ஆவணி அவிட்டம் திருநாள்

ஆண்டுதோறும் இனிதாம்
ஆவணி அவிட்டம் திருநாள்
அசைபோடும் என் மனது..
அந்த நாள் நினைவுகளில்..

ஆற்காடு என்னும்
அணி திகழ் நகரில்
ஆன்மிகப் பெரியார்
"இராதாகிருஷ்ணன்"
அருமைப் பெயர் பூண்டு

அறவோர் அறிஞர்கள் வாழும்
அணிசேர் மாடவீதியில்
அருளாட்சி செய்யும் தெய்வம்
அருள்மிகு சுந்தரமூர்த்தி
ஆனைமுகன் உறையும் ஆலயம்.

ஆவணி அவிட்டம் நன்னாளில்
ஆர்த்து எழும் மகிழ்ச்சியுடனே
அரவணைக்கும் நல் பாங்குடனே
அன்பர்கள் இணை நண்பர்கள்
அன்பால் கூடுவர் அனைவருமே!

பாண்ட் சரட்டு போட்டவர்.
பட்டு வேட்டி பளபளக்கப்
பட்டை மூன்று பட்டை
பால் வெண்ணீறு அணிந்து
புதுப் பூணூல் போட்டு

புது மாப்பிள்ளைகள் - அன்று
பூத்த மலர்மாலை அணிந்து
புன்முறுவல் பூத்து இணைந்து
புது மிடுக்குடன் பவனி வருவர்

வீதி உலா வந்து
வீடு வந்து சேர்கையிலே
மனையாள் வளை கரங்கள்
மங்கல ஆரத்தி எடுக்க
மனம் குதிக்கும் களிக்கும்.

மங்கல இசை ஒலிக்க
மகேசன் தாள் பணிந்து
மகிழ்ச்சி வரம் வேண்டி
மங்கள வாழ்த்துப் பாடி

வட்டமாய் கூடி அமர்ந்து
வாட்டமாய் உண்டு மகிழ
வட்டில் இட்ட சாதமும்
கூட்டும் குழம்பும் பொரியலும்

வடையும் அவல் பாயசமும்
இனிப்புடனே முப்பழமும்
கண்ணிமைக்கும் பொழுதில்
காணாமல் போகும்..

கடுகி ஓடும் கால ஓட்டத்தில்
கனவுகள் போல் நினைவுகள்
திரும்பி வராத இனிய
தித்திப்பான தருணங்கள்!

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (29-Jan-22, 9:24 am)
பார்வை : 80

மேலே