ஆங்கின்னா தண்மை யிலாளர் பகை - இன்னா நாற்பது 31
இன்னிசை வெண்பா
பண்ணமையா யாழின்கீழ்ப் பாடல் பெரிதின்னா
எண்ணறியா மாந்தர்1 ஒழுக்குநாட் கூற்றின்னா
மண்ணின் முழவி னொலியின்னா வாங்கின்னா
தண்மை யிலாளர்2 பகை.31
- இன்னா நாற்பது
பொருளுரை:
இசை கூடாத யாழுடன் இசைந்திருந்து பாடுதல் மிகவும் துன்பமாகும்;
சோதிடமும், குறி நூலும் கணித்துச் சொல்ல இயலாத மாக்கள் நற்காரியங்கள் செய்வதற்குரிய நாள் கூறுதல் துன்பமாகும்;
மார்ச்சனையில்லாத, தகுந்த பக்குவப்படுத்தாத மத்தளத்தினது ஓசை துன்பமாம்;
அவ்வாறே, குளிர்ச்சியான நற்குணம் இல்லாதவரது பகை துன்பமாகும்.
விளக்கம்:
பண் என்பதனை இசைக்கரணம் எட்டனு ளொன்று என்னலுமாம்;
ஒழுகுதற்குரிய நாளாவது கருமங்கட்கு விதிக்கப்பட்ட நாள்.
நற்குணமுடையார் பகையிடத்தும் இனியன செய்தலும், நற்குணமில்லார் நட்பிடத்தும் இன்னா செய்தலும் உடையாராகலின் தண்மையிலாளர் பகை இன்னா வெனப்பட்டது;
தீயோர்பால் பகையும் நண்புமின்றி நொதுமலாக (Neutral) இருத்தல் வேண்டும்.