எளியர் இவரென்று இகழ்ந்துரைக்கலாகாது - இனியவை நாற்பது 29

இன்னிசை வெண்பா

கயவரைக் கைகழிந்து வாழ்தல் இனிதே
உயர்வுள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே
எளியர் இவரென் றிகழ்ந்துரையா ராகி
ஒளிபட வாழ்தல் இனிது. 29

- இனியவை நாற்பது

பொருளுரை:

தீயகுணமுள்ள கீழ்மக்களை விட்டு நீங்கி வாழ்வது இனியது.

தான் வாழ்வில் மேன்மேலும் உயர்வு எய்ய வேண்டும் என்று மன எழுச்சியுடன் பணியாற் றுவது இனியது.

இவர் வறியவர் என்று பிறரை இகழ்ந்து பேசாமல் தான் புகழுடன் வாழ்வது இனியது.

கையிகந்து என்பதும் பாடம்.

தன்னை ’நிலையினும், மேன்மேலுயர்த்து நிறுப்பானும்’ தானேயாமாகலின், அது செய்தற்கு மனங்கிளர்தல் நன்றென்பார்,

‘உயர்வுள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே’ என்றார்.

ஒளிபட வாழ்தல் இங்கு அதற்குக் காரணமாகிய ஈதலை உணர்த்தி நின்றது.

’இகழ்ந்துரையாராகி ஒளிபட வாழ்தல்’ என்பதற்கு ’நன்கு மதித்து இனியவை கூறி ஈதல்’ என்று பொருளாகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Jan-22, 8:14 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

சிறந்த கட்டுரைகள்

மேலே