நல்லா றொழுக்கின் தலைநின்றார் - நீதிநெறி விளக்கம் 61

நேரிசை வெண்பா

நல்லா றொழுக்கின் தலைநின்றார் நல்கூர்ந்தும்
அல்லன செய்தற்கு ஒருப்படார் - பல்பொறிய
செங்கண் புலிஏ(று) அறப்பசித்துந் தின்னாவாம்
பைங்கண் புனத்தபைங் கூழ். 61

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

பல புள்ளிகளையுடைய சிவந்த கண்களையுடைய புலியேறானது மிகுந்த பசிகொண்டாலும் பசுமையான இடமாகிய கொல்லைகளிலுள்ள பசிய பயிர்களைத் தின்னாதாம்.

அதுபோல், நன்னெறியொழுகுதலின் உறுதியாக நின்றவர்கள் வறுமையுற்றும் முறையல்லாதவற்றைச் செய்ய மனங்கொள்ள மாட்டார்.

விளக்கம்:

நல்ஆறு என்பது மனம், வாக்குக் காயங்களாலாகிய குற்றங்களில்லாத போக்கு;

அல்லன: கொலை, பொய், வஞ்சனை முதலியவை.

புலி ஏறு - ஆண் புலி. ஏறு:சிறப்பு மொழி.

கருத்து:

நல்லொழுக்கமுடையோர் வறுமை வந்த காலத்தும் தீச்செயல் புரிய நினையார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Feb-22, 12:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

மேலே