வணரொலி யைம்பாலார் வஞ்சித்த லின்னா - இன்னா நாற்பது 14

இன்னிசை வெண்பா

வணரொலி யைம்பாலார் வஞ்சித்த லின்னா
துணர்தூங்கு மாவின் படுபழ மின்னா
புணர்பாவை யன்னார் பிரிவின்னா வின்னா
உணர்வா ருணராக் கடை. 14

- இன்னா நாற்பது

பொருளுரை:

குழற்சியையுடைய நீண்டு தழைய வளர்ந்த கூந்தலையுடைய மகளிர் தம் கணவரை வஞ்சித்து வாழ்வது துன்பமாகும்.

மாமரத்தில் கொத்தாகத் தொங்குகின்ற நைந்து விழுந்த கனி துன்பமாகும்.

வேற்றுமை இல்லாத நற்குணமுடைய பாவை போன்ற மகளிரது பிரிவு துன்பமாகும்.

நல்லன கெட்டன அறியும் தன்மையர் அவற்றை அறியாது இருப்பது துன்பமாகும்.

ஐம்பால்:

கண்கவர் கூந்தல் கறுத்திருத்தல்
நெளிவொடு கருங்குழல் நீண்டிருத்தல்
அழகொடு கூந்தல் அடர்ந்திருத்தல்
மென்மை கொண்டு மெத்தென்றிருத்தல்
வழிந்தோடும் வெள்ளம் வற்றி விட்டதோர் ஆற்றின் இளமணல் படிந்திருத்த லாகிய ஐவகைப் பண்புகள் அமைந்த காரணத்தால் அழகிய கூந்தலை ஐம்பால் என்றனர்.

வணர் - வளைவு, குழற்சி, ஒலி - தழைத்தல்

ஐம்பால் - ஐந்து பகுப்பினை யுடையது.

கூந்தல் ஐந்து பகுப்பாவன - குழல், கொண்டை, சுருள், பனிச்சை, முடி எனப்படும்,

இங்ஙனம் ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு வகையாக என்றில்லாமல் ஒரே நேரத்து ஒப்பனையிலேயே ஐந்து வகையால் பிரித்து முடிக்கப் படுவது என்றும் சொல்லலாம்.

படு பழம் - செழுமை அழிந்து விழுந்த பழம்.

புணர்தல் - அன்பால் நெஞ்சு கலத்தல், மனம் பொருந்துதலும் ஆகும்.

உணர்வார் - உணர்ந்து குறை தீர்க்க வல்லார், பாட்டின் பொருளறிவாரும் ஆகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Dec-21, 12:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

சிறந்த கட்டுரைகள்

மேலே