மதியோடு கூடி மருவி யுறைக விதியும் விலகும் விரைந்து - தனிமை, தருமதீபிகை 974

நேரிசை வெண்பா

பொல்லாத கூட்டம் புலைப்படுத்தும் ஆதலினால்
ஒல்லுமா(று) எல்லாம் ஒதுங்கியே - நல்ல
மதியோடு கூடி மருவி யுறைக
விதியும் விலகும் விரைந்து. 974

- தனிமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பொல்லாத இனங்களோடு கூடின் புலைகளே விளையுமாதலால் இயன்றவரையும் ஒதுங்கி நல்ல அறிவுடன் மருவி வாழுக; அவ்வாறு வாழின் வெவ்விய விதியும் விரைந்து விலகும்; எவ்வழியும் திவ்விய மகிமைகள் விளைந்து வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்,

உண்ணும் உணவால் மனிதன் உடலோடு வாழ்ந்து வருகின்றான்; ஆயினும் எண்ணும் எண்ணங்களும் இசைந்துள்ள இனங்களுமே அவனுடைய உயிர் வாழ்வை உருவாக்கி வருகின்றன. நல்ல எண்ணமும் நல்ல இனமும் நலம் பல புரிகின்றன; தீய நினைவும், தீய இனமும் இழி பழிகளை விளைத்து அழி துயரங்களையே செய்து யாண்டும் அவலங்களைத் தருகின்றன.

நல்லவர்கள் மிகவும் அரியராயுள்ளனர், கெட்டவர்களே எங்கும் பெருகி நிற்கின்றனர். சிறைச்சாலையுள் குற்றவாளிகள் நிறைந்திருத்தல் போல் பரந்த இந்த உலகச் சிறையில் பாவ சிந்தனைகளையுடைய தீயவர்களே செறிந்து விரிந்திருக்கின்றனர்.

வைய மையல்களில் ஆழ்ந்து வெய்ய புலைகளையே விழைந்து புரிந்து இழிந்துழலும் மாக்களை இழிவிலங்குகளாகவே கருதி வெறுத்து விலகி மெய்யறிவாளர் தனியே வாழ நேர்கின்றனர். புனிதமானவர் மோனமாய் ஒதுங்கியுறைகின்றனர்.

அந்த வாழ்வினர் திவ்விய நிலையில் சிறந்து திகழ்கின்றனர். துறவிகள், தவசிகள், யோகிகள், ஞானிகள், சித்தர்கள், முத்தர்கள் என உத்தமமான தெய்வீக நிலைகளில் ஒளி வீசியுள்ளவர் எல்லாரும் உள்ளமே துணையாய் உயர்ந்து நிற்கின்றனர்.

தனிமையில் இனிமையை நுகர்ந்து புனிதமாய் வாழுகின்ற ஞான சீலர்கள் மடமையாய் இழிந்துள்ள மாந்தரைக் கான விலங்குகளாகவே கருதி இகழ்ந்து உறுதி கூர்ந்திருக்கின்றனர்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

பாந்தளின் மகுட கோடி பரித்தபார் அதனில் வைகும்
மாந்தர்கள் விலங்கென்(று) உன்னும் மனத்தன்மா தவத்தன், எண்ணின்
பூந்தவி(சு) உகந்து ளோனும். புராரியும். புகழ்தற்(கு) ஒத்த
சாந்தனால் வேள்வி முற்றின். தனையர்கள் உளராம் என்றான். 34

- திரு அவதாரப் படலம், பால காண்டம், இராமாயணம்

கலைக் கோட்டு முனிவரைக் குறித்து வசிட்டர் இவ்வாறு தசரத மன்னனிடம் உரைத்திருக்கிறார். அவருடைய மனத்தையும், மாதவத்தையும் விளக்கியிருப்பது நுனித்து உணரத்தக்கது. மாந்தரை விலங்கு என்று உன்னுவதால் அந்த மனம் எந்த நிலையில் பழகியிருக்கும் என்பதை ஈண்டு நாம் சிந்தனை செய்து கொள்ள வேண்டும். மெய்யறிவு பொய்யிழிவை விலகுகிறது.

கல்லாதவரையே விலங்கு என்றார் வள்ளுவர். பொல்லாத புலைகளில் இழிந்து நெறிகேடராய் நிலைகுலைந்து திரிகின்ற உலக மக்களைக் கொடிய வன விலங்குகள் என்று இயல்பாகவே முனிவர் எண்ணியிருக்கின்றார். மூடம், மூர்க்கம், புன்மை, பொறி வெறி, இழிநசை, பழிமொழி, அழுக்காறு, குரோதம், விரோதம் முதலிய தீமைகளிலேயே தோய்ந்து மக்கள் வளர்ந்து வருதலால் மகான்கள் அவரை வெறுத்து விலகி விடுகின்றனர்.

புனித நிலையில் புகுந்தவர் தனிமையான வாழ்வையே எவ்வழியும் விரும்புகின்றனர். அது செவ்விய இனிய தவ வாழ்வாய்த் தேசு மிகுந்து திவ்விய மகிமையோடு சிறந்து திகழ்கிறது.

’இனிது இனிது ஏகாந்தம்’ என்று ஒளவையார் இவ்வாறு கூறியது அதன் திவ்விய நிலையைச் செவ்வையாய் அனுபவித்தேயாம். பெரியோர்களுடைய இனிய அனுபவங்களே அரிய போதனைகளாய் வெளிவருகின்றன. தனிமை இனிமையான தவ யோகமாகிறது.

Society than solitude is worse, And man to man is still the greatest curse. (Barbauld)

தனிமையாயிருப்பதே இனிது; மனிதரோடு கூடிவாழ்வது மிகவும் கேடே மனிதனுக்கு மனிதன் கொடிய கேடுகளையே கருதிப் பெரிய சாபத் தீமையாய் நிற்கிறான் என்று பால்பால்டு என்னும் அறிஞர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

He who has lived well in obscurity has lived a good life. - Ovid

தனியே ஒதுங்கி இனிது வாழுகின்றவனே புனிதமான நல்ல வாழ்க்கையையுடையவன் என ஓவிட் என்பவர் இங்ஙனம் குறித்துள்ளார். இனிய சீவியம் தனிமையில் மேவியுளது.

The strongest man in the world is he who stands alone. [Ibsen]

தனியே ஒதுங்கியிருக்கிற மனிதன் இந்த உலகத்தில் அதிக பலசாலியாய் நிற்கிறான் என இப்சென் என்பவர் இங்ஙனம் உரைத்திருக்கிறார். தன்மையும் வன்மையும் தனியே வளர்கின்றன.

தனிமையான வாழ்வை எல்லாரும் செய்யமுடியாது; மனம் புனிதமானவரே அதனை இனிது செய்து இன்புறுகின்றனர்.

துறவு, தவம், ஞானம் என்னும் தூய நிலைகளைத் தோய்ந்தவரே தனிமையுற நேர்கின்றனர். ஆன்ம சிந்தனையாளர் அகமுகமாயிருத்தலால் மயலான சகநிலையை நீங்கி அயலே ஒதுங்குகின்றனர். புனித ஒதுக்கம் தனிமையாய் இனிமை தருகிறது.

Inspiration makes solitude anywhere. (Emerson)

புனித ஞானம் எந்த இடத்தையும் தனிமை ஆக்கிக் கொள்கிறது என எமர்சன் இவ்வாறு ஏகாந்தத்தை உணர்த்தியுள்ளார்.

தவநிலை தழுவிவர அவநிலையாளர் தொடர்பு அயலே நழுவி ஒழிகிறது. தனிமையில் அமர்ந்த புனிதனை நினை; அதனால் அதிசயமான அரிய இனிய பேரின்பம் எதிரே எளிது பெருகி வரும்.

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
(முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்;
மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

வைய மையல் மருளும் மயக்கமும்
வெய்ய தீமையும் மேவி விரிதலால்
மெய்யை நாடிய மேதை விலகியே
உய்தி எய்தி உயர்கதி கூடுமால்

இதனைச் சிந்தனை செய்து தெளிந்து கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Feb-22, 10:38 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

மேலே