நெடுமர நீள்கோட் டுயர்பாய்த லின்னா - இன்னா நாற்பது 30

இன்னிசை வெண்பா

நெடுமர நீள்கோட் டுயர்பாய்த லின்னா1
கடுஞ்சின வேழத் தெதிர்சேற லின்னா
ஒடுங்கி யரவுறையு மில்லின்னா வின்னா
கடும்புலி வாழும் அதர். 30

- இன்னா நாற்பது


பொருளுரை:

நெடிய மரத்தினது நீண்ட கிளையின் உயரத்திலிருந்து கீழே குதித்தல் துன்பமாகும்;

மிக்க கோபத்தினையுடைய யானையின் எதிரே செல்லுதல் துன்பமாகும்;

பாம்பு மறைந்து வசிக்கின்ற இடத்திற்குச் செல்வது துன்பமாகும்;

கொடிய புலிகள் வாழ்கின்ற வழியானது துன்பமாகும்.

கோட்டுயர் பாய்தல் என்பதற்குக் கோட்டின் நுனியிலேறி யதோடல்லாமல், மேலும் உயரத்திற்கு முயன்று ஏறுதல் என்று பொருள் கூறலுமாம்;

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி யாகி விடும். 476 வலியறிதல்

என்பது இங்கே கவனிக்க வேண்டும்.

நெடுமர நீள் கோட்டுயர் பாய்தல் முதலிய நான்கற்கும், ஓட்டென்னும் அணிபற்றி, முறையே தம் வலியளவறியாது பெரிய வினைமேற் சேறலும், வலியார்க்கு மாறேற்றலும், உடம்பாடிலாத உட்பகையுடன் வாழ்தலும், பகைக்கெளியராம்படி நெறியலா நெறியிற் சேறலும் இன்னாவாமெனப் பொருள்கோடலும் பொருந்துமாறு காண்க'

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Jan-22, 8:55 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே