அன்றறிவார் யாரென் றடைக்கலம் வௌவாத நன்றி - இனியவை நாற்பது 30
இன்னிசை வெண்பா
நன்றிப் பயந்தூக்கி வாழ்தல் நனிஇனிதே
மன்றக் கொடும்பா டுரையாத மாண்பினிதே
அன்றறிவார் யாரென் றடைக்கலம் வௌவாத
நன்றியின் நன்கினிய(து) இல். 30
- இனியவை நாற்பது
பொருளுரை:
ஒருவன் செய்த உதவிக்கு நன்றியின் பயனைக் கருதி வாழ்வது இனியது.
நியாய சபையில் நியாயத்திற்குப் புறம்பாக ஓரஞ் சொல்லாத மாட்சிமை இனியது.
முன்பொரு நாள் தன்னிடம் வைத்ததை அறிவார் யாரும் இல்லையென்று அடைக்கலப் பொருளை அபகரிக்காத நல்ல தன்மையை விட மிக இனியது வேறொன்றுமில்லை.