சால்போடு பட்டது இலாதவை எவை - திரிகடுகம் 66
இன்னிசை வெண்பா
கொழுநனை இல்லாள் கறையும் வழிநிற்கும்
சிற்றாளில் லாதான்கைம் மோதிரமும் – பற்றிய
கோல்கோடி வாழும் அரசனும் இம்மூன்றும்
சால்போடு பட்ட(து) இல. 66
– திரிகடுகம்
பொருளுரை:
கணவனை இல்லாதவளது மாதவிடாயும், தன் ஏவலுக்கு உதவிக்கு நிற்கின்ற சிற்றாளை இல்லாதவனுடைய கைவிரல் அணிந்த மோதிரமும், தான் மேற்கொண்ட ஆளும் முறை தவறி வாழும் அரசனும் ஆகிய இம்மூன்று நிலைகளும் பொருந்திய சிறப்புடையன அல்ல எனப்படுகிறது.
கருத்துரை:
புருடன் இல்லாதவள் பூப்பும், சிற்றாளில்லான் செங்கையாழியும், கொடுங்கோல் அரசும் சிறப்பற்றவை எனப்படுகிறது.
கொழுநன் - மனையாளுக்கு உறுதியாகிய துணையாயுள்ளவன். கறை - கறுப்பு,
சால்பு - நிறைவு; அஃதாவது அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மையாகிய ஐந்து நற்குணங்களும் நிறைந்தது.
கொழுநனையில்லாள் நலனும் என்று பாடங்கொண்டால், நலன் என்பது அழகாம்.