய்யவில்லை. அவன் வேறு நல்ல புது மாடல் போன் வாங்கிகொள்ள்ளப்போகிறானாம். ஆகவே என் மனைவி அந்த பழைய செல்போனை என்னிடம் கொடுத்து அதை ரிப்பேர் செய்து கொண்டு உபயோகம் செய்யுங்கள். உங்களுக்கு அது போதும்" என்று சொல்லிவிட்டாள். ரிப்பேர் செய்தும் ஒன்றும் பெரிசாக வேலை செய்யவில்லை. மற்றவர் பேசுவது என் காதுக்கு விழுகிறது. ஆனால் நான் பேசுவது மற்றவர் காதில் விழுவதில்லை. சிலர் இதனால் ஏதோதோ முணுமுணுக்கிறார்கள். இதற்கு அந்த தொலைந்த செல் போன் எவ்வளவோ மேல். எல்லாம் விதி, அந்த செல் போன் திருடனுக்கு இந்த போனை விட நல்ல போன் கிடைத்திருக்கிறது." என்றாரே பார்க்கலாம். இதை கேட்டு என்னால் விழுந்து விழுந்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
சிறந்த நகைச்சுவைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
