மெய்ப்பயனுடையார் இறத்தற் கஞ்சார் - நீதிநெறி விளக்கம் 43

நேரிசை வெண்பா

புழுநெளிந்து புண்ணழுகி யோசனை நாறும்
கழிமுடை நாற்றத்த வேனும் - விழலர்
விளிவுன்னி வெய்துயிர்ப்பர் மெய்ப்பயன் கொண்டார்
சுளியார் சுமைபோடு தற்கு 43

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

அறிவில்லா வீணர் புழுக்கள் நெளிய புண்ணாயழுகி யோசனை தூரத்துக்கு நாறுகின்ற மிகுந்த தீநாற்றத்தையுடையவராயினும் சாதலை நினைந்து பெருமூச்செறிவர்;

ஆனால், தாம் உடம்பெடுத்த பயனை முயன்றடைந்த அறிஞர் இவ்வுடம்பாகிய சுமையை வீசி எறிய வெறுப்புக் கொள்ளார்.

விளக்கம்:

சுமைசுமப்போன், சுமை தாங்காது அதைக் கொண்டுபோய் இறக்குமிடம் வருமட்டும் வருந்தி நடந்து அவ்விடங் கண்டவுடன் மகிழ்ச்சியால் தன் தலைமீதிருக்குஞ் சுமையை இறக்கி மனமகிழ்தல் போல், உடம்பெடுத்த பயனறிந்த அறிஞர் அவ்வுடம்பாகிய சுமையைச் சுமந்து திரிய வருத்தமடைந்து அச்சுமையைப் போடுங் காலங் கண்டால் மகிழ்ச்சி கொள்வாராகையால் `சுமைபோடுதற்குச் சுளியார்' என்றார்:

கருத்து:

தாம் உடலெடுத்த பயனையடைந்த அறிஞர் இறத்தற்கு அஞ்சார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Jan-22, 9:15 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே