மனத்த கறுப்பெனின் நல்ல செயினும் தீயவே யாகும் - நீதிநெறி விளக்கம் 58
நேரிசை வெண்பா
மனத்த கறுப்பெனின் நல்ல செயினும்
அனைத்தெவையுந் தீயவே யாகும் - எனைத்துணையுந்
தீயவே செய்யினும் நல்லவாக் காண்பவே
மாசில் மனத்தி னவர் 58
- நீதிநெறி விளக்கம்
’ய’ கரத்திற்கு ’இ’ கரம் அனுயெதுகை என்பதால்,
தீ’ய’வே, மாசு+’இ’ல் அனுயெதுகை என்று கருதி
நேரிசை வெண்பா எனலாமா?
பொருளுரை:
ஒருவர் சினங் கொண்டாரெனின் ஒருவன் அவருக்கு நல்லவற்றையே செய்தாலும் அவருக்கு அவை யாவும் தீச்செயல்களாகவே தெரியும்;
களங்கமில்லாத மனமுடையவர்க்கு எவ்வளவுதாம் தீச்செயல்களையே செய்தாலும் அவையெல்லாவற்றையும் அவர்கள் நற்செயலாகவே கொள்வார்கள்.
விளக்கம்:
கறுப்பு மனத்த: சினக் குறிப்புக்கள் உள்ளத்திலுள்ளன; கறுப்பு – கோபமாகிய குறிப்புணர்த்துஞ் சொல்; கறுப்பு - கறை. மாசு - வெகுளிப் பொறாமை, அவா முதலிய.
ஒருவர் மனம் எப்படியோ அதன்படி அவர் எண்ணமுமிருக்கும்
ஆகையால், இச் செய்யுளில் மனத்தாலான பயன் கூறப்பட்டது.
நன்மனமுடையோர் யார் என்ன செய்தாலும் அவர்கள் குற்றம் காணாது குணமே காண்பர்;
தீயமனத்தினர் நல்ல செயினும் நன்றென உணரார்.
கருத்து:
கோபங் கொண்ட மனமுடையவர்களுக்கு எத்தனை நல்ல காரியஞ் செய்தாலும் அவர்களை மகிழ்வித்தல் அரிது.