சமுதாயம்
சமுதாயம்
நாம் அறுந்த கயிற்றில்
பொத்த தோண்டியில்
தண்ணீர் இறைக்கும்
கிணற்று தவளைகள்.
நாம் காதுகளை இழந்த
கத்திரிகோல்கள்.
பசுக்களின் காம்புகளை வாடகைக்கு விட்டுவிட்டு
தினம் ஆவின் பாலுக்காக
அலையும் ஆயர்பாடி கண்ணண்கள்.
வெக்கம், மானம், ரோஷம்
மறந்துவிட்ட மானுட பதர்கள்
நகரத்தில் வீடு கேட்டு
வீதிவீதியாக திரியும்
எட்டு கால் பூச்சுகள்
எட்டாய் வெட்டின சமயங்கள்
சமுதாயத்தை
பதினாறாய் பிளந்தன அரசியல்
கட்சிகள்
நூறாய் நொய்ய புடைத்தன
சாதிகள்
தான் படைத்த கடவுளுக்கே
பக்தன் ஆனான்
தான் கண்டுபிடித்த பணத்துக்கே தினம்
விலை போனான்
அரசாங்கத்தை நிறுவி
தவனை முறையில் அதற்கே அடிமையானான்
எந்திரம் கண்டுபிடித்து
கண்டம் விட்டு கண்டம் தாவினான்
களி மண் பானை முன்
பவ்வியமாய்
கைகட்டி நிற்கின்ற மாய குயவனே
மாதவ புதல்வனே
இந்த தேசமே சிறைசாலையாகிவிட்ட பிறகு
எதற்கு இந்த சின்ன, சின்ன சிறைசாலைகள்
நாம் எல்லோரும் சுதந்திர நாட்டில்
சுதந்திரமாக அலையும் கைதிகள் தானே
சங்க காலம்
இது உண்மையில் சங்க காலம்
எல்லா சாதிகளுக்கும்
ஏக காலத்தில் சங்கம்
இருப்பதால்
இது சங்க காலம்
கிரைண்டர் கருங்கல் புள்ளி போல்
நம் நாட்டு சமயங்கள்.
அடிப்படைவாதிகள் இருக்கும்வரை
அநியாயம் தான் நாட்டினிலே
ஐய்யோ பாவம்
சாகாட்டின் மூலையிலே
சமுதாயம் அழுகிறதே
பூக்காட்டில் நுழைய
புதர் வேலிகள் தடுக்கிறதே
எரிமலை குமறல்கள்
ஏழை நெஞ்சில் கேட்கிறதே
நல்லவர் ரத்தம் தின்ன
நயவஞ்சக நரிக்கூட்டம்
வருகிறதே
நான் அழுது என்ன பயன்
நான் அழத கண்ணீரால் நாவாய்
நடக்குமா
உலக கூட்டமே ஒட்டு மொத்தமாய்
அழுதாலும்
உப்பு தான் கிட்டுமா
நானும், நீயும் அழுது என்ன பயன்
பதில் சொல் நற்றமிழா
இங்கே வேக தடைகளே
சாலைகள் ஆகிவிட
ஆச்சிரிய குறிகளே
செய்தி ஆகிவிட
எப்போதும் கோடிட்ட
இடத்தை நிறப்புவதே வாழ்க்கை
ஆகிவிட்டது
கட்சி கம்பங்களுக்கு வர்ணம் தீட்டுவதே
வரலாறு ஆகிவிட்டது
என் சொற்கள் எல்லாம்
தொண்டை குழியிலேயே சிக்கி
தற்கொலை செய்து கொள்கிறது
ஆன்மாவை இழந்த வார்த்தைகள்
நாக்கில் நரகத்தை சிஷ்டிகின்றன
அலுமினிய ஆப்பில்கள்
பாதரச மெழுகு வத்திகள்
பீங்கான் நாற்காலிகள்
மூக்குத்திகள்
கம்மல்கள்
நிழற்பட நிபுணரின்
Smile please
பிள்ளை தமிழில் பாடுவதை
நிறுத்து
பிரமிடுகளை உன் சுண்டு
விரலால் நகர்த்து.