ஐங்கரனைப் பந்தமறப் புந்தியுள்வைப் பாம் – உண்மை விளக்கம் - காப்பு
திருநெறி 4 – திருவதிகை மனவாசகங் கடந்தார் அருளியது.
காப்பு
வண்மைதரும் ஆகமநூல் வைத்த பொருள்வழுவா
உண்மை விளக்கம் உரைசெய்யத் - திண்மதம்சேர்
அந்திநிறத் தந்திமுகத் தொந்திவயிற் றைங்கரனைப்
பந்தமறப் புந்தியுள்வைப் பாம்.
- உண்மை விளக்கம்
பொழிப்புரை:
வளப்பத்தைத் தருகின்ற ஆகம நூலிலே பரமேசுவரன் அருளிச்செய்து வைத்த பதி பசு பாசங்களாகிய முப்பொருளின் உண்மை வழுவாமல் இவ்வுண்மை விளக்க நூலிலே விளக்குதற் பொருட்டும், பாசங்கள் நீங்குதற் பொருட்டும் செக்கர்வானம் போன்ற திருமேனியினையும் யானை முகத்தினையும் தொந்தி வயிற்றினையும் ஐந்து கரங்களையுமுடைய விநாயகக் கடவுளை சித்தத்தில் வைத்துத் தியானஞ் செய்வாம்.