குடிப்பிறந்தார் மற்றொன் றறிவாரின் மாண்மிக நல்லர் - பழமொழி நானூறு 50
இன்னிசை வெண்பா
கற்றதொன் றின்றி விடினும் குடிப்பிறந்தார்
மற்றொன் றறிவாரின் மாண்மிக நல்லரால்
பொற்ப உரைப்பான் புகவேண்டா கொற்சேரித்
துன்னூசி விற்பவர் இல். 50
- பழமொழி நானூறு
பொருளுரை:
கற்றது ஒன்றில்லையாயினும் நற்குடிப்பிறந்தார், கல்வி ஒன்றை மட்டும் அறிந்தாரைவிட நற்குணங்களில் மாட்சிமைப்பட மிகச் சிறந்தோர்களே ஆவார்கள்; கருமாருடைய சேரியில் தையல் ஊசியை விற்கப் புகுவார் இல்லையாதலால், கற்றோர் அவர்களிடம் நற்குணங்களை அழகுபட விரித்துரைக்கப் புகவேண்டுவதில்லை
கருத்து:
உயர்குடிப் பிறப்பின்றிக் கல்வி ஒன்றே உடையாரைவிட, உயர்குடிப்பிறந்தார் சாலச் சிறந்தவர்களே யாவார்கள்.
விளக்கம்:
உயர்குடிப் பிறந்தாரிடம் நற்குணங்கள் இயல்பாகவே உள்ளன.
கற்றாரிடம் இயல்பாகவே நற்குணங்கள் அமைந்திருத்தல் மிகவும் அரிது, இல்லை என்றுகூடக் கூறலாம்.
ஆகையால்தான், 'குடிப்பிறந்தார் மற்றொன்றறிவாரின் மாணமிக நல்லர்' என்று கூறப்பட்டது. 'மாண்மிக' என்பதும் 'மாண்மிக்க' என்பதும் பாடம்.
'கொற்சேரித் துன்னூசி விற்பவர் இல்' என்பது பழமொழி.