எதிர்நிற்கும் பெண்ணும் செயிர்நிற்குஞ் சுற்றமும் முந்தைப் பழவினையாய்த் தின்னும் - திரிகடுகம் 67

நேரிசை வெண்பா

எதிர்நிற்கும் பெண்ணும் இயல்பியல் தொழும்பும்
செயிர்நிற்குஞ் சுற்றமும் ஆகி - மயிர்நரைப்ப
முந்தைப் பழவினையாய்த் தின்னும் இவைமூன்றும்
நொந்தார் செயக்கிடந்த தில் 67 - திரிகடுகம்

* மூன்றாம் எழுத்து ஒன்றி வந்தவாறு கண்டு கொள்க.
இதனை இரண்டாம் எழுத்தின் மேல் ஏறிய உயிர்
ஒன்றினமையால், உயிர் எதுகை என்பாரும் உளர்

பொருளுரை:

தாம் சினந்தால் தம் எதிர்நின்று பேசும் மனையாளும், ஒழுக்கமில்லாத ஏவலாளும், பகை கெடாது நின்று தொடரும் உறவினருமாய் நின்று, முற்பிறப்பிற் செய்த பழைய வினையாய் ஆகும்படி முதுமைப் பருவம் வரைக்கும் மெலியச் செய்யும் இந்த மூன்றுக்கும் வருந்தினார் செய்யக்கூடியதாகிய பரிகாரம் இல்லை.

கருத்துரை:

கணவனை எதிர்த்து நிற்கும் மனைவியும் நன்னடக்கையில்லா அடிமையும், பகை பாராட்டும் உறவினரும் பழவினைப் பயன்போற் பரிகரிக்கப்படாதவர் என்பது.

செயிர்: குற்றம்; பகை. மயிர் நரைப்ப என்பது முதுமைப் பருவம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Feb-22, 9:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 41

மேலே