ராகிங, ராக்கிங்

இதை நான் ஏற்கனவே எழுதி வந்த என் இஞ்சினீரிங் கல்லூரி இண்டர்வ்யூவின் தொடராகக் கருதலாம்.
ராகிங்( Ragging)
நான் கடைசியில் இஞ்சினீரிங் இண்டர்வ்யூவில் தேர்ந்து எடுக்கப்பட்டு என் இஷ்டத்திற்கு மாறாக கோயம்புத்தூர் கவர்ன்மென்ட் காலேஜ் ஆப் டெக்னாலஜி என்று கூறப்படும் GCT ( Government College of Technology) யில் சேர்ந்தேன். நான் என் அப்பாவுடன் சில நாட்கள் என் சொந்தக்காரர் பாலு என்பவரின் அறையில் தங்கினேன். பிறகு அங்கு லாலி ரோடு எக்ஸ்டென்ஷனில் அன்றைய கோவையின் வட மேற்குக் கோடியில்(?) இருந்த பாரஸ்டு காலேஜ் ம்யூசியம் பாரக்ஸ்களில் அமைககப்பட்டு இருந்த ஹாஸ்டலில் சேர்ந்தேன். எங்கள் காலேஜ் ஹாஸ்டலில் இருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் அக்ரி கல்சுரல் காலேஜாகிய விவசாயக்கல்லூரியியின் எதிரே இருந்தது. ( இன்று அது கருணாநிதி விவசாயபல்கலைக கழகம்) எதிரே. என்றாலும் எங்கள் கல்லூரிக் கட்டிடத்திற்கும், அந்தக்கல்லூரிக் கட்டிடத்திற்கும் இடையில் விவசாயக்கல்லூரி மாணவர்கள் பயிற்சிக் கென்று ஏராளமான நிலங்கள் இருந்தன. இதனால் அவர்களுக்கும் எங்களுக்கும் எந்த விதமான நேரடித்தொடர்பும் கிடையாது.
மெயின்ரோடிலிருந்து காலேஜ் கட்டிடம் அரை மைல் உள்ளடங்கி இருந்தது. வழியில் அந்தகாலேஜ் பிரின்சிபாலுடைய வீடு இருந்தது.. காலேஜில் பிரின்சிபல் ஆபீசும்,

தொழிற்சாலை போன்ற அமைப்பு உடைய பல லாப்களைக்கொண்ட கட்டிடங்கள் இருந்தன. இந்த கட்டிடம் என் பெயர் கொண்ட என் பெரியப்பா சொந்தம் உள்ள என் உறவினரால் கட்டப்பட்டது. நான் சேர்ந்த போது முழு காலேஜும் கட்டி முடிக்கப்படாத நேரம் அது. மாணவர்கள் நாங்கள் பாரஸ்ட் காலேஜ் பாரக்ஸில் இருந்த ஹாஸ்டலில் இருந்து காலேஜுக்கு சைக்கிள் வைத்து இருந்த ஒரு சிலரைத்தவிர மற்ற அனைவரும் பொடி நடையாக நடந்து போவதுதான் வழக்கம். எங்கள் ரூம்களுக்கு அருகாமையில் மேற்குப்புறத்தில் ஆசிரியர்கள் மற்றும் சில ஊழியர்கள வீடுகள் இருந்தன.
திருச்சியில் ஊரின் மையத்தில் நடுநாயகமாகவும் கம்பீரமாகவும் இருந்த செயிண்ட் ஜோசப் காலேஜும், கிளைவ்ஸ் ஹாஸ்டலிலும் இருந்து இண்டர்மீடியட் படிப்பை முடித்து விட்ட வந்த எனக்கு இந்த சூழ்நிலை மனதளவில் சற்றும் பிடிக்கவில்லை. எங்கிருந்தோ என்னை எங்கேயோ மனித நடமாட்டம் அதிகம் இல்லாத அத்வானத்தில் போட்டாற்போல் ஒரு உணர்வு. இது போதாது என்று புதிதாக காலேஜில் சேருபவர்களுக்கு ராகிங் என்ற பெயரில் விசேஷ வரவேற்பு காத்திருந்தது. முதல் ஆண்டு மாணவர்களை மற்ற ஆண்டு மாணவர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு அளவுக்கு மீறி கலாய்க்கும் ஒரு சோதனையான காலகட்டம்அது. அதை நினைத்து நான் மற்ற புதிய மாணவர்களைப்போல பயந்து நடுங்கிக்கொண்டு இருந்த நேரம்.

இந்த ராகிங்கின் தோற்றம் நல்ல நோக்கத்துடன்தான் ஆரம்பிக்கப்பட்டதாம். . நாளைக்கு கடினமான சவால்களை மேற்கொள்ள தயார் கொள்ளவும், வருங்கால இஞ்சினீயர்களை ஒருவர்க்கொருவர் தஙகளை அறிமுகப்படுத்திக்கொள்ளவும் ஆரம்பிக்கப்பட்ட பழக்கம்தான்இது. இந்த ராகிங் என்பது நம் நாட்டுக் கலாசாரத்துக்கு முற்றும் ஒவ்வாத, வெளிநாட்டு கலாசாரத்தைத்தழுவி மேற்கொள்ளப்படுவதாக முதன் முறையாக் கேள்விப்பட்டேன். அதற்கு தங்களை புதிதாக காலேஜ் சேரும் மாணவர்கள் அனைவரும் தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுசரிக்கப்பட்டு வந்தது. நான் காலேஜில் சேர்ந்த கால கட்டத்தில் ஏற்கனவே நொந்து போயிருந்த நான் இந்த ராகிங், இதன் சித்தப்பா மகன்களாகிய டக்கிங், ராயல் டக்கிங் என்றவற்றையும் சந்திக்க வேண்டிய ஒரு சூழல். எனவே புதிதாக சேர்ந்த மாணவர்கள் ஒரு கொலைக்களத்திற்கு அழைத்துச்செல்லப்படுவது போல் ஒரு நிலை. இதற்குப் பயந்து சில மாணவர்கள் வெளியிலே அவர்களுக்குத் தெரிந்தவர்கள் அல்லது உறவினர்களுடன் தங்கி ஒரு மாதமோ இரண்டு மாதமோ கழித்துத்தான் ஹாஸ்டலுக்கு வருவார்கள் என்றால் பார்த்துக்கொளளுஙகளேன். இந்த ராகிங், நிகழ்ச்சியை நடத்துபவர்கள் அனைவரும் சீனியர் மாணவர்களே. அதிலும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களின் ஈடுபாடு இதில் அதிகம் இருக்கும். சென்ற ஆண்டு அவர்கள் அனுபவித்த கொடுமைகளை இந்த ஆண்டு வந்த புது மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் புதிய மாமியார் மாதிரி தனி இன்பம். நெருப்புக்கு நெய்வார்ப்பது போல் இவர்களுடன் மற்ற அனைத்து சீனியர் மாணவர்கள் சேருவதில் ஆச்சரியம் இல்லை. காலேஜ் ஆசிரியர்கள் சிலரும், எங்கள் பிரின்சிபாலும் சேர்ந்து கொண்டு இந்தக்கோலாகலத்தில் பங்கு கொள்வதுதான் கொடுமையிலும் கொடுமை. இன்று போல் ராகிங் அன்று தடை செய்யப்படவில்லை. அதற்கு அபிஷியல் ஆதரவும் இருந்தது, எங்க பிரின்சிபல் ஒரு ஆங்கிலோ இந்தியர், ஆர்மி மேஜராக இருந்தவர், அவரும் இந்த ராகிங் விழாவில் பங்கேற்பார்.முன்னின்று நடத்தி வைப்பார்.

முதலாம் ஆண்டு மாணவர்களின் முழு லிஸ்டையும் ஒரு சீனியர் லீடர் அட்டென்டன்ஸ் ரெஜிஸ்டர் மாதிரி வைத்து இருப்பார். ராகிங், டக்கிங் இதை எல்லாம் தவிர்க்க முயற்சி எடுக்கும் மாணவர்கள் பட்டியலை அவர் தயாரித்து விடுவார். ரூம் ரூமாக மாலை அல்லது இரவு நேரங்களில் அந்த லிஸ்டைக் கையில் வைத்துக்கொண்டு செக் செய்வார், எவனாவது டிமிக்கி கொடுப்பது தெரிந்தால் அவனைத்தனியாக வரவழைத்து அனைத்து சீனியர் மாணவர்களாலும் விசேஷமாக கவனிப்பார்கள். அதனால் யாரும் இத்தகைய ராகிங்கில் இருந்து தப்பவே முடியாது.

ராகிங்கின் போது இன்ன கேள்விகள்தான் கேட்பார்கள் என்று சொல்வதற்கு இல்லை . எல்லோரும் 16 வயதைத் தாண்டியவர்களாக இருந்ததால் அவர்களிடம் அடல்ட்ஸ் ஒன்லி கேள்விகள் தாராளமாகக் கேட்கப்படும் ( 18 வயதெல்லாம் இங்கே செல்லுபடியகாது). பி.இ. சேருவதற்கு குறைந்த பட்சம் இண்டர்மீடியட் பரீட்சை பாஸ் செய்து இருக்க வேண்டும். ஒரு சிலர் இண்டர்மீடியட்டை முடித்து பி.எஸ்ஸி படித்த பிறகும் பி. இ.க்கு அப்ளை பண்ணுவார்கள். இண்டர்மீடியட்டை , இண்டர் என்று சுருக்கமாகக் கூறுவது வழக்கம். எனவே புதிதாக வரும் மாணவர்களைப்பார்த்து “இண்டர்கோர்ஸ்”
பாஸ் பண்ணிவிட்டாயா என்று கேட்பதுதான் அவர்கள் கேட்கும் கேள்விகளில் ஓரளவு நாகரிகமான கேள்வி. எழுத்தில் எழுத முடியாத பல கேள்விகள் கேட்பார்கள், அதில் பதில் சொல்லும் வரையில் ஓயமாட்டார்கள். உடனே ஒரு அட்டகாச சிரிப்பு, கேலி, கிண்டல் எல்லாம் தொடரும். சில சமயம் உடம்பையே ஒரு பாடு படுத்திவிடுவார்கள். ஏதாவது கசப்பான இலையை சாப்பிடச்சொல்வார்கள். சில எக்ஸ்டிரீம் கேசுகளில் பீடியோ. அல்லது துண்டு சிகரட்டையோ பிடிக்கச்சொல்வார்கள். சமயத்தில் அருகில் இருக்கும் மரத்தில் ஏறச்சொல்வார்கள். அந்த நிமிடத்தில் அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்யச்சொல்வார்கள். அதைக்கண்டு கேலி செய்தும் ரசித்தும் நம்மைச்சுற்றி ஒரு 20 அல்லது 30 சீனியர்கள் இருப்பார்கள். எகிறினால் அதற்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும், இந்த அசிஙகங்களை எல்லாம் சிலர் அந்த மாணவனின் பெற்றோர்கள் முன்பாகவே செய்வார்கள். சில பெற்றோர்களையும் இந்த மாதிரி சமயங்களில் மரியாதை இன்றி கேவலமாக நடத்துவார்கள். இந்தக் கொடுமை தாங்காது ஓரிரு மாணவர்கள் இந்தப்படிப்பே வேண்டாம் என்று விட்டு விட்டுப் போய்விட்டதாகவும் நாங்கள் கேள்விப்பட்டு இருக்கிறோம்.
சரி, ஆசிரியர்களிடம் கம்ப்ளெயன் செய்யலாம் என்றால் ஒரு சிலர் “கொஞ்சம்பொறுத்துப் போங்கள். போகப்போக எல்லாம் சரியாகிவிடும்” என்று ஆறுதல் சொல்வார்கள். “எங்களுக்குக் கஷ்டம் வந்தால் நாங்கள் ராமா என்று உன்னைத்தான் வேண்டுவோம். ஆனால் ராமா, நீயே எங்களைப்பார்த்து எய்த அம்பைக்கண்டு நாங்கள் யாரிடம் முறையிடுவோம்” என்ற தவளை போல்ஆசிரியர்களிடம் சொன்னால் அவர்களே பழைய ஸ்டூடண்டுகளுடன் சேர்ந்து கொண்டு கலாய்த்தால் என்ன செய்வது?
இதில் ஒரு சீனியர் ஸ்டூடண்ட் மெடிக்கல் செக் அப் செய்கிறேன்என்ற பெயரில் 5 ரூபாயோ, 10 ரூபாயோ பெற்றுக்கொண்டு இல்லாத பொல்லாத சேஷ்டைகளையும் அசிங்கங்களையும் செய்து ஓவென்று கூச்சலிட்டு மகிழ்வார்கள். இது பற்றி அப்போது இருந்த எங்கள் பிரின்சிபலிடம் முறை இட்டால் முறை இடுபவருக்கு 10 ரூபாய் அபராதம் தீட்டி விடுவார். அவருடைய பையன் எங்களுக்கு சீனியர். அவர் பிரின்சிபலோட மகன் என்ற ஹோதாவில் இந்த ராகிங்கில் இருவரும் மிக முக்கிய பங்கு வகிப்பார்.
இது ராகிங்கின் முதலாம் வடிவம். அடுத்தது டக்கிங். இது ராகிங்கின் சித்தப்பாவோ, பெரியப்பாவோ, தெரியாது. ஆனால் இரண்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
இதில் புது ஸ்டூடண்ட் நட்ட நடுவில் அண்டர்வேருடன் நிறுத்தப்பட்டு சேறு கலந்த தண்ணீரால் அபிஷேகம் செய்யப்படுவார். . எழுத முடியாத சில அசிங்கங்களும் நடக்கும்.

எங்கள் ஹாஸ்டலில் அந்தக் காலத்தில் சிறிது நேரமே வரும் சிறுவாணி நீரை பாத்ரூம் தொட்டிகளிலும், டாய்லட் தொட்டிகளிலும் பிடித்து வைத்து இருப்பார்கள். காலை ஒரு மணி நேரம். சாயந்திரம் ஒருமணி நேரம்தான் தண்ணீர் வரும்.. காலேஜ் காலை 8:00 மணியில் இருந்து 12:30 பிறகு ஒரு மணி நேரம் லஞ்ச் அவர். மறுபடியும் 1:30 யிலிருந்து 4:30 வரை காலேஜ் . எனவே எங்களுக்குக் காலையில் சமயத்தில் குளிக்கக்கூட டைம் இருக்காது. மொத்தம் சுமார் 300 மாணவர்கள் 20 குளியல் அறைகள், 20 டாய்லெட்டுகள். இரண்டு சிறு தொட்டிகள் நீர் சேமிக்க. அவ்வளவுதான். அதற்குள் நாங்கள் மேனேஜ் பண்ணியாக வேண்டும். சிலசமயம் சில மாணவர்கள் எழுந்த உடனே பல்தேய்த்துக்கொண்டே காலேஜ் செல்லுவதையும் நான் பார்த்து இருக்கிறேன். காலேஜ் டேப்பில் பல் பிரஷிங்கை முடித்துக்கொள்வார்கள். அந்த அளவுக்கு அங்கு அன்று தண்ணீர் பஞ்சம். காலை நேர நெருக்கடி. சில சமயம் சர்வே பிராக்டிகல் காலை 6:30 மணிக்கே ஆரம்பிப்பதுண்டு. இவை எல்லாம் என்னைப்போன்ற லேட் ரைஸர்ஸுக்குப் பெரும் சவாலாக அமைந்தன.

சாயந்திரம் ஆனால் மிக மிக குறைந்த அளவு தண்ணீர்தான் இருக்கும் . அந்தத்தண்ணீரில் சேற்றைப்போட்டுக்குழப்பி டக்கிங் செய்த பிறகு, உடம்பைத் துடைத்துக்கொள்ளக்கூட தண்ணீர் இருக்காது. ஒரு துண்டைப் போட்டு எவ்வளவு துடைத்துக்கொள்ள முடியுமோ அந்த அளவு துடைத்துக்கொண்டு படுக்கப்போக வேண்டியதுதான் மறுநாள் விடியும்போது தண்ணீர் வரும் வரை. இதை எதிர்ப்பவர்களுக்கு ராயல் டக்கிங் என்ற விசேஷமான டக்கிங் செய்யப்படும். அப்படிப்பட்டவர்கள் படுத்துத்தூங்கிக்எஒண்டு இருக கும்போது அவர்கள் ரூம் ஜன்னல் வழியாக சேறு கலந்த நீர் அவர்கள்மூது வெளியிலருந்து ஊற்றப்படும். படுக்கை எல்லாம் நனைந்து அழுக்குப்படிந்து அந்த மாணவன் படும் அவஸ்தையை சொல்லவும் வேண்டுமோ.
அதனால் டக்கிங்கிறகு முதலாக வருபவர்களுக்கு ஓரளவு கலங்கிய தண்ணீரும், லேட்டாக வருபவர்களுக்கு கனமான சேற்றுக்கலவையுமாக கிடைக்கும் என்பதால் நான் முதலிலேயே ஆஜராகி டக்கிங்கை முடித்துக்கொண்டேன். உடனே அட்டென்டன்ட் ரெஜிஸ்டரில் மார்க் செய்து கொள்வார்கள். . இதனால் யாரும் ஏமாற்ற முடியாது . டே ஸ்காலர்களும் தப்ப முடியாது. பிறகு மாணவர்கள் அனைவரும் அண்டர் கார்மெண்டுடன் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக நின்று லாலி ரோட்டில் ( இது ஒரு ப்ப்ளிக் ரோடு. ஆனால் அன்று அதில் நடமாட்டம் மிகவும் குறைவாக இருக்கும்) மார்ச்செய்து காலேஜ் வரையிலும் சுமார் ஒரு மைல் தூரம் செல்ல வேண்டும். இந்த சம்பிரதாயங்கள் முடித்தவர்கள் புனித ஞான ஸ்நானம் பெற்றவர்களாக கருதப்படுவார்கள். இது ஒரு வகையான பாப்டிசம்.
முதல் டேர்மில் பாதி இத்தகைய ராகிங் டக்கிங்கிலேயே போய்விடும். அதிருஷ்ட வசமாக எல்லோரும் மாணவர்களே. மாணவிகள் கிடையாது. கிண்டி இஞ்சினீரிங் கல்லூரியில் மட்டும் காலேஜ் தோன்றி அது வரையில்( முதல் 100 ஆண்டுகளில்) மூன்றே மூன்று பெண்கள்தான் இஞ்சினீரிங் படித்தனர். பெண்கள் இஞ்சினீரிங் படிக்க எந்தக் காலேஜிலும் எப்போதுமே தடை ஏதும் இருந்தது இல்லை. அப்போதெல்லாம் பெண்கள் இஞ்சினீரிங் படிப்புக்கு அப்ளை செய்யவே மாட்டார்கள். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கிட்டத்தட்ட 50% மேல் பெண்கள் இஞ்சினீரிங் படிக்க வருகிறார்கள். நல்ல வேளையாக ராகிங், டக்கிங் இவை எல்லாம் அரசாங்க உத்தரவால் இப்போது தடை செய்யப்பட்டு விட்டன. இப்போது பெண்களுக கென்றே மாணவர். ஹாஸ்டலுக கு அருகே தனியாக ஹாஸ்டல் ஒன்று இருக்கிறது.
அன்று இந்த ராகிங்காரணமாக ஓரிரு மாணவர்கள் இறந்து விட்டதாகக்கூட நாங்கள் கேள்விப்பட்டு இருக்கிறோம். . அப்போது ஒரு சில சீனியர் மாணவர்கள் ராகிங்கை எதிர்த்து ஆன்டி ராகிங் கேம்பெயின் குரூப் ( Anti Ragging Campaign group) என்ற அமைப்பை அமைத்து ராகிங் முடிந்த மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லி தைரியம் அளிப்பார்கள்

என் நண்பன் வருகை
நான் இந்த கலாட்டாக்களுக்கு நடுவில் காலேஜுலே சேர்ந்த இருபது நாளுக்குள் என்ஸ்கூல் கிளாஸ் மேட் நீலகண்டனிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது.
அவன் என்னோடு SSLC படித்து முடித்தவுடன், காலேஜ் படிப்பைத் தொடராமல் அன்றைய எலக்டிரிசிடி டிபார்ட்மெண்டிலே வேலையில் சேர்ந்து விட்டான் அவனுக்கு முதல் போஸ்டிங்கே கோயம்புத்தூர்.. நான் கோயம்புத்தூர் இஞ்சினீரிங் காலேஜ் ஹாஸ்டல்லே இருக்கிறதைக்கேள்விப்பட்டு என் அட்ரசை வாங்கிக்கொண்டு இன்னும் இரண்டு நாட்களில் வரப்போவதாக எனக்குக் கடிதம் எழுதி இருந்தான்
“எனக்கு கோயம்புத்தூர் முன்னே பின்னே தெரியாது. அதனாலே நான் அங்கே வந்து எனக்கு ஒரு ரூம் கிடைக்கிற வரைக்கும் உன்னோட தங்கலாம்னு இருக்கேன்”னு எழுதி இருந்தான்.
நானும் “அப்பாடா, ஒரு நல்ல சேஞ்சாக இருக்கும். நம்ம ஸ்கூல்மேட். எனக்கு இந்தக் கோயம்புத்தூர்லே பிரெண்ட் டுன்னு சொல்லிக்க ஒரு பய கிடையாது . அவன் வந்தான்னா பெரிய துணையாகவும், ரிலீஃபாகவும் இருக்கும்”னு அவனை வரச்சொல்லி பதில் எழுதிட்டேன்.

நான் ஆவலாக எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது. என் நண்பன் நீலகண்டனும் ஹாஸ்டல் பிரவேசம் செய்து நுழைந்தவுடன் பார்த்த நபரை என் ரூம் நம்பர் எங்கே இருக்கிறது என்று விசாரித்து இருக்கான். அப்பொழுது ராகிங் மும்முரமாக நடந்து கொண்டு இருந்த சீசன். எனவே அவனிடம்
“நீ என்ன மொத வருடமா? உன் பிரண்டைப் பாக்க வந்து இருக்கியா?”
என்று விசாரித்து அவனுக்கு புது மாணவனுக்குக் கொடுக்க வேண்டிய சகல மரியாதை களையும் தர ஆரம்பித்தனர். அவனுடைய பெட்டியை ஓருவன் எடுத்துக் கொண்டு போனான். ஒருவன் அவன் படுக்கையை ஒரு மரக்கிளையிலே தொங்விட்டான். பையை இன்னொரு மரத்திலே கட்டித் தொங்க விட டான்.
“நான் ஸ்டூடண்ட் இல்லை. என் பிரண்டைப் பாக்கத்தான் வந்து இருக்கேன்” என்று அவன் எவ்வளவு கரடியாகக் கத்தினாலும் எவரும் காதில் போட்டுக்கொள்வதாக இல்லை.
கடைசியில் அங்கு இருந்த “ஆண்டி ராகிங் குரூப்” பில் ஒருவர் எனக்குத் தகவல்கொடுக்க, நான் என் அறையில் இருந்து வெளியே வந்து நின்ற நீலகண்டன் பரிதாபமாக செய்வது அறியாது திகைத்து நின்று கொண்டு இருந்ததைப்பார்த்தேன்.
“ குரு, என்ன சொல்லியும் கேட்காமல் என்னை இந்தப் பாடு படுத்திவிட்டார்கள். நான்ஸ்டூடண்ட் இல்லை. வெறும் கெஸ்டுதான் என்று எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை” என்று தன் சோகக் கதையை சொன்னான்.
அதற்குப்பிறகு ஒரு சில ஆண்டி ராகிங்குரூப் மெம்பர்களுடன் சேர்ந்து கொண்டு மரத்தில் இருந்த படுக்கையையும், பையையும் இறக்கி, பெட்டி போன இடத்தை ஆராய்ந்து அறிந்து அவற்றை யாவற்றையும் மீட்டு அவனை என்னுடன் என் அறைக்கு அழைத்துச்சென்றேன். “நீலகண்டா, இது இங்கே ராகிங் சீசன். எனவே உன்னையும் புது மாணவர்களில் ஒருவனாக நினைத்து ராகிங் செய்து விட்டார்கள்” என்று மேலும் என்ன வெல்லாம் என்னை செய்தார்கள், இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகிறார்கள் என்று சற்று விவரமாக விளக்கினேன்.
“ இந்தக்கேடு கெட்ட ஜென்மங்களுக்கு விவஸ்தையே கிடையாதா? நான் கொஞ்ச நேரம் பட்ட பாடே போதும். உன்னை ஆண்டவன்தான் காப்பாற்றவேண்டும்” என்று என்னை ஆசீர்வதித்தபடி “ சரி. நான் வேறு ரூம் பார்க்க வெளியே போகிறேன்” என்று புறப்பட்டு விட்டான்.
அவன் என்னுடன் நிறைய நாள் தங்குங்குவதாக வந்தவன் அடுத்த இரண்டு நாட்களில் ஒரு ரூம் பார்த்துக்கொண்டு பெட்டி படுக்கையுடன் தன் புது ரூமுக்குப் புறப்பட்டான்.
“இனிமேல் நான் உன்னை இங்கே வந்து பார்ப்பதைவிட நீ என்னை என் ரூமுக்கு வந்து பார்” என்று சொல்லி கிளம்பிவிட்டான். இப்படியாக அவன் என்னைப்பார்க்க வந்த சோகக் கதை முடிவுக்கு வந்தது. அதுவே அவன்எங்கள்ஹாஸ்டலுக்கு முதலாகவும் கடைசியாகவும் வந்தது. அதற்குப்பிறகு அவன் எங்கள்ஹாஸ்டல் பக்கம் எட்டிப்பார்க்கக்கூட இல்லை.
ராகிங் ( தொடர்கிறது)
என் மாமா பட்ட பாடு
சில நாட்கள் கழித்து என்னைப்பார்க்க என்மாமா பாலு அவர்கள் ஹாஸ்டலுக்கு வந்திருந்தார். அவர் ரொம்பவும் துணிச்சல்காரர் . அவருடன் நான் ஹாஸ்டலிலிருந்து வெளியே வேறு வேலையாக போய்க்கொண்டு இருந்தேன். எங்கள் ஹாஸ்டலுக்கும் ரோட்டிற்கும் நடுவே ஒரு சிறு தடுப்பு வேலி ஒன்று இருந்தது. அதனால் . அந்த ரோட்டில் இருந்து ஹாஸ்டல் மாணவர்கள் விளையாடுவதைப்பார்க்கலாம். அன்று என் மாமா என்னுடன் வெளியே நின்று அவர்கள் வாலிபால் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டு இருந்தார். அவருக்கு விளையாட்டின் மீது விருப்பம் அதிகம். அவர் விளையாட்டை பார்த்துக் கொண்டு இருக்கையில், அங்கு இருந்தவர்களில் ஒருவன் அவரை மரியாதைக்குறைவாக “என்னடா பார்க்கிறாய்?” என்று கேட்க,
இவருக்குக் கோபம் வந்து “ என்னடா மரியாதை என்றால் என்ன என்று தெரியாதா உனக்கு? அந்த வேலியை தாண்டி நீ தைரியம் இருந்தால் வெளியே இந்தப் பக்கம் வா. ஒரு கை பார்க்கிறேன்” என்றார்.
அதற்குள் அங்கு விளையாடிக்கொண்டு இருந்த மற்றவர்களும் சேர்ந்து கொண்டு “என்னத்தை நீ கிழிப்பே? ” என்று எகத்தாளமாகக்கேட்க, நான்
“மாமா, இவங்களோட சண்டை போட வேண்டாம். நாம் நம் வேலையைப்பார்த்துப் போகலாம்,” என்று அவர் காதில் மாத்திரம் விழும்படி சொல்லி நடையைக்கட்டினோம். மாமா போன பிறகு நான் தனியாக ஹாஸ்டலில் இவர்களோடு இருக்க வேண்டி இருக்குமே.!
ஆனால் அவருக்கோ கோபமான கோபம். “இந்தப்பசங்க வெளியிலே வரட்டும். என்ன பண்றேன் பார்? “ என்று சொல்லி ஒரு சாணக்கிய சபதம் எடுத்து அங்கிருந்து கிளம்பி விட்டார்.
நான் வழக்கம்போல நித்திய ரோதனைகளை அந்த ஹாஸ்டலில் அனுபவித்துக்கொண்டு இருந்தேன்.

ஒரு மாதம் கழிந்தது. நான் அந்த வார இறுதி விடுமுறை நாளில், பாலுமாமாவை சந்திக்க சென்று இருந்தேன். அவர்
“ சரி நாம இன்னிக்கு வெரைட்டி .ஹாலில் சினிமா பார்க்கப் போவோம்” என்றார்.
எனக்கும் அப்படிப்பட்ட ஒரு சேஞ்ச் தேவைப்பட்டது. எனவே அவர்சொன்னவுடனே
“சரி போவோம்” என்று சொல்லி தியேட்டருக்குப் போய் டிக்கட் வாங்கிக் கொண்டு எங்களுக்கான சீட்டில் அமர்ந்தோம்.
அப்போது பாலுமாமா என்னிடம்
“நீ இங்கேயே உக்காந்து இரு. நான் ஒரு நிமிஷம் போய் விட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு நாலு வரிசை முன்னதாகப் போய் அங்கு உட்கார்ந்து இருந்த ஒரு இளைஞனை டக்கென்று காலரைப்பிடித்து இழுத்து கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். அந்த மாணவர் உட்பட சுற்றி இருந்தவர்கள் அதிர்ந்து விட்டனர்
“ ஏன்? என்ன ஆச்சு” என்று சிலர்கேட்க, என்மாமா ஒரு மாதம் முன்பு தான் இஞ்சினீரிங் காலேஜ் ஹாஸ்டலுக்கு சென்ற போது நடந்த விவரங்களை ஒன்று விடாமல் அவர்களிடம் கூறினார்.
அவ்வளவுதான். “நல்லா போடுங்க சார் இந்த நாய்களை. இந்த கவர்மென்ட் இஞ்சினீரிங் காலேஜ் பசங்களே சுத்த மோசம். அதே இங்கே PSG இஞ்சினீரிங் காலேஜ், CIT இஞ்சினீரிங் காலேஜ் எல்லாம் இருக்கு. அவங்களாலே எந்தத்தொந்தரவும்கிடையாது. அவங்க எல்லாம் மரியாதையா நடந்துப்பாங்க. இந்த கழுதங்க மாத்திரம் கொழுப்பேறிக்கிடக்கறாங்க. ஒரு மட்டு மரியாதை கிடையாது, பெரியவங்க, சின்னவங்கன்னு பாகு பாடு கிடையாது, இவங்க காலேஜு பஸ்ஸுலே போகும்போது ரோட்டுலே ஒரு பொம்பளை நிம்மதியா போக முடியாது. விசிலடிக்கிறது அப்பறம் கோரசா “சிங்கமசி, பருப்புமசி ஹொய். ஹொய்” “உண்ட பக்கர மான பக்கர ஹொய். ஹொய்” னு அர்த்தம் இல்லாம கத்திகிட்டு கண்ட சினிமா பாட்டை பாடிக்கிட்டு ஒரே ரகளைதான். நல்லா போடுங்க சார் இன்றும் ரெண்டு” என்றவுடன், இன்னும் சிலரும் சேர்ந்து அவனுக்கு தர்ம அடி தரவே, அந்த மாணவன்
“சார் மன்னிச்சிக்குங்க. ஏதோ தெரியாம செஞ்சுட்டேன்” என்று காலில் விழாத குறையா கெஞ்ச மாமா அவனை தன் பிடியிலிருந்து கொஞ்சம் விடுவித்தார், நல்ல வேளையாக அடிபட்ட மாணவனும் அவனுடன் கூட வந்து மாமாவுக்குப் பயந்து எங்கோ ஓடி ஒளிந்து கொண்ட சூரப்புலிகளும் என்னைப்பார்க்கவில்லை. பார்த்து இருந்தால் என் பாடு அதோகதிதான்,
“ இந்த மாதிரி அதிகப்பிரசங்கித்தனம் பண்றதை இனிமே யார்கிட்டேயும் வெச்சிக்காதே. உன் பிரண்டுக அத்தனை பேர் கிட்டேயும் சொல்லி வை.. அவங்களையும் மரியாதையா நடந்துக்கச்சொல். இஞ்சினீரிங் கத்துக்கறதுக்கு முன்னாடி மேனர்ஸ் கத்துக்கோங்கடா, கடாமாடுகளா” என்று சொல்லி தன் பிடியை அவன் சட்டைக் காலரிலிருந்து எடுத்தார். இது அவர் அந்த மாணவர்களுக்காக மாத்திரம் சொன்னதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. என்றைக்கும் எப்பேர்ப்பட்ட மாணவனும் , ஹைஸ்கூலோ காலேஜோ, எது படித்தாலும் முதலில் கற்றுக்கொள்ற வேண்டியது, மற்றவர்களுடன் மரியாதையாக நடந்து கொள்வதுதான் என்ற அரிய பாடத்தைப் புகட்டினார். நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
நானும் சில சமயங்களில் இந்த “ சிங்கமசி, பருப்புமசி ஹொய். ஹொய்” , “உண்ட பக்கர மான பக்கர ஹொய். ஹொய்” னு சிலர் கத்தச்சொல்லும்போது கத்தி இருக்கேன். அப படி கத்தாவிட்டால் எனக்கு ஸ்பெஷல் ராகிங் நடக்கும். அதுக்கு என்ன அர்த்தம்னு கேட்டபோது எவனுக்கும் தெரியல்லே. அது , ஓவ்வொரு காலேஜுக்கும் ஒரு ஸ்லோகன் இருக்கிற மாதிரி எங்க ஹாஸ்டல் ஸ்லோகன்னு வெச்சிக்கவேண்டியதுதான். அது எந்த பாஷைன்னும் தெரியல்லே. இதைப்பத்தி சும்மா கேட்டுக்கிட்டு இருக்கக்கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க.

படிப்புலே மெயின், சப்சிடியரி என்று உண்டு அது போல ராகிங் மெயின் ஓவர் ஆனாலும், சப்சிடியரி தொந்திரவுகள் அந்த வருடம் பூராவும் கன்டின்யூ ஆகும். மெயின் ஈவென்டையே சமாளிச்ச எங்களுக்கு இந்த சப்சிடியரி எல்லாம் சென்னை பாஷையில் சொல்வதென்றால் வெறும் பிஸ்ஸாத்து. இருந்தாலும் அவை தேவை இல்லாத தொந்திரவுகளாகவே இருந்து வந்தன.

இப்படி ஓராண்டு கால அனுபவங்களுக்குப் பிறகு என்னைப் போல ஒரு சிலரை சேர்த்துக்கொண்டு அங்கு ஏற்கனவே இருந்த ஏண்டி ராகிங் காம்பெயின் கமிட்டியுடன் சேர்ந்து புதிதாக வரும், மாணவர்களுக்கு எங்களுக்கு ஏற்பட்ட எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாது ரூம் ரூமாகப்போய் ஆறுதல் சொல்வது என்று வைத்துக்கொண்டோம்ஆனாலும் நான் அங்கு நான்கு ஆண்டுகள் படிப்பை முடிக்கும் வரையில் இந்த ராகிங்கில் எந்தத்தொய்வும் ஏற்படவில்லை. அது தொடர்ந்து ஜாம்ஜாம் என்று நடந்து கொண்டுதான் இருந்தது.

நான் மாஸ்டர் ஆப் இஞ்சினீரிங் மேல் படிப்புக்காக கிண்டி இஞ்சினீரிங் கல்லூரியில் சேர்ந்தபோதும் முதலாண்டு இஞ்ஜினீரிங் மாணாக்கர்களை ராகிங் செய்யும் கொடுமை ஓயவில்லை. நான்படிப்பைமுடித்த போதும் அது தொடர்ந்தது ஆனால் அதற்குள் பத்திரிகைகளில் ராகிங்குக்கான கடும் எதிர்ப்பு பொதுமக்களிடம் தோன்றியது. இதில் பல பெரிய மனிதர்களின் பையன்கள் சம்பந்தப்பட்டு இருந்ததால் இதில் அரசாங்கம் தலையிட்டு கல்லூரி பிரின்சிபல் மற்றும் ஆசிரியர்களை ராகிங்கை கட்டுப்படுத்த வலியுறுத்தியது. அப்போது நான் அந்தக்கல்லூரியில் ஒரு ஆசிரியராக இருந்தமையாலும், குவார்ட்ரஸில் தங்காமல் வெளியே தங்கி கல்லூரிக்கு வருவதாலும், சீனியர் மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை நான் வரும் பஸ்ஸில் சீண்டாதவாறு பார்த்துக்கொள்ளும் பொறுப்பு தரப்பட்டது. இவ்வாறு வெளியிலிருந்து வரும் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. நான் மைலாப்பூரில் பஸ் பிடித்து காலேஜுக்குப்போவது வழக்கம். அப்போது பஸ்ஸில் சில மாணவர்கள, சில்மிஷங்கள் செய்வதுண்டு. ஆனால் பொது இடம் என்பதால் சீனியர்கள் கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள்.
அப்படியும் ஓரிருவர் மைலாப்பூர் டாங்க் படிக்கட்டுகளுக்கு புது மாணவர்களை அழைத்துப்போய்சில விசித்திரமான ஆனால் அசிஙகமற்ற கேள்விகளைக்,கேட்பது, பாடச்சொல்வது, கிண்டல் அடிப்பது இவ்வாறு மைல்டாக கலாட்டா செய்வது வழக்கம். ஆனால் சிலசமயம் ராகிங் எல்லை மீறினால், அவ்வாறு செய்த மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது உண்டு. அரசாங்கம் இதற்கு முழுமையாக தடைவிதித்த பின் ராகிங் அனேகமாக இன்று மறைந்துவிட்டது என்றே சொல்லலாம்.இப்போது ராகிங் பத்திரிகைச்செய்தியாகி விட்ட படியால் எந்த மாணவனும் இதில் ஈடுபடுவதில்லை.

எங்கள் ஹாஸ்டலில் அப்போது தமிழ்நாடு,மைசூர், திருவனந்தபுரம், மற்றும் இன்றைய ஆந்திராவிலிருந்தும் நிறைய மாணவர்கள் இருந்தார்கள். அதனால் சில பிரச்சினைகள் எழுவதுண்டு. மொத்தம் எங்கள் ஹாஸ்டலில் இரண்டு மெஸ்கள் உண்டு. ஒன்று வெஜிடேரியன், இன்னொன்று நான் வெஜிடேரியன். சமையல்காரர்களில் பெரும்பாலானோர் இன்றைய கேரளத்தவர்கள். இதனால் சாப்பாடு பிரச்சினை அவ்வப்பொழுது எழுவதுண்டு.

மொழி வழி பிரிந்து இனவழி கூடி என்பது போல் மொழிவழி கூடினாலும் , ராகிங் என்று வரும் போது சீனியர்கள் எல்லாம் சேர்ந்து கொள்வார்கள்.ஒருசமயம் சாப்பாட்டுப்பிரச்சினை எழுந்தது. காலை பிரேக் பாஸ்ட் இட்லியா பிரெட்டா என்ற ஒரு போராட்டம் தொடங்கியது. இது இடிதடி வரையில் போய், கடைசியாக ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. வாரம் நாலு நாள் இட்லி, தோசை என்றும், மற்ற மூன்று நாட்கள் பிரெட், பட்டர், ஜாம் என்றும் முடிவாகியது.

எழுதியவர் : ரா. குருசுவாமி ( ராகு) (23-Dec-21, 6:21 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 515

சிறந்த கட்டுரைகள்

மேலே