நாளுலந்த தன்றே நடுவன் நடுவின்மை வாளா கிடப்பன் மறந்து - நீதிநெறி விளக்கம் 57

நேரிசை வெண்பா

நட்பிடைக் குய்யம்வைத் தெய்யா வினைசூழ்ந்து
வட்கார் திறத்தராய் நின்றாக்குத் - திட்பமாம்
நாளுலந்த தன்றே நடுவன் நடுவின்மை
வாளா கிடப்பன் மறந்து 57

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

நண்பரிடத்து வஞ்சகம் செய்தலைக் கொண்டு அவர் அறியாமல் அவர்க்குத் தீங்கு செய்யக் காலம் பார்த்து அவர்கட்கு உள்ள பகைவரோடு சேர்ந்து கொண்டு நிற்பவர்க்கு வலிய ஆயுட்காலம் முடிந்ததில்லை,

இயமன் அத்தகைய வஞ்சகரின் நடுவு நிலைமையில்லாத தீச் செயல்களை தான் நடுவு நிலைமை யுடையவனாகையால் நினையாமல் சும்மா இருப்பன்.

விளக்கம்:

இயமன் நடுநிலையுடையோனாதலால் நடுவன் எனக் கூறினார்; தன்னிலைபோற் கருதிப் பிறரையும் எண்ணுவனாகையால் `நடுவின்மை வாளா கிடப்பன் மறந்து' என்று கூறினார்.

கருத்து:

நண்பர் போல் நடித்து வஞ்சகம் செய்வார் இயமன் நினைவிற்கு அகப்படு மட்டும் உயிரோடிருப்பர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Feb-22, 10:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே