பக்கவடா புராணம்

பக்கவடா புராணம்
பஜ்ஜி, சொஜ்ஜி, வடை, அடை, அப்பளம் பற்றி பல அற்புதமான அறிவு சார்ந்த கட்டுரைகளை எழுதிய நீங்கள் பக்கோடா பற்றி எழுதாதது ஏன்? அது என்ன பாவம் செய்தது . அதை ஒரு துக்கடாத் தின்பண்டம் என்று நினைத்தீர்களா? இதைத்துக்கடா என்று கேலி பேசியவர்கள் ஒரு சிலரும் அக்கடா வென்று வாய்மூடி மௌனி ஆகிவிட்டார்கள் என்பதைத் தாங்கள் அறியாததா?”என்று பக்கோடா பக்தர்கள் சங்கத்திலிருந்து ஒரு காரசாரமான கடிதம் வரவே, எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.
நம்மரியாதைக்கு உரிய ஸ்நாக்ஸ்கள் ஜியில் முடிவதால் பஜ்ஜி, சொஜ்ஜி என்று சொல்லி வருகிறோம். ஆனால் பெரியவர்களில் இருந்து சிறியவர்கள் வரை, ஆண்களிலிருந்து பெண்கள்வரை, நேற்று பல் முளைத்து பேசத்தெரிந்த குழந்தையிலிருந்து நாளைக்கே பல் தானாகவே பல் கழன்று விழுந்து விடும்தாத்தா பாட்டிகள் வரை “டா” போட்டுப்பேசும் அளவுக்குத்தாழ்ந்து போன பக்கவடாவைப்பற்றி “ஏன் அதை இவ்வளவு மரியாதைக்குறைவாக பெயர் இட்டிருக்கிறோம்” என்ற சந்தேகம் பல பக்கோடா பக்தர்களுக்கு ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் இந்த விஷயத்தில் பக்கவடா தனிமைப்படுத்தப் படவில்லை. அதனுடைய பெரியண்ணாவா இல்லே தம்பியான்னு தெரியாது, போண்டா பக்கவடாவுக்கு பக்க துணையாக நிற்கிறது. ஆனால் போண்டா பிரியர்கள் அது அவ்வாறு தாழ்த்தப்பட்டதை விரும்பாமல் அதற்கு ஏற்பட்ட இந்தக் கறையைப் போக்க அதை போண்டோ என்றும் அழைக்கின்றார்களோ என்னவோ தெரியாது, போண்டாவும் மரியாதைக் குறைவிலிருந்து தப்பியது இவ்வாறுதான். ஆனாலும் இன்றும் பலரும் இதைப் போண்டா என்று கூப்பிடுவது காது கேட்காத என் காதுகளுக்கே எட்டுகிறதென்றால் அது உண்மையாகத்தான் இருக்கவேண்டும, போண்டா பிடிக்காதவர்கள் மைசூர் போண்டோவை வெத்து போண்டா என்றும், உருளைக்கிழங்கு போண்டோவை போண்டோ என்று மரியாதையுடன் அழைப்பார்களோ என்னவோ தெரியவில்லை. நானும் பக்கோடாவின் பக்தன்தான். பஜ்ஜியின் பெரிய பக்தனாகிய நான் பக்கவடாவின் சிறிய பக்தன், உருளைக்கிழங்கு போண்டோவின் மத்யம பக்தன்.சிவ பக்தர்கள் முருக பக்தனாகவும், பிள்ளையார் பக்தனாகவும் இருப்பதில்லையா அது போல.

பக்கோடா சாப்பிடுவதற்கு மூடே தேவை இல்லை.தேவை எல்லாம் ஒரு சில பற்களே. இதை பஜ்ஜியப்போல ஏழைகளும் சாப்பிடுகிறார்கள், பணக்கார ர்களும் சாப்பிடுகின்றனர். அப்படி இருக்கும்போது இந்த தின்பண்டத்தை மாத்திரம் மரியாதைக்குறைவாக நாம் “டா” போட்டுக்கூப்பிடுவது ஏன்? ஏன்? அது ஏன்? என்று சிவாஜி பாணியில் கேட்கத்தோன்றுகிறதா இல்லையா?

ஒரு நாள் என்பையனிடம் நான் யாரையும், எதையும் டா, டி போட்டு மரியாதைக்குறைவாகப்பேசக்கூடாது என்று சொன்னதன் விளைவு அவன் என்னிடம் ஒரு நண்பன் விஜயவாங்கலில் இருந்தும் இன்னொருவன் போங்க நாயக்கனூரில் இருந்தும் வந்ததாகச்சொல்லவே நான ஃப்யூஸோ, கன்ஃப்யூஸோ ஆகிவிட்டேன். என்னடா உளறுகிறாய் என்று கேட்ட உடன் அதுவரையில் என்னை டாடி என்று கூப்பிட்டு வந்தவன் திடீரென்று அப்பா என்றழைத்து “ நீங்கள்தானே. யாரையும் டாவோ, டியோ போட்டுமரியாதைக்குறைவாகப்பேசக்கூடாது”என்று சொல்லிக் கொடுத்து இருக்கிறீர்கள்” என்றான். அப்பொழுதுதான் எனக்குப் புரிந்தது அவன் சொன்னது. அதாவது ஒருத்தன் விஜயவாடாவிலிருந்தும் இன்னொருத்தன் போடி நாயக்கனூரில் இருந்தும் வந்திருக்கிறான் என்று. அதேபோல் டா, டி போடாமல் டாடியை அப்பா என்று அழைத்து இருக்கிறான் என்றும் புரிந்தது. சரி. பக்கவடா மன்னிக்கவும். நமக்கு ரொம்ப வேண்டியவர்களை நாம் டா, டி போட்டுக் கூப்பிடுவது இல்லையா? அதேபோல நமக்கு நொறுக்கமான, சாரி , நெருக்கமான தின்பண்டத்தை டா போட்டு பக்கவடா என்றே கூறுவோம்.

பக்கவடா எல்லோருக்கும் ஒரு என்டர்டெயின்மென்ட், ரெ.ஃப்ரெஷ்மென்ட், டிபன். டிபன் என்று சொல்வதைவிட ஸ்நாக்ஸ் என்று மரியாதையாக சொல்லலாம். தமிழை விட ஆங்கிலம் அல்லது புரியாத வேறே ஒரு பாஷையில் சொல்லும்போது அந்தப் பண்டத்திற்கும் அதைச்சொல்பவர்களுக்கும் மதிப்புக்கூடுகிறதல்லவா? ஆனால் பக்கவடாவிற்கு இங்கிலீஷ்லே என்ன பேர் வெச்சி கூப்பிடறாங்க, அல்லது கூப்பிடுவாங்கன்னு என்னாலை இன்ஃபர் பண்ண முடியல்லை.அதை எந்த பாஷையில சொன்னாலும் அதுகோபித்துக் கொள்ளப் போவது இல்லை.. இருந்தாலும் பழக்க தோஷம்னு ஒண்ணு நம்ம நாட்டுலே, குறிப்பா தமிழ் நாட்டுலே இருக்கே. அந்தப்பழக்க தோஷத்தினால் இது எங்கிருந்து வந்தது. இது தமிழ் தின்பண்டம்தானா? அல்லது வடநாக்கு, மன்னிக்கவும், வடநாட்டுத்தின்பண்டமா என்ற ஆராய்ச்சியில் இறங்கினேன். தமிழ்நாட்டுத் தின்பண்டம் என்றால் சங்க கால புலவர் பன்னெடு பெரும் குடல் வேள்வன் என்ற சமையல் புலவன் பக்கோடா பற்றி என்ன சொல்லி இருக்கிறார் என்று தண்ணி அதன்மீது படாமல் அலசலாம். ஆனால் இது வந்தேறி பலகாரமாக இருக்குமோ என்ற சந்தேகம் பல அறிஞர்களுக்கு ஏற்பட்டு விட்டதால் இதை விளக்க நான் கடமைப்பட்டு இருக்கிறேன்.
முதல் சந்தேகம் இது பக்கோடாவா, பக்கவடாவா? வாஸ்கோடகாமாவுக்கும் இதற்கும் ஏதாவது சம்மந்தம் இருக்குமா தெரியவில்லை.. ஆனால் புத்தருக்கு மிகவும் பிடித்த நொறுக்குத்தீனி இதுதான் என்று நான் தீர்மானித்தேன் இல்லாவிட்டால் ஏன் புத்தருக்கான கோவில்களை பகோடா என்று சொல்கிறார்கள்? மேலும் வடை , சாரி வடநாட்டில் வடையை வடா என்று சொல்வது வழக்கமாக இருக்கிறது, வடா பாவ் என்று கேள்விப்பட்டு இருப்பீர்களே ,அது போல. எனவே இது ஒரு வடநாட்டுப் பலகாரம் தமிழ்நாட்டிற்குள் புகுந்து விட்டது என்பது தெள்ளத் தெளிவாகிறது.
ஒரு காலத்தில் இந்த பக்கவடா மாவை சிறு சிறு வடைகளாகத்தட்டி வாணலியில் கொதிக்கும் எண்ணெயில் சித்திர குப்தன் தப்பு செய்தவர்களை போடுவது போல போட அந்த வடைகள் சோ என்று சூடு தாங்காமல் குரல் எழுப்பி அடங்க சிறிது நேரத்தில் அது தன் சுய நிறத்தை இழந்து ஒரு பொன் நிறத்தை அடைந்து நான் சரியான ( சிவ) பதம் அடைந்துவிட்டேன் என்று அந்த நிறத்தின் மூலம் அறிவிக்க அதை அப்படியே கண்களுள்ள கரண்டியில் எடுத்து எண்ணையை ஓரளவுக்கு வடிய விட்டு ஒரு தட்டிலோ இல்லை பாத்திரத்திலோ போடுவதுதான் வழக்கமாக இருந்து இருக்கும். பிறகு வந்தவர்கள் சோம்பேறிகள் ஆகிவிடவே அதை வடையாகத்தட்டி சாப்பிடுவதைவிட, விரல்களுள் அடங்கும் ஷேப்லெஸ் சிற்றுருண்டைகளாக செய்து வாணலில்போட்டு பொறித்து எடுக்கும் பழக்கம் வந்து இருக்கவேண்டும்., அதனால்தான் பக்க வடா என்ற பெயர் வந்து இருக்கவேண்டும்.அது பாரப்பதற்கு, கொஞ்சம் கொரோனா வைரஸ் டெல்டா மாடிபிகேஷன் போல் இருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
எனவே என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் இது தமிழ் நாட்டின் பலகாரம் அல்ல. இதைப்பற்றி கம்பனோ, ஒட்டக்கூத்தனோ, சேக்கிழாரோ, ஔவையோ தங்கள் பாடல்கள் எதிலும் குறிப்பிடவில்லை. இது என்று தமிழ் நாட்டுக்குள்ளும், தமிழர் நாவுக்குள்ளும் புகுந்தது என்று தெரியவில்லை். கைபர் கணவாய் வழியாக வந்ததா, இல்லை போலன் கணவாய் வழியாக வந்ததா தெரியவில்லை. இதை எந்த இங்கிலீஷ் அறைகுறை மேதைகளும் இதுவரையிலும் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் அது அப்பட்டமான அபத்தமாக இருந்தாலும் அதை லபக் என்று பிடுத்துக்கொண்டு அதிலேயே தங்கள் காலத்தை ஓட்டக்கூடிய கெட்டிக்காரத்தனம் நம் தமிழர்கள் சிலருக்கு மட்டும் உண்டு. ராமரோ, லட்சுமணனோ, சீதையோ இதை சாப்பிட்டதாக எந்தக்குறிப்பும் இல்லை. சபரி கூட ராமரின் வனவாசத்தின்போது அவருக்கு ஒரு சேஞ்சுக்காக இந்த ஸ்நாக்ஸ் அளித்ததாக வரலாறு இல்லை. அதேபோல் கிருஷ்ணன் வெண்ணெய் திருடிய வரலாறு உண்டே ஒழிய, பக்கோடாவை திருடி சாப்பிட்ட வரலாறு கிடையாது. பீமனாவது பக்கவடா சாப்பிட்டானா என்பதற்கும் ஒரு ஆதாரமும் இல்லை. பீமன்தான் அவியலைக்கண்டு பிடுத்தான் என்று ஒரு ஆராய்ச்சியாளர் கணடுபிடித்தார் என்று நான் அறிந்தேன்.ஆனால் பீமனுக்கும் பக்கவடாவுக்கும் கட்டாயம் எந்த சம்பந்தமும் இருக்க முடியாது. ஏனென்றால் பீமனுக்கு பக்கவடா என்பது யானைப் பசிக்கு சோளப் பொறியாகத்தான் இருந்து இருக்கும். ஒரு வேளை இது அசோகர் காலத்திய தின்பண்டமாக இருக்கலாம். ஏனென்றால் இவர் புத்த மதத்திற்கு மாறி அம்மதத்தைப் பரப்பி புத்தருக்கு பகோடாக்கள் கட்ட காரணமானார்.

சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்பதுபோல அக்கடான்னு இருந்த எங்களுக்கு பக்கவடா ஆசையைத்தூண்டி விட்டு இப்போ பக்கவடாவைப்பத்தி வெறும்பேச்சு பேசி உசுப்பேத்திவிட்டீர்களே என்கிறீர்களா? எனக்கு ஒரு கெட்ட வழக்கம். எந்த சப்ஜெக்டா இருந்தாலும் அதை ஆதியோடந்தமாக அலசறது என்னோடஹாபி(ட்).. இந்த பக்கோடா என்ற வார்த்தை தமிழ் அல்ல. முதலில் இது பக்கோடாவா, பக்கவடாவா என்பதைக்கண்டறிய வேண்டும். ஒரு சாரார் ஆராய்ச்சியின்படி இது பக்கவடா என்ற சம்ஸ்கிருத சொல்லில் இருந்து வந்திருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. பக்கோடாவின் புக்ககம் நம்ம நாடுதான்.
இன்னொரு கூட்டம் பக்கம்வடா என்ற சொல்லிலிருந்துதான் இது வந்து இருக்க வேண்டும் என்ற ஒரு வாதத்தை வைத்து இருக்கிறது. அது எதுவாக வேண்டுமானாலும் இருந்து தொலையட்டும். பக்கவடா பற்றிய பழமொழிகள் இருக்கின்றனவா என்று ஆராய்ந்த போது அப்படி எதுவும் என் காடரேக்ட் ஆபரேஷன் ஆன கண்களுக்குத் தெரியவில்லை. அப்படி இன்றேல் பக்கவடாப்பிரியர்களைக்கேட்டு பக்கவடா பற்றிய புது மொழி ஏதாவது இருக்கிறதா என்று அலசியபோது கிடைத்த பக்கவடா மொழிகள் இதோ

1.வெறும் வாய்க்கு மெல்ல பக்கவடா கிடைத்தாற்போல
2.பக்கவடா கடிக்காத பல்லென்ன பல்லே
3. “நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி
பக்கோடா மெல்லுவது பல்லுக்கு உறுதி
4.சுக்குக்கு மிஞ்சிய சுருக்கு மருந்தும் இல்லை
பக்கவடாவுக்கு மிஞ்சிய நொறுக்குத்தீனியும் இல்லை
5. நொறுக்குத்தீனிகளில் ராஜா பக்க வடா
இதற்கு இணை வேறு ஏதேனும் உண்டாடா?
எனக்குத்தெரிந்த வரையில் பக்கவடாவை சாப்பிட ஆரம்பிப்பவர்கள் லேசில் தட்டை கீழே வைக்கமாட்டார்கள். சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். அப்படி ஒரு வரம் அது வாங்கி வந்து இருககிறது. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. இந்தப்பழமொழி பக்கவடாவுக்குப் பொருந்தாது. பக்கவடா சாப்பிடுவதை நிறுத்த ஒரு வைராக்கியம் இருந்தால் ஒழிய நாக்கு ஓயாது. இதற்கான வார்னிங் சிக்னல் வயற்றிலிருந்து தான் வர வேண்டும்.அல்லது டாக்டரிட்டமிருந்து வர வேண்டும். பக்கவடா பிடிக்காதவர்களும், தின்னாதவர்களும. இம்மாவுலகில் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அதன் மணம், குணம், மொறுமொறுப்பு, விறுவிறுப்பு அதைச்சாப்பிடும்போது ஏற்படும் சுறுசுறுப்புக்கு வேறு ஈடும் இணையும் உண்டோ. இவ்வளவு இருந்தும, வடைக்கு நம நாட்டில் கிடைக்கும் மரியாதை பக்கவடாவுக்கு ஏன் கிடைப்பதில்லை? பண்டிகைகள்,
விசேஷங்களின்போது வடை செய்கிறார்கள், ஆனால் எந்தப்பண்டிகைக்கும் , விசேஷத்திற்கும் பக்கவடா செய்வதில்லையே என்ற சந்தேகம் என்னுடைய பல நாள் தூக்கத்தை கெடுத்து இருக்கிறது.

சரி் அது கெட்க்கட்டும், ,வடையை விட பக்கவடா செய்வது மிகவும் சுலபம் என்று என் நண்பன் தன் அனுபவத்தில் சொல்கிறான். . எனக்குத்தெரிந்த பலர் வடை செய்தால் அது கிரிஸ்பியாக இல்லாமல் நமத்துப்போய் வடைக்கும் அந்த வடை செய்வோருக்கும் கெட்ட பெயர் வாங்கித் தந்து விடுகிறது. அதனால் அடிக்கடி டிவி சமையல் ப்ரொங்க்ராம்களில் மெஜாரிட்டியான வடை மாணவர்களும், மாணவிகளும் எப்போதும் கேட்கும கேள்வி ஓட்டல்களில் செய்வது போல் வடை அவ்வவளவு கர கரவென்று வரமாட்டேன் என்கிறதே . ஏன்? என்ற கேள்விதான். ஆனால் பக்கவடா பற்றி யாரும் அந்த மாதிரி கேள்வி எழுப்பவில்லை. காரணம் பக்கவடா செய்வது ரொம்ப சுலபம். அதை மொறு மொறு என்று இல்லாமல் சொதப்பலாக செய்வது தனிக்கலை. வடை மாதிரி மாவு கஷ்டப்பட்டு பதமாக அறைக்கும் வேலை பக்கவடாவில்இல்லை. ஒரு குழந்தை கூட செய்துவிடும். ஆனால் அது பீரோ ஆப்( BSIS) இந்தியன் ஸடாண்டர்ட் ஃபார் மானுபேக்சரிங் பக்கவடா அளவுக்கு இருக்குமா என்று நீங்கள் சந்தேகப்படலாம்.

சரி .இப்போது பக்கோடா பக்தர்கள் ஏன் பக்கோடாவை எந்த அளவு விரும்புகிறார்கள் என்று பார்ப்போம். நான் என்முதல் ஓட்டை வடைக்குப்போட்டாலும் பக்கவடாவுக்கும் என் நாக்கில் தனி இடம் உண்டு. பக்கவடா மொறு மொறுவென்று வாயில்போட்டு இரண்டு வரிசைப்பல்களுக்கிடையே அதை நறநறவென்று கடிப்பதன் சுகமே சுகம். அதை நினைக்கும்போதே என் வாயில் உமிழ்நீர் பகீரதன் இறக்கிய கங்கை மாதிரி சுரக்கிறது. இதற்கு அணை போடாவிட்டால் வயற்றிற்குள் பிரளயம் ஏற்படப்போவது உறுதி. எதுவும் அளவு கடந்தால் ஆபத்து தான். பக்கவடா மாத்திரம் சூடான ஜோக் போல் இருந்தால்தான்சுகம். ஆறி நமத்துப்போய்விட்டால் அது நமத்துப்போன .ஜோக்காகிவிடும். திருடித்தின்பது சுகம் என்பார்கள். ஆனால் பக்கவடாவை மட்டும் திருடியவன் அங்கேயே அமைதியாக சாப்பிடமுடியாது.. மொறு மொறு வடை அது எவ்வளவு மொறுமொறுப்பாக இருந்தாலும் நாம் சாப்பிடும் போது சத்தம்போடாது. ஆனால் பக்கவடா கேஸ் அப்படி இல்லை. அது மொறுமொறுப்பாக இருந்து விட்டால் அதை சாப்பிடும் சத்தம் அடுத்த வீட்டுக்கே கேட்கும் அதுவும் வெங்காய பக்கவடாவாக இருந்து விட்டால் கேட்கவே வேண்டாம். அதன் வாசனையே அதைக் காட்டிக் கொடுத்து விடும். அந்தக்காலனிவாசிகள் உடனேயோ அடுத்தநாளே வெங்காய பக்கவடா பற்றி உங்களிடம் விசாரணை செய்யாமல் விடமாட்டார்கள். சில சமயம் அந்த வாசனையில் மகிழ்ந்து போலீசும் நாயுடன் உங்க வீட்டுக்கு வரலாம்.

அப்படித்தான் நான் க்வாரன்டைனில் மாட்டிக்கொண்டு சென்னையில் என்தம்பியின் .ஃப்ளாட்டில் இருந்தபோது வீட்டின் கதவைத் திறந்து கொண்டு அங்குள்ள வராண்டாவில் வாக் போகும்போது 20 க்கு 7 வீடுகளில் 10 க்கு 7 நாட்கள் இந்த வெங்காய பக்கவடா வாசனை என் வாக்கிங்கை வீக்கிங் அதாவது வீக் (ஸ்லோ) செய்து விடும். செய்து விட்டிருக்கிறது. அப்போதுதான் எனக்கே தெரிந்தது நான் எந்த அளவுக்கு பக்கவடா பக்தன் ஆனேன் என்று.

என்னுடைய நெடு நாளைய சந்தேகங்களில் இதுவும் ஒன்று. நாம் நமக்குப் பிடித்தவைகளை ஆண்டவனுக்கு படையலாக அர்ப்பணிக்கிறோம். இது நம் நாட்டின் தொன்று தொட்டு வந்த பழக்கம் அதன்படிதான் கோவிலில்களில் நாம சுவாமிக்கு வடை மாலை போடுகிறோம். அந்த வடைக்காகவே ஸ்பெஷலாக நாம் சில வேண்டுதல்கள் செ்ய்து கொள்கிறோம். ஆனால் ஏன் யாரும் பிள்ளையாருக்கோ, அனுமாருக்கோ, இல்லை வேறு எந்த குட்டி தெய்வங்களுக்கோ பக்கவடா மாலை போடுவதாக வேண்டிக்கொள்வதில்லை என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் இதை எந்த பக்தனும், என்னையும்சேர்த்து, அதை யாரும் தவறாக எடுத்துக்கொள்வதில்லை. அவை தெய்வ பிரசாதங்கள் ஆகிவிடுகின்றன. ஆனல் பஜ்ஜிக்குப் பெயரளவில் நாம் மரியாதை கொடுத்தால்கூட அதை எந்த சுவாமிக்கும் மாலையாகப் போடுவதில்லை. இது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. . பல பக்கவடா பக்தர்களுக்கும் புரியவில்லை. இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒரு நாள் பக்கவடாவுக்கும் விடியல் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒருகாலம் வரும் என்பது போல, வடைக்கு ஒருகாலம் வந்ததுபோல் பக்கவடாவுக்கும் ஒரு காலம் வராமலா போய்விடும். நான் இப்போதே ஏதாவது ஒரு கடவுளுக்கு பக்கவடா மாலை போடக் காத்திருக்கிறேன்.. ஆனால் அதை ஏற்றுக்கொண்டு மாலையாக கடவுளுக்குப் போட்டு மரியாதை செய்வதற்கு எந்தக்கோவிலும் தயாராக இல்லை என்று அறியும்போது என் மனம் ஊசிப்போன பக்கவடாவாக மாறிப்போனது. என்பக்தியையே சந்தேகிக்க ஆரம்பித்து விட்டார்கள், காலம் வரும்வரை காத்திருப்போம். வேறு என்ன செய்ய?


பறவைகள் பல விதம். ஒவ்வொன்றும் ஒரு விதம், வடைகளும் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பது போல பக்கவடாக்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் அதற்கு முன்பாக பக்கவடா செய்யும் பக்குவத்தை தெரிந்து கொண்டால்தான் அதை நம்மால் ரசிக்கமுடியும்

என்னுடைய பேவரிட் வடைதான் எனஃறாலும் வயசாக ஆக எனக்கு பக்கவடா மீது சபலம் தட்ட ஆரம்பித்தது. அதுவும் முதலில் சொன்னது போல இந்த க்வாரன்டின் சமயத்தில் அந்த சபலம் அதிகரித்து விட்டது. ஆனால் என்னவோ தெரியவில்லை இந்த பாழாய்ப்போன டாக்டர்களுக்கு, அவர் அல்லோபேதி- இல்லை, இல்லை, மன்னிக்கவும், அல்லோபதியாக இருந்தாலும் சரி, ஆயுர்வேதமாக இருந்தாலும் சரி, இல்லை சித்த வைத்தியராக இருந்தாலும் சரி எல்லோரும் சொல்லி வைத்தாற்போல பொறிச்ச ( பொரிச்சவா இல்லை பொறிச்சவா? அதிகமாகப் பொரித்து விட்டால் அது பொறித்ததாக ஆகிவிடும் என்று என் தமிழ் அறிவு எனக்குச்சொல்கிறது) , அப்பளாம், வடை போன்ற எண்ணை பதார்த்தங்களை தவிருங்கள் என்று சொல்லிவிடுகிறார்கள். ஆனால் எந்த டாக்டரும் பக்கவடாவைப்பற்றி சொல்வது இல்லை டாக்டர்களுக்கும் பக்கவடாவுக்கும் ஏதாவது ரகசிய ஒப்பந்தம் இருக்குமோ? இவர்கள் பேச்சை நம்பி வாழ்நாளின் பெரும்பகுதியை எண்ணை பதார்த்தஙகளை அறவே அவாய்டு செய்து என் வாழ்நாளை வீண டித்துக் கொண்டு விட்டேன். இந்த முதிய வயதில் டாக்டர்கள் எண்ணை பதார்த்தங்களை சாப்பிட வேணடாம் என்று சொல்லச்சொல்ல சபலம் அதிகரிக்கிறது . என்ன செய்ய?
வடை என்றவுடன் என்நாக்கில் எவ்வளவு எச்சில் சுரக்குமோ அவ்வளவு எச்சில், பக்கவடா என்றவுடனும் சுரக்க ஆரம்பிக்கிறது. எனவே வடைக்குத்தரும் மரியாதைக்கு அடுத்தபடியாக பக்கவடாவுக்கு தர ஆரம்பித்தேன்.. பக்கவடா வடையையும் விட அதிகமாகவே பல சிறு கடைகளிலும் ரோட்டோரக்கடைகளிலும் கிடைக்கிறது . என்றாலும் அதை சுடச் சுட சாப்பிடுவதில் உள்ள சுகம் பொட்டணம் கட்டி வீட்டுக்கு எடுத்துப்போய் அது ஆறிய பிறகு சாப்பிடுவதில் இல்லை. இருந்தாலும் வடையின் கதையை செய்த இரண்டு மூன்று நாட்களுக்குள்ளேயே முடிக்காவிட்டால் அது ஊசிப்போய் நம் வயிற்றின் கதையை முடித்து விடும்.ஆனால் அந்த பிரச்சினை பக்கவடாவுக்கு இல்லை. வெகு நாட்கள் அது கெடாது. நல்ல டைட்டாக மூடின பாத்திரத்திற்குள் வைத்து இருந்தால் அது நெடு நாள் மொறுமொறுவென இருக்கும். விதிவிலக்கு வெங்காய பக்கவடா ஆனால் வெங்காய பக்கவடா செய்து இதை மூன்று நாள் வரையிலும் எந்த ஜென்மமாவது விட்டு வைககுமா.? அப்படி விட்டு வைத்தால் அது ஏதோ ஒரு கோளாறு கேஸ்.
எனவே கரகர பக்க வடாவை ஒவ்வொன்றாக மென்று தின்று அதன் மொறுமொறுப்பை அனுபவிக்கலாம். வடையில் அப்படி கிடையாது. ஒரு பொட்டண பக்கவடாவை பையில் போட்டுக்கொண்டு கொரித்துக்கொண்டே போகலாம் ஆனால் வடையிடம் அது நடக்காது, பக்கவடாவின் கரகரப்பு வயத்துவலிக்கார்ர்களைத்தவிர வேறு எப்பேற்பட்ட மனிதர்களையும் கிரங்க அடிக்கும். வெங்காய பக்கவடாவின் சுவையே சுவை. அதே போல் முந்திரி பக்கவடா. அதற்கு இரங்காதார், வேறு எந்த பட்சணத்திற்கும் இரங்க மாட்டார்கள்.
சில பக்கவடா எதிர்ப்பாளர்கள் கடலைப்பருப்பு உடம்புக்குக்கெடுதல், கடலை எண்ணெய் உடலுக்குக்கெடுதல் என்று அதன் மணம், குணத்தைக்கண்டு பொறாமைப்பட்டு அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் அல்லது பக்கவடா சம்பந்தப்படாது வேறு ஏதாவது தின்பண்டம் விற்கும் தொழிலில் ஈடுபட்டு இருப்பார்கள். எனவே இவர்கள் பொறாமை காரணமாக எதிர்ப்பார்கள். இந்தப் பொறாமை காரணமாகத்தான் ஒரு முன்னாள் மத்திய மந்திரி பக்க வடாத்தொழிலை நக்கலடித்து இருக்கிறார். எனக்குத்தெரிந்து ஒருவர் நல்ல நறுமணமும் தரமுமான பக்கவடா தொழில் ஆரம்பித்து வியாபாரம் பல்கிப் பெருகி இன்று சரவணபவன் அளவிற்றுப் பெரிய அளவில் வளர்ந்து இன்கம் டாக்ஸின் கவனத்தைத்தன் பக்கம திருப்பும் அளவுக்கு வளர்ந்து விட்டது என்றால பக்கவடா தரும் வளர்ச்சிக்கு ( உடல் வளர்ச்சியை சொல்லவில்லை. தொழில் வளர்ச்சியை சொல்கிறேன்) வேறு என்ன உதாரணம் வேண்டும்? இந்தத் தொழிலில் அகில இந்தியா அளவிலும், உலக அளவிலும் தங்கள் தொழிலை விஸ்தரித்தவர்களும் இருந்து இருக்கிறார்கள். இது இன்டர்நேஷனல் ஸ்நாக்காக கொஞ்ச நாளில் பிரமோட் செய்யப்பட்டு ஃப்ளைட்களில் வெறும் வறுத்த கடலைக்குப பதிலாக நிலக்கடலை பக்கோடா கொடுக்கப்படலாம். பக்கவடா தயாரிக்க மெஷின்கள் வரலாம். பக்கவடா வியாபாரம் ஓகோ என்று கொடி கட்டிப் பறக்கும் காலம் வரும். ( எங்களுக்கும்காலம் வரும,. காலம் வந்தால் வாழ்வுவரும் ; வாழ்வு வந்தால் அனைவரையும் பக்கவடா சாப்பிட வைப்போமே என்ற பாட்டு ஞாபகம் வருகிறதா?)இது புரியாமல் இந்த மாதிரி தொழில்களை கேவலப்படுத்தும் சில மந்தி( ரி) களும, இருக்கிறார்கள்.இவர்களிடம் இருந்து விரைவில் பக்கவடாக்கள் போன்ற தின்பண்டங்கள் விடுதலை பெற்றால் தான் நம்நாடு பகோடாக்கள் நிறைந்த நாடாக மாறும். நான் சொல்லும் இந்த “பகோடா” பழைய கால தங்க நாணயத்தைக் குறிப்பது. (தங்கத்தாலோ அரைத் தங்கத்தாலோ உருவாக்கப்பட்ட பகோடா (Pagoda) என்ற நாணயம் பல்வேறு காலங்களில் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டுள்ளன). இன்னும் கொஞ்ச நாட்களில் மாக்டொனால்டுக்கு போட்டியாக , பர்கர் கிங்குக்குப்போட்டியாக, பிட்சா ஹட்டுக்குப்போட்டியாக, பகோடா பாலஸ் என்று ஒன்று வராவிட்டால் என்னை ஏன் என்று கேளுங்கள். அப்போது நான் பதில் சொல்கிறேன்
யாராவது வளவளவென்று பேசுபவர் உங்களைப்பர்க்க வந்து விட்டார்களா அவருக்குத் ஒரு ப்ளேட் பக்கோடாவை முன்னால் வைத்து விடுங்கள். அவர் பேசுவது குறையும், ஏனென்றால் அவர்பேசுவதைவிட பக்கவடா சாப்பிடுவதில் அவர் நாக்கு திசை திரும்பி. விடும். மூளைச்சலவை என்று சொல்கிறார்களே, இதுமாதிரி இது ஒரு வகையான நாக்குச்சலவை என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

உளுந்துவடை ("உளுந்தவடை") அல்லது மெதுவடை என்பது நம் வடை வகைகளுள் ஒன்று.. இந்த மெது வடைக்குப் பக்கத்தில் கடித்துச் சுவைக்கும் பொருட்டு கடின "வடை" ஒன்று ஒரு காலத்தில் வைக்கப்படுவது உண்டாம். அதைப் பக்கவடை என்றனராம். பார்ப்பதற்கு வடைபோன்று இருக்கும் பலகாரம் அது. பக்குவமான வடை என்றும் அதுதான் பக்கவடாவாக மாறியது என்றும் அவரவரகளுக்குத்தோன்றிய முறையில் இதற்கு நாமகரணம் செய்து இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம். ஏனைன்றால் நம்ம ஊர் வழக்கமும் அதுதானே. இன்னும் அந்தப் பெயரில் கட்சிகள் தோன்றாதது நாம் செய்த பூர்வ ஜன்ம புண்ணியமோ என்னவோ.
வடைக்குப் பக்கத்தில் வைப்பதற்குரிய பலகாரம்- பக்கவடை- எனற பொருளில் , தோன்றியது பக்கவடாவாக இருக்கும் என்பது ஒரு வடைஞரின் கண்டுபிடிப்பு. இதையே ஒரு பக்கோடா ஆராய்ச்சி மன்னர் தன் பி.ஹெச்.டி தீசிஸில் தெளிவாக மொறு மொறுவென்று குறிப்பிட்டு இருக்கிறார். அதில் அவர் சூடான பக்கவடா பற்றியும், ஆறிய பக க வடாவினால் ஏற்படும் கெடுதல்கள் குறித்தும தம் கற்பனையை ஓடவிட்டு பக்கவடா திலகம. என்ற பட்டத்தையும் அரசு அவருக்கு வழங்கி கௌரவித்தது நினைவு இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.

இப்போது யாரும் பக்கவடை என்று சொல்வதில்லை என்று நினைக்கிறேன்.. பக்கொடா, பக்கடா என்றுதான் சொல்கிறார்கள்.எந்தப் பக்கவடாவாக இருந்தாலும் அது பொன்முருவலாக ( முறுவலா இல்லை முருகலா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதைப் பார்த்த உடன் புன்முருவல் தோன்றினால் முருவல் என்று வைத்துக் க்கொள்ளலாம்) இருப்பது அவசியம்.

வடைக்கும், அடைக்கும்கூட தொட்டுக்கொள்ள சட்னியோ, அவியலோ, வெல்லமோ ஏதாவது தேவைப்படும். ஆனால் நம்ம பக்கவடாவுக்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவை இல்லை. அதெப்படி? தொட்டுக்கொள்ள ஏதாவது தேவை என்றால் கல்யாணம் ஆனவர்கள் தங்கள் மனைவிமார்களை பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு அவர்களைத்தொட்டுக்கொண்டு சாப்பிடலாம் கல்யாணம் ஆகாதவர்கள் தங்கள் பக்கத்தில் இருப்பவர் ஆட்சேபம் சொல்லாமல் இருந்தால் அவரைத்தொட்டுக்கொண்டு சாப்பபிடலாம்.

பக்கவடாக்கள் பலவிதம் எனறு பார்த்தோம். அவையாவன:
சாதா பக்கவடா ( இது நம்மைப் போன்ற சாதா, சாது மக்களுக்கு)
வெங்காய பக்கவடா ( வெங்காய விரும்பிகளுக்கு)
முந்திரி பக்கவடா ( வசதியும் பல்லும் உள்ளவர்களுக்கு)
வேர்க்கடலை பக்கவடா ( முந்திரி கட்டுப்படியாகாதவர்களுக்கு)
பாசிப் பருப்பு பக்கவடா( பாசிப்பருப்பு ரசிகர்களுக்கு)
கடலைப்பருப்பு பக்கவடா( க.ப.விரும்பிகளுக்கு)
மெது பக்கவடா ( வயதானவர்களுக்கும் பல்போனவர்களுக்கும்)
தூள் பக்கவடா ( தூள் கிளப்புபவர்களுக்கு- நிறைய பேருக்கு இது பிடிக்கும் இதன் மொறு மொறுப்புப்பிடிக்காதவர்கள் பல் இருந்தும் பிரயோசனமில்லை.. எனக்கும்தான் தூள் பக்கவடா ரொம்பப் பிடிக்்கும் .இதைச்செய்ய நீங்க பக்கவடா செய்வதில் எக்ஸ்பர்டாக இருக்கக்கூடாது.)
கீரை பக்கவடா
கார்ன் பக்கவடா
பிரெட் பக்கவடா
பாகற்காய் பக்கவடா
(இந்தக்கடைசி நான்கும் நாக்கு தடித்தவர்களுக்கு)
இந்த லிஸ்டைப்பார்த்த ஒரு கிழவி” ஏம்பா, இவ்வளவு வகை பக்கவடா இருக்கே. வயசானவங்க. எங்களுக்கு ஏத்தாப் போல தயிர்வடைமாதிரி, தயிர்பக்க வடா இல்லையா என்று போட்டாரே ஒரு போடு. பக்கவடா பக்தர் சங்கம் இந்த நீண்ட நாக்குக்கோரிக்கையை கவனிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். மற்றபடி பக்கவடா செய்யும் முறையை நீங்கள் டிவியிலோ, வீடியோவிலோ அல்லது இன்டர்நெட்டிலோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். எனக்கு பக்கவடா சாப்பிட மாத்திரம்தான் தெரியும்.
இதைப்பற்றி இன்னும் விவரமாக எழுதிக்கொண்டே போவேன். ஆனால் நான் ஒன்று சொல்லப்போக நீங்க ஒன்று செய்து ஏதாவது எசகுபிசகாக ஆகி பிறகு நீங்கள் செய்த அந்த கல் பக்கவடாவினால் என்னை அடித்து வீழ்த்திவிட்டால் என்ன செய்வதென்று பயந்து இத்துடன் பக்கவடா புராணத்தை முடித்துக் கொள்கிறேன்.
***********
இது வெறும் நகைச்சுவைக்காக மட்டும் எழுதப்பட்டு இருக்கிறது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை. யார் என்ன சொன்னாலும் எதிலும் கோளாறு கண்டு பிடிப்பவர்கள் பெருகிவிட்ட இந்த நாட்டில் இந்த நேரத்தில் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது நான் பக்கவடா பக்தன் மாத்திரம் இல்லை. தீவிரமாக நம் கடவுளர்களை நம்பும் பக்தன். எனவே யார் மனமாவது புண்பட்டிருந்தால் என்னை மன்னித்து விடவும்
*************************

எழுதியவர் : ரா. குருசுவாமி ( ராகு) (23-Dec-21, 6:28 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 71

சிறந்த நகைச்சுவைகள்

மேலே