மனிதநேய பண்பாளர் பென்னிகுவிக்

ஆயிரத்து எட்டு நூற்று
எழுபத்து ஆறாம் ஆண்டு
கிழக்கு இந்திய நிறுவனம்
கிடைத்ததைச் சுருட்டிப்போனார்

ஆதவன் மறைந்து அறியா
ஆங்கில அரசு ஆட்சி
அகப்பட்டதைச் சுருட்ட எண்ணி
அவசரமாய் அமுலுக்கு வந்தது

வைகை வடிநீர் பரப்பில்
வானம் பன்முறை பொய்த்ததால் வறண்டது பூமி திரண்டது கண்ணீர்
வறுமைப் பிடியில் சிக்கினர் மாந்தர்

கொடிய பஞ்சம் எங்கும்
கோரமாய் தலைவிரித்து ஆட
தஞ்சம் தேடித் தவித்தனர் மக்கள்
*நெஞ்சம் நெகிழ்ந்தார் பென்னிகுவிக்.*

வல்லமையாளர் பொறியியல் வல்லுநர்
வாட்டம் போக்கும் எண்ணம் கொண்டார்

மேற்குத் தொடர்ச்சி மலையில் மிகையாய் பெய்யும் மழை நீர் பெரியாறு ஆறாக ஓடி

பெருமளவு நீர் தடையின்றி
கழிமுகம் சென்று வீணே
கடலில் கலப்பதைக் கண்டார்!

காட்டாற்று நீரைப் பருவ
காலத்தில் முனைந்து தேக்குதற்கே
மலையில் அணைக் கட்டி வடகிழக்குப் பக்கம் திருப்பி விட.

வறண்ட நிலங்கள் வளம் பெறும்
நிறைவாய் விளைச்சல் பெருகும் நிலைமை சீர் திருந்தும் என்றார்.

தங்கத்தமிழன் சாதனைக்குச்
சான்றாய் நிற்கும் சின்னமாம்
கரிகாலன் கல்லணை ஆய்ந்தார்
"சுர்க்கி" என்னும் தொழில்நுட்ப
சுண்ணாம்புக் கலவை அறிந்தார்.

அடிப்படை வசதி இல்லா
அடர் வனத்தின் மத்தியில்
திடமான அணை கட்டினார்
துன்பத்தில் உழன்ற உழவர்
துயர் துடைக்கும் தீர்வு கண்டார்

மழை போல் உதவும்
மனிதநேய மனம் படைத்த
மா மனிதர் பென்னிகுவிக்.
ஏழையின் சிரிப்பில் உவந்து
இழைந்த இறைவனைக் கண்டார்

தன்னலமில்லா தொண்டால்
துயர் துடைக்க ஆற்றிய
இவர் பெரும்பணி அறிந்த
இங்கிலாந்து மேன்மை பேரரசும்

இவர் பெயர் நிலைக்கும் விதமாய் *ஸ்டார் ஆஃப் இந்தியா*
சிறப்புப் பட்டம் அளித்து
சிந்தை மகிழப் பாராட்டியது .

இற்றை நாளிலும்
நிலைத்து விளங்கும்
முல்லைப் பெரியாறு அணை
உழவர் வாழ்வில் ஒளி தந்து
உத்தம பயன் தருதலால்

உவந்தோர் தம் மகவுக்கு
பென்னிகுவிக் என்றே நற்
பெயர் சூட்டி மகிழ்வர் -அவர்
பிறந்த நாளில் பூரித்துப்
பொங்கல் இட்டுக் களிப்பர்

முல்லைப் பெரியாறு அணையும் பெண்ணிகுவிக் படமும் இணைந்து
மங்கல நிகழ்வு அழைப்பிதழில்
முதன்மை பெற்று விளங்கும்

பேறுடை
பெருந்தகை பெரியார் எல்லாம்
"நூறாண்டு வாழ்க" என நிறைவாய் மலர்ந்து வாழ்த்துவர்

பென்னிகுவிக் நூறாண்டுக் காலம்
மேலும் பல நூறு ஆண்டுக்காலம்
மேன்மையுடன் நிலைத்து வாழ்வார்

*தேனினும் மேலாய் இனிக்கும்*
*மேன்மை சொல் படைத்த*
*தேனி மக்கள் நெஞ்சங்களிலே.*

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (24-Jan-22, 2:18 am)
பார்வை : 80

மேலே