வடை மகாத்மியம்

வடை மகாத்மியம்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றி மூத்த தமிழ் என்பதற்கேற்ப, பக்கவடா தோன்றி , போண்டா தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றி மூத்தது வடை என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. இருந்தாலும் வடை தமிழ்நாட்டின் ஒரு புராதனமான
தின் பண்டங்களில் ஒன்று என்பதில் எள்ளளவோ அல்லது கடுகளவோஅல்லது ஒரு , உளுத்தம்பருப்பளவோ எனக்கு சந்தேகம் கிடையாது.

வடை என்று சொல்லும்போதே நாக்கில் ஜலம் ஊறுகிறதா? ஊறவில்லை என்றால் உங்கள் வாய் வரட்சிக்கு ( அல்லது வறட்சிக்கு) உடனே ஒரு நல்ல டாக்டராகப் பார்க்கவும். அது கிடக்கட்டும். நாக்கில் எச்சில் ஊறுவதற்கு அடுத்தபடியாக உங்களுக்கு என்ன ஞாபகம் வரும்? வடை சுட்ட கிழவியும், ஏமாந்த காக்கையும் என்று நாம் LKG, UKG இல்லாத காலத்தில் ஒண்ணாம் கிளாஸிலா, அரையாம் கிளாஸிலோ படித்த, அல்லது நம்ம வீட்டுப் பாட்டி சொல்லக்கேட்ட கதை ஞாபகத்துக்கு வருகிறதா? அப்படி இல்லை என்றால் நீங்கள் அல்ஸமீர் வியாதியினால் அவதிப்படுகிறீர்கள் என்பது உறுதி ஆகிறது. இப்படி வடை என்பது தமிழ்ப் பண்பாட்டிலே ஊறிய ஒரு தின்பண்டமாக இருப்பதை மறுப்பீர்களா? ஆனால் இன்று அந்த கதையில் வரும் காகம் பழைய காகம் போல் இல்லாமல் மனிதனைப் போல புத்திசாலித்தனமாக வடையை திருடி கொத்தி எடுத்துக்கொண்டு போய் ஒரு மரக்கிளையின் மீதமர்ந்து நரி பாடச் சொன்னவுடன் வடையை பத்திரமாக தன் கால்களின் அடியில் கெட்டியாகப பிடித்துக்கொண்டு ‘காகா’ என்ற நாராச குரலில் பாடி தன்னை ஏமாற்ற நினைத்த நரியை ஓடச் செய்தது. இது இன்றைய பகுத்தறிவுக் காகமும் வடையும் என்ற கதை. இந்தக் கதை இன்றைய குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்களோ இல்லையோ, இன்று பல அரசியல் வாதிகளும் வெறும் வாயில் வடை சுடுவதில் வல்லுனர்களாக இருக்கின்றனர்.
சரி. வடையின் கதையை இப்போது பார்ப்போம். இது சிந்து நதி நாகரிகத்துக்கும் முற்பட்டது என்பது என் அபிப்பிராயம். வடை பிடிக்காதவர்கள் ( அப்படி யாராவது இருப்பார்கள் என்று என்னால் சிந்தித்துக் கூட பார்க்க இயலவில்லை) . ஜீரண கோளாறு உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் அதை வந்தேறி, புகுந்தேறி என்று பலவாறாகப் பழிக்கலாம். ஆனால் அதை இன்று விரும்பாத தமிழர்களே இல்லை. அப்படி விரும்பாதவர்கள் தமிழர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு வடை நம் வாழ்வில் ஒன்றற அல்லது இரண்டறக் கலந்து விட்டது. பருப்பில்லாக் கல்யாணங்கள் இருக்கலாம். ஆனால் இன்று வடையில்லா விசேஷங்கள் எதுவும் கிடையாது.
வடைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம். மெதுவடை என்று சொன்னால் கெட்டி வடை என்று ஒன்று இருக்கவேண்டும் அல்லவா? ஏன் இல்லை? ஒரு வேளை மற்ற வடைகள் எல்லாம் கெட்டி வடைகளா? அப்படிச்சொல்ல முடியாது. ஆமவடையா, ஆமைவடையா தெரியல்லே. வெஜிடேரியன்களா இருந்துகொண்டு ஏன் இந்தப்பெயர் வைத்தார்கள்? யார் வைத்தார்கள்? பிறகு தவல வடை, தவல வடையா, தவளை வடையா? தவளை வடையா இருக்க முடியாது என்பது என்ஊகம். ஒருவேளை சீமான் இந்தப்பெயரை வைத்தாரா? அவருக்குத்தன் இந்த ஆமை, தவளை எல்லாம் ரொம்பவும் பரிச்சயம்.ஆனால் அவர்பிறப்பதற்கு முன்பே இந்தப்பெயரை வைத்துவிட்டார்கள். எனவே அவராக இருக்கமுடியாது.
கீரை வடை, மெந்தய வடை, மசால் வடை, மிளகு வடை இப்படி வடைகளிலே நம்நாக்கை சுழட்டும் பல வித வடைகள் உண்டு. ஆனால் எந்த வடையாக இருந்தாலும் என் முதல் ஓட்டு மெதுவடைக்குத்தான் . அதுவும் சுடச்சுட வாணலியில் மூழ்கித் திணறிக்கொண்டு இருக்கும்போது எடுக்கப்படும் பொன்முறுவல் கலரில் மேலுறை கரகரவன்றும் உட்புறம் மிக மிக மிருதுவாகவும் இருக்கும் அந்த “ஹாட் ஃப்ரம் த ஸ்டவ்” வடைக்கு என் டபிள் வோட்ஸ்.
இப்படிப்பட்ட என் உயிருக்கு உயிரான வடையுடன் நான் கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் டூ விட்டிருந்தேன் என்றால் ஆச்சரியமாக இல்லை ? எந்த டாக்டரிடம் போனாலும் அந்த நாள் முதல் இந்த நாள் வரை அவர்கள் கொடுக்கும் முதல் அட்வைசே எண்ணைப் பதார்த்தங்களைத்தொடாதே என்பதுதான். இதை நம்பி நான் என் வாழ்க்கையின் 35 வருட பொன்னான வருடங்களை வடையில்லா வாழ்வு வாழ்ந்து பாழடித்து விட்டேன். ஒரு நாள் துணிந்து நாம் வாழ்வது எதற்காக என்று ஆராய்ந்த பொழுது ஒரு மகான் சொன்ன “ருசியான சாப்பாட்டை சுவை பண்ணா நாவென்ன நாவே” என்ற மகத்தான தத்துவத்தைக் கேட்டதிலிருந்து நான் அந்த மகானுக்கும் மெது வடைக்கும் அடிமையானேன். ( அந்த மகான், வேறு யாரும் இல்லை. அத்தனை காலம் என்னுள் உறங்கிக்கிடந்த என் உள் உணர்வு தான்)

சிலர் “வடையில் எண்ணை சொட்டச்சொட்ட சாப்பிடாதீர்கள். அதை ஒரு அமுக்கு அமுக்கி அதிலுள்ள எண்ணையைப் பிழிந்து எடுத்து சாப்பிடலாம்” என்றார்கள். என்னே அவர்களது அறியாமை. வடையை அந்தப் பிழி பிழிந்தால் அந்த வடையின் சாபத்திற்கும் என் சாபத்துக்கும் நிச்சயம் நீங்கள் ஆளாவீர்கள். வடை ஒரு இளம் குழந்தை மாதிரி. அதை அந்த நசுக்கு நசுக்கினால் உங்களுக்கு நரகத்தில் கட்டாயம் ஓர் இடம் ரிசர்வ் செய்து விட வேண்டியதுதான். எனவே கையில் எண்ணை அதிகமாக ஒட்டாமல் வடை யின் ஷேப் மாறி சப்பையாகாமல் இருக்கும் அளவிற்கு பதமாக அதைக்கையாள வேண்டும். அப்படி நீங்கள் எண்ணையின் தீவிர விரோதியானால் வடையை பேப்பர் கொண்டு ( நியூஸ் பேப்பரையோ, வேறு எந்த பிரிண்டட் பேப்பரையோ பயன் படுத்தக்கூடாது) மெதுவாக பிரஸ் செய்து எக்ஸ்ட்ரா எண்ணையைப் பிழிந்து வீட்டுக்கம்பத்தில் யாரும்பார்க்காத போது பூசலாம்.

மேலும் வடைக்கு எந்த எண்ணையை பயன்படுத்துவது நல்லது என்பது அடுத்த கேள்வி. என்னைப்பொறுத்தவரையில் செக்கில் அரைத்த கலப்படமில்லாத பெயரிலேயே நல்ல என்ற க்வாலிட்டியை சுமந்து இருக்கும் நல்லெண்ணையைத்தான் நான் செலக்ட் செய்வேன்.. என்பர்ஸ்ட் பிரிபரன்ஸ் அதுதான். தேங்காய் எண்ணையெல்லாம் அடுத்தபடிதான். தேங்காய் எண்ணைக்கு ஒரு கெட்ட குணம். தன் வாசனையை அளவுக்குமீறி அது செய்யும் பண்டங்களின் மீது ஏற்றிவிடும் என்பதுதான்.
காலங்கார்த்தாலே இட்டிலி சட்னி, சாம்பாரை விழுங்கியவுடன், அடுத்து எல்லோரும் விரும்பி சாப்பிடுவது மெதுவடையைத்தான். இந்தக் கதை வீட்டிலே செல்லுபடியாகாது. ஓட்டலில் மட்டும்தான். வீட்டில் கேட்டால் என்ன ஆகும் என்பது உங்களுக்கே தெரியும்.
கர கரவென்ற மெதுவடை தேங்காய்சட்டினியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடுபவர்கள், இருக்கும்போதே இந்த உலகத்தில் சொர்க்கானுபவத்தை அடைந்தவர்கள்.
சட்டினிகளிலும்பல வகைச்சட்னிகள் இருந்தாலும் தேங்காய் சட்னிக்கு வேறு எவையும் ஈடாகாது. மெது வடையும் தேங்காய சட்டினியும்போல என்பது உபமான உபமேய மேற்கோளுக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.
சாம்பாரும் வடைக்கு ஒரு நல்ல தோழன். சிலர் வடையை ஒரு பிளேட் நிறைய சாம்பாரில் மூழ்கடித்து சாப்பிடுவதை தங்கள் பிறப்பின் பயனாகவே கருதுகிறார்கள். அந்தக,காலத்தில் இட்லி, வடை கேட்டாலே எங்கள் ஊரில் எல்லாம் ஒரு வாளி நிறைய சட்னியையும், இன்னொரு வாளி நிறைய இட்லியையும் வைப்பார்கள். சட்னி சாம்பார் அன்லிமிடெட். சிலர் உள்ளங்கையில் அடங்கும் இட்லிக்கும், வடைக்கும், அரை வாளி சாம்பார் போட்டுக்கொண்டு அதை உர்ரென்று அடுத்த ஊருக்கு கேட்குமளவுக்கு சத்தமாக உறிஞ்சி சாப்பிடுவது பார்த்த போது என் சிறு வயிற்றைப் பார்த்து நொந்து கொள்ளாத நாளே இல்லை. அந்த ஆசை சென்னையில் ஒரு இடத்தில் நிறைவேறியது வேறு கதை.
இதற்கு சாம்பார் சூப்பராக இருக்கவேண்டும் அந்தக்காலத்து சாந்தி விகார் சாம்பார்போல. சிலருக்கு ரச வடைமீது அலாதி பிரியம் ( அந்த சிலரில் நானும் ஒருவன்) நம்மனிதர்களைப்போலவே சாம்பார், ரசம், மோர் என்று வடைக்கும் இந்த மூன்று வகை சேர்க்கையும் பிடிக்கும். என்ன, மோருக்குப்பதில் அதற்கு தயிர் என்றால் ரொம்ப இஷ்டம். வெயில்நேரமா, உச்சி வெயில் மண்டையைப் பிளக்கிறதா? அப்போது இருக்கவே இருக்கு தயிர் வடை . நம்ம ஊர் சம்மருக்குன்னே பொறந்தது அது. எலியைப் பிடிக்க வேண்டுமா, மசால்வடை இருக்கவே இருக்கு. இப்படி ஒவ்வொரு காரணத்திற்கும் காரியத்துக்கும் ஒவ்வொரு வகை வடை சிறந்தது.
மிளகு வடை அதை செய்யும் பதத்தில் செய்தால், நான் மிளகு வடைக்கும் அடிமை. இதைத்தான் தட்டை என்று சொல்கிறார்களோ?. ஆனால் இந்த தட்டையைத்தான் அனுமாரும், பிள்ளையாரும், ஏன் நானும் விரும்புகின்றோம். அனால் தட்டைக்கும் அனுமார் வடைக்கும் நிரம்பவே வித்தியாசம் இருக்கிறது.
அனுமாருக்கு வடைமாலை சாத்துவதென்றால் யாராவது மெது வடையையோ, ஆமவடையையோ, கீரை வடையையோ சாத்துவார்களா?. இந்த அனுமார் வடைபோல் வீட்டில் எவ்வளவு சிரமப்பட்டாலும் செய்ய முடிவதில்லையை . ஏன்? ஏன்? ஏன்? என்று சிவாஜி போலவோ, சுந்தர்ராஜன் போலவோ கதறவேண்டும் என்று தோன்றுகிறது. அது தெய்வ ரகசியம். 1
வடைமாலை என்று சொன்னவுடன் என் வாயில் உமிழ்நீர் ஊறும் அதே நேரத்தில் நான் வடைகளில் ராயப்பைட்டை அனுமார் வடையை ‘ஏ கிளாஸ்’ என்பேன். நங்க நல்லூர் அனுமார் வடை, நாமக்கல் ஆஞ்சனேயர் அனுமார் வடை, சுசீந்திரம் அனுமார் வடை இதை சுவைக்காதவர்கள் பிறந்ததே சுத்த வேஸ்ட். ( அந்த வேஸ்டில் நானும் ஒருவன்)

நான் டிவி சமையல் நிகழ்ச்சியில் வடை குறித்துப் பெரும்பாலானோர் கேட்கும்கேள்வி “ஏன், எங்களால் வீட்டில் ஓட்டல் வடை மாதிரி மெது வடையோ, அனுமார் வடையோ செய்ய முடிவதில்லை. அப்படி ஒரு பதம் வர என்ன செய்யவேண்டும், எப்படிச்செய்ய வேண்டும் என்று விளக்கமுடியுமா?” என்பதுதான்.
ஓட்டல் மெது வடைகளுள் சிறந்த மெது வடை செய்ததற்கான பரிசைப்பெற்ற பெருமை ஹாட்சிப்ஸ் என்ற ஓட்டலுக்கு உண்டு. இதைப்போல பெருமை வேறு வடைகளுக்குக்கிடையாது என்று அறியும்போது மற்ற வடைகள் கண்ணீர் விடுத்து மெத்தென்று ஆகிவிடுகின்றன போலும். சரி. வடையைப்பொறுத்த வரையிலும் நம் நாட்டை, குறிப்பாக தமிழ் நாட்டை பீட் பண்ணுபவர்கள் யாரும் இல்லை என்று தோன்றுகிறது. வேறு எந்த தேசத்துலேயாவது ஏதாவது வடை கிடைக்குமா என்று நான் ஆராய்ந்ததில் மத்திய தரைக்கடல் நாடுகளில் ஃபலாஃபல் என்ற கிட்டத்தட்ட நம்ஊர் ஆமவடையைப்போன்ற ஒன்று மிகவும் பிரபலம். சூடான மெது வடைக்கு 100க்கு 100, ஆம வடைக்கு 100க்கு 90 மார்க் என்றால் அதற்கு 100க்கு 60 தரலாம். உங்கள் ரசனைக்கு ஏற்ப மற்ற வடைகளுக்கு நீங்கள் மார்க் போட்டுக்கொள்ளலாம்.

இன்னும் என் சிற்றறிவுக்கும், சிறு நாக்குக்கும் தெரியாத வடை வகைகள் எத்தனை உள்ளனவோ? உளுந்து வடை, பருப்பு வடை, மக்காச்சோள, பக்காச்சோள வடை, புடலங்காய்வடை, வெஜிடபிள் வடை, கடலைப்பருப்பு வடை, ரவா குனுக்கு வடை என று பல. இந்த மாடர்ன் யுகத்தில் தானியங்களுக்கு மவுசு ஏற்பட்டு இருக்குன்றன என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இட்டிலியிலே இருபது வகை, தோசையிலே தொண்ணூறு வகை என்பது போல வடையிலே எதிர்காலத்தில் கொள்ளு வடை, எள்ளு வடை போன்ற நூற்றுக்கணக்கான வடைகள் வரலாம்.
கேட்டரிங் டெக்னாலஜியில் படிப்பவர்கள் வடை பற்றிய ஆராய்ச்சி செய்து
வடாலஜி என்ற பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் Ph.D வரை படிக்க ஏற்பாடு செய்யலாம். . உலகில் அதை முதலில் கண்டு பிடித்தவர்கள் யார், எதற்காக, அதன் தோற்றம், வளர்ச்சி, அது உலக சரித்திரத்தையும் பூகோளத்தையும் எவ்வாறு மாற்றியது, இதனால் வீட்டுக்குள்ளும், உலக அளவிலும் தோன்றிய சிறிய, பெரிய யுத்தங்கள் போன்றவற்றை விலாவாரியாக ஆராய்ந்து இன்றைய சரித்திரப்பாடங்கள் எழுதப்பட்டிருப்பவை போல அவரவர் எண்ணத்துக்கும், விருப்பத்துக்கும் ஏற்ப உலக மகா வடை சரித்திரம் எழுதலாம். எந்தெந்த வடையில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன. அவற்றை எப்போது எப்படி சாப்பிடவேண்டும். எந்தெந்த வடைகளை நம் பண்டிகைகளுக்கு நம் ரெகமண்ட் பண்ணலாம் போன்ற ஆராய்ச்சிகளும் செய்யலாம். அது தவிர இந்திய கார்ப்பரேட்டில் ஒருவரோ பலரோ இந்த வடைகளை உலக அரங்கில் அரங்கேற்றி மெக்டனால்டு போன்ற செயின் ஸ்டோர்ஸ்களை மண்டியிடச்செய்யலாம். Flight மெனுக்களில் கூட இவை இடம் பெறலாம் . ஆக வடைக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது .
வடை மகாத்மியம் வாழ்க. பொங்கலுக்கு என்று ஒரு பண்டிகை இருப்பதுபோல, எங்களுக்கு என்று பண்டிகை கிடையாதா என்று வடையும் வடைப்பிரியர்களும் கேட்கும் கேள்விகளுக்கு இன்று வரை விடை கிடைக்கவில்லை.


சரி. வடை ஊசிப்போகுமுன் உங்களிடமிருந்து வடை, மன்னிக்கவும், விடை பெருகிறேன்

எழுதியவர் : ரா. குருசுவாமி ( ராகு) (22-Dec-21, 8:31 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 95

மேலே