பொன்னை புடமிட் டதுபோல தவத்தில் உறுத்தினால் மெய்யின்பம் காண்பாய் - தவம், தருமதீபிகை 964

நேரிசை வெண்பா

பொன்னை நெருப்பில் புடமிட் டதுபோல
உன்னைத் தவத்தில் உறுத்தினால் - பின்னையிந்த
வையகமும் வானகமும் வாழ்த்த உயர்ந்துநீ
மெய்யின்பம் காண்பாய் விரைந்து. 964

- தவம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தங்கத்தை நெருப்பினிடையே வைத்துப் புடம் இடுதல் போல் உன்னைத் தவத்தின் நடுவே வைத்து வந்தால் உனது சீவஒளி எங்கும் பரவி எவ்வழியும் திவ்விய சோதியாய் விளங்கி வானும் வையகமும் உன்னை வந்து வணங்கும்; மெய்யான பேரின்பத்தை மேவி நீ மகிமையாய் மகிழ்வாய் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

ஆன்மா இயல்பாகவே மேன்மையுடையதாதலால் அது உயர்வான பொன் என நேர்ந்தது. இரும்பு, பித்தளை, ஈயம், செம்பு, வெண்கலம் முதலிய இழிந்த உலோகங்கள் எவற்றினும் உயர்ந்து பொன் பொலிவடைந்துள்ளது; அது போல் விலங்கு, பறவை முதலிய தாழ்ந்த பிராணிகள் யாவினும் சிறந்து மனிதன் மகிமையடைந்துள்ளான். அரிய மாட்சி பெரிய காட்சியாயது.

பொன்னைப் போல் இன்னவாறு உன்னத நிலையில் வந்திருந்தாலும் பழகிவந்த வாசனைகளின்படி பழுது அடைந்து கழிகிறான். அந்த இழிவுகள் விழுமிய எண்ணங்களாலும் மேலான செயல்களாலும் விலகி ஒழிந்து அவன் பழைய நிலையில் உயர்ந்து திகழ்கிறான். அழுக்கை நீக்கி ஒழுக்கம் உயர்வை அருளுதலால் .அது உயிரினும் ஓம்ப உரியது என ஒளி மிகப் பெற்றது. தழுவிய சீலம் எழுமையும் இன்பம் தருகிறது.

விழுமிய விரத சீலங்களை இனிது மருவிவரும் புனித நிலையே தவம் என வந்தது. அது மனிதனைத் தெய்வம் ஆக்கும் மகிமை வாய்ந்தது. தவம் தழுவி வருகிறவன் சிவம் தழுவி வருகிறான்

நீசமாய்ப் படிந்த மாசுகளை எல்லாம் அறவே நீக்கித் தேசு படியச் செய்து சீவனை ஈசன் ஆக்கியளுருதலால் தவம் தெய்வ வேதி எனச் சீர்மிகுந்து நின்றது. தவம் படியச் சிவம் படிந்து தனி நிலையில் இனிது அமர்ந்தான் என ஒரு தவசி பிறவி நீங்கிப் பேரின்பம் பெற்றதை இது இப்படி இனிது விளக்கியுள்ளது.

பாவத்தின் பயனாய்ச் சீவனை வருத்துகிற நோய் துன்பமென வந்தது. அது வருத்த வருத்தப் பாவ அழுக்கு நீங்கிச் சீவன் தேசு மிகப் பெறும்; அதற்கும் தவத்தான் நேரும் துன்பத்துக்கும் வேறுபாடு உண்டு. தானாகவே தவசி தன்னை வருத்திக் கொள்ளுகிறான்: பட்டினி கிடந்தும், பனி மழை வெயிலைப் பொறுத்தும், நெருப்பிடையே இருந்தும் நெடுந்தவம் புரிகிறான். இவ்வாறு அரியதவம் புரியவே அவன் பெரிய மகானாயுயர்ந்து பேரின்ப நிலையை அடைகிறான். தீயில் தோய்ந்த பொன் ஒளியும் மாற்றும் பெருகி வெளியே வியனாய் மதிக்கப் பெறுகிறது; தூய தவநோயில் தோய்ந்தவன் பரம பரிசுத்தன் ஆகி, தேவரும் யாவரும் போற்ற அவன் திவ்விய நிலையைப் பெறுகிறான். பண்ணும் தவம் விண்ணும் வியப்ப வியன் பயன் தருகிறது.

நேரிசை வெண்பா

தூய தவநிலையில் தோய்ந்தான் துயருறினும்
தீயிலுறு பொன்போலத் தேசேறிச் - சேய
ஒளியோ(டு) உயர்ந்திவ் வுலகமெலாம் போற்றத்
தெளிவோடு நிற்பன் சிறந்து.

இதனை விழியூன்றி நோக்கினால் வியன் பொருளை உணர்ந்து கொள்ளலாம். தவத்தில் தோய்ந்த துங்கனும், தீயில் தோய்ந்த தங்கமும் ஒருங்கே இங்கு பார்வைக்கு வந்துள்ளன. சுடு தீயை ஒப்புக் கூறியதனால் தவத்தின் கடுமை தெரிய நின்றது.

தபாக்கினி என்பது முதுமொழியாயுள்ளது. தவத்தின் அருமையையும் அதனை உடையவரது பெருமையையும் இத்தொடர் மொழி தெளிவாய் விளக்கி நிலைமையைத் துலக்கி நிற்கின்றது.

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. 267 தவம்

கடுந்துயர் சுடுந்தோறும் திருந்திய ஒளியோடு அருந்தவர் சிறந்து விளங்குவர் என வள்ளுவர் இங்ஙனம் விளக்கியிருக்கிறார், தவம் புரிவது அரிய செயல். பெரிய மனவுறுதியும் அரிய ஞானத் திண்மையும் பேராண்மையும் உடைய மேலோரே சால்போடு அதனை ஆற்ற வல்லவர் என்பது நோற்கிற்பவர் என்ற குறிப்பு மொழியால் கூர்ந்து உணர வந்தது. .

தீ இரும்பைச் சுட்டால் அது கரிந்து போகும்; துரு வீசி ஓங்கிவரும். இரும்பும் துரும்பும் போன்ற கொடியரும் சிறியரும் தவம் புரிய நேரார்; துயர் தோய உயிர் மாய்வர். பொன்னைப் போல் உயர்ந்த புனிதம் உடையவரே இன்னலை எதிர்தாங்கி அரிய தவம் புரிந்து பெரிய கதியைப் பெறுவர் என்பது இங்கே தெரிய வந்தது. உயர்ந்த உத்தமர் நிலை உய்த்துணர நின்றது.

சிறந்த பொன் போன்றவரிடமே தெளிந்த ஞானமும் உயர்ந்த மானமும் உரிமையாய் நிறைந்து வரும். அவருடைய செயல்களில் தருமமும் தவமும் மருமமாய் மருவி மிளிர்கின்றன.

தங்கத்தைப் பணி செய்கின்ற பொற்கொல்லர் நிலையைக் கவிஞர் ஒருவர் கருதி நோக்கினார்: அதனைத் தீயில் இட்டு உருக்கி நெருக்கித் தட்டி வளைத்து அணிகள் செய்வதை வியந்து வந்தவர் இறுதியில் குன்றி மணியோடு நேரே தராசில் வைத்து நிறுத்து மதிப்பிடுவதைப் பார்த்தார்; நெஞ்சம் வருந்தினார்; அந்தோ! இந்த உயர்ந்த தங்கத்தையா.அந்த இழிந்த குன்றியோடு நேர்வைத்துச் சீர் காண்பது என்று உள்ளம் உருகினார்; பொன் போன்ற அந்த உள்ளம் உடையவர் தனது இரக்கத்தை அதன் மேல் ஏற்றி ஒருபாட்டுப் பாடினார். அக் கவி அயலே வருகிறது.

பொன்புலம்பியது.

சுட்டுப் பொசுக்கிச் சுளித்தடித்து நீட்டிமேல்
வெட்டிய போதும் வெறுக்கிலேன் - கிட்டவைத்துக்
குன்றியை நேராகக் கொண்ட பொழுதுதான்
குன்றி யுளைந்தேன் குலைந்து.

தங்கம் தவித்துள்ள நிலையை இங்ஙனம் இது குறித்துள்ளது.

நல்ல காரியங்களைச் செய்வதில் தமக்கு எவ்வளவு அல்லல்கள் நேர்ந்தாலும் மேலோர் உள்ளம் கலங்கார்; தமது தகுதியை உணராமல் சிறுமையாய்ச் சிலர் அவமானம் செய்ய நேர்ந்தால் அவர் மிகவும் மறுகி வருந்துவர் என்பது இதனால் அறிய வந்தது. பேசாத பொன்னையும் பேசச் செய்து உலகிற்கு உறுதி நலனைக் கவிகள் உணர்த்தி வருவது உவகையை விளைத்து வருகிறது.

பொன்னும் தீயும் தவத்தின் மாட்சியைக் காட்சியாய் ஈண்டுக் காட்டியுள்ளன. துன்பத்துக்கு அஞ்சாமல் துணிந்து தவம் செப்வோரே பிறவித் துன்பங்கள் நீங்கிப் பேரின்பம் பெறுகின்றார். தீ பொன்னைத் தூய்மை செய்வது போல் துயர் உயிரைத் தூய்மை செய்கிறது. உயர் தவம் ஒளிசெய்து உய்தி.அருளுகிறது.

கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)

பொன்னைத் தீயிடைப் பெய்தலப் பொன்னுடைத் தூய்மை
தன்னைக் காட்டுதற்(கு) என்பது மனக்கொளல் தகுதி;
உன்னைக் காட்டினன், ''கற்பினுக்(கு) அரசியென்(று), உலகில்,
பின்னைக் காட்டுவ(து) அரியதென்(று) எண்ணியிப் பெரியோன். 122

- மீட்சிப் படலம், யுத்த காண்டம், இராமாயணம்

தன் நாயகன் ஏவியபடி மூண்ட தீயுள் மூழ்கி மீண்டு தூயளாய் வந்த சீதையைத் தசரதன் இவ்வாறு தேறுதல் கூறி ஆறுதல் செய்துள்ளான் பொன்னத் தீயிடைப் பெய்வது அதனைத் தூய்மை செய்யவே; அதுபோல் உன்னைத் தீயிடையிட்டு மகாபதிவிரதையான உனது தூய்மையை உலகமறியக் காட்டி உன் கணவன் உவகை மீக்கூர்ந்தான் என மாமன் உரைத்த மதிமொழியைக் கேட்டு அக் கோமகள் பேருவகை கொண்டாள். பொன் என்பது இலட்சுமிக்கு ஒரு பெயர்; அது அவளது அவதாரமான சீதைக்கு இங்கே உவமையாய் வந்திருப்பது உவகையை விளைத்து உரிமையை உணர்த்தியுள்ளது.

தவத்தால் பாவம் நீங்கி ஒழிகிறது; புண்ணியம் ஓங்கி விளைகிறது; தவமுடையவன் எண்ணியன யாவும் எளிதே எய்தி மகிழ்கிறான். அது அதிசய சோதியாய் ஆனந்தம் அருளுகிறது.

நேரிசை வெண்பா
(’ள’ ‘வ’ இடையின எதுகை, ’ய்’ ‘ர்’ இடையின ஆசு)

விளக்குப் புகஇருள் மாய்ந்தாங் கொருவன்
தவத்தின்முன் நில்லாதாம் பாவம் - விளக்குநெய்
தே’ய்’விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை
தீ’ர்’விடத்து நிற்குமாம் தீது. 51 துறவு, நாலடியார்

ஒளி மிகுந்த விளக்கு எனத் தவத்தை இது விளக்கியுள்ளது.

மாய மருளான தீய இருளை நீக்கிப் பேரின்ப நிலையை அருளுவதாதலால் அரும் பாடுபட்டுக் கடுந்துன்பங்களைச் சகித்துப் பெரியோர்கள் இதனைப் பேணி உய்கின்றனர். சுக போகங்களையெல்லாம் ஒருங்கே வெறுத்துப் பொறிகளை அடக்கித் தனியே இருந்து அரிய தவம் புரிவது எவ்வளவு அருமை என்பதைச் சிறிது சிந்தித்தாலும் எளிதே உணர்ந்து கொள்ளலாம். செய்யும் தவத்தில் தெய்வத் தேசுகள் வீசுகின்றன.

தனக்குக் தவவாழ்வு வேண்டும் என்று இறைவனை நோக்கி ஒரு பெரியவர் வேண்டியிருக்கிறார், அந்த வேண்டுகோள் நிலையை ஈண்டு அவசியம் நாம் அறிய வேண்டும். அயலே காணுக.

மல்லலம் பொழில்சூழ் தில்லை வாண
வரமொன் றிங்கெனக் கருளல் வேண்டும், அதுவே
பெருங்குளிர்க் குடைந்த காலைக் கருந்துணி
பலதொடுத் திசைத்த வொருதுணி யல்லது
பிறிதொன்று கிடையா தாக வறுமனைக்

கடைப்புறத் திண்ணை யல்லது கிடக்கைக்
கிடம்பிறி தில்லை யாக கடும்பசிக்
குப்பின் றட்ட புற்கையூ ணல்லது
மற்றோ ருண்டி வாய்விட் டரற்றினும்
ஈகுந ரில்லை யாகநா ணாளும்

ஒழுக்க நிறைந்த விழுப்பெருங் கேள்வி
மெய்த்தவர் குழாத்தொடும் வைக வித்திறம்
உடனீங் களவு முதவிக் கடவுணின்
பெரும்பத மன்றியான் பிறிதொன்
றிரந்தனன் வேண்டினு மீந்திடா ததுவே. 8.

- சிதம்பர மும்மணிக் கோவை

கடுங்குளிர்க்குக் கந்தைத் துணியும், அரும்பசிக்கு உப்பு இல்லாத கூழும் கிடைத்தாலும் கிடையாது போனாலும் நாளும் தவசிகளோடு கூடிவாழும் பாக்கியத்தை அருளவேண்டும் என ஆண்டவனிடம் குமரகுருபரர் இவ்வாறு வேண்டியிருக்கிறார். இவருடைய துறவு நிலையையும் தவ நீர்மையையும் கருதியுணர்வார் எவரும் உள்ளம் உருகி உயர்கதி தெளிந்து கொள்வர்.

புலப்பகைஞர் எனத் தவசிகளுக்கு ஒருபெயரை இவர் சூட்டியிருக்கிறார். புலன்களை வென்ற புனித முனிவரே அரிய தவங்களை ஆற்றவல்லவராதலால் இப்பெயர்க்கு அவர் உரியவராயினார். பொறி நுகர்வில் ஆழ்ந்தவர் இழிந்த காமிகளாய் அவநிலையில் தாழ்ந்து போதலால் உயர்ந்த தவநிலையை அணுகவும் முடியாமல் அவலமாயவர் ஒழிந்து போகின்றார்,

காமபோகம் உயிரைப் பாழ்படுத்துமாதலால் அது பழியுடையது எனத் தெளிவுடையார் விலகி ஒளி பெறுகின்றனர்; தெளிவில்லாதார் அந்த இழிவில் வீழ்ந்து அழிவுறுகின்றனர்.

When the cup of any sensual pleasure is drained to the bottom, there is always poison in the dregs. (Jane Porter)

சிற்றின்ப போகம் எவ்வளவு சுகமாயிருப்பினும் இழிந்த கழிசாக்கடையே; அந்த இழிகுப்பையில் எப்பொழுதும் நஞ்சு உள்ளது என ஜேன் போர்ட்டர் என்பவர் இவ்வாறு கூறியிருக்கிறார், புலன் நசை புலையே புரிகிறது; விலகினார் வீடு பெறுகிறார்.

அவத்தில் வீழாமல் தவத்தில் உயர்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Feb-22, 10:15 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

சிறந்த கட்டுரைகள்

மேலே