ஊரடங்கு

திடீரென்று உலகையே அதிரவைத்தது, ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஒருசொல்...ஒரு நடவடிக்கை...ஊரடங்கு.ஏன் இந்த ஊரடங்கு? எதற்கு இந்த ஊரடங்கு? ஒரு நாடு...இரு நாடுகள் இல்லை உலகில் உள்ள அத்தனை நாடுகளையும்...ஏன் வல்லரசு என்று மார் தட்டிக்கொள்ளும் அமேரிக்கா...ரஷ்யா...பிரிட்டன்... சீனா...போன்ற நாடுகளையும் முடக்கிப் போட்டுவிட்டது இந்த ஊரடங்கு.எதனால் இந்த ஊரடங்கு? உங்களுக்குத் தெரியாததை நான் இங்கு சொல்லப்போவதில்லை.நம் எல்லோருக்கும் தெரிந்ததைத்தான் நான் இங்கு பகிரப் போகிறேன்.சிறிது நேரம் என்னோடு பயணியுங்கள்.
பழம் பெரும் நாடான சீன தேசத்தின் "வுகான்" மாகாணத்திலிருந்து ஒரு உயிர் கொல்லி நுண் கிருமி 2019 ஆம் ஆண்டு வெளியாகி,சீன தேசத்தையே ஒரு உலுக்கு...உலுக்கிவிட்டு...உலகின் மற்ற நாடுகளையும் பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது.
அந்த நுண் கிருமிதான் "கொரோனா". இது அறிகுறிகளுடனும்...அறிகுறிகள் ஏதும் இல்லாமலும் இம் மானுடத்தைத் தாக்கி அழிக்கத் தொடங்கி விட்டது. முதலில் சளி..காய்ச்சல்...தொண்டைகமறல்..வலி போன்ற சாதாரண அறிகுறிகளுடன் அறிமுகமாகி,மெல்ல...மெல்ல...மூச்சு விடுவதற்க்கே பாடாய்ப் படுத்தி, நோயைத் தீவிரமாகி உயிருக்கே உலை வைத்துக்கொண்டிருக்கிறது இந்த வைரஸ். இது ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு அறிகுறிகளை அறிமுகப்படுத்தி, ஒவ்வொரு உடல் அமைப்புகளையும் தாக்கி, மருத்துவ உலகத்தையே திக்குமுக்காட வைத்துக்கொண்டிருக்கிறது. சரி இதற்கு விடிவுதான் என்ன? இதனைக்கட்டுப்படுத்த மருந்துகள் இல்லையா? தடுப்பூசிகள் உண்டா? தடுக்கும் முறைகள் உண்டா? எல்லாவற்றிற்கும் ஒரே பதில்..இருக்கு ஆனா இல்ல.சரியாகத் தெரியவில்லை என்பதுதான். இதனால் உலகெங்கும் உயிரிழப்புகள் சுமார் ஒரு கோடியைத் தாண்டிப் போய்க்கொண்டிருக்கும் இவ்வேளையில்...இந்த வைரஸ்ஸைப் பற்றிய முழுதான புரிதல் இல்லாத நிலையில் நாம் எப்படி இந்த வைரஸ்ஸை எதிர்த்து போராடப்போகிறோம்? இந்தப்போராட்டத்தில் நம் பங்கு என்ன? நம் முன்னே விரித்து கிடைக்கும் மிகப் பெரிய சவால் இதுதான்.
அரசாங்கத்தாலேயோ இல்லை மருத்துவர்களாலேயோ ஒன்றும் செய்ய முடியாத இந்த சூழலில் பொது மக்களாகிய நாம் என்ன செய்யப்போகிறோம்? இதற்கான நம் பங்கு என்ன? கொஞ்சம் ஆக்கப் பூர்வமாகச் சிந்திப்போம்.இப்போது, இந்தியாவில் இந்நோய்த் தரவரிசையில் மஹராஷ்டிரா...டில்லி...கேரளா...தமிழ்நாடு என்று தமிழ்நாடு முன்னணியில் நிற்கிறது. இப்போது மத்திய...மாநில அரசங்களின் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளாலும் சற்று நிலைமை கட்டுக்குள் இருக்கிறது.தமிழகத்தைப் பொறுத்தவரை ...தலைநகரமான சென்னை முதலிடத்திலும் தொடர்ந்து கோவை...சேலம் செங்கல்பட்டு..திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களும் அதிக பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. மத்திய..மாநில அரசாங்கங்களும் மற்ற பணிகளை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு முழு மூச்சுடன் இந்நோயைக் கட்டுப்படுத்த போராடிக்கொண்டிருக்கிறது. இச்சூழ் நிலையில் கட்சிப் பாகுபாடின்றி மக்களால்...மக்களால்..மக்களுக்காக..என்று ஒன்றிணைந்து போராட வேண்டும்.இங்கு பேர்..புகழ்..மரியாதை என்று எதுக்குமே அர்த்தமில்லை.மக்களின் உயிரை விடவா மற்றது பெரிதாகி விடப்போகிறது? மருத்துவ உலகமும், அதன் தலைமைபீடமான உலகச் சுகாதார மையமும் (WHO) கூடி ஆலோசித்து நிலையான ஒரு நிலைப்பாடும் எடுக்க முடியாமல் கைகளை பிசைந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிக்கைகள்...ஒவ்வொரு கட்டுப்பாடுகள்..என வெளியிட்டு நம்மை குழப்பத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் இவ்வேளையில் மருத்துவ நிபுணர்கள் குழுக்கள் பரிந்துரைக்கும் பாதுகாப்பு முறை...முக கவசம்...சமூக இடைவெளி...கைச் சுகாதாரம்....மற்றும் ஊரடங்கு....மாத்திரமே. மருந்தோ...மாத்திரைகளோ...CT, MRIயோ இல்லை.இந்த பாதுகாப்பு முறைகளை யார் செய்வது? யாருக்காக செய்வது? முறையாக யார் பின்பற்றுவது? அரசாங்கமா?...மருத்துவர்களா? மக்களாகிய நாம்தான். நாம் மட்டும்தான். இது ஒரு மிகப்பெரிய சவாலல்லவா? எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தை....மருத்துவர்களை குறை கூறிக் கொண்டும் அவர்களை எதிர்த்து போராடிக்கொண்டும்...எல்லா சலுகைகளையும் இலவசமாக எதிர்பார்த்துக்கொண்டும், சில புல்லுருவிகள் சொல்லும் பொய் வாக்குகளை...வாக்குறுதிகளை நம்பி தடம் மாறிப் போகும் ஆட்டு மந்தைகளாய் இருக்கப் போகிறோமா? இல்லை சுயமாய்ச் சிந்தித்து செயல்பட போகிறோமா? ஆக மொத்தம் நம்மை காப்பாற்றப் போவது நமக்கு நாமே விதித்துக்கொள்ளும் சுயக் கட்டுப்பாடைத் தவிர்த்து வேறெதுவும் இல்லை.
தினமும் நாம் கண்விழித்ததிலிருந்து ....தூங்கப்போவது வரை பத்திரிக்கை...தொலைக்காட்சி...தொலைபேசி...மற்றும் பல ஊடகங்கள் மூலம் அரசாங்கங்களும்...மருத்தவ உலகமும்...நமக்காக.. நம் உயிரை காப்பாற்ற அலறிக்கொண்டிருக்கின்றன. நாமும் அவைகளை தினமும் பார்க்கிறோம்...படிக்கிறோம்...அவைகளை முறையாக பின்பற்றுகிறோமா? அலட்சியப் படுத்துகிறோம். உதாசீனப் படுத்துகிறோம். இங்கு வாதம்...விவாதமாய் மாறி விவகாரத்தில் போய் முடிகிறது. ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா? இரண்டு கைகள் தட்ட வேண்டும். இப்போதிருக்கும் நிலைமையில் இரண்டு கைகள் ஈராயிரம் கைகள் ஆக வேண்டும். ஈராயிரம் இரண்டு கோடி ஆக வேண்டும்.இரண்டு கோடி..இருநூறு...முன்னூறு...கோடியென வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் நம் இலக்கை அடையும் வரை. அதன் சத்தம் உலகளவில் எல்லா மக்களாலும் ஒற்றுமையாக எழுப்பப்படும்போது "கொரோனா" என்ன ...எல்லா நோய்களும் ஓடியே போய்விடும்.உண்மைதானே.
இந்நோய் திரவத்துளிகளால் பரவுவதை நாமறிவோம்.இப்போதோ அது காற்றின் மூலமாகவும் பரவுவதாக அறிகிறோம்.இதைத் தடுக்க ஒரே வழி முக கவசம்தான்.ஏறக்குறைய உலகில் உள்ள எல்லா நாடுகளும், வர போகிற இன்னும் ஒரு ஆண்டிற்காவது முக கவசம் அணிவதை கட்டயாமாக பின்பற்றவேண்டுமென வலியுறுத்துகின்றன. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து நாமாகவே முன் வந்து முக கவசம் அணிந்துகொள்வது முறை.அதை விட்டு விட்டு "கொரோனாவது.....என்னையாவது....கொல்வவாது..." என்று வியாக்கியானம் பேசிக்கொண்டும்..விவாதம் பண்ணிக்கொண்டும்..திரிவதுதான் ஹீரோயிசம் என்று எண்ணிக்கொண்டால் யாருக்கு நஷ்டம்? கொரோனாவுக்கா? கொஞ்சம் நினைத்துப் பார்க்கவேண்டும். நமக்கு மட்டும் நோய் தாக்கினால் பரவாயில்லை. நம்மால் நம் குடும்பத்தாருக்கு பின் நம் அக்கம்பக்கத்தவருக்கு...தொடர்ந்து சமுதாயம் மற்றும் உலகம் முழுவதும். நம் சுற்றத்தாரை ...உடன் பிறப்புகளை...சக மனிதர்களை கல்லறைக்கு அனுப்புவது எந்தவிதத்தில் நியாயம்? என்ன கொடுமை சார் இது...இதற்கு யார் பொறுப்பு? இதற்காகத்தான் "சமூக இடைவெளி"யை கடைப் பிடிக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகிறோம். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது? மார்க்கட்டிலும் சரி..கறி கடைகளிலும் சரி...மீன் மார்க்கட்டிலும் சரி...துணி கடைகளிலும் சரி...அடுத்த நொடி உலகமே அழிந்து விட போகிறது....நாளைக்கு வேண்டியதை இப்பவே சேர்த்துக்கொள்ள வேண்டும்....இப்பவே எல்லாவற்றையும் அனுபவத்திட வேண்டும்..... என்கிற அவசரம். அவசர கோலத்தில் எதை செய்தாலும் என்ன நடக்கும் என்பது நமக்கே வெட்ட வெளிச்சமாய்த் தெரியும். வெட்கப்பட வேண்டிய ஒரு விஷயம். முக கவசம் முறையாய் அணியாமலும் சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டும் நாம் அரங்கேற்றும் கூத்துக்கள் நமக்கே நன்றாகத் தெரியும்.காவல் துறையோ...இல்லை அரசாங்கமோ என்ன செய்துவிட முடியும்? நமக்குள் சுயக் கட்டுப்பாடும்...பொறுப்பும் இல்லையென்றால் யார்தான் என்ன செய்ய முடியும்? பட்டுக்கோட்டை பாடல்தான் காதில் ஒலிக்கிறது..."திட்டம் போட்டு திருடர கூட்டம் திருடிக்கொண்டேஇருக்குது..அதை சட்டம் போட்டு தடுக்கிறக் கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது. திருடராய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது." இதில் திருட்டு என்பதை நம் ஒழுக்கம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து "கை சுகாதாரம்". சோப்பு போட்டு அடிக்கடி கை அலம்ப வேண்டும். இதைச் செய்வது கூட கஷ்டமா? நல்ல பழக்கம்தானே. பழகலாமே...இதில் என்ன நஷ்டம்? "கொரோனாவுக்கு" மட்டுமல்லாமல் தினமும் செய்யலாமே...
நாம் வீடடங்கினால் ஊரடங்கும். ஊரடங்கினால் நோய் கட்டுப்பாட்டுக்குள் வரும். சரி...சரி...இது எப்படி சாத்தியமாகும்? தினக்கூலி வீடடிங்கனால் அவன் வாழ்வாதாரமே குலைந்து சின்னாபின்னமாகிவிடுமே...தினமும் சாப்பாட்டிற்கே திண்டாடும்போது....எப்படி வீடடங்குவது? நியாயமான கேள்வி? கஷ்டம்தான்.இது நம் உயிர் சம்பந்தப்பட்டது
இல்லையா? ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். எதார்த்த உண்மையும் அதுதான். உயிர் இருந்தால்தானே மற்றதெல்லாம். புரிந்து கொள்வோம்.புரிந்து செயல்படுவோம்.ஊரடங்கினால் வாழ்வாதாரமே முடங்கிப் போகும் என்று குறை பட்டுக்கொள்கிறோமே...ஒரு அதிசயத்தை நம் கண் முன்னாலே கண்டோம்."டாஸ்மாக்" தொடங்கிய ஒரே நாளில் முன்னூறு முதல் ஐநூறு கோடி வரை வியாபாரம் ஆயிற்றே... எல்லா வியாபாரமும் முடங்கிப்போன தருணத்தில்... இதில் மட்டும் இத்தனை கோடி வியாபாரம் ...அதிசயம்தான். யாருடைய பணம்? யாருடைய வியர்வை? எல்லாம் ஏழைகளின் பணம். தினக்கூலிகளின் பணம்.சகோதர ..சகோதரிகளே சிந்தித்து பாருங்கள். நம் உயிர்...நம்மை நம்பி இருக்கும் நம் குடும்பத்தினரின் உயிர்...இன்னும் நம்மைச் சுற்றி உள்ளவர்களின் உயிர்களை பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் நாம் எக்கேடு கெட்டால் என்ன? குடும்பம் எக்கேடு கெட்டால் என்ன? நாடு எக்கேடு கெட்டால் என்ன? இல்லை இந்த உலகம் எக்கேடு கெட்டால் என்ன? நம் சுய இன்பமே பிரதானமென்று வாங்கி குடிக்கின்றோமே...எந்த ஒரு கட்டுப்பாடுகளும் செய்ய மாட்டேன்...தடுப்பூசிகளும் போட்டு கொள்ள மாட்டேன் என்று இறுமார்ப்போடு இருந்து விட்டு...நம் கல்லறைக்கு நாமே குழி பறித்து கொண்டு கடைசி நேரத்தில் 'சங்கரா..சங்கரா.."என்று மருத்துவர்களிடம் போய் காப்பாற்று...காப்பாற்று என்று கதறினால்... அவர்களால் மட்டும் என்ன செய்து விட முடியும்? அவர்களும் மனிதர்கள்தானே.அவர்களுக்கிருக்கும் அறிவு...அனுபவங்களை கொண்டு அவர்கள் உயிரை பணயம் வைத்து நம் உயிரை காப்பாற்ற போராடுகிறார்கள்.அவ்வளவுதான். புரிந்து கொள்ளுங்கள்.
நமக்கான முதல் மருத்துவர் நமக்கு நாமேதான். நாம் சரியாக ...நேரம் தவறாமல் உணவு உண்டு...உடற்பயிற்சிகள் செய்து ...நல்ல பழக்க வழக்கங்களை கைக்கொண்டு நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து...நோயோடு போராட வேண்டுமே தவிர ...ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக்கொண்டு...குறை சொல்லிக்கொண்டு இருப்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. அவரவர் பூனைக்கு அவரவர்கள்தான் மணி கட்ட வேண்டுமே தவிர மற்றவரை எதிர்பார்ப்பது என்னை பொறுத்தவரை மாபெரும் குற்றம்தான். பேச்சைக் குறைப்போம்.செயலில் இறங்குவோம்.பொறுப்பை உணருவோம்.பொறுமையாய் போராடுவோம்.

எழுதியவர் : (6-Feb-22, 4:30 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : ooradanku
பார்வை : 56

மேலே