வெங்காயமகிமை ,

வெங்காய மகிமை

வெங்காய சாம்பார் சாதம்,
பொட டோ ரோஸ்ட் பிரமாதம்:
இந்த கௌரவ பிரசாதம்,
இதுவே எனக்கு போதும்.
ஹஹ்ஹஹ்ஹ ஹ்ஹஹ்ஹ
ஹஹ்ஹஹ்ஹ ஹ்ஹஹ்ஹ
ஹஹ்ஹஹ்ஹ ஹ்ஹஹ்ஹ.
வெங்காய பஜ்ஜி அங்கே.
அதன் வாசனை வருது இங்கே,
சந்தோஷம் எனக்குப்பொங்க
ஆசை வருது அதைத் திங்க.
என்று கடோத்கஜன் ரேஞ்சுக்கு வெங்காய சாம்பாரைப் பாத்தவுடன் பாட வேண்டும் என்று தோன்றுகிறது. இப்படி நம் பலருக்கும் தோன்றுவது ஒன்றும் அதிசயம் இல்லை. தோன்றாவிட்டால்தான் அதிசயம்.
எனக்கும் வெங்காயத்துக்கும் அப்படி ஒரு உறவு. விசேஷமான விருந்தாளிகள் நம்ம வீட்டுக்கு வரும்போது நாம கொடுக்கற விருந்தில் வெங்காய சாம்பாருக்கு முக்கியத்துவம் தரோம். . அட்லீஸ்ட் எங்க வீடுகளிலே அப்படித்தான்.

நான் கல்லூரி மாணவனாக இருக்கும் போது என் வெகேஷன்லே ஊருக்குப்போவேன், அப்போ அன்றைய பம்பாயிலிருந்து ( அப்ப அது மும்பயி ஆகல்லே) எங்க சொந்தக்காரங்க சில பேர் எங்க ஊருக்கு வர வழக்கம் அவங்க ஏதோ வெளிநாட்டில் இருந்து வந்ததுபோல அவஙகளைக் கூப்பிட்டு கௌரவிக்க விசேஷமான விருந்து கொடுப்பாங்க எங்க ஊரில் இருந்த பத்து வீட்டு சொந்தக்காரங்களும். அவங்க கொடுக்கிற ஒவ்வொரு விருந்துகளிலேயும் அவர்களை ஆனர் செய்யற வகையிலே வெங்காய சாம்பார், உருளைக்கிழங்கு ரோஸ்ட் காம்பினேஷன் கட்டாயம் உண்டு.. நான் அப்ப ஊரிலே இருந்தா நானும் ஒரு விருந்தாளிதான்.. எனவே பூவோடு சேர்ந்த நாரும் மணக்கற மாதிரி, வெங்காயத்தோட சேர்ந்த அதன் காயந்த தோலும் மணக்கற மாதிரி அந்த விருந்துக்கு என்னையும் அழைப்பாங்க. இந்த விருந்தோம்பல் எங்க ஒவ்வொரு வீட்டிலேயும் நடக்கும். அவங்களோட சேர்ந்து கொண்டு அந்த விருந்து விழாவுலே கலந்துப்பேன். அப்ப எல்லாம் என்னாலே மத்தவங்களுக்கு ஈடு கொடுத்து சாப்பிடமுடியாது. நான் சின்னப்பையனா இருந்தததனாலே வீட்டுக்கு வீடு அங்கே இருக்கிற பெரியவங்க சின்னவங்க நடுத்தரமானவங்கன்னு ஒருத்தர் பாக்கி இல்லாம எனக்கு
“கல்லையும் ஜீரணம் பண்ண வேண்டிய வயதுலே இப்படி காக்கா கடி கடிச்சு சாப்பிடறயே” ன்னு கண்டிச்சு நிறைய சாப்பிடச்சொல்லி புத்திமதி சொல்லி, போதும், போதும் என்று நான் என்ன கரடியாக கத்தினாலும், அதைக் காதுல வாங்கிக்காம என் தட்டோ, இலையோ எவ்வளவு கொள்ளுமோ அவ்வளவுக்கு தள்ளிவிட்டு ஊட்டிவிடாத குறைதான். இது கிட்டத்தட்ட ஒரு பத்துப்பதினஞ்சு நாளைக்கு அதாவது பம்பாய் விருந்தாளிங்க திரும்ப பம்பாய் போகிற வரையிலும் கன்டின்யூ ஆகும். வேறு யாராக இருந்தாலும் அப்படி வகை வகையா விருந்து சாப்பிட்டு இருந்தா, வயறு “கோ பேக்” பலூன் சைஸுக்கு ஊதிப்போய் இருக்கும். வயறு வெடிச்சி ஆக்ஸிடன்ட் கூட ஆகி இருக்கும். அப்படி சாப்பிட்டும் என் வெயிட் 90 பவுண்டுலே இருந்து 91 பவுண்ட் ஆறதுக்குள்ளே எனக்கு வயறு முட்டி, மூச்சு இரைச்சு ஒரு மாதிரி ஆகி எப்போடா லீவு முடிஞ்சு ஊருக்குப்போவோம்னு ஆயிடும். ஓவர் ஈட்டிங்கால ஏற்பட்ட வயத்துக்கோளாறு சரியாக ஒரு மாசம் ஆகும். அதுலே ஏறின வெயிட் கட கடன்னு குறைய ஆரம்பிச்சிடும்.இந்த மாதிரிஒவ்வொரு வெகேஷன்லேயும் நடக்கறது உண்டு. அனேகமாக எல்லார் வீட்டு விருந்துலேயும் வெங்காய சாம்பாரும் உருளைக்கிழங்கு ரோஸ்டும், அப்பளமும், விதவிதமான வடாம் வகைகளும் உண்டு. அவ்வளவும் எனக்குப் பிடித்த ஐடங்கள். அதை எல்லாம் வயறு வெடிக்க சாப்பிட்டும், எனக்கு வெ. சாம்பார்மேலேயும், உ. ரோஸ்ட் மேலேயும் இருந்த மோகம் இண்ணிய வரையிலும், ஒரு சின்ன வெங்காய அளவு , ஏன் ஒரு கடுகு அளவு, கூட குறையல்லே. சொல்லப்போனா கூடித்தே தவிர குறைஞ்சபாடில்லை.. எனக்கு வெங்காயத்தின்மீது அதிக இஷ்டமா இல்லை உருளைக்கிழங்கு மீதான்னு கேட்டு ஒரு பட்டி மன்றமே வெச்சி சாலமன்பாப்பையா என்ன தீர்ப்பு சொல்றார்னு பார்க்கணும். அது வரையிலும் என்னோட லவ் ஈக்வலி டிவைடட் பிட்வீன் தீஸ் டூ.
சில பெரியவங்க உருளைக்கிழங்குன்னா, காஸ்(gas)னு சொல்லி அவாய்ட் பண்ணறாங்க.. நம் புராணங்களில் வெங்காயம் தமோ குணத்தைக் கொடுப்பதாக நம்பிக்கை. அதனால் ஆசார சீலர்களும், சில பக்தர்களும் வெங்காயத்தை எந்த வகையிலும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். இதில் ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் தீவிர நம்பிக்கை கொண்டவர்கள். அதேபோல் ஜைன மதத்தை சேர்ந்தவர்களுக்கும் வெங்காயம் டாபூ( Taboo)

உலகத்துலே அதிக வெங்காயம் விளையும் நாடு சைனா தான். அதை அதிகாக சாப்பிடும் நாடும் சைனாதான். ஆசியாவிலிருந்துதான் வெங்காயம் எகிப்துக்குப்போய்அங்கிருந்து ஒவ்வொரு நாடாக உலகம பூராவும் பரவ ஆரம்பிச்சுதாம்.இப்ப கொரோனா பரவின மாதிரியான்னு கேக்காதீங்க. எகிப்தியர்கள் அவங்க செழிப்பா இருந்த காலத்துலே வெங்காயத்தை தெய்வீக அம்சம் பொருந்தியதாகக் கருதினாங்களாம்.
பக்தி பூர்வமாகச் செய்யற எந்த பெரிய பூஜையின் போதும், நிஜ வெங்காயமும், வெள்ளைப் பூண்டும் பய பக்தியுடனும் மரியாதையுடனும் பூஜையில் இடம் பெறுவது வழக்கமாம். பண்டைய எகிப்திய நீதிமன்றங்களிலே கூட வழக்குகள் விசாரிக்கப்படும்போது வாதியும், பிரதிவாதியும் வெங்காயத்தின் மீது சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்ளணுமாம். நான் சொல்வதைல்லாம் உண்மை. உண்மையைத்தவிர வெறும் வெங்காயம் இல்லே என்று சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டு இருப்பார்களோ என்னவோ தெரியவில்லை. அத்தனை உயர்ந்த இடம் அதற்குத் தரப்பட்டிருந்தது. ஆனா நம்ம ஊர்களிலே யாராவது வெங்காயத்தை வெச்சு சத்தியம் பண்ணினா அது செல்லுபடி ஆகாது. சத்தியமாவது வெங்காயமாவதுன்னு போய்க்கிட்டே இருப்பாங்க. நம்ம பலபேரும் விரும்பி சாப்பிடற வெங்காயத்துக்கு நாம எந்த மரியாதையும் தரதில்லை. கேட்டா வெங்காயம் அப்படின்னுதான் சொல்றாங்க.

இந்த உலகத்துலே பரவலாக பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் மிகப் பாபுலரான ஒரு தாவர இனம் வெங்காயம்தான். தன்காயம்காக்க வெங்காயம் போதும் வெங்காயம் உண்போருக்கு தங்காயம் பழுதில்லை:என்ற வெங்காய மொழிகள் பழக்கத்தில் உள்ளன. உடல் இயந்திரத்துக்கு வரும் முக்கிய நோயான உயர் ரத்த அழுத்தத்தை(B.P.) வெங்காயம் கட்டுப்படுத்துமாம். ஆனா அதே வெங காயத்தோட விலையே சில சமயம் நமக்கு B.P.யை ஜாஸ்தி பண்ணிடும். வெங்காயத்துக்கு ஏராளமான மருத்துவ குணங்கள்இருந்த போதும் அதை நாம் பண்டிகைகள் என்று வரும்போது கடைசி இடத்தில்தான் வைத்து இருக்கிறோம்.
நம்ம ஊர்களிலே பண்டிகை, பூஜாகாலங்களில் தேங்காய், வாழைப்பழம்,வெற்றிலை, கற்பூரம் இவற்றை உபயோகிப்போம். விசேஷங்களின்போது வடை , பாயசம்,கட்டாயம் இடம்பெறும் சில பண்டிகைகளுக்கு கொழுக்கட்டை, சீடை, லட்டு, தேன்குழல் போன்ற பட்சணங்கள் செய்யப்படும். வினாயக சதுர்த்தியின்போது கொழுக்கட்டை தவிர அந்த சீசனில் கிடைக்கும் பல்வேறு பழங்களையும் நாம் படைக்கிறோம்..அருகம்புல்லுக்குக்கூட நாம் அவ்வளவு மரியாதைகொடுக்கிறோம் . பொஙகலின்போது, பொஙகலும், கரும்பும் முக்கிய பங்கு வகிக்கும். இப்படி ஒவ்வொரு பண்டிகைக்கும், விசேஷத்திற்கும், பலவிதமான காய்கறிகளுக்கும,, பழ வகைகளுக்கும,, தின்பண்டங்களுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம,. எந்தப்பண்டிகை நாளிலாவது நாம் வெங்காயம் : சமாசாரத்தை எந்த உருவத்திலேயாவது லவ் அல்லது அல்லவ் பண்ணி இருக்கிறோமா என்றால் இல்லை.
இதை நினைக்கும்போது என் அருமை வெங்காயத்துக்கு ஏற்பட்ட இந்த நிலையைப் பார்த்து சாம்பார்லே இருந்து எடுத்து வாய்க்குள்ளே ஆசையா போட்டுக்கப்போன ஒரு முழு சின்ன வெங்காயம் கையும் வாயும் தவறி தரையிலே வழுக்கி விழுந்தா எவ்வளவு துககம் வருமோ அவ்வளவு துக்கம் எனக்கு ஏற்பட்டுவிடும்.
நம்ம ஊர்லே பெரும்பாலான சமையல்லே வெங்காயம் இல்லாம கிடையாது. ஆனால் பல நல்ல விஷயங்களில், குறிப்பாக நம்ம கல்யாணங்களிலே வெங்காயத்தை நான் அபூர்வமாத்தான் பாத்திருக்கேன். பருப்பில்லாக் கல்யாணம் பாக்க முடியாது. பாயசம் இல்லாக் கல்யாணத்தை பாக்க முடியாது. அப்பளம் இல்லாக்கல்யாணத்தை பாக்க முடியாது. ஆனா வெங்காயம் இருக்கிற கல்யாணத்தைப்பாத்து இருக்கீங்களா? . அது ரொம்பவும் அபூர்வம்..ஒரு வெங்காய சாம்பார் வாசனை கல்யாண சாப்பாட்டின்போது எப்போதாவது உங்க மூக்கைத் தொளைச்சது உண்டா? ஆனா இப்ப காலம்மாறிப்போச்சு. சில பெரிய கல்யாணங்களிலே வெங்காயம் மறைமுகமாகவும , நேரடியாகவும் போண்டோ ரூபத்திலேயும், வெஜ் பிரியாணி, அதோட சைட் டிஷ்ஷாகவும், மசால் தோசையாகவும் உள்ளே நுழந்து விட்டது. எங்க காலத்துலே, 40 களிலேயும், 50 களிலேயும் அப்படி கிடையாது. வெங்காய விவகாரமே எதுவும் இருக்காது. .

காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா என்ற தத்துவத்தை கட்டாயம் கேட்டு இருப்பீர்கள். அப்படி கேட்காமல் இருந்தால் ஒண்ணு, உங்க காது கோளாறாக இருக்கலாம், இன்னொண்ணு நீங்க இன்னும் அந்த அளவு மனபக்குவம் அடையாதவராக இருக்கலாம். அல்லது இரண்டுமே இருக்கலாம்.
இந்தக்காயத்துக்கும் வெங்காயத்துககும் ஏதாவது உறவு உண்டா என்று இயற்கையாகவே ஒரு சந்தேகம் எழ வாய்ப்புண்டு.இந்தக் காயத்துக்கு ஏற்படக்கூடிய பல காயங்களுக்கு ( நோய்களுக்கு) வெங்காயம் கோவில் பிரசாதமா இல்லாவிட்டாலும் ஒரு வரப்பிரசாதமாக இருப்பதைப்பார்த்தேன்.
ஒருவர் கீழே விழுந்து எழுந்தவுடன் முதலில் தன் கைகால்களைக்கவனித்துக்கொள்கிறார். அவரை அருகிலிலஇருப்பவர் கீழே விழுந்தவரை ரசித்தபடி, மரியாதை நிமித்தமாக, ஏதாவது அடி,கிடி பட்டு இருககிறதா என்று கேட்பார். விழுந்தவர் கையைக் காலை உதறிக் கொண்டு ஒன்றும் இல்லை. ஒரு சிறு காயம்தான் ஏற்பட்டு இருக்கிறது என்று சொல்வார். நல்ல வேளை ஆண்டவன் புண்ணியம் பெருங்காயம் இல்லை என்று சமாதானம் அடைவார். ஆக பெருங்காயத்துக்கு சமையல் அறையிலும் இடம் உண்டு. உங்கள் உடம்பிலும் இடம் உண்டு.
காயத்திற்கும் பெருங்காயத்துக்கும், வெறுங்காயத்திற்கும் என்ன சம்மந்தம் என்பதை என்றாவது நீங்கள் ஆராய்ந்து இருக்கிறீர்களா? ஒருநாள் எனக்கு பெருங்காயம் ஏற்பட்ட போது என் குயுக்தி நண்பன் ஒருவன் அருகே வந்து, பெருங்காயம்னு சொல்றியே, வாசனையே காணோமே என்று கூறி என் வயிற்றெரிச்சலையும் எனக்கு ஏற்பட்ட பெரும் காயத்தோட பேரெரிச்சலையும் கிளப்பிவிட்டான். நம்ம காயத்தையும், வெங்காயத்தையும், பெருங்காயத்தையும் லிங்க் பண்ணி சொக்கநாதப்புலவர் ஒரு சிலேடை பாடலைப்பாடி இருக்கார்.
வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை
மங்காத சீரகத்தைத் தந்தீரேல் தேடேன்
பெருங்காயம் ஏரகத்துச் செட்டியாரே
மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு பொருளும், ஆழ்ந்து நோக்கினால் மற்றொரு பொருளும் தரக்கூடியது வெங்காயத்தைப்போலவே.
இந்தப் பாடலின் ஒரு பொருளைப் பார்ப்போம். 'வெங்காயக் குழம்பு வைக்க, வெந்தயமும் பெருங்காயமும் வாங்கினேன். ஆனால், அதை வைக்க மறந்து விட்டேன். வாங்கி வந்த வெங்காயம் சுருங்கி சுக்குபோல் ஆகிவிட்டது. வெறும் வெந்தயத்தை வைத்து நான் என்ன செய்வது? இப்போது வெங்காயம், வெந்தயம், பெருங்காயம் எதுவும் வேண்டாம். சீரகம் கொடுங்கள் செட்டியாரே' என்று கேட்பதாக உள்ளது.
மற்றொரு பொருளைப் பார்ப்போம்
நம் உடம்புக்கு 'காயம்' என்றொரு பொருள் உண்டு. உடலில் வெப்பமும் (வெம்மை) உண்டு. ஆகையால், அது வெங் 'காயம்'. பல உறுப்புகளைக் கொண்ட பெருங்காயமும் (பெரிய) உடம்புதான். வெறும் உடம்புக்கு மதிப்பில்லை. உயிர் இருந்தால்தான் மதிப்பு. வெந்த அயமாகிய (வெந்தயம்) பிணத்தின் வாயில், உறுதிமிக்க இரும்பு (அயம்) போன்ற ஒரு பஸ்பத்தையே (மருந்து) கொடுத்தாலும், உயிர் வராது. ஆகையால் மோட்சம் தரும் நிலையை (சீரகம்) முருகன் அருளினால் வேண்டேன் இன்னொரு பிறவி (பெருங்காயம்). (ஏரகத்துச் செட்டியார் என்பது சுவாமிமலை முருகனைக் குறிக்கும்.)
வெங்காயப்பாடலில்தான் எவ்வளவு தத்துவம் அடங்கி இருக்கிறது பார்த்தீர்களா?
இது ஒரு பெரிய த த்துவமா? வெங்காயம் என்று வெங்காய எதிரிகள் கூறலாம்.

வெங்காயத்தை ஆங்கிலத்தில் ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியதாம். இது பல அடுக்குகள் ஒன்றுக்குள் ஒன்றாக இணைந்து இருப்பதால் யூனியன் என்ற வார்த்தையாகி பிறகு மருவி ஆனியன் ஆனதாக ஒரு ஆராய்ச்சி. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தமாம். நம்ம வீட்டிலே இருக்கானே தடிப்பய அந்த முத்து இல்லே. நவரத்தினங்களிலே ஒண்ணு. “முத்துக்குளிக்க வாரீகளா?”
ங்கிற பாட்டுலே வர முத்து.. உடனே யூனியன், ஆனியன் என்று சொல்லி நம்ம ஊர்
அரசியலுக்கு என்னை திசை திருப்பாதீங்க. எந்தப் பண்டிகை நாளிலாவது நாம் வெங்காயம் சமாசாரத்தை எந்த உருவத்திலேயாவது லவ் அல்லது அல்லவ் பண்ணி இருக்கிறோமா என்றால் இல்லை.

அரசியல்னாலே வெறும் வெங்காயம்தான் எனக்கு ஞாபகம் வருது. கேள்விப்பட்டு இருப்பீங்களே வெங்காய விலை விறு விறுன்னு சில சீசன்லே டைபாயிட் ஜுரம் வந்தா மாதிரி ஏறும்போது, ஆளும் கடசிக்கு பரமபத சோபான சொர்க்க படத்துலே ஒரு பெரிய பாம்பு ஒண்ணு இருக்குமே நௌஷிகன்கிற பேர்லே, அது எவ்வளவு உயரம் நீங்க போயிருந்தாலும் அதோட வாயிலே விழுந்தா உங்களை தரை மட்டத்துக்கு அது இறக்கிவிட்டுடும். ஏமாத்தாம ஆடியிருந்தீங்கன்னா, அந்த மாதிரி அந்தப்பாம்பு வாயிலே இருந்து அதோடு வாலுககு அடியிலே இறங்கி இருப்பீங்கங்கறது நிச்சயம். அந்த மாதிரி வெங்காயத்துக்கு அப்படி ஒரு மகத்துவம்உண்டு. காய்ந்த பச்சை வெங்காயம் சீக்கிரம் கெட்டுப் போகாதுங்கறதாலே பதுக்குகிறவங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். அது வெங்காய விலையை எட்டாத உயரத்துக்குக் கொண்டு போகும்.. இதனாலே அரசாங்கமே ஆடிப்போகும் .அரசாங்கத்தையே கிடுகிடுக்க வெச்சி கீழே இறக்கிவிட்டாலும் விட்டுடும். வெங்காயம் அரசாங்கத்தை. மட்டுமல்ல, அது எப்பேர்ப்பட்ட அசகாய சூரனையம் விழ வெச்சிடும், அழவெச்சிடும்
வெங்காயத்துக்கும் அழுகைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அது விலை ஏறும்போதும் அழுகின்றோம். இறங்கும்போதும் சிலர் அழுகின்றோம். இறங்கும்போது அழுகின்றோமா? ஏன்? விலை குறைந்ததனால் விவசாயிகள் அழுகிறார்கள் இல்லையா? . விலை குறைவாகி விட்ட காரணத்தினாலும் நாம் அதை அதிகமாகப்பயன்படுத்துவதால் நாமும் அழுகின்றோம்.
விலை ஏறும்போதும் பலர் அழுகின்றோம்.
விலை இறங்கும்போதும் சிலர் அழுகின்றோம்
அதை உரிக்கும் போதும் அழுகின்றோம்.
என்று சந்திரபாபு ஸ்டைலில் நாம் பாட வேண்டியதுதான். பெற்றோர்கள் திருமணம் முடித்து தங்கள் பெண்ணை மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பும்போது கண் கலங்குவது மாத்திரம் அல்ல, சிலர் ஓ வென்று அழுவதும் வழக்கம். நம் கல்யாணங்களில் புதிதாக மணம்செய்து கொண்ட பெண் புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது, மாமனாரும், மாமியாரும், மாப்பிள்ளையைப் பார்த்து ,
“மாப்பிள்ளை, எங்க மகளைக் கண் கலங்காமல பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு!” என்பார். அதற்கு மாப்பிள்ளை
“,சரி மாமா! நான் உங்கள் பெண்ணை வெங்காயம் கூட உரிக்கச் சொல்ல மாட்டேன்!” என்று கூறித்தேற்றுவார். இப்படியாகத்தானே வெங்காயத்தால் ஒரு குடும்பத்தையே அழவும் வைக்க முடியும். வாழவும் வைக்க முடியும். சில சமயம் மாமியாருக்கு கோபம் வந்தால் மருமகளைத்திட்டி அழவைக்கவேண்டாம். ஒரு கிலோ சின்ன வெங்காயத்தை மேல்தோல் நீக்கி அதை சமையலுக்கு ரெடி பண்ணச்சொன்னா, மருமகளுக்கு வராத அழுகையா?

வெங்காயத்தின் தாயகம்!
வெங்காயத்தின் தாவர விஞ்ஞானப் பெயர், அலியம் சிபா (Allium cepa) என்பதாகும்.ஒரு வேளை அலிபாபாவுக்குப்பிடித்ததால் இதற்கு அந்தப்பெயர் வந்திருக்கலாமோ?
இதுக்கு தமிழ் பெயர் இருக்கிறதாலே இது தமிழ்நாட்டுக்கு ரொம்ப காலத்துக்கு முன்னமேயே வந்திருக்கணுங்கிறது என ஊகம். அதைப் பிரிய முடியாத அளவுக்கு அது அனேகமாக மொத்த இந்தியர்களின் மனதிலும், வயிற்றிலும் இடம் பிடித்து விட்டது.. ஆனா நம்ம ஊரிலே நாம சின்ன வெங்காயம் உபயோகிக்கிற அளவு நார்த்துலே உபயோகிக்கிறாங்களான்னு தெரியல்லே.ஆனா பெரிய வெங்காயத்தை நாடு பூரா உபயோகிக்கிறாங்கன்னு தெரியுது.

ஓட்டல்லேகூட சின்ன வெங்காய சாம்பார் அவ்வளவா பண்றதுல்லை. ஏன்னு விசாரிச்சப்போ, சாப்பிட வரவங்க அத்தினி பேரும் வெங்காயத்” தான்” கேக்கறாங்களாம். “தான்” களிலே வெங்காயத்தானுக்கு டிமாண்ட் ஜாஸ்தி. அதனாலே கொஞ்ச நேரத்துலே அது தீர்ந்து போயிடுதாம். லேட்டா வரவங்களுக்கு வெங்காய சாம்பார், வெறும் சாம்பார் ஆயிடறதாலே நிறைய கஸ்டமர்ஸ் கோவிச்சிக்கிறாங்களாம். அதனாலை சின்ன வெங்காயத்தை அவங்க மெனு கார்டுலே இருந்து எடுத்துட்டாங்களாம். அதுக்குப்பதிலா பெரிய வெங்காயத்தை உபயோகிக்கிறார்களாம். அதுதான் கட்டுபடியாகிறதாம்.

யார் சாம்பாரிலே போடற காய்கறி பீஸ்களுக்குத் “தான்” என்று பெயர் வெச்சாங்கன்னு தெரியல்லே. கல்லைத்தான், மண்ணைத்தான், காய்ச்சித்தான், குடிக்கத்தான், கற்பித்தானா என்று சொன்னவன்தான் இதைக் கண்டுபிடிச்சி இருக்கணும். இது என்னோட ஊகம் தான்.


“என்க்கு மாதங்களில் மார்கழி, மலர்களிலே மல்லிகை என்பது போல சாம்பார்களிலே வெங்காய சாம்பார். எனக்குத் தெரிந்து வெங்காய விரும்பிகள் உலகம் பூராவும் பரவிக் கிடக்கிறார்கள். அந்தக்கோடானு கோடிகளில் அடியேனும் ஒருவன். என் மனைவிக்குத் தெரிந்தே வெங்காயத்தைத்தைரியமாக காதலித்தவன்நான். என்நாக்கைக்கொள்ளை கொண்ட ஒரு மகத்தான காய் வெங்காயம். சாம்பாரில் உள்ள முழு வெங்காயம் பார்ப்பதற்கே தனிக் கவர்ச்சி. அதை விரும்பாத குழந்தைகளும் இல்லை, பெரியவர்களும் இல்லை. இனிப்பிறந்தால்தான் உண்டு. சின்ன வெங்காயம் என்னுடைய மோஸ்ட் பேவரிட். அதற்கு ஈடு இணையாக பெரிய வெங்காயத்தை என்னால் சொல்லவே முடியாது. அது அடுத்த பேவரிட். அவ்வளவுதான்.எனக்கு வெங்காயத்தின் மீதுள்ள ஆசை
“வெங்காய சாம்பாரே வாவ் வாவ்” என்று
“சிங்கார வேலனே வாவா” என்ற மெட்டில் பாடத்தூண்டுகிறது என்றால் எந்த அளவு வெங்காயத்தை நான் காதலிக்கிறேன் என்று புரிந்து கொள்ளுங்களேன். வெங்காயத்தை சமைக்கும்போது மூக்கைக்துளைத்து கிறங்கடிக்கும் வாசனை எனக்குத்தெரிந்து இந்த அளவிற்கு வேறு எந்த காய்க்கும்கிடையாது.( இதற்கு அடுத்தபடியாக நான் முருங்கைக் காயைத்தான் சொல்லுவேன்) வெங்காயத்தைக்காய் என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. காய் என்றால் அது ஏன் பழுப்பதில்லை என்று செந்தில் மாதிரி என்னிடம. கேட்காதீர்கள்.ஆங்கிலத்தில் அதை வெஜிடபிள் லிஸ்டில்தான் சேர்த்து இருக்கிறார்கள்.அதை ஒருவகை பல்பு வகையைச்சேர்ந்த காய்கறி என்கிறார்கள்.


வெங்காய வாசனை எவ்வளவு உங்களுக்குப்பிடித்து இருந்தாலும் அந்த வாசனை வேறு காய்கள் பழங்கள் இவற்றுடன் கலந்துவிட்டால் குமட்ட ஆரம்பித்துவிடும். இதற்கு ஜன்ம விரோதி, அதாவது, எனிமி ப்ரிட்ஜ்தான். மறந்தும் இதை ப்ரிட்ஜில்வைத்தால் அதில் உள்ள பொருட்களை நீங்கள் மறந்து விடவேண்டியதுதான். பாலில் வெங்காய வாசனையை விரும்புவீர்களா? அததற்கு என்று ஒரு இடம் உண்டு. அதனதன் இடத்தில் இருந்தால்தான் மரியாதை. வெங்காயம் நமக்குக்கற்றுத் தரும் பாடம் இதுதான்.அதை வைக்கும் இடத்தில் வைத்திருந்தால் எல்லாம் நல்லதே. “இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சௌக்கியமே” என்பது போல.

வெங்காயம் நன்றாக சாம்பாரில் வெந்தவுடன், அது தன் இயற்கையான சுவை, வாசனை இவற்றில் 50% ஐ சாம்பாருக்கு டிரான்ஸ்பர் செய்துவிட்டு, மீதம் 50% ஐ தன்னுள்ளேயை ஹோர்டு செய்து கொண்டு- அதாவது பதுக்கி வைத்துக்கொண்டு- இருக்கும் ஒரு அற்புத காய். அதை சாம்பாரில் போட்டு அதை உண்டு இல்லை என்று வதக்கி இதழ்இதழாகப்போய் அதை ஒரு CID யால்தான் கண்டுபிடிக்க முடியும் என்ற அளவிற்குசேதப்படுத்துபவர்களுக்கு சொர்க்கத்தில் சீட் கிடையாது. எங்கள் வீட்டு கிச்சனிலும் இடம் கிடையாது . அதன் உருவத்திற்கு பங்கம் ஏற்படாதவாறு முழுசு முழுசாக இருந்தால் அந்த சாம்பாரை உலக சூப்பர் சாம்பாராக தேர்ந்தெடுப்பேன். இது சின்ன வெங்காயத்துக்கு மட்டும்தான் பொருந்தும . பெரிய வெங்காயத்துக்குப் பொருந்தாது.

வெங்காயத்திற்கு வேறு பல அன்றாட உபயோகங்களும் உண்டு. இது பல ஸ்கூல் போகும் சிறுவர்களுக்குத் தெரிந்து இருக்கும். சில மாணவர்கள் பள்ளிக்கூடம் போக விருப்பம் இல்லை என்னும்போது, வெங்காயத்தை கஷ்கத்தில் வைத்துக்கொண்டு உடல் சூட்டினை ஏற்றிக்கொண்டு, ஜுரம் வந்து விட்டதாக சொல்லி பெற்றோர்களையே ஏமாற்றுவது உண்டாம்.. எனக்கு தெரிய வேண்டிய காலத்தில் இந்த டிரிக் தெரியாமல் போயிற்றே.

என்னதான் சொல்லுங்கள் வெங்காயம் என்ற உடனே உங்கள் நாக்கு சப்புக் கொட்டுவதுடன் உங்கள் மூக்கு அந்த வாசனையை ஒரு பிடி பிடிப்பது போல் நீங்கள் உணரவில்லையா? ஒவ்வொரு காய்கறிக்கும் ஒவ்வொரு குணம், மணம், டேஸ்ட் உண்டு. ஆகா வெங்காயம் என்ற உடனேயே சின்ன வெங்காயம் போட்ட சாம்பார் வெங்காய வாசனையை நாம் மறக்கமுடியாது. பெரிய வெங்காயத்துக்கு இதில் பத்தில் ஒரு மடங்கு வாசனை கூட கிடையாது என்பது என் அபிப்பிராயம். அதில் இருக்கும் மைல்ட் காரத்துக்கும் சமையலானவுடன் அதனால் கிடைக்கும் வாசனைக்கும், அந்த டேஸ்டுக்கும் ஈடு இணை இந்த உலகில் கிடையாது. தேவலோகத்தில் இருக்குமோ இல்லையோ எனக்குத்தெரியாது. நான் ஒரு வெங்காயத்தின் பரம ரசிகன். இதைத்தவறாக அர்த்தம் எடுத்துக்கொள்ள வேண்டாம். அந்த ஒரு என்பது வெங்காயத்தைச்சேராது. ஒரு ரசிகன் என்று சொல்லவந்த இடத்தின் நடுவே வெங்காயம் புகுந்து இடம் பிடித்துக் கொண்டு விட்டது. அவ்வளவுதான். வெங்காயத்திலும் மனிதர்களில் இருப்பது போல்சில நிறங்கள் உண்டு. வெள்ளை வெங்காயம், சிகப்பு வெங்காயம், மஞ்சள் வெங்காயம் என்று . நம் ஊரில் சிவப்புதான் ரொம்ப காமன், திண்டுக்கல், பெரம்பலூர் மாவட்டங்களில் இது பயிராகிறது. என் ஓட்டு சிவப்பு வெங்காயத்திற்குதான். ( வெங்காயத்தில்) சிகப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு என்று நான் கூறுவதை நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதன் சுவை, வாசனையை நினைத்தாலே ஒரு சொர்க்க பூமியில் இருப்பது போன்ற உணர்வு. வெங்காயத்துக்கு அடிமை ஆகாதவர்கள் ஒன்று மகான்களாக இருக்க வேண்டும் அல்லது கொரோனாவினால் பாதிக்கப்பட்டு, சுவையையும், வாசனையையும் உணர முடியாமல் போனவர்களாக இருக்க வேண்டும்.

அமெரிக்காவில் ரொம்ப பாபுலரான வெங்காய விஷயம் ஆனியன் ரிங்கு (onion ring) தான். பஜ்ஜிக்கு என்றே பிறந்தது பெரிய வெங்காயம்தான். பெரிய வெங்காயத்தை ரௌண்ட். ரௌண்டாக வெட்டி அதை பஜ்ஜியாக சாப்பிடும்போது
“உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ”
என்று அந்தக் காலத்தில் M.K. தியாகராஜ பாகவதர் பாடிய சினிமா பாட்டு நினைவுக்கு வரும், உங்களுக்கு வருமோ இல்லையோ எனக்கு வரும். . நான் ஏற்கனவே பஜ்ஜிப் பரியன். வெங்காய விரும்பி. எனவே இந்தக் காம்பினேஷனுக்கு நான் கொத்தடிமை. ரிங்க், ரிங்காக அதை பஜ்ஐஜியிலிருந்து ஒவ்வொரு வளயத்தையும் நாக்கு வெந்து போகாத சூட்டில் வாய்க்குள் போட்டு சுவைத்தபடி இருக்கும்போது அந்த பரமாத்வே என்முன் தோன்றி
“பக்தா, உனக்கு என்ன வரம் வேண்டும். கேள்” என்று கேட்டால்
“ஆண்டவா, இதை சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும் என்னை டிஸ்டர்ப் செய்யாதே. என்ன வரம் வேண்டுமோ அதை அப்புறம் யோசித்துச் சொல்கிறேன்”
என்று அவரை திருப்பி அனுப்பிவிடுவேன்.
*******
வெங்காயத்துக்கு, அதிலும் குறிப்பாக சின்ன வெங்காயத்திற்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. தேள் கடிக்கு இது ஒரு மிக நல்ல மருந்து.எங்கள் ஊரில் எங்கள் வீடு ஓட்டு வீடு என்பதால் அங்கு பல தேள்களும் எங்களுக்கு வாடகை கொடுக்காமல் எங்களுடன் கூட்டுக்குடித்தனம் செய்து வந்தன. நாங்கள் ஒருவருக்கு ஒருவர் தலையிடாமல் Non aligned ஆக வாழ்ந்து வந்த காலத்தில் ஒரு நாள் அஹிம்சாவாதியாகிய ஒரு பாவமும் அறியாத என்னை ஒரு பயங்கர ( வாதி) தேள் ஒன்று கொட்டி விட்டு தீவிரவாதிகளைப்போல் எங்கோ பதுங்கிக்கொண்டது. தாங்க முடியாத வலி, இந்த வலியில் தேளைத்தேடிக்கண்டுபிடித்து அதற்கு மரணதண்டனை அளிப்பதைவிட அதை மன்னித்து மறந்து என் வலியைக்குறைப்பதற்கான வேலையில் ஈடுபட்டேன். என் கதறலைக்கேட்டு விட்டு பக்கத்து வீட்டு தாத்தா வந்து
“என்ன ஆச்சு?” என்று விசாரித்தார்.
நான் தேள் கொட்டியதை ஆக்‌ஷன்மூலமும் சத்தம் மூலமும் எனக்குத்தெரிந்த டான்ஸ் மூலமும் சொல்லவே அவர் அதைப் புரிந்து கொண்டு
“பூ! இவ்வளவுதானா? தேள்தானே.. கவலைப்பட வேண்டாம்” என்று தேளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு
“சரி. வெங்காயம். இருந்தால் கொண்டு வாருங்கள்” என்றார்.
“சின்ன வெங்காயமா, பெரிய வெங்காயமா?எவ்வளவு வெங்காயம்?” என்று கேட்க
“ நான் என்ன இப்போது சாம்பாரா வெக்கப்போறேன்?. ஒரே ஒரு சின்ன வெங்காயம் இருந்தால் சரி, இல்லைன்னா ஒரு பெரிய வெங்காயம்” என்று சொல்ல ஒருவர் சின்ன வெங்காயத்தைக் கொண்டு வரவே தாத்தா அதை என்னிடம் கொடுத்து
“எந்த இடத்தில் தேள் கடித்ததோ அங்கே இந்த வெங்காயத்தைத்தேய்” என்றார்.
தேள் கிச்சனில் கடித்த இடத்தைக்காண்பித்து “இங்கேதான் தேள் கடித்தது” என்று அந்த வலியிலும் “அந்தக கிச்சன் கார்னரில்தான் கொட்டித்து. அங்கே வெங்காயத்தை தேய்க்கவா ? என்று “ எடுக்கவா? கோக்கவா “ என்ற ஸ்டைலில் நான் கேட்கவே.
“நான் தேள் உன் உடம்பில் எங்கே கடித்தது என்று கேட்டேன். தேள் கடித்தும் உன் குசும்பு குறையவில்லையே. ஒரு தேள் உன் நாக்கிலே கொட்டினாத்தான் நீ சரியாவே ” என்று சாபம் இட்டார் அந்தப் பெரியவர். . பிறகு என் காலில் , தேள் கடித்த இடத்தில் அவர் என் கையிலிருந்து வெங்காயத்தைப் பிடுங்கி தேய்த்த தேய்ப்பில் தேள் வலி பறந்ததா இல்லை வெங்காய மகிமையா என்று தெரியாமல் ஒரு கணம் ஆடிப்போனேன். கொஞ்ச நேரத்தில் தேள் போன இடம் எப்படித்தெரியவில்லையோ அப்படித்தேள் கடித்த வலியும் போன இடம்தெரியவில்லை. அப்போது எனக்கு பக்கத்து வீட்டுத் தாத்தாவை விட வெங்காயத்தின் மீது மதிப்பு கூடியது, வெங்காயத்தின் மருத்துவ குணத்திற்கு இது ஒரு சின்ன எக்ஸாம்பிள்.

எனக்குத்தெரிந்த ஒரு வெங்காய வெறியர் ஒருவர் காசிக்குப் போவதாக சொன்னார், காசிக்குப் போனால் நமக்கு பிடித்த காய்கறி ஏதாவது ஒன்றை விட்டு விட வேண்டும் என்ற வழக்கம் உள்ளதால்.
நான் அவரை “உங்களுக்கு மிகவும் பிடித்த காய்கறி எது?” என்று கேட்டேன்.
“வெங்காயம்” என்றார்.
“அப்படியானால் நீங்கள் காசியில் வெங்காயத்தை விட்டு விட வேண்டும்” என்றேன். “அப்படியானால் கங்கையில் வேணாலும் 4 வெங்காயத்தை விட்டு விடுகிறேனே” என்றார். “நோ, நோ, நீங்கள் அதை சாப்பிடுவதை விட்டு விட வேண்டும்”. என்றேன்.
“எத்தனை நாளைக்கு?” என்றார்,
“ஆயுள் முழுவதும்” என்றேன்.
உடனே அவர் “விட்டு விடகிறேன்” என்றார்.
“ஆகா, உங்களுக்குத்தான் காசி மீது எவ்வளவு நம்பிக்கை, மரியாதை” என்றேன்.
அவர் “இல்லை நான் காசிக்குப் போவதை விட்டு விடுகிறேன்” என்றார்.
“நோ காசி ஈவன் இஃப் இட் கம்ஸ் ஓசி” என்று ஒரு ரைம் அடித்தார்.
அவருடைய வெங்காய பக்தியைக்கண்டு நான் அசந்து போனேன். எனக்குத் தெரிந்து காசிக்குப்போய் வெங்காயத்தை விட்டவர்களை நான் இதுவரையிலும் பார்த்ததில்லை. ஆனால் வெங்காயத்துக்காக காசியை விட்டவர்கள் நிறைய பேர் இருப்பார்கள் என்பது என்யூகம்.அவர்களுக்கு ஏற்கனவே பிடிக்காத காயை இந்த சாக்கில் விட்டவர்கள்தான் அதிகமாக இருக்குமோ என்று சந்தேகம் தோன்றுகிறது.

மற்ற காய்கறிகள் போல் இல்லாமல் வெங்காயம் வாங்குவது ரொம்ப சுலபம். முத்தலா, இளசா என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதை மற்ற காய்கறிவகைகளப்போல கிள்ளிப் பார்க்க வேண்டியது இல்லை. வெண்டைக்காய் போல் உடைத்துப பார்க்க வேண்டியது இல்லை. பீன்ஸ் போல் ஒவ்வொன்றாக பொறுககி எடுத்து வளைத்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதை அப்படியே அள்ளிப்போட்டுக்கொண்டு வரவேண்டியதுதான். பெரிய வெங்காயம் வாங்கும்போது அத்துடன் சிறிய வெங்காயம் கலக்காமலும், சிறிய வெங்காயம் வாங்கும்போது அத்துடன் பெரிய வெங்காயமோ அல்லது மிகச்சிறிய தூளாகிவிட்ட வெங்காயமோ கலக்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். வெறும் தோலையும் வாங்கக்கூடாது. இப்படி வாங்கிய பச்சை வெங்காயத்தை பல வாரங்கள்வரை சேமித்து வைக்கலாம். இதுவே அதைப்பதுக்கி வைக்க ஏதுவாகிறது. இதனால் இது அரசியல் வாதிகளுக்கு தேர்தல்நேரத்தில் கை கொடுக்கும் காயாக மாறிவிடுகிறது. அது சமைக்கப்பட்டு விட்டால் அதன் ஆயுள் ஓரிரு நாட்கள் தான்.

வெங்காயங்கள் பல உருவம் எடுக்கும். அது ஒரு தோழமைக்காய் . வேறே பல காய்களோட சுமுகமாக உறவாடும். முரண்டு பிடிக்காது சில காய்கறிகள்மாதிரி.

**வெங்காய வடை, வெங்காய தோசை, வெங்காய ரவா தோசை, வெங்காய ரவா மசாலா தோசை, வெங்காய சட்டினி, வெங்காய தக்காளி சட்னி, வெங்காய தயிர்ப் பச்சடி. வெங்காய ஊறுகாய் என வெங்காயம் பத்துக்கு மேலேயே பல அவதாரங்கள் எடுக்கும். நொறுக்குத்தீனிகளில் டாப் ஏற்கனவே நான் சொன்னது போன்று வெங்காய பக்கவடா.

அது தோசையோட சேந்து வெங்காய தோசைஆகும். உருளைக்கிழங்கோடு சேந்து மசாலா ஆகும். இந்த மசாலா பூரிக்கும் தோழன். தோசைக்கும் நேசன். அப்படி ஒரு காம்பினேஷன். நீ இல்லாமல் நானில்லை. நானில்லாமல் நீ இல்லை என்ற அளவுக்கு அவை இணை பிரியாத ஒரு பந்தத்தை ஏற்படுத்திக்கொள்கின்றன.

இது தவிர வெங்காய ரவா தோசையும் உண்டு , வெங்காய ரவா மசால்தோசையும் உண்டு. மசால்தோசையையும், , பூரி மசாலாவையும் பீட் பண்ணும் கூட்டணி இனிமேல்தான் பிறந்து வரணும்.
மசால் தோசைக்கு ஏற்கனவே உலக மகாரசிகர்கள் இருக்கிறார்கள். நீங்கள் ஒரு வீடியோவில், மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய அமெரிக்கன் வைஸ் பிரசிடெண்ட், கமலா ஹாரிஸ், தன் அமெரிக்க நண்பிக்கு மசால்தோசை செய்து காட்டும் வீடியோ ஒன்று வெளியானது. அந்த தோசை எப்படி இருந்தது என்று எனக்குத்தெரியாது. அதைப்பார்த்தே, எனக்கு எங்க வீட்டு மசால்தோசையை சாப்பிட்ட திருப்தி. அந்த அளவிற்கு மசால் தோசையின் மகிமை கடல் கடந்து சென்று இருக்கிறது,
அதேபோல் பூரிமசாலாவின் பெருமையை உலகறிய அமெரிக்காவில் இன்னொரு அமெரிக்க வாழ் இந்திய பெண்மணி விமலா வாரிஸ் பெரிய அதிகாரப்பொறுப்பை ஏற்கும்நாள் என்னாளோ அன்னாளே பூரி மசாலாவின் பொன்னாள்.
உருளைக்கிழங்கு வெங்காய கூட்டணிக்கு இணையான அரசியல் கூட்டணி இந்திய, ஏன் உலக அரசியலிலேயே இன்னும் உருவாகவில்லை. எந்த பிரசாந்த் கிஷோராலும் உருவாக்க முடியாது.

மசாலா கூட்டணியில் பிறந்தது தான் சமோசா. வட இந்தியாவில் இதன் ரசிகர்கள் அதிகம். ஆனால் இது நம் தமிழ்நாட்டின் இட்டிலி , தோசை, வடையுடன் போட்டி போட முடியுமா தெரியவில்லை. இதில் உ.மசாலாவின் டேஸ்ட்டை அதன் தடித்த மேல் ஓடு குறைத்து விடுவதாக என் நாக்கு சொல்கிறது,..பாவ் பாஜியில் வெங்காயம் பங்கு வகிக்கிறது . பேல்பூரியில் பங்கு கொள்கிறது, சாண்ட் விச்சில் இடம் பிடிக்கிறது. சமைக்கப்பட்ட பின் வெங்காயத்தின் ஷெல்ப் லைப் குறைவு என்பதாலே வெங்காயம் சேர்ந்த பண்டங்களை ரொம்ப நாள் வைத்து இருக்க முடியாது. அப்படி வைத்திருக்கும் அளவிற்கு அதை யாரும் விட்டு வைக்க மாட்டார்கள். இது ஸ்நாக்ஸாக வெங்காய பக்கவடாவில் மட்டும்தான் இடம்பெறுகிறது. மற்ற ஸ்நாக்குகளில் இடம் பெறுவதில்லை. குறிப்பாக தமிழ் நாட்டுத் தின்பண்டங்களில் இது அதிகமாகக் காணப்படுவதில்லை. அது எனக்குப் பெருத்த ஏமாற்றம்தான்.
எனக்குத்தெரிந்தவரையில் வெங்காயம் இட்லியுடன் நேராக சேர்வதில்லை எக்செப்ட் ஏஸ் சைட் டிஷ. சாம்பார் அண்ட் சட்டினி உருவத்தில். இதேபோன்று வடையுடன் சேர்ந்தால் வெங்காயவடை. இதற்கென்றே ஒரு ரசிகர்கூட்டம் இருக்கிறது. எனக்குத்தெரிந்த ஒரு சூப்பர்ஸ்நாக்ஸ் வெங்காய பக்கவடாதான். இதை எழுதும்போதே என் நாக்கு சப்பு கொட்டுகிறது. இந்த வெங்காய பக்கவடா சில ஆண்டுகளில் இண்டர்நேஷனல் ஸ்னேக்ஸாக டிக்ளேர் செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை., இது தவிர தினசரி சமையலில் வெங்காயம் வெகுவாக பல காய்களுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகின்றன. முந்திரி பருப்பு போட்டு அப்போதுதான், பறித்துக்கழுவிய கொத்தமல்லியைத்தூவிய வெண்பொங்கலுக்குத்தொட்டுக்கொள்ள வெங்காய கொத்சு காம்பினேஷனக்கு வேறு எதுவும் ஈடும் ஆகாது. இணையும் ஆகாது. ஆகா, ஆகா, ஆகா. வெறும் சின்ன வெங்காயத்தை நெய்யில் வதக்கி அது சூடு ஆறுவதற்குள் சாப்பிட்டு இருக்கிறீர்களா? அந்த சுகமே சுகம்..

எனக்குத்தெரிந்து வெங்காயத்துக்கு நாம் எந்த பண்டிகைகளிலும் இடம் கொடுத்தது கிடையாது. அது ஒரு காலத்தில் நம் தீபாவளிப்பண்டிகையின்போது இடம் பெற்றது வெங்காய வெடி என்ற பெயரில். ஆச்சரியமாக இருக்கிறதா? அதை எதன்மீதாவது பலமாக வீசினாலோ, ஒங்கி அடித்தாலோ அது வெடித்து சத்தம் வரும். இந்த சாக்கிலே பலர் தீபாவளியின் போது இதை வாங்கி தங்களுக்குப்பிடிக்காதவர்கள் மீது தங்கள் வன்மத்தைக் காட்டுவார்கள். இதனால்பல விபத்துகள் ஏற்படவே அதற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இன்று அது காணாமலே போய்விட்டது..

வெங்காயம், பூண்டில் மனிதர்களை மெல்லக் கொல்லும் விஷத்தன்மை கொண்ட 21 பொருட்கள் இருப்பதாக சில விஞ்ஞான ஆராய்ச்சிகள் கூறுகின்றன. (உதாரணம்: டாக்டர். ரோபர்ட் சி பெக், அமெரிக்கா அவர்களின் ஆராய்ச்சி) மேலும், மனிதனின் மூளை வளர்ச்சிக்கு இவை தடையாக இருப்பதாகவும் கூறுகின்றனர். இதைப் பற்றி நம்மில் பலரும் கவலைப்படத் தேவை இல்லை.
பூண்டும், வெங்காயமும் பல வகையான நன்மைகளைக் கொண்டிருந்தாலும் அதை தினசரி பயன்பாட்டிற்கு உட்கொள்வது நல்லதல்ல என ஆயுர்வேதம் கூறுகிறது. .
வெங்காயம் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் முக்கியமான பக்கவிளைவுகளில் ஒன்று வாய் துர்நாற்றம் ஆகும்.
An apple a day keeps the doctor away
A garlic a day, keeps everyone away
இது வெங்காயம் சாப்பிட்ட வாய்க்கும் பொருந்தும்
வலுவான வெங்காயத்தின் வாசனையானது நீண்ட நேரத்திற்கு உங்கள் வாயை விட்டு போகாது. எனவே பொது இடங்களுக்கு செல்லும் முன் அதிகளவு வெங்காயம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
முக்கியமாக பல்டாக்டரிடம் போகும்போது இதைத்தவிர்ப்பது உங்களுக்கு நல்லது. இல்லாவிட்டால் பல் டாக்டர் சாபத்துக்கு நீங்கள் ஆளாக நேரும். வெங்காயம் சாப்பிட்ட வாயை அவர் நெருங்க பயப்பட்டு ஏதாவது எசகு பிசகாக பல்லுக்குப்பதில் உங்கள் நாக்கைப் பிடுங்கிவிடலாம். அதற்கப்புறம் நீங்கள் வெங்காயத்தைப்பார்க்கத்தான் முடியுமே ஒழிய ருசித்து சாப்பிட முடியாது. அதே போல உங்கள் நட்பு நீடிக்க வேண்டும் என்றால் வெங்காய சமாசாரங்கள் சாப்பிட்டவுடன் உங்கள் நெருங்கிய நண்பன் அல்லது நண்பிகளுக்கு அருகில் செல்வதைத்தவிர்க்கவும்.

இப்படி வெங்காய மகிமையைப் பத்தி மணி கணக்கா சொல்லிக்கிட்டே போகலாம்., இன்னும் சொல்ல வேண்டியது நிறைய இருக்கு.ஆனா?
ஆனா?…… அட, கிச்சனிலிருத்து வெங்காய பஜ்ஜி வாசனை உம்..உம்...ஆளையே தூக்குதே. சரி.சரி.ஆளை விடுங்க. நான் என் பேவரிட் வெங்காயத்தை ஒரு கை பார்க்கணும், அதனாலே வெங்காய மகிமையை இத்தோட முடிச்சிக்கிறேன்.
வெங்காய சாம்பார் சாதம்
பொட டோ ரோஸ்டும் பிரமாதம்
இந்த கௌரவ பிரசாதம்
இதுவே எனக்கு போதும்
ஹஹ்ஹஹ்ஹ ஹ்ஹஹ்ஹ
ஹஹ்ஹஹ்ஹ ஹ்ஹஹ்ஹ
ஹஹ்ஹஹ்ஹ ஹ்ஹஹ்ஹ
வெங்காய பஜ்ஜி அங்கே
அதன் வாசனை வருது இங்கே
சந்தோஷம் எனக்குப்பொங்க
ஆசை வருது அதைத் திங்க
என்று மனதிற்குள் பாடிக்கொண்டே வீட்டின் கிச்சனை நோக்கி ஓடினேன்.
******************************

எழுதியவர் : ரா. குருசுவாமி( ராகு) (23-Dec-21, 6:43 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 137

சிறந்த நகைச்சுவைகள்

மேலே