ப்ரியமான சகா

என் ப்ரியசகா
இது கடிதமல்ல..
எந்தன் கந்தல் இதயம்...

இப்படி எழுதுவது  பிடிக்காதென
தெரிந்தே தான் எழுதுகிறேன்...
என்னை உணர்ந்தும்‌ தெரிந்தே
தவிர்க்கும் உனக்கு...

வானம் கொள்ளா பறவையின்
சிறகை கூண்டில்
அடைக்கும் அத்தனை குரூரம்
இந்த எழுத்துகளில்...
உன்னிடம் கூறவேண்டியதை
அடைத்துவிட பதைபதைக்கும்
அத்துனை அவசரம் எனக்கு

அப்படியென்ன அவசியம் வந்ததென முறைத்துக் கொள்வாய்...
கொஞ்சம் முனகவும் செய்வாய்...

கேட்டுக்கொள் ...
ப்ரியசகா முன்பிருந்ததற்கு இப்போது
எதுவும் கெட்டுவிடவில்லை

கேலிசெய்து செய்து ஓடிய குறுஞ்செய்திகள்
நோய்கண்டு மொத்தமாய்
முடங்கிப் போயிருக்கின்றன
அவ்வளவு தான்

நாளுக்கொருமுறை வந்து விழுந்துகொண்டிருந்த
நலவிசாரிப்புகள் மொத்தமாய்
காணாமற் போயிருக்கின்றன
அவ்வளவு தான்

ஃபேவரைட் பட்டியலில் இருந்த எண்
சாதாரணமாக கணக்கு குவியலில் எங்கோ மறைந்து கொண்டுள்ளது
அவ்வளவு தான்

தவறிவிழுந்ததென மார்த்தட்டிக்கொள்ளும் தின வாழ்த்துகளும் அதைத்தொடர்ந்த
உரையாடல்களும்
புக்மார்க் செய்யும்படி
போய்விட்டன அவ்வளவு தான்!

வற்புறுத்தலின் பேரில்
வந்து விழும் வார்த்தைகளும் சிக்கனத்தை கடைபிடித்து
சிரச்சேதம் செய்துகொள்கின்றன
அவ்வளவு தான்

பத்தோடு பதினொன்றாய் இருந்த
காலம்மாறி
நூற்றுக்குள் நுழைந்து ஆயிரத்துக்குள்
அடியெடுத்து வைக்கிறது
நமக்கிடையேயான இடைவெளி..

வலையொளியில் ஒலிக்கும் பாடலுக்கு  பின்னணியாய்
வார்த்தைகளை கோர்க்கிறது
உனது இருப்பைத் தேடும் மனது..

புழுதியில் புரண்டிடும்...
விளங்கிடா பொருளொன்றில்
விழுந்து கிடக்கும்
மனதை விசையுறச் செய்...
இல்லை தொடர்பற்று போய்
வீழ்த்தவேனும் செய்...!
கொண்டாடித் தீர்த்துக் கொள்ளட்டும் இந்த கவிதைகளேனும்!

- மதிஒளி சரவணன்

எழுதியவர் : மதிஒளி சரவணன் (4-Jan-22, 2:57 pm)
சேர்த்தது : மதிஒளி சரவணன்
பார்வை : 327

மேலே