அவாவறுக்க லுற்றான் றளரானவ் வைந்தின் அவாவறுப்பி னாற்ற வமையும் – ஏலாதி 11
நேரிசை வெண்பா
அவாவறுக்க லுற்றான் றளரானவ் வைந்தின்
அவாவறுப்பி னாற்ற வமையும் - அவாவறான்
ஆகு மவனாயி னைங்களிற்றி னாட்டுண்டு
போகும் புழையுட் புலந்து 11
- ஏலாதி
பொருளுரை:
அவாவினை விடுவதற்குக் கருதியவன் உறுதி தளராமல் ஐம்பொறிகளின் வழிச்செல்லும் அவாவினைக் கெடுப்பானாயின் அவன் கருத்து மிகவும் நிரம்பும்;
மற்று அவன் ஐம்பொறி அவாவினைக் கெடுத்துக் கொள்ளானானால் அவ்வைம் பொறிகளென்னும் யானைகளால் அலைப்புண்டு அவற்றின் புழையாகிய புலமென்னும் வாயிலில் சென்று துன்புறுவான்.
கருத்து:
அவா வறுத்தலாவது ஐம்பொறி யடக்கமாகும்.
பொறிகளைக் களிறென்றமையின், அவற்றின் புலன்களை அக் களிறுகளின் துதிக்கைப் புழைகளென்றா ரென்க.
ஐம்புலன்கள் - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.