நன்மை யிலாளர் தொடர்பின்னா - இன்னா நாற்பது 32
இன்னிசை வெண்பா
தன்னைத்தான் போற்றா தொழுகுத னன்கின்னா
முன்னை யுரையார் புறமொழிக் கூற்றின்னா
நன்மை யிலாளர் தொடர்பின்னா வாங்கின்னா
தொன்மை யுடையார் கெடல். 32
- இன்னா நாற்பது
பொருளுரை:
ஒருவன் மனமொழி மெய்கள் தீயவழியிற் செல்லாது தன்னைத்தானே காத்துக் கொள்ளாது நடத்தல் மிகவுந் துன்பமாகும்;
முன்னே சொல்லாமல் பின்னிருந்து பழித்துரைக்கும் புறங்கூற்று துன்பமாகும்;
நற்குணமில்லாதவரது நட்பு துன்பமாகும்;
அவ்வாறே, நற்குலத்தில் பிறந்த பழம்பெருமையுடைய நல்லோர் கெடுதல் துன்பமாகும்.
விளக்கம்: தன்னைத்தான் போற்றுதலாவது மனமொழி மெய்கள் தீயவழியிற் செல்லாது அடக்குதல். தொன்மையுடையார் கெடல் என்றது தொன்று தொட்டு மேம்பட்டு வரும் பழங்குடியினர் செல்வங் கெடுதல் என்றபடி.
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
