சிபாரிசு
சிபாரிசு
இந்த வார்த்தை இல்லாத சமூக செயல்பாடுகளே இல்லை. அல்லது நம்முடைய செயல்பாடுகளுக்கு இந்த வார்த்தை கொடுக்கும் அழுத்தங்களி னால் அந்த செயல் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் சிபாரிசினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விடும்.
அதனால் தான் இன்று ஒவ்வொரு காரியங்களுக்கும் சிபாரிசு செய்பவர் களை தேடி ஓடுகிறோம். ஒருத்தரின் சிபாரிசு எனக்கு தேவையில்லை என்று வீராவேசமாக பேசுபவர்களை நாம் பார்த்திருக்கிறோம், என்றாலும் அத்தனை விசயங்களிலும் அவருடைய சிபாரிசற்ற செயல்பாடுகள் வெற்றி அடைந்திரு க்கும் என்று தெரியவில்லை.
இதை சொல்ல காரணம் ஒரு மனிதனை அவனை ‘நல்லவன்’ என்றோ ‘தீயவன்’ என்றோ நிருபிப்பது அவனது செயல்பாடுகள் மட்டுமல்ல, அவனை பற்றிய மற்றவர்களின் சிபாரிசும் தேவைப்படுகிறது.
உதாரணத்துக்கு நீங்கள் உங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க செல்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள். உங்கள் அக்கம் பக்கம் தரும் தகவல்கள் ஏராளமாய் இருக்கும். அதை விட “சார் அந்த ஸ்கூல்ல இடம் கிடைக்கணும்னா” சிபாரிசு கேட்பாங்க, இப்படி பட்ட பேச்சுக்களை கேட்டிருக்கிறீர்களா?
உடனே இந்த கேள்வி உங்கள் மனதில் எழும், பள்ளியில் குழந்தைகளை சேர்க்க எதற்கு சிபாரிசு? ஆனால் சிபாரிசு இருந்தால் முன்னுரிமை என்னும் அளவில் நாம் இதை தேடித்தான் ஆக வேண்டும் என்கிற நிலையில் இருப்போம்
பிறப்பு முதல் கடைசியில் இறப்பு வரைக்கும் சிபாரிசு இல்லாமல் நடக்கவே நடக்காது என்னும் நிலைமையில்தான் இந்த சமூகம் இருக்கிறது.
ஆனால் ஒன்று இயற்கை ஒன்றும் இதற்காக சிபாரிசை கேட்பதில்லை. அதை மனதில் வைத்து கொள்ளுங்கள். பிறப்பு இறப்பு, நோய் ஏற்படுதல் அதே சரியாக்கி கொள்ளுதல் (இதை நம்ப மாட்டீர்கள்) இதற்கு விளக்கம் சொல்ல யாரிடமாவது சிபாரிசை கேட்பீர்கள். உண்மையிலேயே சாதாரண சளி பிடித்தல், காய்ச்சல், வயிற்று கோளாறு, போன்றவைகள் எல்லாம் நம்முடைய உணவு கட்டுப்பாட்டின் மூலமே சரி செய்து கொள்ளும். என்றாலும் என்ன உணவு எடுத்து கொள்ளவேண்டும் என்பதற்கு மருத்துவரின், அல்லது அனுபவஸ்தரின் வாக்கு மூலம் தேவை அதற்கு நாம் யாரையாவது சிபாரிசு பிடித்தாக வேண்டும்.
ஏதோ நாம் உண்டு நம் வாழ்க்கை உண்டு என்று நாம் வாழும் இந்த கீழ் மட்ட சமுதாயத்தில் இன்று அதற்கு வழி இல்லாமல் போய் விட்டது. காரணம் ‘செல்போன்’ முதல் ‘பெரிய திரை’ வரைக்கும் நம்மை “இப்படி இருக்கலாம், அப்படி இருக்கலாம்” என்று விளம்பரங்கள் மூலம் மூளை சலவை செய்து அதற்கு இதை வாங்கினால் முடியும் என்று ‘சிபாரிசு’ செய்கின்றன. அதுவும் பிரபலங்கள் வந்து தாங்கள் செய்ததாகவும், உபயோகிப்பதாகவும் நமக்கு சிபாரிசு செய்வார்கள்
இப்படித்தான் விளம்பரங்கள் காட்டும் இதை வாங்கினால் இப்படி ஆகலாம் என்னும் காட்சிகளை நம்பி வாங்கி தொலைக்கிறோம்.
சரி அதை எல்லாம் விடுங்கள், ஒரு திரைப்படம் வெளி வந்துவிட்டால் நம்மை போகலாமா, வேண்டாமா என்று சொல்லுமளவுக்கு செல்போன் முக நூல அறிவாளிகள் (தப்பு தப்பு) விமர்சகர்கள் வந்து விட்டார்கள். அவர்கள் சிபாரிசு செய்தால்தான் படமே ஓடும் என்னும் பயத்தில் தயாரிப்பாளர்களை பதை பதைக்க வைத்து விட்டார்கள் இந்த செல்போன் மேதாவிகள்.
அதனால்தான் கோடிக்கணக்கில் செலவு செய்யும் திரைப்பட தயாரிப்பா ளர்கள், தங்களுடைய படத்தை “புரோமோட்” செய்வதற்கு இப்படிபட்ட ,செல்போன் மேதாவிகளிடம் கூட கையேந்தி நிற்கிறார்கள். என்ன செய்வது? அவன் “இந்த படம் சரியில்லை” பார்க்க்காதே என்று சிபாரிசு செய்து முன்னூறு பேருக்கு “பார்வைடு” பண்ணி விடுகிறான்.
அடுத்து வலைதளத்தில் ஏதாவது ஒன்றை போட்டு “லைக்போடு, பார்வைடு பண்ணு” என்று ஒரு கூட்டம் சிபாரிசு பண்ண கிளம்பி விடுகிறது.
இன்றைய காலத்தில் மட்டும்தான் இந்த “சிபாரிசு” வழக்கம் இருந்ததா? என்று கேட்டால் காலம் காலமாக “சிபாரிசு” இல்லாமல எதுவுமே நடப்பதில்லை என்பதுதான் நிசம்.
கடவுளை பார்க்க கூட சிபாரிசு தேவை, அதுவும் கடவுள் சிலையின் காலடி வரை சென்று தரிசிக்க வேண்டுமென்றால் அதை விட பெரிய இடத்து சிபாரிசு தேவை.
இன்னொன்றும் சொல்லியாகவேண்டும், நாம் எல்லோருமே தற்பெருமை பேசுவதில் சிறந்தவர்கள். (சிலர் கோபித்து கொள்ளலாம்) அவர்களை விட்டு விடலாம், என்றாலும் ஏதோ ஒரு கட்டத்தில் பேசியிருப்பார்கள், அதை விடுங்கள், இந்த “தற்பெருமை” என்று சொன்னது எதற்கென்றால் எப்படி நமக்கு சுகர், பிளட் பிரஷர், இருக்கு என்று பெருமை பேசுகிற அளவில் இருக்கிறோமோ அதே போல் இந்த ஸ்கூல்ல பையனை சேர்க்கறதுக்கு இவரு ‘ரெகமண்ட்’ பண்ணுனாரு, அவரு யாருக்கும் பண்ணறதில்லை, எனக்காக, அதுவும் என் தம்பிக்கு ரொம்ப பிரண்டு அப்படீங்கறதுனால” இது போன்ற பெருமை வார்த்தை பேசுபவர்களை கண்டிருப்பீர்கள்.
அதுமட்டுமல்ல கொஞ்சம் அசந்தால் அமெரிக்க அதிபர் கூட தனக்காக சிபாரிசு செய்தார் என்று கூட ‘பீலா’ விடலாம்.
ஸ்கூல்” மட்டுமில்லை, நோய் ஏற்பட்டுவிட்டதென்றால் மருத்துவமனையில் சேர்ப்பதற்கு கூட, யாராவது ஒருத்தார் இந்த ஆஸ்பிடல் போ, நல்லா பாப்பாங்க, போன உடனே என் பேரை சொல்லு, இப்படியாக சிபாரிசை செய்வார்கள். அதைவிட மனிதர்களின் வாழ்க்கை இறுதி கட்டத்தில் அவர்களின் உடலை எரிப்பதற்கு கூட இந்த “கிரிமிட்டோரியம்” ‘பெஸ்ட்’ என்று யாரோ ஒருவர் ‘சிபாரிசு’ செய்யுமளவிற்கு உலகம் இருக்கிறது.
நமது புராணங்கள், இதிகாசங்கள் கூட இந்த சிபாரிசுகளை பற்றி பேசியிருக்கிறது
சிபாரிசுக்கு அளவு கோல் வைக்குமளவுக்கு கூட வழக்கம் வைத்திருக் கிறார்கள். இந்த காரியத்துக்கு இவர்களின் சிபாரிசு போதும்,அதைவிட பெரிய காரியத்திற்கு அவர்களின் சிபாரிசு, தேவை. இப்படி வகை படுத்தியும் இருக்கிறார்கள்.
இதை விட முக்கியம் நாம் எப்பொழுதும் எதையும் முழுதாக நம்பி விடுவதில்லை. அந்த அளவுக்கு நாம் பாரட்டுக்குரியவர்கள்தான். என்றாலும் நம்முடைய குணங்களை அறியாதவர்களா காரியவாதிகள்? அதற்காகத்தான் நடிகர் நடிகைகள் முதல் பெரிய பெரிய ஆட்களை வைத்து ஏதோ அவர்களே உபயோகபடுத்துவதால் உங்களுக்கு சிபாரிசு செய்கிறார்கள் என்று நம்மை நம்ப வைக்கிறார்கள்.
“நான் இந்த டூத் பேஸ்ட்டுதான் உபயோக்கிக்கிறேன், அதனால நீங்களும் உபயோகிக்க “சிபாரிசு” செய்கிறேன், என்கிறார் ஒரு நடிகர் அல்லது நடிகை, இப்படி குழந்தைகளுக்கு முதல் வயதின் இறுதியின் இருக்கும் கிழவர்களுக்கு வரை ஏதாவது ஒன்றை உபயோகித்தால் இப்படி ஆகலாம் என்று சிபாரிசு செய்து கொண்டே இருக்கிறார்கள்.
இந்த சிபாரிசுகள் ஒரு சங்கிலி தொடர் போல, இது இல்லாமல் இன்று எந்த செயல்களும் சமுதாயத்தில் நடக்கவே நடக்காது என்னும் மாய தோற்றத்தில் வைத்திருப்பதே இந்த சொல்லின் திறமைக்கு சாட்சிதான்.
ஆனாலும் என்ன செய்ய? இந்த கட்டுரை பரவாயில்லை என்று யாராவது ஒருத்தர் சிபாரிசுதான் செய்யுங்களேன்.