மூளையுள் ஓடிடும் மூர்க்கம் - கட்டளைக் கலித்துறை

கட்டளைக் கலித்துறை

மூளையுள் ஓடிடும் மூர்க்கந்தான் வாழ்வில் முதலுனக்காம்;
ஏளன மாக யெவரையும் முட்டாளே எண்ணிடாதே!
ஆளென மாண்புடன் ஆற்றலாய் வாழ்தல் அறிவுடைமை;
நாளுமே ஒன்றி நலம்வாழ்ந்தால் யாவர்க்கும் நற்பயனே!

- வ.க.கன்னியப்பன்

கட்டளைக் கலித்துறை:

நான்கு அடிகளும் அடிக்கு ஐந்து சீரும் உடையது.

இதற்கு எழுத்துக் கணக்கு உண்டு.

நேரை முதலாக உடைய அடியில் ஒற்றை நீக்கிப் பதினாறு எழுத்துக்களும்,

நிரையை முதலாக உடைய அடியில் பதினேழு எழுத்துக்களும் அமைய வேண்டும்.

ஆசிரியச் சீர், வெண்சீர் என்னும் இரு வகைச் சீர்களே இந்தப் பாடலில் வரும்;

அதாவது மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர் என்பனவே வரும்.

ஒவ்வோரடியிலும் கடைசிச் சீர் மாத்திரம் விளங்காய்ச் சீராக இருக்கும்;

மற்ற சீர்களில் காய்ச்சீர் வந்தால் மாங்காய்ச் சீர்களாகவே இருக்கும்.

ஒவ்வோர் அடியிலுமுள்ள ஐந்து சீர்களிடையிலும் வெண்டளை அமைய வேண்டும்.
இது மிகவும் முக்கிய மானது.

முதலடியின் ஈற்றுச் சீருக்கும், அடுத்த அடியின் முதற் சீருக்கும் இடையே வெண்டளை இருக்க வேண்டியதில்லை.

நேரை முதலாக உடைய பாட்டில் இங்கும் வெண்டளை இருக்கும்.

வெண்டளை மேலே சொன்ன வகையில் வந்து, ஐந்து சீர்களில் ஈற்றுச் சீரில் மட்டும் விளங்காய்ச் சீர் வந்து அமைந்தால் எழுத்துக் கணக்குச் சரியாக இருக்கும். இறுதிச்சீர் ஏகாரத்தில் முடியும்.

கலித்துறைகளில் ஐந்தாம் சீரில் மோனை அமைவது சிறப்பு.

1, 3, 5 சீர்களில் மோனை அமைவது மேலும் சிறப்பு.

எவ்வகையான பாவிலும், பாவினத்திலும் சீர்களைக் கண்டபடி வகையுளி செய்தல் கூடாது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Dec-21, 11:57 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே