அற்றத்தால் ஒருவரை தேறார் அறிவுடையார் - பழமொழி நானூறு 67
நேரிசை வெண்பா
சுற்றத்தார் நட்டார் எனச்சென் றொருவரை
அற்றத்தால் தேறார் அறிவுடையார் - கொற்றப்புள்
ஊர்ந்துலகம் தாவின அண்ணலே யாயினும்
சீர்ந்தது செய்யாதா ரில். 67
- பழமொழி நானூறு
பொருளுரை: வெற்றியையுடைய கருடன் மீது ஏறி வீற்றிருந்து உலகத்தைத் தாவியளந்த பெருமை பொருந்திய திருமாலே யாயினும் தனக்கு ஊதியந்தரும் சீரியதொன்றைச் செய்யாமல் விடுவார் இல்லை; ஆகையால், அறிவிற் சிறந்தோர் உறவினர், நட்பினர் என்பன கொண்டு சென்று மறைத்துச் செய்யும் காரியத்தில் அவருள் ஒருவரையும் தெளிதல் இலர்.
கருத்து:
மறைத்துச் செய்யும் காரியத்தில் யாவராயினும் நம்புதல் கூடாது.
விளக்கம்:
திருமால் முதலியோர்களும் தமக்கு ஊதியம் பயப்பதாயின் பழி, பாவம் பாரார். ஆகவே, சுற்றத்தார் நட்டார் என்பன கொண்டு அவர் செய்யும் செயல்கள் தூயனவென்றறிதல் வேண்டா. அவர்கள் தம் நன்மையைக் குறித்துச் செய்வனவே என்றறிதல் வேண்டும். அவர்கள் மறைத்துச் செய்தலே அதற்குப் போதிய சான்றாம்.