செறிவிலான் கேட்ட மறை இன்னா - இன்னா நாற்பது 29
இன்னிசை வெண்பா
குறியறியான் மாநாக1 மாட்டுவித்த லின்னா
தறியறியா2 னீரின்கட் பாய்ந்தாட3 லின்னா
அறிவறியா மக்கட் பெறலின்னா வின்னா
செறிவிலான் கேட்ட மறை. 29
- இன்னா நாற்பது
பொருளுரை:
பாம்பாட்டுதற்குரிய குணநலன்கள் முதலியவற்றின் முறைகளை அறியாதவன் பெரிய பாம்பினை ஆடச் செய்தல் துன்பமாகும்;
உள்ளிருக்கும் குற்றியை அறியாமல் நீரில் பாய்ந்து குதித்து விளையாடுதல் துன்பமாகும்.
அறிய வேண்டுவனவற்றை அறியமாட்டாத பிள்ளைகளைப் பெறுதல் துன்பமாகும்;
அடக்கம் இல்லாதவன் கேட்ட இரகசியம் துன்பமாகும்.
விளக்கம்:
தறி - குற்றி; கட்டை, அறிவறியான் என்பது அறிவிற் குறைவும் மந்தபுத்தியும் உடையவன்: ஆவது கல்லா இளமையன் என்க.
அறிவறியா மக்கள் - அறிவேண்டுவன அறியமாட்டாத மக்கள்:
செறிவு - அடக்கம்: ‘செறிவறிந்து சீர்மை பயக்கும்' என்னுங் குறளில் செறிவு இப் பொருட்டாதல் காண்க:
அடக்கமில்லாதவன் மறையினை வெளிப்படுத்தலின் ‘கேட்ட மறையின்னா' என்றார்.
(பாடம்) 1. மானாகம், 2. இன்னா தறிவறியான். 3. கீழ்நீர்ப்பாய்ந்தாடுதல்.