என்னுடைய இஞ்சினீரிங் காலேஜ் இன்டர்வ்யூ

1
என்னுடைய இஞ்சினீரிங் காலேஜ் இன்டர்வ்யூ
1952
நான் க்ளைவ்ஸ் ஹாஸ்டலில் ( இது ராபர்ட் கிளைவ் நம்மை இங்கிலாந்து சார்பாக ஆண்ட காலத்தில் அவருடைய குதிரை லாயமாக இருந்ததாம்) தங்கி, இண்டர்மீடியட் படிப்பை திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் முடித்துவிட்டு, அங்கேயே B.Sc (Maths Hons) சேர்ந்து படித்து கொண்டு இருந்தேன். நான் அந்தக்காலேஜின் பிரின்சிபலும், கிளைவ்ஸ் ஹாஸ்டல் வார்டனுமாகிய Fr எர்ராட்டுக்கு ரொம்பவும் பெட் (pet). நான் இன்டர்மீடியட் யுனிவர்சிடி பரீட்சையில் கணக்கில் வழக்கமாக வாங்கும் சென்டத்தைத் தவறவிட்டுவிட்டேன். இருந்தாலும் அதுவரையிலும் நான் கணக்குப் பரீட்சையில் சென்டம் வாங்கினவன் என்ற காரணத்தினாலும், மற்ற பாடங்களிலும் ஓரளவு நல்ல மார்க் வாங்கிய காரணத்தாலும், அவருக்கு நான் pet என்பதாலும். நான் பாதியில் இஞ்சினீரிங் கிடைத்தால் இந்தப்படிப்பைவிட்டு விட்டுப் போகக்கூடாது என்ற கண்டிஷன் பேரில், எனக்கு B.Sc ( Hons) கணக்குப் பிரிவில் இடம் கொடுத்து இருந்தார் Fr எர்ராட். கிட்டத்தட்ட முதல் டேர்ம்( Term) முடியும் நேரம்.

அன்று தமிழ்நாடு என்று ஒன்று கிடையாது. சென்னை மாகாணம் என்ற பெயருடன் இன்றைய தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளாவின் ஒரு பகுதி, கர்நாடகாவின் ஒரு பகுதி, ஒடிஸாவில் ஒரு பகுதி, இவற்றில் அன்றைய ராஜாக்கள் ஆண்டு வந்த மைசூர், புதுக்கோட்டை, ஹைதராபாத் போன்ற சமஸ்தானங்கள் நீங்கலாக மற்றவை எல்லாம் இணைந்தது தான் அன்றைய சென்னை மாகாணம் ( Madras presidency, சுதந்திரம் வந்த பின் Madras State என்று அழைக்கப்பட்டது) என்பது.

இவ்வளவு பெரிய மாகாணத்தில் இன்று இருப்பது போல் ஆயிரக்கணக்கான இஞ்சினீரிங் காலேஜ்கள் அன்று கிடையாது. அரசாங்க கல்லூரிகள் 3, பிரைவேட் கல்லூரிகள் 2 தவிர அண்ணாமலை பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கல்லூரி ஒன்று. இவ்வளவுதான் இருந்தன. ஒவ்வொரு காலேஜிலும் 75 சீடடுகள்தான்.

இதில் Forward caste ன் ஒரு அங்கமான பிராமணர்களுக்கு அன்றிருந்த Proportionate representation என்ற Communal GO வின்படி 3% சீட்டுகள் தான் கிடைக்கும். ஏற்கனவே ரொம்பவும் லிமிடெட் சீட்டுகள் இருந்த படியால், இஞ்சினீரிங்கில் பிராமணர்களுக்கான சீட்டுகள் மிக மிகக்குறைவு. அதனால் சீட் கிடைக்க மிக அதிக மார்க் வாங்க வேண்டும் என்ற நிலை. எனக்கோ இஞ்சினீரிங்கில் இஷ்டம் இல்லை. இந்த நிலையில் குறைந்த சீட்டுகளே இருக்கும்போது எனக்கு இஞ்சினீரிங்க் சீட் கிடைப்பது என்பது குதிரைக் கொம்பு என்று கருதினேன். இருந்தாலும் இன்டர்வ்யூ நடைபெறும் இடமோ சென்னை. நான் அது வரையில் சென்னையை பார்த்தது கிடையாது. எனக்கு அங்கு நெருங்கிய சொந்தங்கள் என்று யாரும் கிடையாது. ஆனாலும் இண்டர்வ்யூ சாக்கில் சென்னையைப் பார்த்து விட வேண்டும் என்ற அடங்காத ஆசை.

என் சொந்த ஊர் அரியலூர் என்ற சிறிய கிராமம். அன்றைய திருச்சிராப்பள்ளி ஜில்லாவை சேர்ந்தது. இன்று அது அதே பெயரைக் கொண்ட மாவட்டத்தின் (தனி ஜில்லாவாக) தலைநகராக மாறிவிட்டது. இந்த இடத்தில் நான் எங்களின் அன்றைய ஊரைப்பற்றி சொல்லி ஆகவேண்டும்.
எங்கள் ஊர் அகில இந்தியப்புகழ் பெற்ற ஊரல்ல. இருந்தாலும் பாலியென்டாலஜிஸ்டுகளை பொறுத்த வரையில் அது இந்த உலகில் ஒரு முக்கியமான இடம். இங்கு கிடைக்கும் பாசில் படிமங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. இந்த இடம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருந்ததாகவும், பல்வேறு உயிரினங்கள் காலப்போக்கில் அழிந்து பாசில்களாக புதை பட்ட இடம் என்பதால் பிரபலம் அடைந்து இருந்தது. அது வரையில் இந்த ஊரும் மற்றவர்கள் அறியப்படாத சிறு கிராம்மாகத்தான் இருந்து வந்தது. குடிநீர் வசதி கிடையாது, செட்டிக்குளம் எனப்படும் ஒரு குளம் தான் எங்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது. திறந்தவெளி சாக்கடைதான். ஒரு வரண்ட பகுதியாகத்தான் அது விளங்கி வந்தது. இந்த ஊரை அன்று அரசாங்க உத்தியோகஸ்தர்கள் ஒரு punishment centre ஆகத்தான் கருதி வந்தார்கள். ( அதாவது இன்று சொல்கிறார்களே தவறு செய்பவர்களை, தங்களுககு வேண்டாதவர்களை தண்டிக்க தண்ணி இல்லாக்காட்டுக்கு டிரான்ஸ்பர் பண்ணிவிடுவோம் என்று அந்த மாதிரி கருதப்பட்டு வந்த இடம்தான் எங்கள் ஊர்)
பிறகு 1956ம் ஆண்டு நடந்த மிகப் பெரிய அரியலூர் ரயில் விபத்தில் அன்றைய மத்திய ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி வுபத்துக்கு தார்மிகப்பொறுப்பு ஏற்றுக்கொண்டு தன் பதவியை ராஜினாமா செய்தார். அதனால் எங்கள் கிராமம் பிரபலமாகியது.

இந்த கிராமத்தில் Board High School ஒன்று உண்டு. அது முழுக்க முழுக்க தமிழ்மீடியம் ஸ்கூல் தான். ஆனால் அன்று பல நகர்களிலும்கூட இல்லாத கோ எஜூகேஷன்( ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் வசதி) அங்கு உண்டு. அந்த ஸ்கூலில்தான் நான் படித்தேன். 4ம் வகுப்பில்தான் a,b,c,d சொல்லித் தருவார்கள். ஆங்கிலப்பாடத்தையும் தமிழில் தான் சொல்லித் தருவார்கள். மைக்கேல் மதன காமராஜனில் கிரேசி மோகன் சொல்லுவாறே அந்த மாதிரி அரியலூரைச் சுற்றி இருந்த சில குக்கிராமங்களிலிருந்து இருந்து சில மாணவர்கள் அங்கு படிக்க வருவார்கள். முதல் மூன்று ஆண்டுகள் அங்கிருந்த எலிமென்டரி ஸ்கூலிலும், பிறகு ஏழு ஆண்டுகள் இந்தப் பள்ளியிலும்தான் நான் மொத்தம் பத்து ஆண்டுகள், அந்த ஊரில் படித்தேன்.

நான் SSLC யில் அந்தப் பள்ளிக்கூடம் ஆரம்பித்த நாளில் இருந்து அன்று வரையில் யாரும் வாங்கி இராத மொத்த மார்க் ( aggregate) வாங்கி ரெகார்ட் ஏற்படுத்தினேன்(450/600). அந்தக் காலத்தில் இது ஓரளவு நல்ல மார்க். 600 க்கு 450 ஒரு பெரிய மார்க்கா என்று நீங்கள் கேட்கலாம். இன்று 600 க்கு 597 என்றுகூட மார்க் வாங்குகிறார்கள். தமிழிலும் ஆங்கிலத்திலும் கூட 100க்கு கிட்டத்தட்ட 100 வாங்குகிறார்கள். இது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. ( சில ஆண்டுகளுக்கு முன்பு என் மனைவி கேன்சரினால் பாதிக்கப,பட்டு படுத்த படுக்கையாய்க் கிடந்த போது நாங்கள் ஒரு நர்சை ஏற்பாடு செய்திருந்தொம். அந்த நர்ஸ் தான் தமிழில் 100 க்கு 97 வாங்கினதாகச்சொன்னாள். நான் அவள் தமிழில் மிக்க புலமை பெற்றவளாக இருக்க வேண்டும் என்று எண்ணினேன்.
(ஒரு நாள் எனக்கு உதவும் வகையில் “ சார், நீங்க போக வேண்டாம் . நான் போய் உங்க சமையலுக்கான காய்கறிகளை பக்கத்தில் இருக்கும் கடைக்குப்போய் வாங்கி வந்து விடுகிறேன்” என்றாள். சரி என்று அவளிடம் வாங்க வேண்டிய காய்கறி லிஸ்டைச் சொன்னேன். . அவளும் ஒரு சிறு காகிதத்தில் எழுதிக்கொண்டாள். நான் அதை வாங்கிப்பார்த்தேன். வெண்டைக்காய் என்பதை வணடிக்காய் என்றும் கொத்தவரங்காய் என்பதை கெத்தவாரங்காய் என்றும், ஒரு காய்கறியின் பெயரையும் தமிழில் சரியாக எழுதவில்லை. ஏகப்பட்ட ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ். என்னம்மா இவ்வளவுதவறாக எழுதி இருக்கிறாயே என்பதற்கு நீங்கதான்ஸ்பெல்லிங் பாக்கறீங்க. எங்க வாத்தியார்கள் அப்படிப் பார்க்க மாட்டார்கள் என்று போட்டாளே ஒருபோடு. இதற்கு மேல் பேசி பயனில்லை என்று விட்டுவிட்டேன். டி.வி.யில். மற்றும்தமிழ்ப்பத்திரிகைகளில்தான் எத்தனை பிழைகள் சோஷல் மீடியா எனப்படும் சமூக ஊடகத்திலோ நான் தமிலன்டா என்று பெருமை அடித்துக் கொள்வதைப்பார்த்தால் தமிழ்இவர்களிடம் படும் பாட்டிலிருந்து யாராவது தபிழைக் காப்பாற்றினால் தேவலை.) எங்கள் காலத்தில் அப்படி முடியாது. தமிழ், இங்கிலீஷ் போன்ற சப்ஜெக்ட்களில் 100 க்கு 60 வாங்குவதே பெரிய விஷயம். அன்று 450 என்பது ஒரு நல்ல மார்க்.

எனக்கு எங்கள் ஊர் வளர்ச்சி அடைய வேண்டும் என்று சிறுவனாக இருந்த நாளில் இருந்தே எனக்கு மிக மிக ஆசை. என்னைப் பொறுத்த வரையில் அன்று தார் ரோடு, மின்சாரம், பெர்மனென்ட் சினிமா தியேட்டர்கள் இவை தான் ஒரு ஊர் பெரிதாவதற்கான அடையாளம். எங்கள் ஊரில் மின்சாரம் என்னுடைய 5 வது வயதில்தான் வந்தது. அது வரையிலும் ஹரிக்கேன் விளக்கு அல்லது சிம்னி விளக்குதான். ஆனால் தார் ரோடும், பெர்மனென்ட் தியேட்டரும் நான் அந்த ஊரை விட்டு கிட்டத்தட்ட செல்லும் சமயம் வரை வராதது எனக்குப் பெரிய குறை. நான் அதுவரையில் பார்த்திருந்த பெரிய ஊர்கள் என்றால. அவை திருச்சியும், மதுரையும்தான். மெட்ராஸை பற்றி கேள்விப்பட்டிருந்தேனே ஒழிய பார்த்ததில்லை.. எங்கள் ஊரில் அப்போது காலேஜ் கிடையாது எனவே SSLC முடித்தவுடன் நாங்கள் எங்கள் மேல் படிப்புக்கு அருகிலுள்ள திருச்சிக்கு தான் போக வேண்டும்.
2
திருச்சி, விழுப்புரம் கார்டு லைனில் எங்கள் ஊர் அமைந்து இருப்பதால் அது எங்களுக்கு ஒரு பிளஸ் பாயிண்ட். எங்கள் ஊரிலிருந்து திருச்சி செல்ல அன்று இரண்டு மணி நேரமாகும். எங்கள் ஊரின் வழியாகத்தான் மெட்ராஸ் செல்லும் முக்கிய எக்ஸ்பிரஸ் வண்டிகளும் செல்லும். அது குறித்து எங்களுக்குப்பெருமை. எங்கள் ஊரில் நிற்கும் எக்ஸ்பிரஸ் வண்டியில் ஏறி உட்கார்ந்தால் அன்று ஆறு மணி நேரத்திற்குள் சென்னையை அடையலாம்.. என் ஸ்கூல் நண்பர்கள் சிலர் விடுமுறைக்கு அவர்களின் சொந்தக்காரர்கள் சென்னையில் இருந்தமையால் சென்னைக்கு செல்வது வழக்கம். அவர்கள் லீவு முடிந்து ஊர் திரும்பிய உடன் எங்களைப்போல் கிராமத்தை விட்டு வேறு பெரிய ஊர்களுக்கே போகாத , பார்த்திராத என்னை மாதிரி பட்டிக்காட்டான்களிடையே சென்னையைப் பற்றி மிக மிக பெருமையாக பேசுவார்கள். அங்கு ஓடும் டவுன் பஸ்ஸைப் பற்றியும், அவற்றின் நிறத்தைப் பற்றியும், நடு ரோட்டில் தண்டவாளத்தில் ஓடும் ட்ராம்களைப் பற்றியும், எலக்ட்ரிக் சபர்பன் ரயில் பற்றியும், மிருகக்காட்சி சாலை பற்றியும், மியூசியம் பற்றியும், அங்கு உள்ள பல சினிமா தியேட்டர்களைப் பற்றியும், மெரினா பீச், அந்த கடல் அலை, மாங்கா, தேங்கா பட்டாணி சுண்டல் பற்றியும், ஓட்டல்களில் அவர்கள் சாப்பிட்ட ஐஸ்கிரீம் பற்றியும் விவரமாக எங்கள் மனதில் ஒரு ஏக்கமும் பொறாமையும் வரும் வகையில் சௌண்ட் எஃபெக்ட் கொடுத்து வர்ணிப்பார்கள். எங்கள் ஊரில் “டௌன்” பஸ்ஸோ, “அப்” பஸ்ஸோ கிடையாது. அப்பொழுது எங்கள் ஊரில் நான் SSLC -அதாவது 11 வது வகுப்பு படிக்கும் போது- தான் ஒரே ஒரு பெர்மனன்ட் தியேட்டர் வந்தது. அது வரையில் டென்ட் தியேட்டர்தான்.அதுவும் ஒன்றே ஒன்றுதான். அன்றைய கால கட டத்தில. சினிமா ஒரு மிகப் பெரிய பொழுது போக்கு.
பழைய படங்கள் ரிலீசான மூன்று, நான்கு வருடங்கள் கழித்து தான் எங்கள் ஊர் டென்ட கொட்டாய்க்கு அவை வரும். புதுப படம் பார்க்க நாங கள் திருச்சிக்குத்தான் போகவேண்டும். உள்ளூரில் சினிமா பார்ப்பதற்கே எங்களை எளிதில் அனுமதிக்காத பெரியவர்கள், நாங்கள் திருச்சிக்குப்போய்சினிமா பார்ப்பதை அனுமதிப பார்களா என்ன?
அவர்களிடம் கெஞ்சிக்கூத்தாடி பெர்மிஷன் வாங்குவதற்குள்ளே போதும் போதும் என்றாகிவிடும்.
ஒரு சினிமா வருவதற்கு முன்பும், அது சென்ற பின்பும் பத்து நாட்களுக்கு, வைகுண்ட ஏகாதசி முன்பத்தும், பின்பத்தும்போல அதைப்பற்றிய பேச்சுத்தான் பலர்வீட்டிலும் நடக்கும் ஆறு அல்லது எட்டு மாதங்களுக்கு ஒரு முறை டென்ட், கையும், இடமும் மாறும். ஐஸ் கிரீம் எங்கள் ஊரில் கிடைக்காது. ஐஸ்கிரீம் சாப்பிடவேண்டும் என்றால் திருச்சிக்குத்தான் போகவேண்டும். இவை எல்லாம் எனக்குத் தீராத பெரியமனவருத்தங்கள்..

ஒரு ஊர் பெரிய ஊர் என்ற அடையாளமே அந்த ஊரில் எத்தனை தியேட்டர்கள் என்பது பொறுத்ததுதான் என்பது என்னுடைய அன்றைய எண்ணம். அன்று எங்க ஊரின் ஜனத்தொகை என்னையும் சேர்த்து 10001. அப்படித்தான் எங்கள் ஊர் பஞ்சாயத்து நோட்டீஸ் போர்டு சொல்லியது. டௌன் பிளானிங் சாஸ்திரம் என்ன சொல்கிறதோ, எனக்குத் தெரியாது.
அப்படி இருக்கையில் என் நண்பர்கள் சென்னையில் அவர்கள் பார்த்த, அப்போதுதான் ரிலீசான, படத்தைப்பற்றி வண்டி வண்டியாக அளந்து விமர்சிப்பதை கேட்டு ,திருச்சியையும், மதுரையையும் பார்த்த எனக்கு பசித்தவன் பாதாங்கீருக்கு ஆசைப்படுவதைப்போல நான் இதுவரையில் பார்த்திராத மெட்ராஸை பார்த்தே தீர வேண்டும் என்ற தணியாத ஆசை,( வெறி என்று கூட சொல்லலாம்) என்னைப் பிடுங்கித் தின்ன ஆரம்பித்தது.

இந்த நேரத்தில்தான் மேற்சொன்னவாறு BSc ( Hons)Maths அப்ளை செய்து சீட் கிடைத்து திருச்சி செயின்ட்ஜோசப் காலேஜில் படித்துக் கொண்டு இருந்தேன்.
அப்போது என் பெற்றோர்கள் சொல்கிறார்களே என்று இஞ்சினீரிங் படிக்க இஷ்டம் இல்லாமல் போனாலும் இன்டர்வ்யூ சாக்கில் மெட்ராஸ் போய் பார்க்கலாமே என்ற ஆசையில் அப்ளை செய்தேன். பிறகு என் B.Sc ( Hons) படிப்பைத் தொடர்ந்தேன்.

ஆனால் அன்று நாட்டு அரசியல் இருந்த நிலைமையில் இஞ்சினீரிங் இன்டர்வ்யூ வர ரொம்ப நாட்களாகும் என்பதாலும், என்னைவிட அதிகம் மார்க் எடுத்த பல என் சீனியர்களுக்கே இஞ்சினீரிங் சீட் கிடைக்கவில்லை என்ற எண்ணத்தாலும்,நிச்சயமாக இஞ்சினியரிங்கில் சீட் கிடைக்காது என்ற (அவ) நம்பிக்கையாலும் நான் B.Sc ( Hons) Maths தொடர்ந்து படிக்க முடிவு செய்து *காலேஜில் வகுப்புகள் ஆரம்பம் ஆகிவிட்டபடியால் அதில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன்.
3

இப்போது நான் அன்றைய அரசியலைப் பற்றி சொல்ல வேண்டும்.
இஞ்சினீரிங் இண்டர்வ்யூவும் அதன் ரிசல்டடும் வழக்கம்போல் இல்லாது இந்த ஆண்டு தாமதமானதன் காரணம் 1952 ல் நடந்த தேர்தலில் அன்றைய சென்னை ராஜதானியில் ( Madras Presidency) காங்கிரஸுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை . அப்போது இருந்த ஆந்திர கேசரி பிரகாசம் எதிர்கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு ஆட்சியைப்பிடிக்க எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டார்.ஆனால் இதை காங்கிரஸ் விரும்பவில்லை,
எப்படியாவது காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்று தீவிரமாக அரசியல் சதுரங்கத்தில் இறங்கியது. அப்பொழுதுதான் தன் மேற்கு வங்க கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலிலிருந்து ஓய்வு பெற்றிருந்த ராஜாஜியை மாகாண காங்கிரஸ்காரர்கள் மெட்ராஸ் மாகாணத்தின் முதல் அமைச்சர் ஆக வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர் ராஜாஜி மறுக்கவே நேருவின் மூலம் ராஜாஜிக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தி நேருவின் இந்த வேண்டுகோளை மீற முடியாமல் ராஜாஜி இப்பதவியை ஏற்றுக்கொண்டார்( இது பற்றி அவரே சொன்னது : இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த நான். அன்று இருந்த மேற்கு வங்காள நிலைமை காரணமாக மே. வங்கத்தின் கவர்னர் பதவியை ஏற்றுக் கொள்ளும்ஆஆஆஆபடி ஆயிற்று. இப்போது என்னை சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக வரவேண்டும் என்று கேட்கிறீர்கள். இந்தப்போக்கு நீடித்தால் நான் அடுத்தது சேலம் முனிசிபல் சேர்மென் ஆகவேண்டி வரும்போல இருக்கிறதே என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்) பிறகு ராஜாஜி மிகுந்த யோசனையுடனும் தயக்கத்துடனும் ஜூலை மாதம் முதல் அமைச்சர்பதவியை ஒப்புக்கொண்டார். பிறகு அவர் காமன் வீல் பார்ட்டியின் தலைவராக இருந்த மாணிக்கவேலருடனும் வன்னியர்கட்சித் தலைவரான ராமசாமிப்படையாச்சியுடனும் ஒரு கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்தார். இந்தக்காரணங்களினால் அன்று இஞ்சினீரிங் இண்டர்வ்யூ நடப்பதற்கு வழக்கத்தைவிட ஒரு மாதத்திற்கு மேலாக தாமதம் ஏற்பட்டது.

இதனால் அந்த ஆண்டு அரசாங்க இஞ்சினீரிங் கல்லூரி செலக்‌ஷனும் ஒத்திப்போனது. அந்த நேரத்தில்தான் என் பெற்றோர்களும், மற்றவர்களும் என்னை இஞ்சினீரிங்குக்கு அப்ளை பண்ணச் சொல்லி வற்புறுத்தினார்கள். எனக்கு இஞ்சினீரிங் அப்ளை பண்ண விருப்பம் இல்லை. இதைச் சொன்னால் என்ன ஆகும் என்பது எனக்கு தெரியும். அந்தக் காலத்திலே இஞ்சினீரிங்க்கு அவ்வளவு மவுசு. இஞ்சினீரிங் படித்தால் வேலை நிச்சயம். அப்போதுதான் முதன்முறையாக ஐந்தாண்டுத்திட்டங்கள, வந்தபடியால் இஞ்சினீயர்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி. வேலை கிடைக்காது என்ற பேச்சுக்கே இடம் இல்லை.இன்னும் சொல்லப்போனால் தேவைப்பட்ட அளவிற்கு நாட்டில் இஞ்சீனீயர்கள் இல்லை. இஞ்சினீயர்கள் பஞ்சம் நிலவியது. நான் forward caste என்பதாலும், அன்று கம்யூனல் G.O.இருந்ததாலும் அன்று நான் இண்டர்மீடியட்டில் வாங்கின மார்க்குக்கு
எனக்கு இஞ்சினீரிங்கில் சீட் கிடைக்காது என்று நிச்சயமாக நம்பினேன். இஞ்சினீரிங் செலக்‌ஷனுக்கான இன்டர்வ்யூ அன்றைய Madras ல்தான் நடைபெறும். எனவே அப்ளை பண்ணி வைப்போம். கிடைக்கப்போவதில்லை. இன்டர்வ்யூ வந்தால் என் கனவுலக மெட்ராஸை பார்க்க இது ஒரு நல்ல சான்ஸ் என்று நினைத்து இஞ்சினீரிங்குக்கு அப்ளை செய்தேன்

4
.ஒருவிதமாக மெட்ராஸ் ஸ்டேட் அரசு அமைக்கப்பட்டதும் இஞ்சினீரிங் செலக்‌ஷனுக்கான இன்டர்வ்யூ ஆரம்பம் ஆயிற்று. அந்த நிலையில் எதிர்பாராமல் என் தகப்பனாரும், மற்றும் சில உறவினர்களும் திருச்சி ஹாஸ்டலுக்கு என்னைப் பார்க்க வந்தார்கள். காரணம் என்ன என்று தெரியாமல் நான் முழித்தபோது அவர்கள் உற்சாகமாக என்னைப் பார்த்து “ உனக்கு சென்னையில் இஞ்சினீரிங் இன்டர்வியூவுக்கு கடிதம் வந்திருக்கிறது “ என்று ஏதோ எனக்கு உடனே இஞ்சினியரிங்கில் சீட் கிடைத்துவிட்ட மாதிரியே மகிழ்ந்து சொன்னார்கள். எனக்கும் மகிழ்ச்சிதான், மெட்ராஸ் போவதற்கான சான்ஸ் கிடைத்ததே என்று. ஆனால் இன்டர்வியூவுக்கு இன்னும் 4 நாட்களே இருந்தது. எனவே நான் வார்டனிடம் லீவு வாங்கிக் கொண்டு என் சொந்த ஊருக்கு போய் அங்கிருந்து அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு மெட்ராஸுக்கு புறப்பட வேண்டும். வந்தவர்களும் சரி “உடனே லீவு போட்டுவிட்டு ஊருக்கு புறப்படு” என்று சொல்லிவிட்டார்கள்.

இப்போதுதான் எனக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது. நான் ஹாஸ்டல் வார்டனும், காலேஜ் பிரின்சிபலுமான( 2 in 1) Fr எர்ராட்டை நேரில் சந்தித்து லீவு வாங்க வேண்டும். இது மிகவும் சங்கடமான விஷயம். ஏனென்றால் நான் அவரிடம் B.A ( Hons) சீட் வாங்கும்போதே அவர் கேட்டதன் பேரில் நான் வேறு எந்த காலேஜுக்கும், வேறே எந்த படிப்புக்கும் அப்ளை செய்து இந்தப் படிப்பை விட்டு விட்டுப் போக மாட்டேன் என்று அடித்துச் சொல்லி இருந்தேன். எனவே இப்போது இஞ்சினீரிங் இன்டர்வ்யூவுக்கு போக லீவு வேண்டு மென்றால் லீவு எப்படி கேட்பது?. அவர் முகம் ஏற்கனவே சிகப்பு. கோபம் வந்தால் பார்க்கவே முடியாது அப்படி ஒரு நெருப்பு சிகப்பாகிவிடும். கோபத்தில் கடிந்து கொண்டால் எப்பேர்ப்பட்ட சூரனுக்கும் சப்த நாடியும் அடங்கி விடும். இப்பேர்ப்பட்ட வரை எந்த தைரியத்தில் போய்ப் பார்ப்பது? மெட்ராஸ் போக வேண்டும் என்றால் லீவு கேட்டுத்தானே ஆக வேண்டும். வேறு வழியில்லை.

ஏதோஒரு அசட்டுத்தைரியத்தில் அவருடைய ‘பெட்’ நான் என்ற நம்பிக்கையில் அவருடைய அறைக்கு சென்றேன். சிரித்தபடி என் பெயரைச் சொல்லி “என்ன பிராப்ளம்?” என்று கேட்டார். நானும் தயங்கி தயங்கி முழு தைரியத்தையும் வரவழைத்துக்கொண்டு “ Fr, எனக்கு 5 நாட்கள் லீவு வேண்டும்” என்று எப்படியோ திக்கித் திணறி அவரிடம் சொல்லிவிட்டேன், ஒரு வித நடுக்கத்துடன் அவரை ஓரக்கண்ணால் பார்த்தேன். ‘லீவா? எதற்கு?” என்று அவர். கேட்டார். கேட்கும்போதே குரலில் ஒரு கனம். ஒரு அழுத்தம. ஒரு அதிகார தொனி.
“நான் மெட்ராசுக்குப் போகவேண்டும்”. நான் வேறு ஏதாவது பொய் சொல்லி இருக்கலாம். ஆனால் எனக்கு அவ்வாறு செய்ய தோன்றவில்லை.
“எதற்கு?” என்றார் அவர்?
“இன்டர்வ்யூ அட்டெண்ட் பண்ண?” நான்
“என்ன?” ஒரு அதிரடியாகக் கேட்டார்
“இஞ்சினீரிங் இண்டர்வ்யூவிக்கு”
“என்ன இஞ்சினீரிங் இன்டர்வ்யூவிக்கா?” ஒரு மிரட்டலுடன் கேட்டார்
“ஆம் என்றேன்” என் சப்த நாடியும் அடங்கிவிட்டன
“உனக்கு B.A (Hons) Maths சீட் தரும்போது என்ன சொல்லிக் கொடுத்தேன். நீ அப்போது என்ன சொன்னாய்?”
“இல்லை. Fr என் பெற்றோர்கள் என்னை இந்த இன்டர்வ்யூவுக்குப் போக வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.. அவர்களை திருப்தி படுத்துவதற்காக தான் இன்டர்வியூவுக்கு போகிறேன். அப்படி எனக்கு இஞ்சினீரிங் சீட் கிடைத்தால் கூட நான் நிச்சயமாக அதில் சேர மாட்டேன்” என்று ப்ராமிஸ் செய்யாத குறையாக அடித்து சொன்னேன். எந்த தைரியத்தில் அப்படி சொன்னேன் என்று எனக்குத் தெரியாது. Fr என் பேச்சை நம்புவதாகத்தெரியவில்லை. அவர் திரும்பத் திரும்ப நோ என்று சொன்னார். நான் அசையாது கண்களில் நீர் வந்தபடி ஒரு ஐந்து பத்து நிமிடங்கள் நின்றேன். அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. என கண்களில் நீர் வழிவதைப் பார்த்து விட்டு
“ சரி. நீ சொல்வதை நான் நம்புகிறேன். லீவை எந்த காரணம் கொண்டும் எக்ஸ்டென்ட் பண்ணக்( நீட்டக்) கூடாது என்றார். அப்போது நான் விட்ட பெருமூச்சு மெட்ராசுக்கே கேட்டு இருக்கும், “தேங்க்ஸ் Fr” என்று சொல்லிவிட்டு ஓட்டமும் நடையுமாக என் ரூமுக்கு வந்து லீவு கிடைத்ததை அப்பாவிடமும் மற்றவர்கள் இடமும் சொன்னேன். எல்லோருக்கும் ஒரே சந்தோஷம். சரி இப்போதே ஊருக்கு புறப்படு என்று சற்று நேரத்திற்கெல்லாம் எங்கள் ஊருக்குப் புறப்பட இருந்த பஸ்ஸில் என்னை ஏற்றியவர்கள் புடை சூழ அன்று மாலையே ஊர் போய் சேர்ந்தேன்.

5

ஊர் போய் சேர்ந்த உடன் அங்குள்ள மற்ற உறவினர்களும் பலரும் எங்கள் வீட்டு வாசல் வெராண்டாவில் கூடினார்கள். .அதில் கொஞ்சம் வெளி உலக விவரம் தெரிந்த ஒரு அங்கிள் “என்னடா, நீ இன்டர்வ்யூவுக்கு ரெடி ஆயிட்டியா?” என்று கேட்டார்.
“ரெடி ஆவதற்கு என்ன இருக்கு? அவர்கள் கேள்வி கேட்டால், தெரிந்தால் பதில் சொல்வேன்” என்றேன்.
“நான் அதைச்சொல்லல்லேடா, நீ ஒரு பிக்காரி மாதிரி இன்டர்வியூவுக்கு போக முடியுமா? இன்டர்வ்யூவுக்கு வேண்டிய டிரஸ். ஷூஎல்லாம் தயாராக இருக்கிறதா?” என்று கேட்டார். .
”என்னிடம் பேன்ட், ஷூ எதுவும் கிடையாது” என்றேன்.
நான் காலேஜுக்கு நம்ம ஊர் பாணியில் வேஷ்டி அரைக் கைச்சட்டை, காலில் செருப்பு இவற்றைத்தான் போட்டுக்கொண்டு போவது வழக்கம். ஸ்கூல் படிக்கும்போதோ வெறும் .அரை நிஜார், சட்டை,செருப்பு போடாமல் வெறும் காலுடன் தான் செல்வேன். இதைக்கேட்டவுடன் அந்த அங்கிள் ஷாக் ஆகி, என் அப்பாவைப் பார்த்து
“என்னடா , உன் பிள்ளையை சுத்த பட்டிக்காட்டான வளர்த்து இருக்கே. இவன் இப்படியே இன்டர்வ்யூவுக்கு போனா இவனை இன்டர்வ்யூ ஹாலுக்குள்ளேயே விடமாட்டாங்க. ஒரு பேன்ட் கூட இல்லைங்கறான்” என்று அந்த நிமிஷத்திலேயே அவர் நான் இன்டர்வ்யூவுக்கு லாயக்கில்லை என்று தீர்மானித்து விட்டார்.
அதற்குள் என் மாமா “என்னுடைய பேன்ட், ஷூ எல்லாம் இவனுக்கு சரியாக இருக்கும்னு நினைக்கிறேன். நான் வீட்டுக்குப போய் எடுத்துண்டு வரேன்” என்றார்.
அவர் வீடு எங்கள் வீட்டில் இருந்து ஒரு நிமிட நடை தூரத்தில்தான் இருந்தது. அவர் வேகமாக போய் பேண்ட் ஒன்றையும், ஷூவையும் எடுத்துக்கொண்டு வந்தார்.
அந்த பேண்டை எப்படி போட்டுக் கொள்வது என்றுகூட எனக்குத் தெரியவில்லை . அதற்கு அங்கு கூடியிருந்த இரண்டு மூன்று அங்கிள்கள் கடுமையாக என்னை விமரிசத்தனர். என்மாமா சென்னையில் படித்தவராகையால் அவருக்கு இதெல்லாம் தெரியும், அவர்தான் நான் தப்பாக போட்டுக்கொண்டு இருந்த அந்தப் பேண்டை சரியாக எப்படி போட்டுக் கொள்வது என்று சொல்லிக் கொடுத்து சரி செய்தார்
.மற்ற அங்கிள்கள் யாரும் எங்கள் ஊரில் பேன்ட் போட்டுக்கொள்ள மாட்டார்கள். எங்களில் யாராவது அந்த ஊரில் பேண்ட் போட்டுக் கொண்டால் “என்னடா, தொரை, பெரிய மனுஷன் ஆயிட்டியா குழாயை மாட்டிண்டு ?” என்று நக்கல் அடிப்பார்கள். இப்போது நான் சென்னைக்கு இன்டர்வியூவுக்கு போக வேண்டி இருப்பதால் நான் பேன்ட் போட்டுக்கொள்ளத் தெரியாததை கேலி செய்தார்கள். ஒருவிதமாக நான் பேன்டை மாட்டிக்கொண்டேன். பேண்டில் மாட்டிக்கொண்டேன் என்பதுதான் சரி. அடுத்தது ஷூ. “முதலில் சாக்ஸ் போட வேண்டும். பிறகு தான் ஷூ போட வேண்டும்” என்பதைக் கூட தெரியாத என் பட்டிக்காட்டுத்தனத்தை பரிகசித்தார்கள். என் காலேஜில் கூட அப்போது பெரும்பாலானோர் வேட்டி , சட்டை , செருப்புதான். அணிவார்கள். எங்கோ ஓரிருவர் பேண்ட், டக்இன் செய்த சட்டை, பளபளக்கும் .ஷூ போட்டுக கொண்டு இருப்பார்கள். எனவே எனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாமல் போனதில் ஆச்சரியம் இல்லை. சாக்ஸ் மாட்ட ரொம்பவும் திணறினேன். என் மாமா ஹெல்ப் செய்தார். ஷூவையும் மாட்டி விட்டார். உடனே எல்லோரும் ஒரு பெருமூச்சு விட்டார்கள். அப்போதுதான் எனக்கு பிரச்சினை ஆரம்பம் ஆகியது. ஷூ போட்டுக்கொண்டு தையா தக்கா என்று நடனமாடாத குறையாக நடந்தேன். கீழே விழுந்து விடுவோமோ என்ற பயம்.
“என்னடா, இவனுக்கு ஷூ போட்டுண்டு நடக்க தெரியல்லே” என்றனர் சில அஙகிள்கள்.
“எப்படியோ, நாளைக் காலையிலே இந்த பேண்ட், ஷூ போட்டுண்டு தான் நீ இன்டர்வ்யூக்குப் போகணும்.. இன்டர்வ்யூவிலே presentable ஆ இருக்க வேணாமா? உன்னைப் பாத்த உடனே அவங்க இம்ப்ரஸ் ஆக வேண்டாமா? இப்படியே சொங்கி மாதிரி இருந்தா எப்படி?”, என்று ஆளுக்கு ஒரு அட்வைஸாக கொடுத்தார்கள். 2 மணி நேரம் அட்வைஸில் கழிந்தது. அப்புறம் “இவன் முன்னே பின்னே மெட்ராஸ் போய் இருக்கானா?” என்று ஒரு பெரியவர் கேட்டார். நான் “இல்லை” என்றேன். “அப்படின்னா இவனுக்குத் துணை யார்?” என்ற கேள்வி எழவே, என் பக்கத்து வீட்டுக் கசின் எனக்கு எஸ்கார்ட் என்று முடிவு செய்தார்கள். அவன் என்னை விட இரண்டு ஆண்டுகள் பெரியவன். ஒரே ஒரு முறை சென்னை சென்று இருக்கிறான். அவனுக்கும் சென்னை அவ்வளவாக பரிச்சயம் இல்லை என்றாலும் என்னை விட மூத்தவன், விவரம் அறிந்தவன. பேண்ட்,ஷூ எல்லாம் போட்டுக்கொள்ளத் தெரியும் என்ற காரணத்தால் அவனை எனக்கு துணையாக அனுப்ப சம்மதித்தார்கள். பிறகு அவனுக்கும் DOs and DON’Ts எல்லாம் சொல்லிக்கொடுத்து ஏராளமான அட்வைஸ் கொடுத்து “ நீ, இவனை, பேன்ட், ஷர்ட். ஷூ எல்லாம் மாட்டிண்டு இன்டர்வ்யூவுக்குப்போக வெக்கறது உன்னோட பொறுப்பு. விட்டா இவன் பிக்காரி மாதிரி வேட்டி, சட்டையோட இன்டர்வியூவுக்கு போயிடப்போறான். அதைப்பாத்துக்கோ” என்று என்மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையை அவ்வப்போது தங்கள் சந்தேகம் மூலமாக வெளிப்படுத்தினார்கள். அதென்ன பிக்காரி? எனக்குத் தெரியவில்லை. அட்வைசரி கமிட்டி கலைந்தவுடன் நான் வேக வேகமாக என் துணிமணிகளையும், இரவல் பேன்ட், ஷூக்களையும் படுக்கையையும் ஒரு ஹோல்டாலில் வைத்து சுருட்டி தயாரானேன்.
எங்கள் ஊரிலிருந்து மெட்ராஸ் செல்ல அப்போது ரயில்கள் நள்ளிரவில் தான் வரும். இன்றும் அப்படித்தான். நானும் என் கசினும், ஒரு மாட்டு வண்டியை அமர்த்தி அங்கிள்கள் பலரின் ஆசீர்வாதத்துடனும், best wishes வாழ்த்துக்களுடனும் எங்கள் ஊர் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய் சேர்ந்தோம்..கொஞ்ச நேரத்தில் அந்த மெட்ராஸ் செல்லும் எக்ஸ்பிரஸ் புகையைக் கக்கியபடி, ஸ்டேஷனில் வந்து நின்றது. இன்று போல அன்று ரிசர்வேஷன் கிடையாது ( நான் ரயில்வேயில் சீட் ரிசர்வேஷனை சொல்கிறேன்,) . எனவே ஏதோ ஒரு கம்பார்ட்மென்டில் ஏறி உள்ளே சீட் இருக்கிறதா என்று பார்த்தோம். எதுவும் இல்லை. எனவே கிடைத்த இடுக்கில் நாங்கள் இருவரும் எங்களைத் திணித்துக்கொண்டு உட்கார்ந்தோம். வண்டி சிக், சிக் என்று கர்ஜித்தபடி அந்த நேரம் அங்கு இருந்த காரிருளை கிழித்தபடி அந்த கும்மிருட்டில் மெட்ராஸை நோக்கி பறந்தது. ரயில் எப்படிப் பறக்கும்னு கேக்காதீங்க.. எங்களுக்கு அப்போது இருந்த மனோ நிலையில் மெட்ராஸ் போகும் சந்தோஷத்தில் அப்படி தோன்றியது, நாங்களும் அங்கு இருந்த பல பயணிகளைப் போலவே பாஸேஜில் உக்கார்ந்த படியே தூங்க ஆரம்பித்தோம். இன்னும் சில மணி நேரங்களில் என்னுடைய கனவு நகரத்தைப் பார்க்க போகிறோம் என்ற எண்ணத்தில் இன்டர்வ்யூ வைப்பற்றியோ, பேன்ட், ஷூவைப்பற்றியோ எந்த கவலையும் இல்லாமல் வண்டி சென்னையை நெருங்க நெருங்க, என் உள்ளத்தில் ஒரு குதூகலம் கொப்பளித்து ஓடியது. என் அப்பா எங்கள் இருவரையும் சென்னை எக்மோரில் ஸ்டேஷனில் மீட்செய்து அவர வீட்டுக்கு அழைத்துப் போகும்படி எங்களுடைய தூரத்து உறவினர் ஒருவருக்கு தந்தி கொடுத்து இருந்தார்,. எனவே எக்மோர் வந்தவுடன் அவரைக் கண்டுபிடித்து( ஏனென்றால் நாங்கள் இருவருமே அவரை பார்த்ததில்லை. அவரும் எங்களைப் பார்த்ததில்லை) அவர் வீட்டுக்குப்போய் டிரஸ் சேஞ்ச் செய்து கொண்டு அங்கிருந்து கிண்டி இஞ்சினீரிங் காலேஜுக்கு இண்டர்வ்யூ அட்டென்ட செய்ய போகச்சொல்லி இருந்தார்.
கடைசியில் வண்டி சென்னை வந்தடைந்தது ஒரு மணி நேரம் லேட்டாக, ஆறரைக்கு வரவேண்டியது ஏழரைக்கு வந்து சேர்ந்தது. இண்டர்வ்யூவோ 9 மணிக்கு. ஒரு மணி நேரம் வேஸ்ட் ஆயிடுத்தே என்ற கவலையில் எங்களை நாங்கள் இதுவரை பார்த்திராத உறவினர் கூட்டிச்செல்ல வந்து இருக்கிறாரா என்று அங்கு நின்று இருந்த பலரையும் பார்த்தோம். எங்கள் திரு திரு முழியைப் பார்த்து எங்கள் உறவினர் எங்களைக் கண்டு கொள்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அப்படி யாரும் எங்களை கவனித்ததாக தெரியவில்லை. நேரம் ஆகிக்கொண்டே போகிறது. என்ன செய்வதென்று புலப்படவில்லை. கொஞ்ச நேரம் தேடிய பின் என் கசின் “ இனியும் டைமை வேஸ்ட் செய்வதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. அவர் வீட்டு அட்ரஸைக்கண்டுபிடித்து அவர் வீட்டுக்குப்போய் பிறகு அங்கிருந்து கிண டி காலூஜுக்குப் போக நேரம் இல்லை. எனவே நேராக ஒரு ஆட்டோ பிடிப்போம், கிண்டிக்குச் செல்வோம்” என்றான். “சரி” என்றேன். அப்பொழுதுதான் சென்னையில் ஆட்டோக்கள் ஓட ஆரம்பித்து இருந்தன. எக்மோர் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்ததும் இன்று போல் அன்று பலர் எங்களை மொய்க்க ஆரம்பிக்க வில்லை. ஏதோ ஒன்றிரெண்டு பேர் இருந்தனர். நாங்கள் “ஆட்டோ” என்று குரல் கொடுத்ததும் ஒரு ஆட்டோக்காரர் “சார் ஆட்டோவா?” என்றார். “ஆம்” என்று சொன்னவுடன் அருகில் இருந்த ஆட்டோவைக்காட்டி “வாங்க சார், ஏறுங்க சார்” என்றார், என் கசின் “எவ்வளவு?” என்று கேட்க ஆட்டோக்காரர்” எங்கே போகணும்?” என்று கேட்டார். நாங்கள் “கிண்டி இஞ்சினீரிங் காலேஜுக்கு” என்றவுடன் அவர் ஒரு நிமிடம் யோசித்து “அஞ்சு ரூபா ஆகும்சார்” என்றார். அஞ்சு ரூபாய் என்பது உண்மையிலேயே நாங்கள் அஞ்சும் ரூபாய்தான். எங்களுக்கு அது அன்று பெரிய தொகை. என் கசின் உடனே “அஞ்சு ரூபா ரொம்ப ஜாஸ்தி. மூணு ரூபா” என்று பேரம் பேசினான்.. பேரம் பேசுவதில் பத்து நிமிடம் கழிந்தது. “ சரி. உக்காரு” என்றார் ஆட்டோ ஓட்டுனர். ஆட்டோ விர்ரென்று கிளம்பியது. எனக்கு ஆட்டோவில் இதுதான் முதல் சவாரி. ஆட்டோ நெளிந்து வளைந்து போகும் சென்னையின் சாலைகளில் ஓடிக்கொண்டே இருந்தது. ஆ! சென்னை எவ்வளவு பெரிய ஊர்? எவ்வளவு பெரிய வீதிகள்? என்று வியந்தபடி போய்க்கொண்டு இருக்கையில், நேரமும் ஆட்டோவை விட வேகமாய் ஓடிக்கொண்டு இருப்பதை கவனித்தேன். நேரம் ஆகிக்கொண்டு இருக்கிறது என்று தோன்றவே ஆட்டோவை வேகமாகப் போகச் சொன்னோம். இன்னும் அரைமணி நேரம்தான் இருக்கிறது. அதற்குள. போய்சேரவேண்டும் என்று நாங்கள் பேசிக்கொண்டோம். நாங்கள் ஒரு பதட்டத்தில் இருப்பதை ஆட்டோக்காரர் கண்டு கொண்டு இருக்க வேண்டும்.
ஒரு பெரிய ஆலமரம். அதை ஒட்டினாற்போல் நான்கு பாதைகள் பிரிந்தன. என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ஆட்டோ, டொர், டொர் என்ற ஓலத்துடன் நின்றது. உடனே ஆட்டோ ஓட்டுனர் “ சார், வண்டி ஏதோ ஆயிடுச்சு. போகமாட்டேங்குது. இறங்கிக்குங்க” என்றார். வேறு வழி தெரியாது இறங்கினோம் “என்னப்பா, இன்னும் காலேஜ் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது. இங்கேயே இறக்கிவிட்டுட்டாயே”. என்றோம்.
“ மூணு ரூபாயை எடுங்கள்” என்றார் ஆட்டோஓட்டுனர். “காலேஜ் வரையிலும்போகத்தான் அந்த சார்ஜ். இன்னும் காலேஜ் இங்கிருந்து ரொம்ப தொலைவில் இருக்கு. 2 ரூபாய்தான் தருவோம்” என்றோம். “முடியாது. காலேஜுக்கு வெகு அருகில் வந்தாச்சு. 3 ரூபாய்வைத்து விட்டுப் பேசுங்கள்” என்றார். எங்களுக்கோ நேரம் ஆகிறது. ஹோல்டால் இன்னும் பெட்டி ஒரு பெரிய பை வேறு. இங்கிருந்து காலேஜுக்கு இவைகளை சுமந்து கொண்டு நடந்து போக முடியாது. என்ன செய்வதென்றே புரியவில்லை. வேறு வழியின்றி அவரிடம் 3 ரூபாயை அழுதுவிட்டு, , அங்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவை அணுகினோம். எங்கள் அவசரத்தை அவரிடம் கூறி “சீக்கிரம் காலேஜுக்கு போய் சேரவேண்டும்” எனறோம். அவர் 3 ரூபாய் கேட்டார். “இதோ அடியில் இருக்கிற காலேஜுக்கு போக 3 ரூபாயா? தர முடியாது. 1 ரூபாய் தருகிறோம்” என்று சொல்ல, அவர் “சார் இஞ்சினீரிங்காலேஜ் இங்கிருந்து எம்மாந்தொலைவுலே இருக்கு தெரியுமா?. நீயே கொஞ்ச நேரத்துக்கு முன்னே அந்த ஆட்டோக்காரன் கிட்டே காலேஜ் இன்னும் எம்மாந் தொலைவுலே இருக்குன்னு சொல்லிக்கினு இருந்தியே. நானே கேட்டேனே” என்று சொல்ல, வேறு வழி இல்லாமல் மூன்று ரூபாய்க்கு சம்மதித்து அதில் எங்கள் மூட்டை முடிச்சுகளை மாற்றி புறப்பட்டோம். ( ஆட்டோக்காரர்கள் அன்றில் இருந்து இன்று வரையில் சென்னையில் மாறவில்லை.ஆனால் ஆரம்ப நாட்களில் ஆட்டோக்களில் மீட்டர்கள் கிடையாது என்றாலும் ஓரளவுக்கு நியாயமாகவே சார்ஜ் கேட்டார்கள் என்றே தோன்றுகிறது. ஆக 5 ரூபாய் அதிகம் என்று சொன்னவர்கள் 6 ரூபாயில் எங்கள் பயணத்தை முடித்தோம்- Indian Economics.) அப்பொழுது எங்களை வண்டியில் கோளாறு என்று சொல்லி இறக்கிவிட்ட ஆட்டோ எதிர்திசையில் சிட்டாய்ப் பறக்க ஆரம்பித்தது. இதுதான் மெட்ராஸோ என்ற எண்ணம் என் மனத்தில் விழுந்தது.

சரியாக ஒன்பது அடிக்கும்போது சின்ட்ரல்லா டேஷ் மாதிரி காலேஜின் டோம் பகுதியை அடைந்து அங்கே இறங்கினோம். ஆட்டோவுக்கும் 3 ரூபாய் தண்டம் அழுதோம். எங்கள் பெட்டி படுக்கைகளை அங்குள்ள மாடிப்படியின் அடியில் வைத்து விட்டு அரைத்தூக்க கண்ணுடனும், ட்ரஸ் சேஞ்ச் செய்ய வசதி இல்லாததால் நான் பயணத்தில் போட்டுக் கொண்டிருந்த கசங்கிய வேட்டியுடனும், சட்டையுடனும், காலில் என் வழக்கமான செருப்பை போட்டுக் கொண்டு, அங்கு இன்டர்வ்யூவுக்கு வந்திருந்த மாணவர்கள் அமர்ந்திருந்த பெஞ்சில் அமர்ந்தேன். என் கசின் “நீ இங்கேயே இரு. இன்டர்வ்யூவுக்கு உன்பெயரை கூப்பிட்டவுடன் நீ உள்ளே போய் இன்டர்வியூவை முடித்து விட்டு வா. அதற்குக் கொஞ்சம் நேரம் ஆகும். அதற்குள் நான் அந்த ஹாலின் வேறு பக்கம் போய் வருகிறேன்” என்று என்னை என் சீட்டில் அமர்த்திவிட்டு சென்றான். என் நிலைமையைக் கண்டு நானே கொஞ்சம் பரிதாபப்பட்டது என்னவோ உண்மைதான். ஆனால் நான் இன்டர்வ்யூவைப் பற்றிக் கவலைப்படவில்லை. இஞ்சினீரிங் கிடைக்க வேண்டாம் என்ற எண்ணத்திற்கு இவை எல்லாம் துணை போயின.
நான் உட்கார்ந்திருந்த வரிசையில் எனக்குப் பழக்கம் ஆகாத செயிண்ட் ஜோசப்பில் படித்த ஒரு ஶ்ரீரங்கத்து மாணவன் தலையில் கத்தைக் குடுமியுடன் இருப்பதைப் பார்த்த பிறகு என் நிலையைப் பற்றிய கவலையை மறந்தேன். எப்போது இன்டர்வியூவுக்கு கூப்பிடுவார்கள். இன்டர்வ்யூ முடியும், முடிந்த பிறகு மெட்ராஸை சுத்திப் பார்க்கலாம் என்ற ஆதங்கத்தில் இன்டர்வியூவை ஒரு பொருட்டாக மதிக்காமல் எந்த விதமான டென்ஷனும் இல்லாமல் உட்கார்ந்திருந்தேன். என்னைத் தவிர மற்ற எல்லோரும் நல்ல விதமாக பளிச்சென்று உடை அணிந்து வந்து இருந்தார்கள், அந்த ஶ்ரீரங்கத்துப்பையன் உட்பட.

6
காத்திருந்த எனக்கு என் டர்ன் 9:30 க்கு வந்தது. என் பெயரைக் கூவி ஒரு டவாலி வெளியில் வந்து அழைத்தார். அவர்கூட என்னைவிட நன்றாக டிரஸ் செய்து கொண்டு இருந்தார். என் பெயர் கூப்பிடப்பட்ட உடனே நான் பவ்யமாக உள்ளே நுழைந்தேன். அங்கே நான்கைந்து பேர் உட்கார்ந்து இருந்தனர். இன்டர்வ்யூ கமிட்டி மெம்பர்களாக இருக்க வேண்டும் (அதில் ஒருவர் வெங்கட கிருஷ்ண ஐயர் என்ற அன்று புகழ் ஒரு இஞ்சினீயர் இருந்தார் என்பதை பின்னால் தெரிந்து கொண்டேன். அவர் பெயரில் மந்தவெளியில் ஒரு ரோடு இருப்பது மந்தவெளி மாந்தர்களுக்குத்தெரியும்)
அவர்களின் எதிரில் ஒரு ஒற்றை நாற்காலி போடப்பட்டு இருந்தது. ஆங்கிலத்தில் என்னை அதில் அமர சொன்னார்கள். நானும் கை கூப்பி வணங்கி தேங்க்ஸ் என்று கூறி அமர்ந்தேன். பிறகு ஆங்கிலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை தமிழில் கொடுத்து இருக்கிறேன்.

உன் பெயர் என்ன?

குருசுவாமி ( அப்ளிகேஷன்லே இருக்கே, பார்க்கலையா? என்று கேட்கலாம் என்று இருந்தேன். மனதை அடக்கிக்கொண்டேன்)

நீ இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறாய்?
(போண்டா சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன் என்று தங்கவேலு ‘கல்யாணப பரிசி’ல, சொன்னதைப போல் சொல்லலாமா என்று இருந்தேன். ஆனால் அப்போது கல்யாணப பரிசு படம் ரிலீசாகாத காலம்)

B.A.(Hons) Maths படித்துக் கொண்டு இருக்கிறேன்

எங்கே?

செயின்ட் ஜோசப் காலேஜ், திருச்சியில்.

இஞ்சினீரிங் கிடைக்காவிட்டால் நீ என்ன செய்வாய்?.

என்னுடைய Maths Honours கோர்ஸை கன்டின்யூ பண்ணுவேன் ( சந்தோஷமாக என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டேன்)

உன் தகப்பனார் பெயர்?

ராமச்சந்திரன்

அவர் என்ன செய்து கொண்டு இருக்கிறார்?

அவர் ஒரு சிறு லாண்ட் லார்ட்

அப்படியானால் நீ ஏன் அக்ரிகல்சருக்கு (விவசாய காலேஜுக்கு) அப்ளை பண்ணக்கூடாது?
.
அதற்கு அவசியம் இல்லை. அக்ரிகல்சர் படிக்காமலே விவசாயம் பற்றி எனக்கு தெரியும்
( நல்ல வேளையாக விவசாயத்தில் கேள்வி கேட்காமல் விட்டார்கள். கேட்டு இருந்தால் என் கதி அதோகதிதான்.)

நீ திருச்சியில் எங்கே தங்கியிருக்கிறாய்?

கிளைவ்ஸ் ஹாஸ்டலில்

க்ளைவ்ஸ்
ஹாஸ்டலைப்பற்றி உனக்கு என ன தெரியும்?

அது தெப்பக,குளத்திற்கு நேர் எதிராக இருக்கிறது.

இதைக கேட்கவில்லை. சரித்திரபூர்வமாக என்ன தெரியும்?

அது லார்ட் கிளைவின் குதிரை லாயமாக இருந்தது.

சரி. நீ காவிரி, கொள்ளிடம் பாலங்களை பார்த்து இருக்கிறாயா?

பார்த்து இருக்கிறேன்.

இரண்டுக்கும் என்ன வித்தியாசம்.?

காவிரி பாலம் காவிரி நதிக்கு குறுக்காக கட்டப்பட்டு இருக்கிறது. கொள்ளிடம் பாலம் கொள்ளிடம் நதிக்கு குறுக்காக கட்டப்பட்டு இருக்கிறது.

( ஒரு சிலர் நமுட்டுச் சிரிப்பு சிரித்தார்கள்). அவர்களில் ஒருவர்
டெக்னிகலா என்ன வித்தியாசம்?

அதைத் தெரிந்து கொள்ளத்தான் நான் இஞ்சினீரிங் அப்ளை செய்து இருக்கிறேன்.

( இன்று நினைத்தால்கூட எப்படி இவ்வளவு அடாவடியாக என்னால்பதில் சொல்ல முடிந்தது என்ற ஆச்சரியம் என்னைவிட்டு அகலவில்லை. இஞ்சினீரிங் கிடைக்கவேண்டும் என்று கவலைப்பட்டால்தானே பயம்) .

இதற்குப் பிறகு சில பிசிக்ஸ், கணக்கு சம்பந்தப்பட்ட எளிய கேள்விகளை கேட்டனர். நானும் கூடிய வரையில் சரியாக பதில் அளித்தேன் என்று நம்புகிறேன்.

நல்ல வேளையாக யாரும் என்னுடைய டிரஸ்ஸைப் பற்றியோ, செருப்பைப்பற்றியோ, ஏன் பேன்ட போட்டுக்கொண்டு வரவில்லை என்பதைப்பற்றியோ நான் இன்டர்மீடியட்டில் எடுத்து இருந்த மார்க் பற்றியோ எதுவும் கேட்கவில்லை.

சரி, நீ போகலாம் என்றார்கள்

விடுதலை செய்யப்பட்ட கைதி போல வெளியே வந்தேன். என் கசின் நான் போட்டிருக்க வேண்டிய பேன்ட் சட்டை, ஷூ எல்லாம் அணிந்து கொண்டு என்னிடம் வந்து
“இன்டர்வ்யூ ஓவரா எப்படி? என்று கேட்டான்.
நானும் நடந்ததை சொன்னேன்.
அவன் நான் இன்டர்வ்யூவுக்கு போன உடன், மாடிக்கு அடியில் போய் நான் போட வேண்டிய பேன்ட், சட்டை. ஷூக்களை போட்டுக்கொண்டு, ஒரு ஹாலில் நுழைந்ததாகவும், அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் அவனை புதிதாக சேர்ந்த அசிஸ்டன்ட் லெக்சரர் எனவும் நினைத்து எழுந்து நின்று மரியாதை செலுத்தவே, தவறுதலாக ஒரு வகுப்பில் நுழைந்து விட்டோம் என்பதை உணர்ந்து வேக வேகமாக அங்கிருந்து வேறு ஒரு வழியாக வெளியே வந்து நான் முதலில் உட்கார்ந்து இருந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து வந்ததாகவும் அதற்குள் இன்ட்டர்வ்யூ முடிவதற்கும் சரியாக இருந்ததென்றும் கூறினான்.

‘சரி கிளம்புவோம் வா’ என்றான்.

எனக்கு இன்டர்வ்யூ முடிந்த சந்தோஷம். ரிசல்ட் பற்றி கவலை இல்லை. இஞ்சினீரிங் சீட் கிடைக்கப்போவதில்லை, இனி நிம்மதியாக மெட்ராஸை சுற்றி பார்க்கலாம் என்ற சந்தோஷத்தில் அவனுடன் காலேஜ் நுழைவு வாயிலுக்கு எதிராக பஸ் ஸ்டாப்பில் நின்றபடி அப்பொழுதுதான் வந்நு கொண்டு இருந்த 5B பஸ்ஸை கை நீட்டி நிறுத்தி, வண்டி நின்ற உடன் எங்கள் மூட்டை முடிச்சுகளுடன் ஏறினோம். வண்டியில் ஒரு சிலரே இருந்தனர். கண்டக்டரிடம் நாலணா கொடுத்து இரண்டு டிக்கட்டுகள் என்றோம். உடனே கண்டக்டரும் நாங்கள் எங்கே போகவேண்டும் என்று கேட்காமல் இரண்டு டிக்கட்டுகள் கொடுத்தார். அத்தோடு ஓரணா பாக்கியையும் கொடுத்தார். ஆச்சரியத்துடன் அதை வாங்கிக் கொண்டான் என் கசின். ஒரு ஐந்தாறு நிமிடங்கள் ஆகி இருக்கும்.

பஸ் கண்டக்டர் “” சைதாப்பேட்டை, சைதாப்பேட்டை” என்று குரல் கொடுத்தபடி “எல்லாரும் இறங்குங்க, இறங்குங்க” என்றார். அப்போது என் கசின். “ அடடா, நாம் எதிர் திசையில் மைலாப்பூர் போகும் பஸ்ஸில் ஏறுவதற்குப் பதிலாக, சைதாப்பேட்டை போற பஸ்ஸில் ஏறிவிட்டோம் என்றான்.
7
அதே பஸ் மைலாப்பூருக்கு இன்னும் பத்து நிமிடங்களில் திரும்ப போகப் போகிறது என்பதை தெரிந்து கொண்டோம். அதனால் அந்த பஸ்ஸிலேயே மறுபடியும் ஏறி மைலாப்பூர் செல்லலாம் என்றேன். ஆனால் என் கசினோ வேண்டாம். அப்படி செய்தால் அந்த கண்டக்டர் நம்மை ஒரு மாதிரியாக ஊருக்கு ‘புச்சு ( மதராஸ் பாஷையில் புதுசு புச்சாகிறது) போல இருக்கு’ என்று பார்ப்பார். நமக்கு அவமானமாக ஆகிவிடும் எனவே இந்தப்பஸ்ஸை மிஸ் பண்ணி விட்டு அடுத்த பஸ்ஸில் போவோம் என்றான். அவனுடைய தன்மானத்தை உத்தேசித்து அரைத்தூக்கத்திலும், முழுப்பசியிலும் இருந்த நானும் சம்மதித்தேன் அதை விட்டால் அடுத்த பஸ் வந்து கிளம்ப இன்னும் முக்கால். மணி நேரம் ஆகும். பரவாயில்லை என்று இருவரும் காத்திருந்தோம். நேரத்தை விட தன்மானம் முக்கியம் இல்லையா?

பல பஸ்கள் வந்தும் போய்க்கொண்டும் இருந்தன. கடைசியாக ஒரு முக்கால்மணி நேரம் கழித்து ஒரு 5B பஸ் ஒன்று வந்து நின்றது. முதல் வேலையாக அந்த பஸ்ஸின் டிரைவரும் கண்டக்டரும் பழைய ஆட்கள் இல்லையே என்று செக் செய்து கொண்டு பஸ்ஸில் ஏறினோம்.அதே கண்டக்டராக இருந்தால் எங்களை அடையாளம் கண்டு கொண்டு என்னா நீ ஊருக்குப்புச்சா என்று கேட்டுவிட்டால் என்ன செய்வது என்தற்காகத்தான் இந்த டபிள் செக். நல்ல வேளையாக இதில் வேறே கண்டக்டர் டிரைவர் . எனவே வேக வேகமாக இறங்க வேண்டியவர்கள் எல்லோரும் இறங்கிய பிறகு நாங்கள் ஏற முயன்ற போது “ஏறாதீங்க. ஏறாதீங்க. வண்டியைத்திருப்பி எதிர்பக்கத்துலே நிறுத்திய பிற்பாடு ஏறலாம் என்று வந்த குரலுக்கு மரியாதை அளித்து எங்கள் ஆஸ்திகளை (எங்க பெட்டி படுக்கைகளை) கையில் எடுத்துக்கொண்டு இந்தப்பக்கமும் அந்தப்பக்மும் பார்த்தபடி ரோட்டைக்கிராஸ் செய்து 5B திரும்பி நின்ற இடத்துக்கு விரைந்து போய் பஸ்ஸில் ஏறி எங்கள் சிம்மாசனத்தைப் பிடித்து உட்கார்ந்து கொண்டோம். கண்டக்டரும் பஸ்ஸில் ஏறி அங்கிருந்த படியே வெளியே பார்த்து மைலாப்பூர் டாங்க்கெல்லாம் ஏறுங்க என்று குரல் கொடுத்தவுடன் “சரி நாம் சரியான பஸ்ஸில்தான் ஏறி இருக்கிறோம்” என்று நிம்மதி அடைந்தோம். கொஞ்ச நேரத்தில் பஸ் புறப்பட்டது . அது மறுபடியும் இஞ்சினீரிங்காலேஜைத்தாண்டியபடி சென்றது . அப்போது எனக்கு அந்த கிண்டி இஞ்சினீரிங் காலேஜ் சென்னையிலிருந்து வெகுதூரத்தில் எங்கோ கண்காணாத (God forsaken land என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அந்த மாதிரி) இடத்தில் இருப்பதாகத்தோன்றியது. பலரும் அந்தக் காலேஜுக்கு வரவேண்டுமென்றால் கிண்டி ஸ்டேஷனில் வந்து இறங்கி பேய் முழி முழிப்பார்கள். உண்மையில் கிண்டி காலேஜுக்கு சைதாப்பேட்டை ஸ்டேஷன்தான் பக்கம் என்பதை பலரும் இன்றும் கூட அறியாமல் திணறுவதை நான் பார்த்து இருக்கிறேன். அரைமணி நேரத்தில் பஸ் அது வரையில் இருபுறமும்பச்சைப்பசேலென்று இருந்த வயற்காட்டைத்தாண்டி ஒரு நகருக்குள் நுழையும் தோற்றம் ஏற்பட்டது. எங்களை இறக்கிவிட்டு வம்பில் மாட்டிவைத்த அந்த அடர்ந்த ஆலமரமும் அங்கிருந்த மனித நடமாட்டம் அதிகம் இல்லாத ஒரு சிறு அழுது வடிந்து கொண்டு இருந்த பஸ்டிப்போவையும் கடந்து பஸ் போய்க்கொண்டு இருந்தது. சைதாப்பேட்டையில் நாங்கள் கடந்த அதே ஆற்றை மறுபடியும். கடந்து மைலாப்பூரை நோக்கி பஸ் சென்றது. சற்று நேரத்துக்கு எல்லாம் “குளம் இறங்குங்க, குளம இறங்குங்க குளம எல்லாம் இற்ங்குங்க” என்று டாங கைத் தமிழ்ப்படுத்தி கண்டக்டர் குரல் கொடுக்கவே நாங்கள் குளத்தில் அனைவரும் நனையாமல் இறங்கினோம். எதிரே தோன்றிய அந்த கபாலீசுவரர் கோவிலின் கம்பீரமும், அதற்கு முன் இருந்த அந்த குளத்தில் அதன் பிரதிபலிப்பும் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. அன்று அந்த மாடவீதிகள் மிகவும் அகலமாக ஒரு ராஜபாட்டை போல் தோன்றியது. இத்தனைக்கும் அவை அன்று வெறும் கப்பி ரோடுகள்தான். தார் ரோடுகள் இல்லை. என்னுடைய மானசீக சொர்க்கபூமியில் என்காலை பதித்தேன்.
8
உடனே நானும் என் கசினும் முதல்வேலையாக பசியால் வாடும் எங்கள் வயிற்றிற்கு தீனி போடும் வேலையாக அந்த ராமகிருஷ்ணா மடம் ரோடில் சாப்பாடு ஓட்டல் ஏதாவது இருக்குமா என்று பார்த்தபடி லஸ் நோக்கி நடந்தோம் அப்போது கேனாலை ( பக்கிங்காம்) தாண்டிய உடன் வலது பக்கத்தில் ஒரு குப்தாஸ் ஓட்டல் இருப்பதைப் பார்த்தோம். (அங்கே இப்போது அந்த ஓட்டல் இல்லை. எனக்குத்தெரிந்து பல மாறுதல்களுக்குப்பிறகு இப்போது P.ORR அண்ட் சன்ஸும் மற்ற பல கடைகளுமாக அங்கு ஒரு புது கடை காம்ப்ளேக்ஸே வந்துவிட்டது) உடனே எங்கள் வயிற்றிற்கான பசியைப்போக்கும் வேலையில் ஈடுபட்டோம், சாப்பிட்டு முடித்த பின் உடனடியாக அங்கிருந்து ஒரு பதினைந்து நிமிட தூரத்தில் இருக்கும் ஸ்டேஷனுக்கு வராமல் ஏமாற்றிய எங்கள் உறவினரின் வீட்டிற்கு நடையைக் கட்டினோம். எப்படி எங்களுக்கு வழி தெரியும் என்று கேட்கிறீர்களா? எல்லாம் அவ்வப்போது அங்கு வருவோர் போவோர் மூலம் விலாசத்தைக்காட்டி விசாரித்துத்தெரிந்து கொண்டு நடையைக்கட்டினோம். அவர்கள் எல்லோருமே நாங்கள் சுமக்கும் மூட்டைகளைப்பார்த்து நாங்கள் மெட்ராசுக்குப் புச்சு என்று புரிந்துகொண்டு எங்களுக்கு பரிவுடன் வழி காட்டினார்கள். அன்று பட்டணத்தில் வழிகாட்டும் நல்லவர்களும் இருந்து இருக்கிறார்கள். (மெட்ராஸுக்கு எங்கள் ஊர் அளித்த செல்லப்பெயர் பட்டணம் . சென்னையிலிருந்து ஊருக்கு வருபவர்களை அவன் பட்டணத்தில் இருந்து வந்து இருக்கிறான் என்றுதான் சொல்வார்கள். இன்றும் பலரும் அவ்வாறு சொல்லக் கேட்டு இருக்கிறேன்)
பாதி தூரம் நடந்த பிறகுதான் நான் என் செருப்பை குப்தாஸ் ஓட்டல் நுழைவாயிலிலேயே விட்டு விட்டேன் என்பதைக் கண்டு பிடித்தேன் .சாப்பிடும் போது செருப்பையும் ஷூவையும் கழற்றி விட்டதால் வந்த வினை. (முன்னே பின்னே செத்தாத்தானே சுடுகாடு தெரியும். எப்பொழுதாவது செருப்பு அணிபவர்களின் பிரச்சினையே இதுதான்). சாப்பிடும் போது செருப்பையும் ஷூவையும் கழற்றி விட்டதால் வந்த வினை. டேபிள் மீல்ஸ் சாப்பிடுபவர்களாக இருந்தால் அவர்களுக்கு இந்தப் பிரச்சினை இருக்காது. அந்த ஓட்டலில் டேபிள் இருந்தால்கூட பழக்க தோஷம் யாரை விட்டது? பிறகு என்ன? மறுபடியும் ஓட்டமும் நடையுமாக அங்கே செல்ல அந்த செருப்புகளும் ஷூவும் எங்களைப்பார்த்து சிரித்தன.. இன்றாக இருந்தால் அவைகள் அபேஸ் ஆகி இருக்கும .

மணி 11 ஆகி விட்டது நாங்கள் உறவினர் வீட்டை அடைந்து கதவைத்தட்டினோம். எங்கள் ஊரில் எல்லா வீட்டுக்கதவுகளும் பகல் வேளையில் திறந்தபடி தான் இருக்கும் ஆனால் மெட்ராசில் வாயிற்கதவுகள் எப்போதும் பகல் வேளையில் மூடப்பட்டு இருப்பது எனக்கு அதிசயமாக இருந்தது. நாங்கள் கதவைத்தட்டியவுடன் அந்த வீட்டு வயதான பெண்ணொருவர் கதவைத்திறந்து “ யார்நீங்கள்?” என்று கேட்டார். நாங்களும் எங்கள் கதையை அடியைப்பிடிடா பாரத பட்டா என்ற கதையாக அந்த வீட்டுக்காரருக்காக எக்மோர் ஸ்டேஷனில் காத்திருந்தது பற்றியும், வண்டி லேட்டாக வந்ததனால் வேறு வழியின்றி அப்படியே காலேஜுக்குப்போய்இண்டர்வ்யூவை முடித்துக்கொண்டு வந்த கதையையும் சொல்லி முடித்தோம்..
“ஓ அப்படியா நீங்கள்தானா அது ? நீங்கள் வருவதாக உங்கள் ஊரிலிருந்து நேற்று நீங்கள் அனுப்பியிருந்த தந்தி கொஞ்ச நேரத்துக்குமுன்புதான் வந்து சேர்ந்தது. அதனாலே இவர்( அதாவது அந்த அம்மாளின் வீட்டுக்காரர்) போஸ்ட்ஆபீசுக்கு சண்டை போட போயிருக்கிறார்” என்றார்.
கொஞ்ச நேரத்தில் அந்த வீட்டுக்காரரும் வந்து எங்களைப்பார்த்த உடன் நாங்கள் யாரென்று ஊகித்து
“ சாரி . எக்ஸயூஸ் மி, இந்த மாதிரி நீங்கள் 6:30 AM க்கு வருவதாக நேற்று அடித்த தந்தி இன்று சற்று முன்புதான் வந்து. அதனால் நான்ஸ்டேஷனுக்கு அவ்வளவு லேட்டாகப்போவதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று போஸ்ட் ஆபீசில் இப்படி முக்கியமான தந்தியை டெலிவரி செய்வதில் டிலே செய்வதால் தந்தி அடிப்பதன் நோக்கமே வீணாகிறது .
“எதனால் தாமதம்?” என்று கேட்கப,போனேன். அவர்கள் ஒருவிதமாக “சமயத்தில் இப்படி ஒன்னு இரண்டு தந்துஇகள் தாமதமாகி ஆகிவிடுவது வழக்கம்தான். மத்தபடி எங்க மேலே தப்பு இல்லை” என்று சொல்ல
“இப்படிச்சொல்பவர்களை என்ன செய்யமுடியும்? என்று என் தலையில் அடித்துக்கொண்டு வந்தேன்” என்றார்.
பிறகு “சாப்பிட வாருங்கள்” என்றார்.
“இல்லை நாங்கள் சாப்பிட்டு விட்டோம்” என்று எங்கள் நிலைமையை விளக்க அவரும் “ரொம்ப சாரி” என்று பல தடவை எங்களிடம் “சாரி” சொல்ல வயதில் எங்களைவிட நிரம்ப மூத்தவர் அவ்வாறு சாரி சொல்ல நேர்ந்ததுக்கு நாங்கள் ஒரு எதிர்சாரி சொல்ல கொஞ்ச நேரம் ஊர் சொந்தங்களைப்பற்றி குசலம் விசாரிப்பதில் பொழுது போயிற்று. அவர் முகத்தை மறக்காமல் இருக்க ஒரு முறைக்குப்பதிலாக இருமுறை நன்றாகப் பார்த்துக் கொண்டோம்
9
வந்த வேலை முடிந்துவிட்டது. இனி நான்.ஃப்ரீயோ, .ஃபரீ. என்கனவு சொர்க்கத்தை சுற்றிப்பார்க்க முழுவதாக மூன்று நாட்கள் உள்ளன. என்னை ஏன் என்று கேட்பார் என்கசினைத்தவிர வேறு யாரும் இல்லை. முதல்வேலையாக நாங்கள் இருவரும் எங்களுக்கு, பழக்கமானவரும் தெரிந்த நெருங்கிய உறவினருமான ஒருவரை நாங்கள் தங்கிய வீட்டிற்கு எதிரே இருந்த YMIA க்கு சந்திக்கப்போனோம். அவருடன் நாங்கள் வந்த வேலை முடிந்ததையும் ஊர்சுற்றும் பிளானையும் சொன்னோம். அவர் அப்போது லாகாலேஜில் படித்துக்கொண்டு இருந்தார். எங்கள் பிளானுக்கு எந்த அமெண்ட்மெண்டும் சொன்னாமல் அப்படியே ஆகட்டும் என்று தன் முழு ஆசிகளையைம் கொடுத்தார். நாங்கள் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள், வழி இவை பற்றி எல்லாம் விளக்கினார். சுருக்கமாக சொல்லப்போனால் அவர் எங்கள் மெட்ராஸ் கைடாகவே மாறி எங்களை எல்லா இடங்களையும் சுற்றிப்பார்க்க அழைத்துச் செல்ல ஆயத்தமானார்.,

முதல் வேலையாக மெரினா பீச் போவதென்று முடிவு கட்டினோம். அந்த நாட்களில் என்னுடைய மெகா கனவுகளில் ஒன்று அது. அங்கிருந்து இன்று டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை என்று அழைக்கப்படும் அன்றைய எட்வர்ட் எலியட்ஸ் ரோடில் ராஜ நடை போட்டு அங்கிருந்து ஒரு நகர பஸ் ஏறி திருவல்லிக்கேணி பைக்ராஃப்ட்ரோடு கடைசி ஸ்டாப்பில் இறங்கி பீச்நோக்கி நடந்தோம். அதற்கு ஈடான ஆனந்தத்தை விவரிக்க வார்த்தைகளே என் அகராதியில் இல்லை. பீச் பீச்சாக மட்டும் இருந்தது. கண்ணகிசிலையோ, காந்தி சிலையோ, வேறு பல சிலைகளோ கிடையாது . மெரினா சமாதியாக மாறாத காலம் அது. கூட்டம் அதிகம் இல்லை. நெருக்கடி இல்லை. இன்று போல் அன்று கடைகளின் அணிவகுப்பு இல்லை. பைக்ராஃப்ட ரோடிலிருந்து நுழைந்து உள்ளே சென்ற உடன் 150 அடி தூரத்தில் ஒரு வட்டமான சிமெண்ட் பிளாட்பாரம், அதன் மத்தியில் ஒரு போஸ்ட். அதன் மேல் ஒரு ரேடியோ. அது மழையில் நனையாமல் இருக்க ஒரு நிழல் குடைபோன்ற அமைப்பு. அந்த ரேடியோ மாலை நேரங்களில் ஒலித்துக்கொண்டு இருக்கும் செய்திகளைக்கேட்க பலரும் அந்த பிளாட்பாரத்தைச் சுற்றி போடப்பட்டு இருந்த சிமெண்ட் பெஞ்சுகளில் அமர்ந்தபடி பேசிய நேரம்போக மீதி நேரங்களில் நியூஸ் கேட்டுக்கொண்டு இருப்பார்கள். அங்கு நியூஸ் கேட்பதற்கென்றே ஒரு தனிக்கூட்டம் வருமாம். அந்தக் காலத்திய பல பெரிய மனிதர்களும் வருவார்களாம்.

அங்கிருந்து அந்த சல சல மணலில் 300 அடி நடந்தால் வங்காள விரிகுடாக்கடல்.Bay of Bengal என்று பூகோள புத்தகத்தில் பார்த்து இருக்கிறேன். இந்தியா மேப்பில் சென்னை யை மார்க் பண்ணச்சொல்லுவார் எங்கள் ஜாக்ரபி மாஸ்டர். இப்போது நாங்கள் அந்த மார்க் மேலேயே நின்று கொண டு இருப்பதை ஒரு பெரும் பாக்கியமாகவே கருதினேன். கண்ணுக்கு எட்டா தூரத்திற்கு நீலம். நான் என்பூகோளப் புத்தகத்தில் படித்ததை இன்று நேரில் கண்டவுடன் பூகோள பாடத்தில் சொல்வதெல்லாம் உண்மைதான் என்று நம்ப ஆரம்பித்தேன்.( உண்மையைச்சொல்லப்போனால் அன்றைய கால கட்டத்தில் பூகோளம் எனக கு பிடிக்காத சப்ஜெக்ட். ஆனால் இன்று புத்தகத்திலுள்ளதை நேரில்காணும்போது அட்டா என்ன பரவசம்.
அந்த காட்சி அந்த நீல நிறத்திரைக்கடல்,, கரையைக்கடக்க அது பொங்கி எழுந்து அங்கு ஓரமாக உட்கார்ந்து இருக்கும் மக்களை விரட்டுவதுபோல் வந்து ஒவ்வொரு முறையும் பின் வாங்கும் அழகை வர்ணிக்க கவிஞர்களாலேயே முடியாது என்றால் நான் எம்மாத்திரம். அந்தக்கடல் என் உள்ளத்தைக்கொள்ளை கொண்டது. பூலோக சொர்க்கம் என்பது இதுதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அன்று அங்கு பொல்யூஷன் இல்லை. மணல் எங்கும் காகிதப்பொட்டலங்கள் இல்லை. சர்க்கரையை பரப்பி விட்டது போல அப்படி ஒரு வெண்மை, ஒரு பளபளப்பு. எங்கள் ஊரில் வீடு கட்டுபவர்கள் ரோடின் ஓரமாக மணலைக் கொட்டி வைத்து இருப்பார்கள். குழந்தைகளுக்கு எல்லாம் கொண்டாட்டம். நீங்கள் அன்று கிய்யா கிய்யா தாம்பாளம், கிச்சு கிச்சு தாம்பாளம் விளையாடி இருந்தால் உங்களுக்கு அல்ஸமீர் வியாதி வந்தாலொழிய மறந்திருக்கமாட்டீர்கள். மணலில் விளையாடுவதன் சுகத்தை நீங்கள் குழந்தையாய் இருந்த போது அனுபவித்து இருப்பீர்கள். அப்படி இல்லை என்றால் நீங்கள்குழந்தையாய் இருந்தபோது கிடைத்திருக்க வேண்டிய ஒரு பெரும்சுகத்தைஇழந்துவிட்டீர்கள் அல்லது அனுபவிக்கத் தவறி விட்டீர்கள் என்று அர்த்தம். அந்தக்கடலையும்மணலையும் பார்த்த உடன் நான் என்னையே மறந்தேன். ஆகாயத்தில் பறந்தேன். குழந்தையாக மட்டும் நான் இருந்து இருந்தால் நிச்சயமாக கிச்சுக் கிச்சு தாம பாளம் விளையாடி இருப்பேன். உள்ளமும் உடலும் பரவசமாகியது. அப்போது…..
10
அப்போது ஒலித்தது ஒரு குரல். செந்தமிழ்நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்பதற்கேற்ப அங்கே எழுந்த குரல் என் காதில் தேனாகப் பாய்ந்தது.. ஆம் இது என்ன குரல் என்கிறீர்களா? அதுதான் “தேங்கா, மாங்கா, பட்டாணி என்ற ஒரு பையனின்குரல் என் நண்பர்கள் பலரும் சொல்லியிருக்கிறார்கள் இந்த தேங்கா,மாங்கா, பட்டாணி சுண்டல் மகிமையைப்பற்றி. அதைக்கேட்கக் கேட்க என்நாவில் எச்சில் ஊறும். மெட்ராஸ் பீச்சுக்குப்போனால் கடலை கூட பார்கக்காமல் வந்து விடலாம் ஆனால் அங்கு விற்கும் கடலையையோ அல்லது தேங்கா, மாங்கா,பட்டாணி சுண்டலையோ வாங்கி சாப்பிடாதவர்கள் லைஃப் வெறும் வேஸ்ட் என்று. அப்படி என்னை மூளைச் சலவை செய்து இருந்தார்கள் என்னை என் பள்ளிக்கூட மற்றும் காலேஜ் நண்பர்கள். எனவே அந்தக் குரல் எனக்கு பேரானந்தத்தையும் ஒரு கிளுகிளுப்பையும் தந்ததில் ஆச்சரியம் என்ன? உடனே அவனைக்கூப்பிட்டு நாங்கள் மூவரும் ஆளுக்கு ஒரு பொட்டணம் வாங்கி கடற்கரை ஓரமாக கடல் நீர் எங்கள் கால்களைக்கழுவ நடந்தபடி அந்த சுண்டலை சாப் பிட்டு திருப்பதி கோயில் பிரசாதம் சாப்பிட்ட திருப்தியை அடைந்தோம்.
அந்தப்பொட்டணம் தீர்ந்தபின் கடலைப்பொட்டலங்கள் ஆளுக்கு ஒன்று வாங்கி அந்த கடலை நோக்கி “உன்னையே சாப்பிடுகிறோம் பார்” என்று பெருமையாகப்பார்த்தபடி சாப்பிட்டோம். பிறகு கடல் ஓரமாக சற்று காய்ந்த மணற் பரப்பின் மீது உட்காரச்சென்றோம். அப்போது அதனருகில் ஒருவன் “நமதாண்டவன் ஆகாசமில் தூங்குகின்றாரே” என்ற அந்தக் காலத்து தமிழ்சினிமா பாட்டைப்பாடியபடி ஒருவன் பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தான். அந்தக் காலத்தில் தமிழ்சினிமாக்களில் தத்துவம் நிறைந்த பாடல்களை பிச்சைக்காரர்கள் தான் பாடுவது வழக்கம். அவனைப பார்த்ததும் எனக்கு மனதிற்குள் ஒரு பொறாமை தோன்றியது என்றால் மிகையாகாது. ஏனென்றால் அந்த பிச்சைக்காரன் எவ்வளவு கொடுத்து வைத்தவன்?. எந்நேரமும் கடற்கரையில் அமர்ந்தபடி வானத்தையும் கடலையும் பார்த்தபடி அந்த பீச்சில் ஆனந்தமாக பிச்சை எடுக்க அவன் எவ்வளவு கொடுத்து வைத்திருக்கவேண்டும். இவன் உண்மையிலேயே பேரதிருஷ்டசாலியாகத்தான் இருக்கவேண்டும் என்று அவனைப்பார்த்து நான் பொறாமைப்பட்டது என்னவோ உண்மைதான். எனக்கு அப்போது தெரியாது பிற்காலத்தில் நான் இந்த சென்னை மாநகரில் பிச்சைக்காரனைவிட கேவலமான வாழ்க்கை பல ஆண்டுகள் வாழப்போகிறேன் என்று. அன்று இஞ்சினீயர்களுக்கு மிகவும்குறைந்த சம்பளம் சென்னையில் ஒரு பிச்சைக்காரனுக்குக் கிடைக்கும் மாதாந்திர பிச்சையைக்காட்டிலும் குறைவுதான். ஒரு பெரு மூச்சு விட்டபடி இருள் சூழ ஆரம்பித்த உடன் மனமில்லாமல் ஒரு புதிதாக மணம் ஆன ஒரு கணவன் தன் மனைவியை பிரியும் போது எவ்வளவு வேதனை கொள்வானோ அவ்வளவு வேதனையுடன் கடலுக்கு விடை கொடுத்து வீடு திரும்பினோம்.

இன்னும் இரண்டே் நாட்கள்தான் பாக்கி. சென்னை கடற்கரை அதற்கு என்னை அடிமை ஆக்கிவிட்டது. அந்தக் காலத்தில் சென்னை நகரில் டிராம் வண்டிகள் ஓடிக்கொண்டு இருந்தன. ராயப்பேட்டை ஹைரோடிலும், குறுகலான கச்சேரி ரோடிலும் டிராம் வண்டிகள் ஓடிக்கொண்டு இருந்தன என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். ஒரு குறுகலான ரோடிற்கு பிராட்வே என்று பெயரிட்டு அழைக்கும் சென்னை மக்களின் நகைச்சுவை என்னை வெகுவாகக் கவர்ந்தது. இந்த டிராம் வண்டிகள் ஓடிக்கொண்டு இருக்கும்போதே பாதசாரிகள் சட்டென்று அதற்குள் ஏறவும், பயணிகள் கீழே இறங்கவும் முடியும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அவை ரோடில் பதிக்கப்பட்ட தண்டவாளங்களில் மரவட்டை போல ஊர்ந்து போவதே அதன் மீது மோதிக்கொள்ளாத வரையில் அது ஒரு கண்கொள்ளா காட சி.. அந்த டிராம் டிரைவரிடம் ஏன் நீங்கள் வேகமாகப்போக க் கூடாதா என்று ஒருவர், கேட்டதற்கு அவர் சொன்னாராம் என்னால் டிராமை விட வேகமாக போகமுடியும் . ஆனால் நான் டிராம் டிரைவர் ஆனபடியால் டிராமிலிருந்து கீழே இறங்கி நடக்க முடியாது என்றாராம் . யானை வரும்முன்னே, மணி ஓசை வரும பின்னே என்பது போல கிண் கிணி என்ற ஒரு மணியின் சத்தம், டிராம் அதன் பாதையில் வந்து கொண்டு இருக்கிறது என்பதை பாதசாரிகளுக்குத்தெரியப்படுத்தி வரும். (1952-53ல் அடிக்கடி ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக டிராம் வண்டிகள் தடை செய்யப்பட்டு விட்டன. வெகு நாட்களுக்கு ரோடில் புதைந்து கிடந்த தண்டவாளங்களும் விபத்துக்குக் காரணமாயின. அடுத்த சில ஆண்டுகளில அவை முற்றிலுமாக அகற்றப்பட்டு விட்டன.) இந்த டிராம்கள் பஸ்ஸை விட சீப்பானவை என்று எனக்கு ஞாபகம். அந்த நாட்களில் அந்த டிராம் வண்டிகள் சென்னைக்கு ஒரு கம்பீரத்தை அளித்தன என்பதை மறுக்க முடியாது. மறக்கவும் முடியாது.

சென்னையில் பீச்சுக்கு அடுத்தபடியாக பிரசித்திபெற்றவை அன்று பழைய புத்தகங்கள் வாங்கவும் விற்கவும் பெயர்போன மூர்மாரக்கெட், அதன் பின்னால் இருந்த zoo எனப்படும் மிருகக்காட்சிசாலை, மைலேடீஸ் கார்டன், மியூசியம், பாரிஸ்கார்னர் போன்றவை. எங்களுக்கு இருந்த நேரத்தில் எவ்வளவு பார்க்கமுடியுமோ அவ்வளவையும் பார்த்துத் தீர்த்தோம். என்உறவின நண்பர் கம் கைடு எங்களுக்குத் தன் லா காலேஜையும் அன்று அங்கு இருந்த லைட் ஹவுஸையும் பெருமையாகக் காட்டினார். இவற்றை எல்லாம் பார்க்காதவர்கள் சென்னை வருவது படா வேஸ்ட் என்று எல்லோராலும் கருதப்பட்ட காலம், அவற்றை எல்லாம் ஒரு குறுகிய காலத்தில் பார்த்ததற்கு நாங்கள் ரொம்பவும் பெருமைப் பட்டுக் கொண்டு இருந்தோம். இவற்றை எல்லாம் வர்ணிக்க ஆரம்பித்தால் அது தனிக் கதை ஆகிவிடும்.நேரம் இன்மையால் சினிமா எதையும் பார்க்காதது எங்கள் உள்ளத்தில் ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது.

இருந்தாலும் சென்னைவாசிகள் நல்ல அதிருஷ்ட சாலிகள் என்ற எண்ணத்துடனும் எனக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்துடனும் சென்னையிடமும், எங்கள் உறவின கைடுடனும் விடை பெற்று ஊர் போய்சேர்ந்தோம். இண்டர்வ்யூவில் நான் செய்த அதிகப் பிரசங்கித்தனங்களையும், பேண்ட், ஷூ போடாமல் வேட்டியுடனும் செருப்புடனுமே போனதையும் என் கசினின் ஒத்துழைப்புடன மறைத்து எல்லாம் நல்ல படியாக முடிந்தது என்று சொல்லி முடித்தேன். பிறகு மறு நாளே திருச்சி புறப்பட்டுச்சென்று என்னுடைய அன்றாட அலுவல்களில் மூழ்க எனக்குக்கிட்டத் தட்ட பத்து நாட்கள் ஆயின. என்மண்டையில் சென்னையும், பீச்சும், டிராமுமே சுழன்றபடி இருந்தன. நான் என் சுய நிலைக்கு வர பத்து நாட்கள் பிடித்தன. நானும் வரவிருந்த Maths &( Hons) கால்பரீட்சைக்குத் தயார் செய்து கொண்டேன். இண்டர்வ்யூ முடிந்து சுமார் ஒரு மாதம் ஆகி இருக்கும். நான் இண்டர்வ்யூவைப் பற்றியோ, இண்டர்வ்யூ ரிசல்ட் பற்றியோ கவலைப்படாமல் என் படிப்பில் முழு மனதையும் செலுத்தி இருந்தேன். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக என் அப்பாவும் வேறு சில உறவினர்களும் என்னைப்பார்க்க ஹாஸ்டலுக்கு வந்தார்கள். அவர்கள் அடிக்கடி திருச்சி வருவது வழக்கம் என்பதால் அதை நான் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை
11
அவர்களில் ஒருவர் வந்ததுதம் வராததுமாக “ கங்கிராசுலேஷன்ஸ்” என்றார். எனக்கு சட்டென்று ஒன்றும் புரியவில்லை. “ எதற்கு ?” என்று கேட்டேன். “உனக்கு இஞ்சினீரிங் சீட் கிடைத்துவிட்டது கோயம்புத்தூர் GCT ( கவர்மெண்ட் காலேஜ் ஆப் டெக்னாலஜி, கோயம்புத்தூரில்) ” என்றார் அதில் ஒருவர்.
ஏற்கனவே நான் கூறிய அரசியல் காரணங்களினால் அன்று இஞ்சினீரிங் இண்டர்வ்யூ நடப்பதற்கு வழக்கத்தைவிட ஒரு மாதத்திற்கு மேலாக தாமதம் ஏற்பட்டது. அதனால் இஞ்சினீரிங் இண்டர்வ்யூ ரிசல்ட் வர இவ்வளவு தாமதம் ஆகியது.

என்க்கு இஞ்சினீரிங்சீட் கிடைத்ததில் மகிழ்ச்சி ஏற்படவில்லை. நான் குழம்பிப்போனேன். என் பெற்றோரும் மற்றோரும் அவ்வளவு ஆவலாக எனக்கு சீட் கிடைத்ததைப்பற்றி மகிழ்ச்சியுடன் இருக்க நான் இஞ்சினீரிங் சேரமாட்டேன் என்று எப்படி சொல்வது என்ற தயக்கம் ஒரு புறம். அன்று இஞ்சினீரிங்க் சீட் கிடைப்பதே அவ்வளவு அரிதான பெருமை படக்கூடிய விஷயம். அதற்குள் இந்த செய்தி நான் இருந்த ஹாஸ்டல் பிளாக்கில் உள்ள அனைவருக்கும் பரவிவிடவே எல்லோரும் எனக்கு வாழ்த்துத்தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார்கள . நான் அவர்கள் ஒரு சிலரிடம் இஞ்சினீரிங் சேரப்போவதில்லை என்று சொன்னதுதான் தாமதம் எல்லோரும் என்னை ஒரு முகமாக திட்ட ஆரம்பித்து விட்டனர். முட்டாள் என்று பலரும், கிடைத்தற்கரிய சான்ஸை விடுவது வடிகட்டினமுட்டாள்தனம் என்று சிலரும், எப்படி சீட் கிடைக்காமல் பலர் வருத்தப்படுகிறார்கள். கிடைத்ததற்கு சந்தோஷப படாமல் இப்படி இருக்கியே நீ ஒரு (கடைஞ்சு) எடுத்த முட்டாள் என்று மறைமுகமாக வேறு சிலரும் கலாய்க்க என்அப்பாவோ “நீங்களே இந்த முட்டாள் இடத்தில் சொல்லுங்கள்” என்று அவர்களை உசுப்பிவிட எனக்கு அவர்கள் அத்தனை பேரையும் எதிர்க்கும் திராணி இல்லாது போய்விட்டது. ஒரு சிலர் “உன்னைவிட அதிக மார்க் வாங்கிய எங்களுக்கு சென்ற வருஷம் B.E, யில் இடம் கிடைக்கவில்லை. நாங்க நொந்து போயிருக்கோம். அப்படி இருக்க கிடைத்த இடத்தை எவனாவது வேண்டாம் என்று சொல்வானா? போடா .. “ என்று என்னைப்பார்த்து திட்டாத ஆட்கள் கிடையாது. போதாததற்கு என்உறவின நண்பர்கள் என்னோடு அடுத்த அடுத்த ரூம்களில் இருந்தவர்கள் இந்தத்தூண்டுதலுக்குத்தூபம்போட்டு என்எதிரிகளின் கோரஸுடன் சேர்ந்து கொண்டார்கள். “நீ மாத்திரம் இஞ்சினீரிங் சேரவில்லை என்றால், உன்னுடைய பெட்டி படுக்கையை எல்லாம் மூட்டை உன்னையும் சேர்த்து குண்டு கட்டாக கட்டி ஹாஸ்டலுக்கு வெளியே தூக்கிப்் போட்டுவிடுவோம்” என்று மிரட்டலானார்கள்.
*(ஆனால எனக்கு இஞ்சினீரிங்கில் சற்று குறைந்த மார்க்குகள் வாங்கியும் எப்படி சீட் கிடைத்தது என்ற ஆச்சரியம் தீரவே இல்லை. கொஞ்ச நாட்கள் கழித்து அந்த ஆண்டு இண்டர்மீடியட் பரீட்சை பேப்பர் அவுட் ஆன குழப்பத்தில் மாணவர்கள எல்லோருமே பொதுவாகவே அதற்கு முந்தைய ஆண்டுகளை விட குறைந்த மார்க்குகளே வாங்கியதால் எனக்கு சான்ஸ் கிடைத்தது என்பதை அறிந்து கொண்டேன்).

நான் இஞ்சினீரிங் சேர இந்தக்காலேஜில் இருந்து டி.சி. யைப்பெற வேண்டும். அதற்கு நான் காலேஜின் பிரின்சிபலும் , ஹாஸ்டலின் வார்டனுமான Fr எர்ராட்டை சந்தித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். அவரிடம் ஏற்கனவே இரண்டு தடவை நான் இ்ஞ்சினீரிங் கிடைத்தாலும் சேரமாட்டேன் என்று வாக்குக்கொடுத்து இருக்கிறேன். அவரிடம் இப்போது எனக்கு டி.சி. வேண்டும் என்று எந்த முகம் கொண்டு கேட்பது? நாளை நான் இஞ்சினீரிங் காலேஜ் சேர புறப்பட வேண்டும் என்றால் இன்றே நான் அவரைப்பாத்து டிசி வாங்க வேண்டும். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என் கொள்கையை ஆதரிப்பார் யாரும் இல்லை. கடை விரித்தேன். வாங்குவாரில்லை என்ற பட்டிணத்து அடிகளாரின் சோகம் என்னைக், கவ்வியது. அன்று எனக்கு ஏற்பட்ட சோகத்தையும் டென்ஷனையும் உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன். கடைசியில் வேறு வழியின்றி வார்டன் முன் ஒரு கொலைக் குற்றவாளி போல் நின்று டி.சி கேட்டபோது அவர் என்னைப்பார்த்து பொறிந்து தள்ளினார். ஆனால் நல்ல வேளையாக அவர் என்ன வார்த்தைகள் பயன்படுத்தினார் என்று புரியாததால் அசடு வழிய அவர் முன் நின்றேன். “உன்னை நான் பார்ப்பதற்கே வெட்கப்படுகின்றேன்” என்று அவர் சொன்னவற்றில் எனக்குப்புரிந்தது அது ஒன்றுதான். “இனி உன் முகத்தை இந்த ஹாஸ்டலில்பார்க்கவே நான் விரும்பவில்லை” என்று காட்டமாகச்சொல்லி டி.சியை மறு நாள் காலேஜ்ஆபீசில் பெற்றுக்கொள்ளச்சொல்லி சற்று நேரத்தில் get lost என்று ஆசீர்வதித்து என்னை வெளியில் அனுப்பினார். வார்டன் சொன்னதைப்பற்றி என் நண்பர்களிடம் சொன்னபோது “அதை எல்லாம் இந்த காதில் வாங்கி அந்த காது வழியாக விட்டு விடு” என்று ஆக்‌ஷனோடு சொல்ல,”இதுக்கெல்லாம் கவலைப்பட்ட முடியாது. இந்த மாதிரி எத்தனை பேர் இங்கிருந்து இஞ்சினீரிங்குக்குப் போய் இருக்கிறார்கள்ரதெரியுமா?” என்றனர்.இருந்தாலும் “ வாக்குக் கொடுத்துவிட்டேன்னு நான் முடிப்பதற்குள் ஒருவன் “ஆமாம், நீ பெரிய அரிச்சந்திரனோட அடித்த வீட்டுப்பிள்ளை. வாக்கு நாக்கு,மூக்குன்று சொல்லிட்டுத்திரியாதே. அடுத்த வேலையைப்பார் என்று சொல்லிவிட நான் இதற்குமேல் யாரிடம் என்ன பேசி என்ன முறையிட. “சரியென்று அரைக்கால் மனதுடன் நண்பர்களிடம் விடை பெற்று மறுநாள் கோயம்புத்தூர் புறப்பட தயாராகிவிட்டேன் மறுநாள் இரவே என் அப்பா துணையுடன் இஞ்சினீரிங்சேர கோயம்புத்தூர் புறப்பட்டேன். என் அப்பா எப்பவுமே என்னோடு துணைக்கு வர மாட்டார். யாராவது சொந்தக்கார பையன்களைத்தான் அனுப்பிவைப்பார். இப்பொழுது என்கூட வரக்காரணம் “ எஙகே நான் இஞ்சினீரிங்கில் சேராமல், டிமிக்கி கொடுத்துவிடுவேனோ என்ற பயத்தில்தானோ என்று நான் இன்றும் நினைக்கிறேன்.
இப்படியாகத்தானே அடியேனின் இஞ்சினீரிங் இண்டர்வ்யூ மகாத்மியம் எனக்கு சோகமாகவும் , என் பெற்றோர்களுக்கு சந்தோஷமாகவும், ஒரு சிலருக்கு பொறாமையாகவும், Fr எர்ராட்ட்டிற்கு கடும் எரிச்சலாகவும் இனிதே முடிந்தது.

*

எழுதியவர் : ரா.குருசுவாமி( ராகு) (23-Dec-21, 6:12 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 43

சிறந்த கட்டுரைகள்

மேலே